எங்கே பிராமணன் ?

பூணூல் அணிந்தவர்கள் எல்லாமே பிராமணர்கள் என்று  எண்ணிக்கொண்டிருந்த என் எண்ணத்தைத் தெளிவுபடுத்தியது இந்நூல். இக்காலத்தில் தன்னை பிராமணன் என்று நினைக்கும் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல். இதில் பிராமணன் என்ற வார்த்தைக்கு பதிலாக மனிதம் அல்லது மனிதன் என்று வைத்துப் படித்தால் இந்த காலகட்டத்திற்கு மிகவும் பொருந்தும்.  அவ்வளவு வாதங்களையும், பிரதிவாதங்களையும் ஏற்றபடி கொடுத்துள்ளார் நூலாசிரியர் சோ.

ஒரு தொழிலதிபரின் குடும்பம், ஆசிரியர் ஸ்டைலில் ஒரு பிராமண தொழிலதிபரின் குடும்பம்,  அந்த குடும்பப் பின்னணியை வைத்து எழுதப்பட்ட நாவல். சமுதாயத்தில் தன்னை உயர்த்திக் காட்டிக்கொள்ள வேண்டும் என்று அலையும் வசுமதி, அவளுடைய கணவன் நாதன், அவர்களுக்கு தப்பிப் பிறந்த பிள்ளை அசோக் (கைலாயத்தில் எங்கே பிராமணன் என்ற வாதத்தை தொடர்ந்து ஈசன் வஷிஸ்டரை அசோக் என்ற மானிடப் பிறவியாக அனுப்புகிறார், பூணூல் அணிந்து ப்ரம்மோபசேசம் முடிந்து ஒரு உண்மையான பிராமணனை சந்தித்த பின் அசோக் என்பவன் தான் வஷிஸ்டர் என்பதை உணர்ந்து மேலுலகம் செல்வார் அதனை தொடர்ந்து ஈசனின் தாண்டவம் நடக்கும், அசோக் உண்மையான பிராமணனை சந்தித்தானா, வஷிஸ்டராக மேலுலகம் சென்றானா என்பதுதான் கதை)

அசோக்கை சுற்றி, பாகவதர், நீலகண்டன், அவருடைய மனைவி, அவர்களுடைய மகள் உமா, நாதனின் பணத்திற்கு ஏற்ற அடியாட்களின் கூடிய நட்பு, நமக்கு இன்னும் புரியவேண்டும் என்பதற்காக வெளிநாட்டவர் ஒருவரும் நம்முடன் பயணித்து புரிந்ததை நமக்கு கூறுகிறார்.

அசோக் என்ற கதாபத்திரத்தில் வாத விளையாட்டுகளை நடத்தியது சாட்சாத் நூலின் ஆசிரியர் சோ தான். பிறப்பால் மட்டும் ஒருவன் பிராமணனாக முடியாது என்று அவருடைய எண்ணத்தை பசுமரத்தாணி போல் பதியவைத்துள்ளார். குணம், செயல் போன்றவைதான் ஒரு பிராமணனை பிராமணனாகத் தீர்மானிக்கின்றது, ஒரு பிராமணத் தம்பதியர்களுக்கு பிறந்த குழந்தை பிராமணன் ஆகிவிடமுடியாது என்கிறார். ஒரு பிராமணன் எப்படி இருக்க வேண்டும் என்பதை, யாசிக்கமலேயே உணவு பெறுபவன், அல்லது யாசித்து பெற்ற உணவு உண்பவன், தனக்கு வேண்டாம் என்று வயலில் போடப்பட்ட உணவு தானியங்களை உண்பவன், வைராக்கியம், சத்தியம், அசையாத பக்தி, ஆசையின்மை, பொறாமையின்மை, தீர்க்கமான ஞானம் போன்றவைதான் ஒருவனை பிராமணனாக்குகிறது என்றும், பிராமண குலத்தில் பிறந்தவர்கள் யாரும் இந்த காலத்தில் பிராமணர்கள் அல்ல என்றும், காயத்ரி மந்திரத்தை சொல்வதினால் மட்டுமே ஒருவன் பிராமணனாக ஆகிவிட முடியாது என்றும் எடுத்துக் கூறுகிறார்.

அத்துடன் ஜாதிக்கும் வர்ணத்திற்கும் உள்ள வித்தியாசங்களையும்,  கீதையில் சொல்லப்பட்ட நான்கு வகை மனிதர்கள் என்ற விவாதத்தையும் எடுத்து வைக்கின்றார். நூலைப் படிக்க ஆரம்பித்தபோது எங்கே பிராமணன் ? என்ற நூலின் தலைப்பே கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதை உணரமுடிந்தது. ஜாதியின் பெயரைத் தலைப்பில் கொண்ட ஒரு நூலைப் படிக்கவேண்டுமா என்ற எண்ணமும் இருந்தது.

பிராமணன், ஷத்திரியன், வைசியன், சூத்திரன் போன்ற நான்குமே பிறப்பின் அடிப்படையில் வகுக்கப்ட்டவை அல்ல, குணத்தின் அடிப்படையில் வகுக்கப்பட்டவை என்பதை தெளிவாக கூறுகிறார், இதே கருத்தை அர்த்தமுள்ள இந்து மதத்தில் கவிஞர் கண்ணதாசனும் கூறுவது குறிப்பிடத்தக்கது.  ஒரு வைசியன் பிராணனாக முடியும். ஒரு பிராமணான இருப்பவன் வைசிய குணத்தில் இருந்தாலும் அவனை இவ்வுலகம் பிராமணனாக ஏற்காது. நாம் எல்லோருமே வர்த்தகம் செய்கிறோம், சிலர் பொருட்களை விற்கிறோம், சிலர் திறமையை விற்கிறோம், சிலர் உழைப்பை விற்கிறோம், நாம் எல்லாருமே பணம், அல்லது ஒரு ஆதாயத்திற்காகவே வாழ்க்கை நடத்துபவர்கள் ஆதலால் நாம் எல்லோருமே வைசியர்கள் தான் என்று கூறுகிறார்.

இந்து மதத்தின் ஆரம்பத்தை பற்றி பேசும் விதம் மிக அருமை. இந்து மதத்திற்கு பெயரே கிடையாது, பின்னால் வந்தவர்கள் இந்து சமவெளி மூலமாக உள்ளே வந்ததால் அந்த பெயர் வந்தது என்ற கருத்து உட்பட பல இந்து கோட்பாடுகள் கொண்ட உண்மைகளை ஆசிரியர் மற்ற மதத்தினரோடு ஒப்பிடாமல் கூறுகிறார். வேறு மதமே இல்லாததால் இந்து மதத்திற்க பெயரே இல்லாமல் இருந்தது என்கிறார். அதுதான் நிதர்சன உண்மையும் கூட.

என்னுடைய ஆழ்மனது இன்னமும் எங்கே பிராமணன்? என்ற தலைப்பை ஏற்கவில்லை, அது என்றுமே ஏற்காது. எங்கே மனிதன் ?என்று மனதில் வைத்துதான் இந்நூலைப் படித்தேன். வாருங்கள் முதலில் மனிதர்களாவோம். மனிதர்களை தேடுவோம். மனிதம் நேசிப்போம்.கீதையில் சொன்னபடி எல்லா உயிரும் ஆண்டவனுக்கு ஒன்றுதான். பிறக்கும்போதே சிலருக்கு பிரம்மன் பூணூல் போட்டும், சிலருக்கு போடாமலும் அனுப்புவதில்லை (என்னுடைய இந்த கருத்தையும் ஆசிரியர் கூறியிருக்கிறார் என்பதில் எனக்கு மிக்க ஆனந்தமே)

நல்ல குணமும் நல்ல செயலும்தான் ஒரு மனிதனை மிருகங்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. காயத்ரி மந்திரமோ, வேதமோ, பிரம்மஉபதேசமோ அல்ல. ஆனால், நல்ல குணமும் நல்ல செயலும் அப்படிபட்ட வேதங்கள், புராணங்கள் மூலம் நமக்கு கிடைக்குமானால் அவற்றை படிப்பதில் தவறில்லை, அதற்கு ஒருவன் பிராமண குடும்பத்தில் தான் பிறந்திருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. ஏனென்றால், ஆசிரியரின் கூற்றுப்படி, இங்கு பிராமணர்கள் என்று யாருமே இல்லை. வைசியர்கள் போல நமது ஆசிரியரும் ஒரு பத்திரிகை தொழில் நடத்தி பொழப்பு நடத்துபவர்தானே ? அதை அவரும் ஏற்றுக்கொண்டு இங்கு யாருமே பிராமணர்கள் இல்லை அது ஒரு உன்னத நிலை என்று ஒப்புக்கொண்டு இறுதியில் அவர் ஒரு மனிதராக காட்சியளிக்கிறார்.

மனிதானால் முடியாதது எதுவும் இல்லை. மனிதனால் முடியாதது மனிதனாக இருப்பதுதான். கிடைக்காத பிராமணனை தேடுவதை நிறுத்திவிட்டு மனிதர்களை தேடுவோம் வாருங்கள் !

நாம் எல்லோருமே வர்த்தகம் செய்கிறோம், சிலர் பொருட்களை விற்கிறோம், சிலர் திறமையை விற்கிறோம், சிலர் உழைப்பை விற்கிறோம், இதில் நான் பிராமணன் என்று சொல்லிக்கொள்ள எவனுக்கு உரிமை இருக்கிறது ? 

நூல்  எங்கே பிராமணன்?
பதிப்பகம் அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை
ஆசிரியர் சோ
ஆண்டு 2014
பக்கங்கள் 440
விலை ரூ.200

bram

Advertisements

3 thoughts on “எங்கே பிராமணன் ?

  1. //மனிதானால் முடியாதது எதுவும் இல்லை. மனிதனால் முடியாதது மனிதனாக இருப்பதுதான். கிடைக்காத பிராமணனை தேடுவதை நிறுத்திவிட்டு மனிதர்களை தேடுவோம் வாருங்கள்//

    முத்தாய்ப்பான விடயம் அழகிய நடையில் விமர்சித்த விதம் அருமை வாழ்த்துகள் தொடர்க…..
    – கில்லர்ஜி

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s