உறவுகள் ஒரு தொடர்கதை….

வருடம் 1972. கோயில் நகரம் காஞ்சிபுரம்.

‘குமாரு… குமாரு… டேய் குமாரு… எங்கடா இருக்க’ ? எனக் கூவிக்கொண்டே நுழைந்தாள் அவனின் அத்தை இந்திரா. தீபாவளி பலகாரமும், புதுத்துணிகளும் கொண்ட பைகள் இந்திராவின் கைகளை நிரப்பியிருந்தது. அரைகால் பள்ளி காக்கி டவுசருடன் குமார் கொள்ளைபுரத்திலிருந்து கையில் தான் வளர்த்த கிளியுடன் ஓடி வந்தான்.

இந்திராவின் கைகளில் இருந்த அனைத்து பைகளையும் வாங்கி பார்த்து கேட்டான், ‘அத்தே எனக்கு மட்டும் வாங்கி வந்துருக்கே.. சுமதிக்கும் சேகருக்கும் எங்கத்தே’?

இந்திரா, ‘அவுங்கள மட்டும் விட்டுடுவேனா என்ன ? மாமா எடுத்துட்டு வர்றாரு டா’. மறுபடியும் தன் கிளியுடன் விளையாட சென்றான் குமார்.

சீனிவாசன் குடும்பத்தில் மற்றவர்களுக்கு வாங்கிய துணி மணிகளை எடுத்துக்கொண்டு உள்ளே வரும்போதே, எல்லாரும் ஓடி வாங்க என சத்தமிட்டுக்கொண்டே நுழைந்தார். இந்திராவின் கணவர் காஞ்சிபுரத்தில் மூன்று பெரிய மளிகைக்கடைக்கு சொந்தக்காரர். குமாரின் தந்தை ரெத்தினவேல் ஒரு சிறிய மிதிவண்டி நிலையம் வைத்திருந்தார். குமாரின் அம்மா தோட்டத்து வேலை, வயல், ஆடு, பசு போன்றவைகளை கவனித்து வந்தாள்.

தான் பெற்ற பிள்ளை ஆனந்தி மேல் இல்லாத அக்கறை குமார் மீது எப்போதுமே இந்திராவுக்கு உண்டு. இந்திராவுக்கு திருமணம் ஆகி பத்து வருடம் கழித்து பிறந்தவள் ஆனந்தி. அவளுக்கு இப்போது பதிமூன்று வயதாகிறது. இருந்தாலும் இந்திராவுக்கு மூத்த பிள்ளை குமார் தான். ஆனந்தி கூட சேகருக்கும் சுமதிக்கும் பின்தான்.

தீபாவளி சென்றது. விடுமுறைகள் முடிந்து எல்லாரும் பள்ளி செல்ல ஆரம்பித்தனர். ஆனந்தியும் சேகரும் சுமதியும் ஒரே பள்ளி. குமார் எஸ் எஸ் எல் சி என்பதால் வேறு கிளையில் படித்துவந்திருந்தான். ஆனால் அவன் பள்ளி செல்வது அவன் அம்மாவிடம் அடி உதை வாங்கிய பின்புதான். பள்ளிக்குச் செல்ல அவனுக்கு அறவே பிடிக்காத காரியம். அவன் அடி உதை வாங்கமல் பள்ளி சென்றது மிகவும் குறைந்த நாட்களே. வயித்து வலி, கண்ணு வலி என சொல்லி டிமிக்கி அடிப்பான். சிலநேரம் அவனுக்கு உண்மையிலேயே உடல் நோவு ஏற்படும் போது யாரும் நம்ப மாட்டார்கள்.

இந்திராதான்  “மேனி சுடுகிறது உண்மையில் காய்ச்சல் அடிக்கிறது” என்று சொல்லி காப்பாற்றுவாள்.

பள்ளி முடிந்து வந்ததும் வீடு அடுப்பாங்கரை என அத்தைக்கும் அம்மாவிற்கும் ஒத்தாசையாக இருப்பான். இப்படியே பள்ளி அடி உதை ஆனந்தி சேகர் கிளி கொள்ளைபுறம் என நாட்கள் நகர்ந்தன. ஓரளவிற்கு படிப்பின் மேல் அத்தைகூறிய அறிவுரைகளின் படி அவனுக்கு நாட்டமும் அதிகமாக வளர்ந்தது. ஆனால், அத்தையின் சொல்படி சுமதியும் சேகரும் சேவி சாய்த்ததாக தெரியவில்லை.

வருடங்கள் நகர்ந்தன. குமார் இப்போது ப்ளஸ் டூ தேர்விற்காக தன்னை ஆயத்தப்படித்திக்கொண்டு இருந்தான்.  சேகரும் சுமதியும் பத்தாம் வகுப்பிற்கு தயாராகிக்கொண்டு இருந்தார்கள். முதல் பரீட்சை தமிழ் மூவரும் பள்ளிக்கி தயாராகிக்கொண்டு இருந்தனர்.

9 மணி வாக்கில் மாமா சீனிவாசனின் கணக்குப்பிள்ளை தொலைபேசியில் வீட்டிற்கு அழைத்திருந்தார். குமார் முற்றத்தில் நின்று முகம் கழுவிக்கொண்டுஇருந்தான். சேகரும் சுமதியும் பூஜை அறையில் இருந்தனர். மீனாட்சி, அடுப்பாங்கறையில் வேலையாக இருந்தாள். இந்திரா குமாரிடம் பரீட்சை நன்றாக எழுதிவிட்டு சீக்கிரமா வீடு வந்து சேறு என்று சொல்லிக்கொண்டே தொலைபேசியண்டை வந்தாள். இந்திரா தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தாள். கணக்குப்பிள்ளை, அம்மா காலையில கடை திறக்கும்போது ஐயா நல்லாதான் இருந்தாரு திடீர்னு மாரடைப்பு வந்து ஆஸ்பத்திரி கூட்டிப்போற வழியிலேயே ஐயா நம்ம…….கணக்குப்பிள்ளை சொல்லி முடிப்பதற்குள் இந்திரா லைனை துண்டித்துவிட்டு ஓ வென அழுதாள். இந்திராவின் ஓலம் கேட்டு குமார், சேகர், சுமதி, மீனாட்சி தான் செய்துகொண்டிருந்த வேலைகளை போட்டது போட்டபடி விரைந்து வந்தனர் . சீனிவாசன் மாமாவுக்கு இவ்வளவு சீக்கிரம் மரணம் வந்திருக்க தேவையில்லைதான். கடவுளின் எண்ணம் அப்படித்தான் போல. சிறிது நேரத்திற்கெல்லாம் மாமா சீனிவாசன் ஆம்புலன்ஸ்ல் நான்கு பேர் தூக்க வீட்டினுள் வந்தார். நடு வீடு முழுவதும் ரோஜாப்பூ இதழ்கள். குமார் தன் தாத்தாவின் படம் அருகே உட்கார்ந்து விம்மி அழுதுகொண்டு இருந்தான். அத்தைக்கு ஆறுதல் கூறும் அளவு அவனுக்கு விவரமும் இல்லை. ஆனால் அத்தை உட்பட வீடே நாராசமாக இருந்தது. வியர்வை படர்ந்த அவனது சட்டை பாக்கெட்டில் அவனுடைய தேர்வு அனுமதிச்சீட்டு பாதி வெளியே தெரிந்தும் தெரியாமலும்  நீட்டிக்கொண்டு இருந்தது.

மாமா சீனிவாசனின் இழப்பை ஈடுகட்ட முடியாத நிலையில் குடும்பமே உறைந்துபோய் இருந்தது.

ஒரு வருட காலம் வீடு பழைய களையை இழந்து காணப்பட்டது. குமார் ப்ரைவேட்டாக ப்ளஸ்டூ எழுத ஆயத்தமானான். இப்போதெல்லாம் குமார் தன் அத்தையின் முகத்தை பார்க்க மிகவும் வருத்தப்பட்டான். காலையில் தினமும் மாமா சீனிவாசனின் சத்தம் இல்லாத வீடு ஒரே சூனியமாக இருந்தது. அவர் தான் வீட்டிலேயே எல்லோருக்கும் முன் எழுந்து உடற்பயிற்சி செய்து கைலாசநாதர் கோயிலுக்கு சென்று பிறகு காலை உணவு உண்டு குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு பிறகு கடை திறக்க செல்வார்.  குமார் தன் துக்கத்தையும் மீறி சாதிக்க வேண்டும் என எண்ணினான். தன் அத்தை அம்மா அப்பா தம்பி தங்கையை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு வேரூன்றி இருந்தது

குமாரின் தந்தையின் மிதிவண்டிக் கடை வருமானம் போதுமானதாக இல்லை. மாமா சீனிவாசனின் கடைகள் ஒத்திக்கு விடப்பட்டன. அதிலிருந்து சில பங்குகள் பெரிய வீட்டிற்கு சென்றன. அதுதான் சீனிவாசன் மாமாவின் பெற்றோர்கள் வீடு. இந்திராவிற்கு கணிசமான தொகை மாதா மாதம் வந்தது. மாமா சேர்த்து வைத்து சென்ற சொத்து பத்துகள் இந்திராவின் பெயரிலேயே இருந்தது. இருந்தாலும், குமாரின் தந்தைதான் வீட்டுச்செலவுகளையும் மற்ற போக்குவரத்துகளையும் பார்த்துவந்தார் சீனிவாசனுக்கு பிறகு. தந்தையின் இந்த நிலை கண்டு குமாருக்கு தட்டச்சு பயிற்சி, ஆங்கில வகுப்பு பயிற்சிகளுக்கு பணம் கேட்க கூச்சமாயிருந்தது. இதை உணர்ந்த அவன் அத்தை அவளுடைய சேமிப்பில் இருந்து பணம் கொடுக்களானாள்.

இப்படியே மூன்றுவருடங்கள் ஓடியது. குமாரும் காலேஜ் படிப்பை முடித்தான்.

அத்தை அத்தை என்று அலறியபடி ஓடி வந்து தன் அத்தையை ஒரே அலேக்காக தூக்கிக்கொண்டே, “அத்தே நான் பர்ஸ்ட் க்ளாஸ்ல பி.ஏ பாஸ் பண்ணிட்டேன்” என்றான். குமாரின் அம்மா அடுப்பாங்கரையில் இருந்து சர்க்கரை கொண்டுவந்து அவன் வாயில் போட்டாள்.

இந்திராவிற்கு பரம சந்தோஷம். மனதார நினைத்துக்கொண்டாள் இவனுக்கு ஒரு வேலையை அமைத்துக்கொடுத்துவிட்டு ஆனந்தியை குமாருக்கு மணம் முடிக்கவேண்டும் என்று.

அத்தையின் இந்த முடிவு குமாருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தொடரும்….

குமார் தன்னுடைய பி.ஏ ரிசல்ட்டை பிரகடனம் செய்துகொண்டிருந்த நாளன்று எல்லோரும் அன்று மாலை கோயிலுக்குச் சென்றனர்.

அன்று மாலை குடும்பத்துடன் எல்லோரும் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சென்று திரும்பிக்கொண்டிருக்கையில், சீனி மாமாவின் கணக்குப்பிள்ளையை சந்தித்தனர். அவர் மூலம், சீனிமாமா உயிருடம் இருந்த போது திருச்சியில் வசிக்கும் அவருடைய அக்கா மகனை ஆனந்திக்கு மணம் முடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததாகவும், இதுதான் தக்க சமயம் திருச்சிக்கு ஒரு முறை போய் வரவேண்டும் எனவும் கூறினார். இந்திரா காலையில் எண்ணிய எண்ணத்தை சற்று நினைத்துக்கொண்டு போலித்தனமாக சிரித்துக்கொண்டாள். சீனிமாமாவின் அக்கா மகளுக்கு இந்த சமாச்சாரம் தெரியும் என்றும் அவர்கள் உங்கள் முடிவுக்காக காத்திருப்பதாகவும் கணக்குப்பிள்ளை தெரிவித்தார். மாமா இறந்து நான்கு வருடங்கள் ஆயிற்று இப்போது என்ன புதிதாக அவர்களுக்கு ஆனந்திமேல் பிரியமாம் ? அப்போது அவர்கள் எங்கு சென்றார்களாம் என்றான் சேகர். சுமதியும் அதை ஆமோதித்து பேசினாள்.

அந்த சமயத்தில் குமாரிடம் நல்ல வேலையும் இல்லை, அவனுக்காக பரிந்து பேசவும் இந்திராவுக்கு முடியவில்லை. இந்திராவின் ஆசைகளை மீறி விதி தன் வேலையை காட்டியது. மூன்று மாத காலத்துக்குள் திருமணம் முடிந்தது. ஆனந்தியும் திருச்சி சென்றாள்.

குமாருக்கு படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. பகுதி நேர வேலைக்கு வீட்டிற்கு அருகில் உள்ள அரிசி ஆலைக்கு கணக்கெழுத சென்றான். வேலைக்குச் சென்றுகொண்டே இந்தி, ஆங்கிலம் மற்றம் தமிழ் சுருக்கெழுத்தும் தட்டச்சும் கற்றுக்கொண்டான், தன் அத்தையின் ஆசிர்வாதத்தினால். அதே சமயம் குமாருக்கு கோயம்புத்தூரில் ஒரு கம்பெனியில் நல்ல வேலைக்கான அழைப்பு வந்திருந்தது. குமார் அதற்காக கிளம்பினான். சுமதியையும் சேகரையும் நன்றாக படிக்குமாறு கேட்டுக்கொண்டு அத்தை அம்மாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினான். மாதம் ஒரு முறை வருவதாகவும் கடிதம் எழுதுவதாகவும் சொல்லிவிட்டு சென்றான்.

இந்திராவிற்கு குமார் இல்லாமல் வீடு நிறைந்தமாதிரி தெரியவில்லை. ஓரிரு ஆண்டுகள் இப்படியே ஓடி முடிந்தது. சேகரும் ஒரு நல்ல வேலைக்காக சவுதி சென்றான். வெளிநாடு அனுப்ப இஷ்டம் இல்லையென்றாலும் சேகர் ஆசைப்பட்டான் என்பதற்காக அனைவரும் சம்மதித்தனர். சுமதி வீட்டுவேலைக்கு ஒத்தாசையாக இருந்தாள்.

நவராத்திரி பூஜைக்காக குமார் காஞ்சி வந்திருந்தான். நவராத்திரியுடன் சேர்ந்து நல்ல செய்தியும் வந்தது. ஆனந்திக்கு பெண் குழந்தை பிறந்ததாக திருச்சியில் இருந்து தொலைபேசி வந்தது. எல்லாரும் திருச்சி கிளம்பினார்கள். இந்திராவிற்கு மட்டும் ஒரு 10 நாள் தங்கிவிட்டு வர வேண்டும் என ஆசை. துணிமணிகளை சேர்த்து எடுத்துவைத்துக்கொண்டாள். இதற்கிடையில் குமார் ஓடிப்போய் ஒரு கவுளி வெற்றிலை பாக்கு வாங்கி வந்தான் தன் அத்தைக்கு. அதற்கு குமாரின் அம்மா திருச்சியில கும்பகோணம் வெத்தலையே கிடைக்கும் டா.. இதுக்கா இப்போ ராத்திரியில ஓடிப்போய்ட்டு வர என்றாள். இந்திராவிற்கு, ஒரு புறம் பேத்தியை பார்க்க செல்கிறோம் என்ற ஆனந்தம் ஒரு புறம் காஞ்சியைவைட்டு 10 நாட்கள் விலக வேண்டும் என்ற துன்பம்.

ரயிலை அன்று இரவே பிடித்தனர். விடுமுறைகாலம் என்பதால் சேகரும் குமாரும் கூட வருவது இந்திராவிற்கு மற்றற்ற மகிழ்ச்சியளித்தது. ரயலில் பயணிக்கும்போதே குமாரிடம் இந்திரா, குமாரு.. நா ஒரு பத்து நாளு இருந்துட்டு வாரேன் ஆனந்தியோட என்றாள். குமார், அத்தே அவ உன் பொண்ணு இதைய நீ எங்கிட்ட சொல்லனுமா என்றான் குமார். சும்மா சொல்லனும்ன்னு தோணுச்சு என்றாள் இந்திரா. ரயிலின் வேகம் அதிகமாய் இருந்தது. இரவு வாடை காற்றும் அதிகமாய்யிருந்தது. அந்த இரவு இந்திராவிற்கு ஏதோ ஒரு வித மன நிம்மதியில்லாமல் கடந்தது. ஏன் என்று அவளுக்கு அது புரியவில்லை.

விடிந்தது. எல்லோரும் ஆனந்தி வீட்டை அடைந்தனர். குமார், அத்தே பாப்பாவ பாரு அப்படியே மாமா மாதிரியே இருக்காள் என்றான். ஆனந்தியின் குழந்தையை எல்லோரும் தூக்கி தூக்கி கொஞ்சிக்கொண்டிருந்தனர். நேரம் போனது கூட தெரியாமால் எல்லோரும் அன்று ஆனந்தி குடும்பத்துடன் குதுகலித்தனர். பெண் கொடுத்த வீட்டில் அனாவசியமாக தங்குவது பிசகு என்பது போன்ற நம்பிக்கைகள் தமிழ் கலாச்சாரத்தில் கலந்து போன் ஒன்று.

சாயங்கால வேலையில் ஊர் திரும்ப ஏற்பாடுகள் நடந்த வண்ணம் இருந்தது. அந்த சமயம் ஆனந்தி குமாரிடம், மச்சான் இனி அம்மா என் கூடவே இருக்கட்டும் நீங்கள் எல்லாரும் புறப்படுங்கள் என்றாள். ஆமாம், ஆனந்தி அம்மா உன் கூடத்தான் ஒரு 10 நாளைக்கு தங்கியிருப்பார்கள் என்றான் குமார். இல்லை மச்சான் 10 நாட்கள் மட்டுமல்ல இனி என்னுடனேயே இருக்கட்டும். நானும் என் கணவரும் சேர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளோம். குமார், அத்தைக்கு இந்த முடிவை பற்றி தெரியாதா என்றான். ஆனந்தி, அம்மா எங்க இருந்த என்ன மச்சான் மூணு வேளை சாப்பாடு போட்டா போதும்ல வேற யாரு இருக்கா அவங்கள பாத்துக்க? இந்த நாராச வார்த்தைகளை குமாரால் ஜீரணிக்க முடியவில்லை. தன்னை சுற்றி நடப்பவை, குழந்தை அழும் சத்தம், அத்தை சேகருடனும் சுமதியுடணும் பேசும் சத்தம் என எல்லாமே ஊமைப் படம் போல் காட்சியளித்தது குமாருக்கு.

ஆனந்தி குமாரின் தோள்களை பிடித்தி உளுக்கினாள், மச்சான் நான் சொல்றது காதுல விழுதா என்றாள். குமார் தன்னிலை உணர்ந்து இந்த உலகிற்கு மறுபடியும் வந்தான்.

இந்திரா குமாரிடம், ஏண்டா குமாரு… சேகரு வெளிநாடு போயிட்டான். நீதான் அம்மாவையும் என்னையும் சுத்தி சுத்தி வருவ. எனக்கு தெரிஞ்சி திருச்சியில மாமாவோட நண்பர் நல்ல கம்பெனி நடத்துறாரு, உனக்க வேலைக்கு சொல்றேன் வந்திடுறீயா என்றாள்? குமார், என்ன அத்தே ஆச்சு உனக்கு நீ இன்னிக்கு சரியில்லையே. நம்ம வீடு, அம்மா அப்பா தம்பி தங்கையெல்லாம் அங்க இருக்கறப்போ நாம மட்டும் எதுக்கு இங்க ? நான் வரலை அத்தை. அட மடையா.. நான்தான் 10 நாள்ல அங்க வந்திடுவேனே. நீயும் திருச்சியில இருந்தீனா உன்னைய பாக்க வர்ற சாக்குல அப்போ அப்போ ஆனந்தியையும் வந்து பாத்துக்குவேண்டா அதான் சொன்னேன்.

நம்ம வீட்ட விட்டு நா எப்படிடா இங்க வருவேன். ஐஞ்சு தலைமுறையா ஒண்ணா சேர்ந்து வாழ்ந்த குடும்பம்டா. நீங்க வேலைக்கு போனாலும் எந்த நாட்டுக்கு போனாலும் இந்த கட்டை காஞ்சிபுரத்த விட்டு வராதுடா என்றாள்.

தொடரும்…..

ஆனந்தி இந்திராவை தன்னுடனே வைத்துக்கொள்ள முடிவு எடுத்த பின் இந்திராவை பற்றி நமக்கு அவ்வளளாவாக செய்திகள் தெரியவில்லை. குமாருக்கும்தான்.

ஆனந்தி தன் அம்மாவை தன்னுடன் இழுத்துச்சென்றாள் அவளிடம் சொல்லாமலேயே… ஆனால் இந்திராவின் மனது காஞ்சிபுரத்தை விட்டு வரவேயில்லை.

அவரவர்கள் தத்தம் ஊருக்கு சென்றார்கள். குமார் மட்டும் கணத்த இதயத்துடன் சென்றான். தான் இனி இங்கு வர முடியாததை உணர்ந்தான். ஆனந்தியின் கணவனுடைய கட்டளை அப்படி. ஏனோ, இந்திராவை குமாருடைய குடும்பம் அவளுடைய சொத்துக்காகத்தான் தன்னுடையே வைத்துக்கொண்டார்கள் என. அது பொய் என்று நிரூபிக்க குமாரோ அல்லது குமார் குடும்பமோ இந்திராவை பார்க்காமல் இருப்பதுதான் உசிதம்.யார் செய்தார்களோ இல்லையோ குமார் அந்த கொள்கையை கடைபிடிக்க ஆரம்பித்தான்.

26 வருடங்கள் ஓடின. சுமதிக்கும் சேகருக்கும் திருமணம் ஆகியிருந்தது. இந்திராவிடம் இருந்து எந்த ஒரு தகவலும் இல்லை. கணக்குபிள்ளை மட்டும் அவ்வப்போது அத்தை நன்றாக உள்ளார் மாப்பிள்ளையும் ஆனந்தியும் நன்றாக பார்த்துக்கொள்கிறார்கள் என்று.

குமாருக்கு பூங்குழலி என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி மயிலாடுதுறை வந்து செட்டில் ஆகிவிட்டான். சுமதிக்கு ஒரு பள்ளி ஆசிரியருடன் திருமணம் செய்து வைத்தனர். சேகர் தமிழ்க்கவிஞர் ஒருவருடைய பெண்ணை மணந்து சவுதியிலேயே செட்டில் ஆகிவிட்டான். எப்போதாவது வந்து போய்விட்டு இருந்தான்.

குமாருடைய வாழ்க்கையில் பூங்குழலி மற்றும் அவனுடைய ஒரே மகளான இந்திரா பிரியதர்ஷ்னிக்குத்தான் அதிக இடம். அவனுக்கு அத்தையை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் உண்டு ஆயினும் பூங்குழலியிடமோ அல்லது பிரியாவிடமோ அதைப்பற்றி அணுவும் பேசியது கிடையாது. ஒரு மனதிருப்திக்காக தன்னுடைய மகளுக்கு இந்திரா பிரியதர்ஷிணி என்று பெயர் வைத்திருந்தான்.

ஆனால், மகளுக்கு அந்த பெயர் அவ்வளவாக பிடிக்கவில்லை, பிரியா அல்லது பிரியதர்ஷிணி என்று அழைப்பதையே அவள் விரும்பினாள்.

சில வருடங்களுக்கு முன் கணக்குப்பிள்ளை காலமானார். இனி அத்தையைபற்றி எப்படி தெரிந்துகொள்வது என்ற எண்ணம் குமாரை சற்று ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

ஒவ்வொரு இரவும் படுக்கைக்குச்செல்லும் போது எப்படியெல்லாம் என் வாழ்க்கை மாறியிருக்கவேண்டியது. அத்தையின் உதவியினால் என்னால் இந்த நிலமைக்கு வரமுடிந்தது. இப்போது ஊரே போற்றும் ஒரு தமிழ் இலக்கியவாதி நான். ஆனால் இப்படிப்பட்ட வாழ்க்கையை நான் வாழ்வதை என் அத்தைக்கு பார்க்க கொடுத்துவைக்கவில்லையே என்ற ஓர் நெருடல் அவனை நிம்மதி இழக்க செய்தது. அவனுக்கு தன் அத்தை இல்லாத குறையை தன் மகள் பிரியதர்ஷினி தீர்த்துவைத்தாள். கிழவி போல புத்திமதி கூறுவதும், நேரத்துக்கு சாப்பிடவேண்டும் உறங்க வேண்டும் என்று இந்திராவை போல எப்போதுமே குமாருக்கு அறிவுரை கூறுவாள். குழலி ஓர் ஊமைப்பாவை. குமாருக்கு எது இஷ்டமோ அதையே தன் இஷ்டமாக ஆக்கிக்கொள்வாள்.

மயிலாடுதுறை மாறி வந்த நாள் முதல் குமார் தன் அம்மா அப்பாவை மாதா மாதம் காஞ்சி சென்று பார்த்துகொண்டு வந்தான். அவர்களுக்கும் இந்திரா இங்கு இல்லையே என்ற குறையைத் தவிர வேறு எந்த குறையும் இல்லை.

அத்தைக்கு இப்போது 74 வயது இருக்கும் என நினைத்துக்கொண்டே ஆகஸ்ட் 20 ஆம் தேதி எழுந்தான். அன்றுதான் பிரியதர்ஷிணிக்கும் இந்திராவிற்கும் பிறந்த நாள். ப்ரியாவிற்கு வயது 21 முடிகிறது. அவளுக்கு திருமண வயது வந்துவிட்டதை நினைக்கும்போது ஆனந்தியின் நினைவு குமாருக்கு வந்து சென்றது. ஆனந்தி இப்படி தன் அத்தையை தன்னிடம் இருந்து பிரித்துவிடுவாள் என்று சிறிதும் அவன் நினைக்கவில்லை. அத்தை எண்ணிய எண்ணம் சரிதானோ ?

ஒரு வேளை ஆனந்திக்கே குமாரை மணம் முடித்திருந்தால் குடும்பம் இப்படி சின்னா பின்னமாயிறுக்காதல்லவா ? அத்தை அப்படி ஒரு எண்ணம் வைத்திருக்கலாம் என்று அப்போதுதான் குமாருக்கு புரிந்தது. மகளைத்தான் தர முடியவில்லை, திருச்சியில் ஒரு வேலை பார்த்து கொண்டிருந்தால் மகளையும் மகனைப்போல் உள்ள என்னையும் பிரிய நேராது என்று அவள் எண்ணிதான் அப்படி கேட்டாள் போல.

என்று ஏதெதோ நினைத்துக்கொண்டான் தனக்குள்.என் வீட்டை விட்டும் என் அம்மா தம்பி, தங்கையை விட்டும் நான் மட்டும் எப்படி போவது என்றல்லவா நான் இருந்துவிட்டேன்… .. இப்படி பலவற்றை நினைத்துக்கொண்டு பிரியதர்ஷ்ணிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல துயிலேழுந்தான் குமார்.

குழலி, குமார் மற்றும் பிரியதர்ஷிணி மூவரும் மாயூரநாதர் கோயிலுக்கு சிவனை வழிபட்டு வீடு திரும்பினர்.

அந்த வருட கடைசியில் பிரியதர்ஷ்ணி பி,டெக் முடித்துவிட்டாள். பல்கலைக்கழகத்திலேயே முதலாமிடம். கேம்பஸ் இன்டர்வியூ மூலம் அவளுக்கு வேலையும் கிடைத்தது. இந்த நிலையை எண்ணி குமார் தன் அத்தையை நினைத்துக்கொண்டான். இவை யாவும் அவரால் தனக்கு கிடைத்ததே என்று. ஆனால் குழலிக்கு அவளை வேலைக்கு அனுப்ப ஆசையில்லை. வரன் பார்க்க ஆரம்பித்தாள். குமாரும் குழலி சொல்வதற்கு தலையசைத்தான். மகள் அடுத்த கட்டத்திற்கு செல்கிறாள். ஆனால் அவளுடைய எந்த விதமான விழாவிற்கும் அத்தை இருந்ததில்லை இருக்கப்போவதுமில்லை என்ற யதார்த்த நிலையும் குமாருக்கு புரியாமல் இல்லை.

குடும்பப் பிண்ணனியை வைத்தும் சீனிவாச மாமாவின் புகழை வைத்தும் அந்த குடும்பத்தில் பெண் எடுத்தால் போதும் என்று பல பெரிய குடும்பத்தினர் வந்தனர். ஆனால் எதிலும் குழலிக்கு விருப்பம் இல்லை. கடைசியாக திருவெறும்பூர்இல் இருந்து ஒரு வரன் முடியும் தருவாயில் இருந்தது. மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்த்து சென்று 2 மாதங்களில் தேதி குறித்தனர்.

திருமண வேலைகள் தடால் புடலாக நடந்தேறியது. குமார் ஊர் ஊராக தன் மனைவியுடன் சென்று திருமண பத்திரிக்கை கொடுத்தான். உள்ளூர தன் அத்தையை கூப்பிட முடியுமா இதை ஒரு சாக்காக வைத்து அத்தை வீட்டிற்கு போகலாமா என்று அவன் மனது குரங்கு போல் தாவியது இங்கும் அங்கும். அத்தை எங்கு உள்ளார், நான் கூப்பிட்டால் மகள் திருமணத்திற்கு வருவரா என்ற எண்ணமும் இருந்தது அவனுக்கு.

ஒருவழியாக பத்திரிக்கை, பந்தல், மண்டபம் என்று எல்லா வேலையும் முடிந்தது. தன் அம்மா, அப்பா, சேகர் குடும்பம், சுமதி குடும்பம், அவர்கள் குழந்தைகளை என யாவரும் பிரியதர்ஷிணி கல்யாணத்திற்காக வந்து சேர்ந்தனர்.

தனது அறையில் விசிறியை வேகமாக வைத்துவிட்டு கதவை தாழிட்டு “அப்பாடா”என்று படுத்தான். மறுநாள் காலை திருச்சியில் இருந்து தந்தி. தன் அத்தை இந்திரா மரணப் படுக்கையில் இருப்பதாகவும் குமார் உடனே வர வேண்டும் என்றும் சொன்னது அந்த தந்தி. அந்த தந்தியைஆனந்தியின் கணவன் தான் அனுப்பியிருந்தான். மகளின் கல்யாணத்தை பற்றி கவலைப்படுவதா அல்லது அத்தை நிலை குறித்து அழுவதா என்று தெரியவில்லை. அத்தைதான் முக்கியம் என்று நினைத்திருக்க வேண்டும் குமார். குழலியிடம் பொறுப்பைக்கொடுத்துவிட்டு, திருச்சிக்கு விரைந்தான். ஆஸ்பத்திரியில் ஐசியூவில் அவனது அத்தை படுத்த படுக்கையாய் கிடந்தாள். கதவை தாழிட்டு உள்ளே வந்தான்.

அத்தே.. நல்லாருக்கியா அத்தே என்றான்.

பொறுமையான சற்றும் நிதானமான குரலில், குமாரு உன்னைய பார்க்கத்தான்டா உயிரோட இருக்கேன் என்றாள். என்னைய தப்பா எடுத்துக்காதடா எப்படியோ நம்ம குடும்பம் சிதறிப்போக நானும் ஒரு காரணம் ஆயிட்டேன்டா.. தெரிஞ்சோ தெரியாமலோ என்றாள்.

குமார் அத்தை சொன்னதை எதையும் அலட்டிக்கொள்ளாமல் கூறினான், அத்தே உனக்கு ஒண்ணும் ஆகாது நீ நல்லா ஆயிடுவே. வா அத்தே என் மகளுக்கு இன்னிக்கு கல்யாணம் என்கிறான் குமார்.  உன் பொன்னு பேரு என்னடா என்றாள். பிரியதர்ஷிணி அத்தே. இந்திரா பிரியதர்ஷிணி. என் மனைவி பேரு பூங்குழலி என்றான் குமார்.

நல்லா பேரு வாங்கிட்டடா. உன் பேச்சை டிவில கேப்பேன். உன் செய்திய தினமணில படிப்பேன் என்றாள். அவர்களுடைய பேச்சு ஒரு முடிவுபெற்ற பதில் அல்லது ஒரு திறந்த கேள்வியாகவே இருந்தது. குமாரிடம் பேசுவதற்காகவே தன்னுடைய முழு சக்தியையும் சேர்த்துவைத்து பேசினாள் போலும்.

இவ்வளவு தெரிஞ்சும் ஏன் அத்த நீ வரல ? என்றான் குமார்.

அதை பத்தி பேச வேண்டாம் குமாரு. அதான் நீ இப்போ வந்துட்டியே என்றாள். அவள் முகம் ஒரு தெய்வீக புன்னகையுடன் இருந்தது. கண் சிமிட்டவில்லை. கண்கள் ஓரம் மட்டும் கண்ணீர். இந்திராவின் கைகள் குமாரின் கைகளை பற்றியிருந்தது. அவளின் உயிர் பிரிந்தது.  குமார்… அம்மா என்றே கதறி அழுதான்.

ஆனால் அவன் கத்துவது யார் காதிலும் விழவில்லை. வெளியில் இருந்து கதவை யாரோ தட்டினார்கள். எழுந்திருக்க முடியவில்லை ஏதோ மூச்சு அடைத்தது போல உணர்ந்தான். இத்தனை வருடம் கழித்து அத்தையை இப்படியா பார்க்கவேண்டும். இதற்காகவா நான் இத்தனை வருடம் காத்திருந்தேன் என்றெல்லாம் நினைத்தான் குமார்.

அப்பா.. அப்பா.. இன்னும் என்ன செய்யிறீங்க இன்னுமா தூங்கறீங்க ? கதவத் திறங்க என்றாள் பிரியதர்ஷிணி.

குமார் எழுந்து பார்த்தபின்புதான் உணர்ந்தான், தான் கண்டது கனவு என்று. பட பட பட என்று அவன் இதய துடிப்பு அடித்தது. எதுவும் நடக்காததுபோல் காட்டிக்கண்டு பல் துலக்க வெளியே வந்தான். தான் கண்ட அந்த கொடூர கனவை நினைத்தபடியே பல்லை துலக்கிக்கொண்டிருந்தான். தன்னைத் தானே நொந்துகொண்டான். அத்தை இங்கே இல்லையே என்ற ஒரு நினைவுதான் அந்த மாதிரியான கனவின் வெளிப்பாடு என்று நினைத்துக்கொண்டிருக்கையில் குமாரை அங்கே ஒரு குரல் அழைத்தது.

என்ன மச்சான் இவ்வளவு நேரமா எழுந்திருக்க ? அதுவும் மகளோட கல்யாணத்துக்கு ?

அது ஆனந்தியின் குரல்.

குமாருக்கு தூக்கி வாரிப்போட்டது. ஆனந்தி நீ எப்ப வந்த ? என்றான் மிகுந்த மகிழ்ச்சியுடனும் அதே சமயம் தான் கண்ட கனவின் மன அழுத்தத்துடன் மிக சிரமப்பட்டு சிரித்துக்கொண்டே கேட்டான். ஒரு இரவில் எப்படி இந்த மாற்றம் ? என்ற எண்ணம் அவனுக்கு மேலோங்கி இருந்தது.

ஆமாம் மச்சான் நான் வந்தது இருக்கட்டும். நீ முதல்ல குளிச்சிட்டு வா. மண்டபத்துக்கு கிளம்பனும். தன் அத்தையை பற்றி அவள் ஏன் கூறவில்லை என்ற கேள்வி அவனுள் எழுந்தது. குமார் குளிக்கச்சென்றான். திருமண காரியங்கள் நடந்துகொண்டிருந்தன. ஆனந்தியிடம் வந்தான். அவள் கணவன் பிள்ளைகளைப் பற்றி விசாரித்தான், அப்படியாவது அத்தையை பற்றி அவள் ஏதாவது கூறுவாள் என்று எதிர்பார்த்தான், ஆனால் அவள் அப்படி ஏதும் கூறவில்லை.

அப்படியே தலையை ஒரு வாராக துவட்டிக்கொண்டே தன் வீட்டின் முன் அறைக்கு போக ஆயத்தமானான். போகும் வழியில் மாடத்தில் தொங்கிக்கொண்டிருந்த தன் மாமாவின் படத்தில் இருந்து ஜவ்வந்திப் பூ அவன் தலையில் விழுந்தது. தன் மகளின் திருமணத்திற்கு மாமாவின் ஆசிர்வாதம் போல என நினைத்துக்கொண்டு துவட்டிய துண்டை தோளைச் சுற்றி உடம்பை மறைத்துக்கொண்டு முன் அறைக்கு சென்றான்.

வீட்டின் முன் அறையில் குழந்தைகளும் விருந்தினர்களும் அமர்ந்திருந்தனர். ஆங்காங்கே குழந்தைகள் விளையாடும் சத்தமும், டிவி ஓடிக்கொண்டிருந்த சத்தமும் திருமணவீட்டிற்கு அடையாளமாக இருந்தது.அனைவரையும் கைகூப்பி வரவேற்றான் குமார். கூட்டத்தில் ஒரு சேராக அவன் பார்வை படர்ந்திருந்தபோது ஒரே ஒரு உருவம் மட்டும் அவனுக்கு மிகவும பரிச்சயமான உருவமாக இருந்தது.

அரக்கு வண்ண சேலை கட்டி அவனது அத்தை இந்திரா நெற்றியில் விபூதியுடன் பார்ப்பதற்கு காரைக்கால் அம்மையார் போல நாற்காலியில் அமர்ந்திருந்தாள்.  26 வருடம் கழித்து தன் அத்தையை பார்த்த அவனால் ஏதும் பேசமுடியவில்லை. அ.. அ..அத்..அ… ம் ம்… என்கிறான்… வார்த்தைகளே வரவில்லை.

அத்தையின் கையில் அவனுக்கு புதுத்துணிக்கொண்ட ஒரு பையும் இருந்தது. தோல் சுருங்கிய அந்த கைகளால் பையை அவள் அவ்வளவு இருக்கமாக பிடித்துக்கொண்டிருந்தாள்.  குமார் அப்படியே அத்தையின் காலடியில் வந்து உட்கார்ந்தான்.

இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த பிரியதர்ஷிணி கூடத்தில் தேவையில்லாமல் சத்தமிட்டுக்கொண்டிருந்த டி.வியை அணைத்தாள், சிறுவர்களை மாடியில் போய் விளையாடும்படி கூறினாள். அன்றுதான் அவள் முதன் முதலாக தன் அப்பாவின் அத்தையை பார்க்கிறாள். கண்களில் கண்ணீருடன் தன் அறைக்கு உள்ளே வந்தவள் ஜன்னல் வழியாக கொஞ்ச தூரத்தில் அந்தக் காட்சியை கண்டு ரசித்தாள்.  அந்தக் கணம் அவளுடைய மகிழ்ச்சிக்கு ஒரு அளவே இல்லை.  ஆம் தன் அப்பா தனக்கு வைத்த பெயரை நினைத்து பிரியதர்ஷ்ணி மிகவும் பெருமைப்பட்டுக்கொண்டாள்.  இப்படி அப்பாவை தான் என்றுமே பார்த்ததில்லை என்பதை உணர்ந்த அவள் இத்தனை வருடங்களாக நம்மிடம் அப்பா எதுவுமே சொன்னதில்லையே என்பதை நினைத்தாள்.

ஆனால், இந்திரா மற்றும் ஆனந்தியின் குடும்பத்தை யார் தன் கல்யாணத்திற்கு வரவேற்றார்கள் என்ற கேள்விக்கு பதில் யாரிடமும் இல்லை.

குமாரே ஒரு வேளை தனியாக போய் அழைத்திருக்கலாம். அல்லது குழலி தனியாக போய் அழைத்திருக்கலாம். ஆனந்தியே செய்துவிட்டு தெரியாதது மாதிரி இருந்திருக்கலாம்.

யார் அழைத்திருந்தால் என்ன அந்த குடும்பத்தில் இப்போது மகிழ்ச்சி இரட்டிப்பாயிருக்கிறது. இப்போது அத்தை வந்துவிட்டாள். 

சமர்ப்பணம்
இந்திராவின் (மரு)மகன் குமாருக்கு

 

 

 

adi-kumbeswarar-temple-in-kumbakonam-on-mirchi-travelsDSC06031kumbakonam--adi-kumbeswarar-temple-corridorkumbeswarar1

 

 

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s