இவன் ஒரு நாடோடி புரட்சிக்காரன்

இன்றுடன் சே இறந்து 50 வருடங்கள் ஆகின்றன…  அவரை நினைவுகூறும் வகையில் ஒரு சிறிய கற்பனை……முற்றிலும் கற்பனையே. சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் சே சந்தித்துக்கொண்டதே கிடையாது… ஒருவேளை சந்தித்திருந்தால்.. அதுவும் சுதந்திரபோராட்ட காலகட்டத்தில் இந்தியாவில் இருவரும் சந்தித்திருந்தால்……

che-guevara

1959ஆம் ஆண்டு நடந்து முடிந்த க்யூப புரட்சிக்கு முன்பு, 1941 ஆம் ஆண்டு சே இந்தியா வருகிறார்.

சுபாஷ் சந்திரபோஸ் சேகுவேராவை வரவேற்க இந்தியா சீனா எல்லையில் காத்திருந்தார். வெள்ளையர்களுக்கும் அதன் சிப்பாய்களுக்கும், சீன நாட்டு காவலாளிகளுக்கும் தண்ணீர் காட்டிவிட்டு அன்று அந்தத் தலைவர் சேகுவேரா என்ற ஒரு மாபெரும் புரட்சிக்காரனின் வருகைக்காக காத்து நின்றார்.

சே வருகிறார். காற்றுடன் கலந்து, புரட்சியின் வாடை அடிக்க ஆரம்பித்தது. எல்லைப்பகுதி என்பதால் ஒரே திறந்த வெளி மலைப்பகுதியாக தெரிந்தது அந்த காட்சி. எங்கேயோ இருந்து ஒரு ஜிப்சியின் சத்தம். கரடு முரடான பாதைகளைத் தாண்டி அந்த ஜிப்சி மிகவும் நீண்ட தூரத்தில் வருவதைக் கண்டார் போஸ்.

ஜிப்சி மிக அருகில் நெருங்கி வருவதை போஸ் உணர்ந்தார். புழுதிகளை பறக்கவிட்டுக்கொண்டு அந்த நான்கு சக்கர வாகனம் எதையோ சாதித்து விட்டதுபோல் என்ஜின் காற்றை வெளியேற்றிவிட்டு நின்றது. பின்னால் உள்ள கதவு திறக்கப்பட்டது. மாசு படிந்த, சேரும் சகதியும் படர்ந்து பிறகு வெயிலில் உலர்ந்து போன காலணிகள் முழங்கால் வரை இருந்தன. கரும் பச்சை நிற உடையுடன், தலையில் நட்சத்திரக் குறிபொறித்த ஒரு தொப்பியுடன், வாயில் க்யூபன் சிகாருடன் மிகவும் தனித்தன்மை வாய்ந்த ஓர் உடல்மொழியில் சே குவேரா இந்திய மண்ணில் காலடியை வைத்தார்.

போஸ்: நல்வரவு சேகுவேரா, நீங்கள் இந்தியா வருவதற்கு நாங்கள் மிகவும் கொடுத்துவைத்துள்ளோம்.

சே : ஆகா, இந்தியா. உலகில் அறம் தோன்றுவதற்கு முன்பே நாகரிகத்துடனும், தர்மத்தின்படியும் மக்கள் வாழ்ந்து வந்த, வருகிற நாடு. புனித மண். கலாச்சாரத்தின் அடையாளம். இந்துத்துவத்தின் கரு கொண்ட நாடு.

போஸ்: ஆமாம் சே, வாருங்கள் வாருங்கள். எப்படியிருந்தது பயணம்? க்யூபாவில் பீடல் எப்படி உள்ளார்? பாடிஸ்டாவை எதிர்த்து எப்போது புரட்சிப் பயணம் ஆரம்பிக்க உள்ளீர்கள்? அமெரிக்காவின் உட்கட்சி அட்டகாசம் எப்படி உள்ளது ?

இருவரும் பேசிக்கெண்டே ஜிப்சியில் ஏறினார்கள். மிகவும் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் அந்த ஜிப்சி சென்றது. உள்ளே சென்ற தடமே தெரியவில்லை, அங்கு வழி இருப்பதும் தெரியவில்லை. வெள்ளையர்கள் கண்ணில் படாமல் இருக்கவும் ரகசியக்கூட்டங்களை நடத்தவும் அக்காலகட்டத்தில் மலையோரத்தில் இடிந்துபோன மடங்களும், கோயில்களும் போஸ் போன்று சுதந்திர இந்தியாவிற்கு பாடுபடும் வீரர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தன.

சே :  எல்லாம் நேரத்துடன் அரங்கேறும் போஸ் அவர்களே. நீங்கள் எப்படி உள்ளீர்கள்?  ஐ.என்.ஏ. ஆட்கள் சேர்ப்பு எப்படி நடக்கிறது?  சரியான நேரத்தில் நிதி கிடைக்கிறதா? தென் அமெரிக்காவில் உங்களுடைய ஐ.என்.ஏ. பற்றித்தான் எப்போதும் பேச்சு. நாங்கள் புரட்சிப்படைகள். நீங்கள் ராணுவத்தையே திரட்டிவிட்ட மாபெரும் வீரர் அல்லவா? பிரிட்டிஷ் கொலைவெறியர்கள் என்ன சொல்கிறார்கள்? நிலைகுலைந்து அல்லவா போயிருப்பார்கள்?

போஸ் :   நல்லபடியாக நடக்கிறது தோழரே.

சே :  புரட்சிக்காரர்களைத்தான் இந்தியர்களே விழுங்கிவிடுகிறார்களே. பகத் சிங் தூக்கிலிடப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிவிட்டன, இன்னமும் புரட்சிக்காக ஏங்குகிறது உங்கள் தேசம். நினைத்திருந்தால் உங்கள் காங்கிரஸ் ஆட்கள் பகத்சிங் சகோதரர்களை மரண தண்டனையில் இருந்து விடுவித்திருக்க முடியும்.  அகிம்சை நாடு என்பது சரியாகத்தான் உள்ளது போங்கள். ஆனால், அதுவே இம்சையாகிவிடக்கூடாது. உங்களைப்போல் ஆள் உள்ள வரை இந்தியாவை பிரிட்டிஷாரின் பிடியில் இருந்து காப்பற்றுவது மிகவும் சுலபம் தான். (தனது ஆஸ்துமா மருந்தை மூக்கினுள் இழுத்துக்கொண்டே தொடர்ந்து சொன்னார் சே). போஸ், உங்களுக்காக ஒரு வேலை காத்திருக்கிறது. என்னுடைய வருகையின் நோக்கமும் அதுவே. நாளை சீனா வழியாகப் போகும் ரயிலில் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு சொந்தமான ஆயுதக் கிடங்குகளுக்காக வெடி மருந்தும் மற்ற ஆயுதங்களும் அனுப்பப்படுகின்றன. அது உங்கள் ஐ.என்.ஏவிற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். உங்களால் போக முடியாது என்பது எனக்கு தெரியும். நீங்கள் கல்கத்தா போய் வைஸ்சாராயை சந்தித்துவிட்டு அங்கேயே இரண்டு தினம் தங்கிவிடுங்கள். நம்முடைய இந்த நட்பு ரீதியான சந்திப்பு வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெறும். நான் இங்கிருந்து வேலையை கட்சிதமாக முடித்துவிட்டு அர்ஜெண்டைனா கிளம்புகிறேன். நீங்கள் அங்கு தங்குவதன் மூலம், இதை நீங்கள் செய்யவில்லை என்று அவர்கள் நம்புவார்கள். நாளை உங்கள் படைத்தளபதியிடம் என்னை அறிமுகம் செய்துவிட்டு பிறகு கிளம்புங்கள், அதுவே நல்லது.

போஸ்:  உங்களுக்கு அறிமுகம் தேவையா சே ?

சே : நான் அப்படி சொல்லவில்லை போஸ். பிரிட்டிஷாரின் கையாள் போல உங்கள் தளபதிக்கும் படை வீரர்களுடைய கண்களுக்கும் நான் தெரியலாம் அல்லவா? அதற்காகச் சொன்னேன். நேபாளம் வழியாக ரயில் வரும் போது நான், நேபாளத்தின் தாய் நதியான கர்னாலி ஆற்றை ரயில் கடக்கும்போது, அதனுடைய பாலத்தில் குண்டு வைத்து தகர்த்துவிடுகிறேன். நாம் இப்போது இங்கு இருக்கும் இடத்தில் இருந்து அந்த பாலம் ஒரு 29 மைல்கள் இருக்கும். ரயிலை தடம் புரள செய்துவிட்டு ஆயுதங்களை கைப்பற்றிவிட்டு நாங்கள் மலையடிவாரம் வழியாக இங்கு வந்து சேர்ந்துவிடுவோம். நீங்கள் கல்கத்தாவில் இருந்து திரும்ப வரும்போது உங்கள் ஆயுதப் பாசறை ஆயுதங்களால் நிரம்பியிருப்பதை பார்ப்பீர்கள் போஸ்.

போஸ்:  சுதந்திர இந்தியா உங்களுக்காக மிகவும் கடமைப்பட்டுள்ளது சே. நீங்கள் சொல்வது போல செய்துவிடலாம். அடால் புடலான திட்டங்களை உங்களைப்போல் ஆட்களால் மட்டுமே செய்து முடிக்க முடியும். இலக்கை மட்டுமே மையமாக வைத்து பேசினீர்கள். க்யூபாவிற்கு உங்கள் பங்கு மிகவும் முக்கியம் என்று பீடல் காஸ்ட்ரோ சொன்னது சரிதான் போல.

சே, நினைத்த படி, போஸ் இந்திய தேசியப் படையின் தளபதியிடம் சேகுவாராவை அறிமுகம் செய்த பின்பு அவர் கல்கத்தா கிளம்பினார். வைஸ்ராயைச் சந்தித்து சுதந்திர இந்தியாவிற்காகப் பேச சென்ற மாநாட்டில் கலந்துகொண்டார். ஆயுதங்கள் போய் சேரவில்லை என்ற செய்தி வைஸ்ராய்க்கு தந்தி மூலம் வந்தது. போஸ் இங்கு இருப்பதால், அவர் மேல் சந்தேகமும் வரவில்லை. ஐ.என்.ஏ. வீரர்கள் சீன எல்லையில் இருப்பது பற்றிய செய்திகளும் வெறும் வதந்தியாகக் கருதப்பட்டது.

சே மேற்கூறியபடி தன் திட்டத்தில் வெற்றி பெற்று பின்வருமாறு கடிதம் எழுதினார்,

தோழர் போஸ் அவர்களுக்கு, நாம் நினைத்த காரியம் நடந்தேறியது. இப்போது உங்கள் பாசறையில் பிரிட்டிஷ்காரனின் ஆயுதங்கள். அவர்கள் ஆயுதங்களை வைத்தே அவர்களை அழியுங்கள். அடுத்த முறை நாம் சந்திப்போமா என்பது தெரியாது. புரட்சிக்காரர்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்வதால் என்ன நடக்குமோ அது நடக்கும். உங்களை இவ்வளவு சீக்கிரம் சந்தித்து சுதந்திர இந்தியாவிற்காக இப்படியொரு மாபெரும் பேற்றை செய்ய வைத்ததற்கு என்னுடைய நன்றிகள். நட்பு ரீதியாக ஒரு சந்திப்பாக இது ஆரம்பித்தில் இருந்தாலும், ஒரு வரலாற்று சம்பவமாக நாம் இருவரும் இதை மாற்றிவிட்டோம். மீண்டும் சுதந்திர இந்தியாவில் சந்திப்போம். இப்படிக்கு, அன்புடன், சே. 

போஸ் கல்கத்தாவில் இருந்து திரும்பி வரும்போது இத்தனையும் நடந்திருந்தன. சே குவேரா வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை. தம் இயக்கத்திற்குத் தேவையான ஆயுதங்கள் இப்போது தம்மிடம் இருப்பதை உணர்ந்தார் போஸ்.  சுதந்திரம் இப்போது சற்று முன்பே நமக்கு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை போசுக்குப் பிறந்தது. சேவின் பங்கு சுதந்திர இந்தியாவிற்கு உண்டு என்பதை உணர்ந்தார் போஸ். வேலையை முழுவதும் சே செய்துவிட்டு காரியத்தை நாம் செய்தோம் என்று எழுதியிருந்தார் சே. போஸ், அவருடைய எண்ணங்களை நினைத்து பிரமித்துப்போனார்.  இப்படி ஒருவரை வாழ்நாளில் அவர் சந்தித்ததற்கு மிகவும் அகமகிழ்ந்தார் போஸ்.

தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் அக்டோபர் 9, 1941.
செய்தி

செய்தி :  நேபாளம் வழியாக சூறையாடப்பட்ட ஆயுதங்களை வைத்து போஸ் தலைமையில் ஐ.என்.ஏ  படை பிரிட்டிஷ் அரசுடன் நடத்திய போரில் 25,000 வீரர்கள் உயிரிழந்தனர்.  இதன் மூலம்  ஆயுததத்தை கைப்பற்றியவர்கள் ஐ.என்.ஏவை சேர்ந்தவர்கள் என்று ஊர்ஜிதமாயிற்று. சுபாஷ் சந்திரபோஸ் பேரில் பிடி வாரண்ட் பிறப்பித்தது கல்கத்தா நீதிமன்றம். 

Advertisements

One thought on “இவன் ஒரு நாடோடி புரட்சிக்காரன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s