‘தி இந்து’ இந்த வருட பிரம்மோத்சவத்திற்காக “Srivari Brahmotsavam 2015 – A celestial spectacle on earth” என்ற சிறப்பு பதிப்பை தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக வெளியிட்டுவருவது நாம் அனைவரும் அறிந்ததே. 05.09.2015ல் ஏழுமலையானை தரிசிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. பிரம்மோத்சவத்தை நேரில் காண முடியாதவர்களுக்கு பல அரிய புகைப்படங்களைக் கொண்ட இந்த சிறப்பு பதிப்பு நிச்சயமாக ஒரு கலக்ட்டர்ஸ் ஐட்டம் தான். அதிலிருந்து சில சுவாரஸ்யமான தகவல்கள்…
ஆக்கும் கடவுளான பிரம்மன் முதன் முதலில் பாலாஜியை திருப்பதியின் புனிதநீர்க்கரையில் மனித வாழ்வைக் காக்கும் திருப்பணிக்காக நன்றி தெரிவிக்கிறார். அதன் விளைவாகவே அதற்கு பிரம்மோத்சவம் என்ற பெயர் உண்டானது. ஒவ்வொரு வருடமும் இது திருப்பதியில் கொண்டாடப்பட்டுவருகிறது. பிரம்மோத்சவத்திற்கு மேலும் அழகூட்டுவது ஒவ்வொரு வாகனத்திலும் எழுந்தருளும் ஏழுமலையானின் ஊர்வலம்தான். இதைக் கண்டுகளிக்க உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்காக பக்தர்கள் கூடுகின்றார்கள். ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒவ்வொரு பாடல் திவ்ய பிரபந்தத்திலிருந்து பாடப்படும். பிரம்மோத்சவத்தின் ஆரம்ப குறியீடாக கொடிமரத்தில் கருடனின் கொடி பறக்கவிடப்படும். (ப.8)
ராமானுஜர் ராமாயணத்தை தன் மாமா பெரிய திருமலை நம்பியிடம் கற்பதற்காக திருப்பதி செல்கிறார். திருப்பதியின் புனிதம் கருதி ராமானுஜர் மலையின் நடைபாதையிலேயே தங்குகிறார். அவர் மாமா தினமும் மதிய வேளையில் இறங்கி ராமானுஜருக்கு பாடம் எடுத்துவிட்டு பிறகு செல்வார். இதற்காக நம்பி எப்போதும் செய்யும் தனது பிற்பகல் திரிசனத்தை காணமுடியாத நிலை ஏற்படுகிறது. ஒரு நாள் நம்பியின் கனவில் தோன்றிய சீனிவாசபெருமாள், நம்பியிடம் அவர் எப்போதும் செய்யும் மதிய வேளை தரிசனம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அடுத்த நாள் பெரிய திருமலை நம்பி ராமானுஜருக்கு பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். நம்பியின் திருப்பாதத்தையும் அங்கு உலவிய நறுமணத்தையும் வைத்து வந்திருப்பது சாட்சாத் சீனிவாச பெருமானே என்பதை உணர்ந்தார் ராமானுஜர். அதன் அடையாளமாக ராமானுஜர் நரசிம்ம கோயிலை அங்கு கட்டினார். ஏழுமலையான் கையில் இருக்கும் சங்கு சக்கரத்தை வைத்து ராமானுஜர் கர்ப்பகிரகத்தில் வீற்றிருப்பது மகா விஷ்ணுதான் என்பதையும் கூறினார். ராமானுஜரின்திருவுருவச்சிலையினை கோயிலின் உள் பகுதியில் காணலாம். (ப.22)
திருப்பதி என்றாலே பெருமாள், அடுத்து உண்டியல். உலகிலேயே திருப்பதி கோயிலில்தான் வரிசையில் காத்து நின்று உண்டியலில் காசு போடுகின்றனர். பக்தர்கள், பணம் உட்பட, தங்கம், வெள்ளி, வெளிநாட்டு பணம், நிலப்பத்திரம் மற்றும் பங்குச்சந்தை பங்குகளை கூட நன்கொடையாக அளிக்கின்றார்கள். உண்டியலில் விழும் தூசு கூட எடைபோடப்படுகிறது. கடந்த வருடம் மட்டும் 900 கோடி ரூபாய் வருமானம். 2000 டன்கள் தங்கம் மற்றும் வெள்ளி ஒவ்வொரு வருடமும் காணிக்கையாக கிடைக்கிறது. தரிசன டிக்கெட்டுகள் விற்பனை மூலம் 200 கோடி ரூபாயும், லட்டு விற்பனையில் 145 கோடி ரூபாயும் வருமானமாக கிடைக்கிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களில் சராசரியாக மூவரில் ஒருவர் மொட்டை அடித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர். மனித முடியை ஏலத்தில் விட்டு வருடத்திற்கு 200 கோடி ரூபாய் வரை வருமானம் வருகிறது. 600 முதல் 900 பணியாளர்கள் வரை மொட்டையடிக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். (ப.34)
1990 வரை கர்ப்பகிரகத்தின் மிக அருகில் பக்தர்கள் சென்று பெருமாளை வழிபட முடிந்தது. வருடத்திற்கு கோயிலுக்கு வரும் சுமார் 25 கோடி பக்தர்களின் கூட்டத்தை சமாளிக்க சீனிவாச பெருமாளுக்கு 70 அடிகளுக்கு முன்னர் பக்தர்கள் நின்று இறைவனை வழிபட ஏற்பாடு செய்யப்பட்டது (ப.38). பின்னர் மூன்று வரிசை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் வரிசை தரை நிலையிலும், இரண்டாம் வரிசை மரத்திலான மேடை மீதும், மூன்றாம் வரிசை அதை விட அரை அடி உயரம் குறைவாகவும் அமைக்கப்பட்டது. கூட்ட நெரிசலை தவிர்க்க இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டது. பக்தர்களின் உயரம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாததால், இந்த முறையிலும் பிறகு மாற்றம் செய்யப்பட்டது. (ப.41)
தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் கிடைக்கும் வசதியும் உள்ளது. ஒரு நாளைக்கு 26,000 டிக்கெட்டுகள் 300 ரூபாய் திட்டத்தில் வழங்கப்படுகிறது. இந்த டிக்கெட்டுகளை பக்தர்க்ள் எட்டு வாரம் முன்கூட்டியே ரிசர்வ் செய்து கொள்ளலாம். ஒரு நாளைக்கு 65,000 பக்தர்கள் வருகிறார்கள். ஆன்லைன் டிக்கெட்டுகள் முன்கூட்டியே தீர்மானித்த நேரத்திற்கு மட்டும் அனுமதிக்கப்டுகிறது. டிக்கெட்டுகளை https://www.ttdsevaonline.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யும் வசதி உள்ளது. (ப.44)
பக்தர் அன்னமாச்சார்யாவின் 32,000 பாடல்களும் கிடைத்திருந்தால் கர்நாடக சங்கீதத்தின் வரலாறு வேறுமாதிரியாக எழுதப்பட்டிருக்கும். அவர் வாழ்ந்த காலம் கி.பி.1408 முதல் 1503 வரையாகும். இன்றும் அவருடைய இசையை இலக்கியவாதிகள் கேட்டு அனுபவிக்கிறார்கள். அவர் இயற்றிய இசைக்கு பெயர் கூட நாம் இப்போது உபயோகிக்கும் கல்யாணி, ஆனந்த பைரவி, மோகனம், காரகரப்பிரியாவாகக்கூட இருக்கலாம். அன்னமாச்சார்யா அனைத்து கடவுள்களின் உருவமாக ஏழுமலையானையே காண்பதாக கூறினார். பெருமாளின் தேரில் பறக்கவிடப்படும் கருடக்கொடி அன்னமாச்சாரியாவின் பாடல்களை கொண்டு வரையப்பட்டதே ஆகும் (ப.54)
கோயிலின் அனைத்து சடங்குகளும் ஆகம விதிப்படி நடந்தேறிவருகிறது. வைணவ கோயில்கள் வைகானசா அல்லது பஞ்சரத்ரா முறையிலும், சிவன் கோயில்கள் சைவாகமா முறையிலும், துர்க்கை கோயில்கள் சக்தியேகமா முறையிலும் கட்டப்படுகிறது. இறைவனை பாற்கடலிலோ கைலாசத்திலோ உள்ளது உள்ளபடி பக்தர்கள் பார்த்து பரவசமடையும் படி செய்வதற்காக அங்கு நிலவும் சூழலை அப்படியே இங்கு கொண்டுவருவதுதான் ஆகம விதியின் பிரதான போக்கு. (ப.58)
திருப்பதி மலையில் பல புண்ணிய தீர்த்தங்கள் உண்டு. அதில் ஆகாச கங்கை மற்றும் பாபநாசம் முக்கியத்துவம் வாய்ந்தது. அருவிகளை வேதாந்த தேசிகர் செங்குத்து ஆறு என்று குறிப்பிடுகிறார். அது இறைவனின் இரக்க குணத்தை காட்டுகிறது என்கிறார். அந்த இறைவனின் நீர் சத்தத்தினால் பக்தர்கள் இறைவனை துதிபாடும் பாடல்கள் நம் காதில் விழுவதில்லை என்கிறார். (ப.84)
பிரம்மோத்சவத்திற்காக சென்னை கோயம்பேடு மார்கெட்டிலிருக்கும் கடை உரிமையாளர்களே பூ மற்றும் பழங்களை அனுப்பி வைக்கிறார்கள். கடந்த 15 வருடங்கள் சில பூ வியாபாரிகள் தாமரை, துளசி, சம்மங்கி, சாமந்தி, மல்லிகை மற்றும் அரலிப் பூக்களை கொடுத்து வருகிறார்கள். (ப.113)
திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம், திருமலையில் விரைவில் சூரிய சக்தி மற்றும் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யப்போவதாக தெரிவித்துள்ளது. இதற்காக 66 ஏக்கர் நிலப்பரப்பில் சித்தூர் அருகில் மின் ஆலைகள் அமைக்க ஏற்பாடுகள் செய்து வருகிறது. (ப.114)
40 கோடி ரூபாய் மதிப்பிலான வைர வைடூரியம் பதிக்கப்பட்ட கிரீடம் ஏழுமலையானுக்கு வருடத்தில் இரண்டு முறையாவது அணிவிக்கப்படும். இந்த கிரீடம் தான் இதுவரை ஒரு தனிமனிதரால் ஒரு இந்துக்கோயிலுக்கு அளிக்கப்பெற்ற பெரிய நன்கொடையாக கருதப்படுகிறது. 2010 ஆம் ஆண்டு கீர்த்திலால் நடைக்கடை உரிமையாளர் இதை ஏழுமலையானுக்கு நன்கொடையாக அளித்தார். 35,554 வைரங்கள் மட்டும் 817 காரட் எடையுள்ள மரகத்க்கல் நடுவில் பதிக்கப்பெற்று, மூன்று அடி உயரமுள்ள இந்த கிரீடத்தை எட்டு மாதக்காலத்தில் 55 ஆசாரிகள் சேர்ந்து தயாரித்துள்ளனர். 52,000 கோடி தங்க சொத்துக்களை உடைய ஏழுமலையானுக்கு இந்த வைர கீரிடம் ஒரு சொற்பமே.
எழுமலையானை தரிசிக்க வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு இந்த புகைப்படத் தொகுப்புடன் கூடிய சிறப்புக் கட்டுரைகள் மிகவும் உதவும். வாய்ப்பு கிடைத்தவர்கள் படித்தாலும் எழுமலையான் தனது அருளில் குறை ஏதும் வைக்கப்போவதில்லை. கோவிந்தா !!கோவிந்தா…!!
நூலின் பெயர் Srivari Brahmotsavam 2015
பதிப்பகம் The Hindu, Kasturi and Sons Pvt Ltd, Chennai
ஆண்டு 2015
பக்கங்கள் 124
விலை Rs.130
நூல் விமர்சனத்தைப் படித்தபோது திருப்பதி சென்றுவந்த உணர்வு ஏற்பட்டது.
LikeLike