பாலக்கரை

1983, பாலக்கரை, கும்பகோணம்.

மாலை நேரம். தஞ்சையில் பரிதவித்து காத்துக் கிடக்கும் கழனிகளையெல்லாம் தாகம் தீர்ப்பதற்காக காவிரி நிலைகொள்ளாமல் ஓடியபடி பெரும் இரைச்சலுடன் சென்றுகொண்டிருந்தாள். அப்படியே ஆற்றின் குறுக்கே கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரி பாலத்தின் கைப்பிடி கம்பிகளில் கை வைத்து சோக முகத்துடன் யோசித்துக்கொண்டிருந்த கேசவனை கண்டுகொள்ளாதபடி தன் பணி தீர்க்க சென்றுகொண்டிருந்தாள் காவேரி.

“என்னைப்போல் பலர் இங்கு வரலாம் போகலாம் ஆனால் இந்த காவிரி தன் ஓட்டத்தை என்றுமே நிறுத்தப்போவதில்லை அவளுடைய இருப்பு இங்கு என்றுமே நிரந்தரம்” இதுபோல இன்னும் ஏதேதோ நினைப்புகள் அவனை இயங்காவண்ணம் செய்திருந்தது. அன்றுதான் அனைவருக்கும் கடைசி தேர்வு முடிந்திருந்தது. இனி வேலை அல்லது மேற்படிப்பு என்று ஒவ்வொருவரின் வாழ்க்கையும் மாற வேண்டிய நேரம்.

“கடைசி பஸ் வந்துருச்சு இன்னும் இங்க என்னத்த பாத்துகிட்டு நிக்கிற” எனக் கேட்டுக்கொண்டே கேசவனின் நண்பன் பாலாஜி வேகமாக பேருந்தை நோக்கி ஓடினான்.

கேசவன் கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரியில் பி.ஏ. தமிழ் இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கிறான். வெங்கட்ரமணியின் சொந்த தங்கை பையன்தான் கேசவன். கேசவனின் தந்தை ஒரு ரயில் விபத்தில் தன் தந்தையை பறிகொடுத்த பின் தங்கை கோதாவரியால் குடும்பச்சுமையை தாங்க இயலாது என எண்ணி பையனின் முழு படிப்பையும் அவன் மாமாவே கவனித்துக்கொண்டுவந்தார். மாமா வெங்கட்ரமணியின் வீட்டில் இருந்தபடியே தன்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி நாட்களை கழித்துவருகிறான். கோதாவரி அவள் புகுந்த வீடான திருபுவனத்திலேயே வயல் வரப்புகளை பார்த்துக்கொண்டு இருந்தாள்.  வெங்கட்ரமணியின் மனைவி செல்லம்மாள் அப்பளம் மற்றும் மாவடுக்களை போட்டு வீட்டிலேயே வியாபாரம் பார்த்துவந்தாள். அவர்களது வீடு  கணித மேதை ராமானுஜன் வீடு உள்ள சாரங்கபாணி கோயில் வீதியில் தான் இருக்கிறது. வெங்கட்ரமணி சிட்டி யூனியன் வங்கியில் க்ளார்க் வேலை பார்த்து வருகிறார். அவர்களது ஒரே மகள் அமிர்தம் பி.யூ.சி கடைசி வருடம் படித்துவந்தாள்.

கேசவன் பாலத்தின்  அருகில்நின்றுகொண்டிருந்த நாளுக்கு ஒரு வாரம் முன்பு அவனது அம்மா கோதாவரி தன் அண்ணனின் வீட்டிற்கு வந்திருந்தாள்.

கோதாவரி, நாதான் அவரையும் எழந்துட்டு அறுதலியா சுத்திக்கிட்டு இருக்கேன் இவனாவது படிப்ப முடிச்சி சீக்கிரமா வேலைக்கி கீலைக்கு போய் குடும்பத்த பாப்பான் இல்ல அவரு விட்ட வியாபாரத்த தொடருவான்னு பாத்தா கவிதைப்போட்டி, கதைப்போட்டின்னு நோட்டுப் பேனாவோட சுத்திக்கிட்டு தாராசுரம் பிரகாரத்துலயும், கும்பேஸ்வரர்கோயில் பிரகாரத்திலேயும் படுத்து பிரண்டுட்டு வாறான் கழுசட கழுசட.  என்னத்த எழுதுறானோ எழுத்து. சட்டியில இருந்தாதானே ஆப்பையில வரும். கண்ணதாசன் கணக்கா மீசைய வேற மழிச்சிண்டு அலையிது  இந்த கேசவ். தமிழ் இலக்கியம் படிச்சவாவெல்லாம் பாட்டு எழுதிதான் பொழைக்கனுமா என்ன ? “

செல்லம்மாள், அப்பளத்தை சப்பாத்தி கட்டையில் வைத்து உருட்டியபடியே,
“நீ வேணும்னா பாரு கோதாவரி அவன் நல்ல பெரிய பாடலாசிரியரா வருவான். ஒரு கவிதை ஒன்னு வாசிச்சி காமிச்சாம் பாரு கண்ணுல தண்ணி வத்தி போச்சின்னா பாத்துக்கோ. அவன் எழுதுற எழுத்து அப்படியே எல்லாத்தையும் கட்டிபோட்டுடுது. அவன் எழுத்துல உயிர் இருக்கு. அவனை அவன் போக்குல விடு சும்மா பிணாத்திக்கிட்டே திரியாத புரியுதா ?”  கேசவனின் கனவுகளையும் அவனையும் ஓரளவிற்கு புரிந்து வைத்திருந்தது செல்லம்மாள் தான். அவ்வப்போது தான் கோயில் பிரகாரத்தில் எழுதிய பாடல்களையும் கவிதைகளையும் அத்தையிடம் சொல்லிக் காட்டுவான். அவளும் கேட்டு விட்டு மனதார பாராட்டுவாள். ஆனாலும் மாமாவின் பேச்சிற்கு மறு பேச்சு என்றுமே இருந்ததில்லை.

கோதாவரி, “அதெல்லாம் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவருமா அண்ணி சொல்லுங்க. அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். எல்லாம் தலையில எழுதுன படித்தானே நடக்கும் அத யாரால மாத்த முடியும் ?”

கடைசி தேர்வு முடியும் முன்னே தான் வேலை பார்க்கும் சிட்டி யூனியன் வங்கியிலேயே பெரிய மானேஜர்களைப் பார்த்து அவர்கள் மூலம் அவனுக்கு வேலையையும் உறுதி செய்துவிட்டு வந்துவிட்டார். கேசவனின் கனவிற்கு தன் மாமாவே தடையாய் இருப்பார் என அவன் நினைக்கவேயில்லை.

வீட்டுற்கு வந்ததும் வராததுமாய் தன் மாமாவின் சத்தம் தெரு கோடி வரை கேட்டுக்கொண்டிருந்தது. உள்ளே வந்தான் கேசவன்.

வெங்கட்ரமணி மாமா, “மன்னார்குடியில 50வது கிளை ஆரம்பிக்க இருக்காங்களாம், அவனை அங்கயே போடச் சொல்லிடறேன்னு வேற சொல்லியிருக்காரு. மாசம் 180 ரூவா சம்பளம் பிடித்தம் போக 150 வரும், இதுல பிஎப் பென்சன் வேற தனி. பிரகாரம் பிரகாரமா போய் எழுதி என்னத்த சாதிக்க முடியும் கோதாவரி ? ஒரு பானை சோற்றுக்கு  ஒரு சோறு பதம்பாங்களேன்னோ. அதுபோலத்தான், இப்படித் திரியிறவனுக்கு பொறுப்பு வரட்டுமேன்னுதான் அவருகிட்ட போய் பேசி இந்த வேலைய வாங்கியிருக்கேன். நான் யாருக்கும் சிபாரிசு பண்ணுனது கிடையாதுன்னு உனக்கும் தெரியும். நம்ம கும்பகோணம் காலேஜ்ல பி.காம். படிச்சிட்டு வர பிள்ளையாண்டா எல்லாரும் இங்க ஒரு வேலைகிடைக்காதன்னு காத்து கிடக்குதுங்க. இவன் ஒழுங்க வேலைக்கு போயி சம்பாதிச்சு பிரேபேஷன் காலம் முடிஞ்சி வேலைய நிரந்தரம் பண்ணிட்டான்ன நம்ம அமிர்தத்தையும் அவனுக்கே கல்யாணம் பண்ணி வச்சிடுவோம்” எனச் சொல்லி மனதாரச் சிரிக்க பர்மா தேக்கில் செய்த தூணின் மீது பாக்கும் வெத்தலையும் சிதறியது. கோதாவரிக்கோ பரிபூரண திருப்தி அண்ணனின் இந்த ஒத்தாசையை நினைத்து, அண்ணனே அவளுக்க சம்பந்தியாகப்போவதையும் நினைத்து பூரித்துபோயிருந்தாள்.

மாமா பேசி முடித்திருக்கவும் கேசவன் வந்து அமரவும் சரியாய் இருந்தது. கேசவனுக்கோ நோட்டையும் பேனாவையும் தள்ளிவைத்துவிட்டு பென்சிலையும், லெட்ஜர் புக்கையும் எடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் மாமா மூலமாகவே வந்தது. தனது கவிதை பாட்டு கனவிற்கும் அரோகரா என்று நினைத்திருந்து தன் அம்மாவிடம் போய் கவிஞர் வாலியின் கடிதத்தை காட்டலாமா வேண்டாமா என்றிருந்தவன் அப்படியே தூணில் சாய்ந்து உட்கார்ந்துவிட்டான்.

“இன்னும் அந்த காலத்துலயே இருக்காங்களே. பட்டணம் பக்கம் போனா ஆச்சாரமும் போய்டும்ன்னு அவா நினைக்கிறாளா? இப்போது அவனுக்கு சிந்தனை. அமிர்தம். அவளுக்குன்னு ஒரு டாக்டரோ என்ஜினியரோ கிடைக்காமாலா போய்டுவான் ? என்னோட கனவு என்னாகுறது ? அவளையும் கட்டிக்கிட்டு யூனியன் பேங்க்லேயே காலத்தை கழிக்கச்சொல்றாளே ?அதைபத்தி யாருமே இங்க கேக்க தயாரா இல்லியே ? ரெண்டு வரியில வள்ளுவன் மாதிரி என்னோட நோக்கத்த சொல்லிட முடியும் மாமாகிட்ட அப்படி பேசவும் தைரிய வரமாட்டிங்குது. இதெல்லாம இவாளுக்கு ஏன் புரிய மாட்டிங்குது ? அவாளா என்னைய புரிஞ்சிண்டா எவ்வளவு நல்லாயிருக்கும் ? செஞ்சோற்றுக் கடன் தீர்க்க அமிர்தத்தை கலியாணம் பண்ணிக்கனுமோ ? கொயர் கொயரா பேப்பரு இங்க் பாட்டில் பேனா இருந்தா போதுமே நா வேற என்ன கேக்கப்போறேன் ? பேங்க் வேலைய பாத்துகிட்டே பாட்டு கவிதை எழுதிக்கலாம்ன்னு யோசனை சொல்றாளே இவா. காத்தால காயத்திரி மந்திரம் சொல்லிண்டே இவாளால சாப்புட முடியுமின்னா ? முடியாதுல.. செய்யிற வேலையில ஒரு பக்தி வேண்டாமா ? ஒரு டெடிகேஷன் வேண்டாமா ? கவிதையும் பாட்டும் எழுதுறது என்ன சைடு பிசினாஸா ?” என்று சிந்தித்தவாறே அடுத்த தேர்விற்கான பாடப்புத்தகத்தைக் கையில் எடுத்துக்கொண்டு மேல்தட்டிற்குச் சென்றான்.

மறுபடியும் கேசவன் இன்று நின்று கொண்டிருக்கும் பாலத்திற்கு வருவோம்.

கும்பகோணம் மொட்டை கோபுரம் செல்லும் பேருந்தில்  ஏறிய பின் பாலாஜி கைக்குட்டையை போட்ட படியே கேசவனை அழைத்தான். கேசவன் தன் யோசனையில் இருந்து மீண்டவன் பாலத்திலிருந்து நடக்கலானான். இருவரும் கடைசிப் பரீட்சையை முடித்துவிட்டு நண்பர்களுடனே  பிரியாவிடைகொடுத்துவிட்டு அவரவர் கிளம்பிவிட்டுருந்தனர். பேருந்திலேறிய கேசவன் சீட்டில் அமர்ந்தான். பின் சீட்டில் இருந்த இருவர் பேசிக்கொண்டனர்,  “அவா அவா… ப்ராப்தாம் அவா அவாளுக்கு” என்று பேசியபடி அந்த மூன்றாமவர் தன் செல்லப்பெட்டியில் இருந்து வெத்தலையை எடுத்து ஏ.ஆர்.ஆர் வாசனை சுண்ணாம்பை வெத்தலையில் தடவி காம்புகளை பிடிங்கி வெளியே எறிந்தார், மீதமுள்ள சுண்ணாம்பை பேருந்தின் சீட்டு கைப்பிடியில் தடவியபடி தன் பேச்சைத் தொடர்ந்தார்.  கேட்டியாண்ணோ… நம்ம ராகவன் மகன் ஆனந்த் இருக்கான்னோ அவன் கடைசி வருசம் நம்ம கவர்மெண்ட் மென்ஸ் காலேஜ்ல பி.காம். படிச்சி நம்ம சரகத்துலேய முதலாவதா வந்தானே, ஒரு வருசமா நம்ம சிட்டியூனியன் பேங்க்ல வேலைபார்த்துட்டு நேத்திக்குத்தான் மெட்ராசுக்கு வேலை மாத்தலாயிடுச்சுன்னு கிளம்பி போயிருக்கான். நல்ல பையன் கல்யாணம் தான் பாக்கி. அவா அவா படிச்சிப்புட்டு வேலையில்லாம திண்டாடுற இந்த காலத்துல நம்மூர்ள படிச்சவாளுக்கு கொஞ்சம் முன்னுரிமை கொடுத்து வேலையையும் கொடுத்துர்ரா. 

அதற்கு அவர் உடன் இருந்தவர், இருக்காதா பின்னே பி.காம் படிச்சவாளுக்கு பேங்க்ல வேலைகொடுக்காம தமிழ்வாத்தியார் வேலையா கொடுப்பா ? பேங்க் வேலையினா சும்மா இல்ல ஓய், எங்க வீட்டு அசடு தமிழ் எம்.ஏ. படிச்சிட்டு நம்ம பாணாதுறை பள்ளியிலத்தான் தமிழ்வாத்தியார் வேலையில இருக்கு, என்ன புரயோசனம் ? வாங்குறது சிகரெட்டுக்கும் பாக்குக்குமே பத்தல, கேட்டா தமிழ் வாத்தியார் வேலைய பிடிச்சி செய்யிறேன்ங்றான். சிறப்பு லகரத்தை சரியா உச்சரித்து என்ன ஆகப்போகுது கையில நாலு காசு பாத்தாத்தான் பொழைக்க முடியும் என்றார் .

இதனை பின் சீட்டில் உட்கார்ந்து கேட்ட கேசவனும் பெருமூச்சி விட்டபடி தலையை சீட்டின் பின் கம்பியில் சாய்த்தவாரே புத்தகங்களையும் தன் மடியில் வைத்து சாப்பாட்டு டப்பாவையும் கீழே விழாதபடி பிடித்துக்கொண்டு தன் பயணத்தை தொடர்ந்தான். பாலக்கரை தாண்டும்போது டீக்கடை ரேடியோவில்

நல்லதோர் வீணை செய்தே – அதை    நலங்கெடப் புழுதியிலெறிவருதுண்டோ? சொல்லடி, சிவசக்தி !~ எனைச்   சுடர்மிகு மறிவுடன் படைத்துவிட்டாய்.

என ஒலித்துக்கொண்டிருந்தது. பேருந்து நகர நகர காவிரியாற்றின் இரைச்சல் சத்தமும் அவன் காதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தபடி இருந்தது.

“தம்பி சீட்டு வாங்கிட்டீயா” என்றார் பேருந்து நடத்துனர்.

download

Advertisements

3 thoughts on “பாலக்கரை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s