மனப்பத்தாயம்

கல்லூத்து கிராமம், திருநெல்வேலி மாவட்டம். மார்கழி மாதம் விடியும் நேரம், துர்கா அன்று சற்று முன்னதாகவே எழுந்து வாசல் கூட்டி கோலம் போட்டு வேலைகளை முடித்திருந்தாள். குழந்தை அழும் சத்தம் கேட்டு அறைக்குள் சென்றாள், அப்பா வந்துட்டாரா என்று ஐந்து வயது பவித்ரா கேட்டாள். துர்காவின் கணவன் கப்பலில் வேலை பார்ப்பவன். பயணங்களை பொருத்து அவனுக்கு விடுமுறைகள். இன்று அவன் வருகையை எண்ணித்தான் இன்று அவள் ஆயத்த வேலைகளை செய்துகொண்டிருந்தாள்.  துர்காவின் கணவன் சிவராமகிருஷ்ணன். கொஞ்சம் முன்கோபி. வீட்டில் எல்லோரிடமும் அன்பாக இருப்பான். அவனுடைய பெற்றோர்களுக்கு முதல் குழந்தை பெண் குழந்தையாக பிறந்துவிட்டதே என்று எண்ணி ஒரு வருத்தம். அவர்கள் வீட்டிற்கு வரப்போகும் அடுத்த குழந்தையாவது ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என்று வேண்டாத கடவுள் இல்லை. பவித்ரா பிறந்தது துர்காவின் கணவனுக்கும் கூட ஒரு ஏமாற்றமே.

மணி 7ஐ தொட்டது. திருநெல்வேலியிலிருந்து கல்லூத்திற்கு வரும் பேருந்து வீட்டு அருகே வந்து நின்றது. சிவராமகிருஷ்ணன் இறங்கினான். பவித்ரா என்று தனது மகள் பெயரை கத்திக்கொண்டே வீட்டினுள் நுழைந்தான். துர்கா சமையலறையிலிருந்து  அப்படியே அவனை வரவேற்க வேகமாக ஓடி வந்தாள்.

சிவா அவளை, “பொறுமையாக வா ஏன் இப்படி ஓடி வருகிறாய் எனது மகனுடைய தூக்கத்தை கலைத்துவிடாதே” என்றான். பிறக்கும் முன்னே கணக்கு போடாதீர்கள் என்று செல்லமாக அவன் கன்னத்தை தட்டினாள். சட்டென்று சிவாவின் முகம் வாடிவிட்டது. குடும்பமே ஒரு ஆண் வாரிசை எதிர்பார்த்து இருக்கையில் அவள் அப்படி சொல்லுவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.

காலை  உணவைச் சாப்பிட்டுவிட்டு துர்காவை பரிசோதனைக்கு கூட்டிச்செல்ல ஆயத்தமானான். பவித்ராவை அவன் அய்யமா அய்யப்பாவிடம் விட்டு இருவரும் தங்களுடய காரில் ஏறி செல்ல முடிவெடுத்தனர்.

ஆஸ்பத்திரி செல்லும்போதே சிவா மனதில் ஒரு யோசனை அவனை நிகழ்காலத்தில் பயணிக்க விடாமல் தடுத்துக்கொண்டேயிருந்தது. துர்கா, மாமியார் புராணம், மாமனார் புராணம், நாத்தனார்கள் புராணம் என்று கடந்த 40 நாட்கள் நடந்த கதையை சொல்லிக்கொண்டே வந்தாள். சிவா எதையும் அவ்வளவாக கவனத்துடன் கேட்டான் என்றுசொல்ல முடியாது. காரை ஓட்டிக்கொண்டே ஊம் ஊம்.. என்று உம் கொட்டிக்கொண்டே வந்தான். அடக்கி வைத்திருந்த பத்தாயத்திலிருந்து ஒரு கூடை நெல்லை எடுக்கும்போது  சர்ர்ர் என்று ஒரு சத்தத்துடன்  நிரம்புவதைப் போல இருந்தது துர்காவின் பேச்சு. இப்போது அவள் தன் மனப்பத்தாயத்தில் உள்ள விஷயங்களை கொட்டிக்கொண்டிருந்தாள். சிவாவின் மனதோ முழுக்க முழுக்க அவனுடைய அந்த அதிரடி யோசனையில்தான் இருந்தது.

கார் மருத்துவமனையை    வந்தடைந்தது.

எடைபோடுவதிலிருந்து அல்ட்ராசோனிக் ஸ்கேனிங் வரை எல்லாம் முடிந்தது. மருத்துவர் குழந்தை நன்றாக இருப்பதாகவும் இரண்டுமாதங்களே ஆவதால் சற்று கவனத்துடன் இருக்கவேண்டும் என்றும் அறிவுரை கூறினார். இருவரும் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார்கள்.

சிவாவின் யோசனை மறுபடியும் அவனை ஆட்கொண்டது. துர்காவிடம் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. அவளுடைய யதார்த்த பேச்சுக்கு நடுவில் எப்படி அப்படி ஒரு குண்டை தூக்கி போடுவது என்று தெரியவில்லை. வீட்டிற்கு போனால் அம்மா அப்பாவுடன் சேர்ந்து பேசவேண்டும். இது அவனும் அவளும் எடுக்க வேண்டிய முடிவு என்பதால் அவளிடமே போட்டு உடைத்தான். தான் மருத்துவரை தனியாக அணுகி பிறக்கப்போகும் குழந்தை என்னவென்று கண்டறிந்துவிட்டதாகவும் அதுவும் பெண்குழந்தைதான் என்பதையும் கூறினான்.

துர்காவிற்கு இதைபற்றி பெரிதாக எதுவும் அதிர்ச்சி இல்லை. அவளைப் பொருத்தவரை குழந்தை நன்றாக பிறக்க வேண்டும்.  அவன் அவ்வாறு கூறியபின்னும் துர்கா அதிர்ச்சியடையாததைக்  கண்டு சிவா சற்று கோபமானான். தான் என்ன சொல்ல வருகிறோம் என்பதைத் தெரிந்தும்  அவள் தெரியாததுபோல் இருக்கிறாளே என்ற கோபம் அவனுக்கு. துர்காவும் எதுவும் அலட்டிக்கொள்ளவில்லை. இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

சிவா வீடு வந்து சேர்ந்தவுடன் தன் பெற்றோர்களிடம் கூறினான். துர்கா தன் தோள் பையை எடுத்தவாறே தன் அறைக்குள் சென்றாள்.

“இதுவும் பொட்டபுள்ளைன்னா எதுக்கு வீட்டுக்கு வந்தீக ? அப்படியே கலைச்சிவிட்டு இரண்டு நாள் பெட்ல இருந்துட்டு வரவேண்டியத்தானே?” என்று சிவாவின் அம்மா கூறியது துர்காவின் காதுகளில் விழாமல் இல்லை. ஒருவழியாக சிவராமகிருஷ்ணன் கூறவேண்டியதை தன் மாமியார் வாயால் கேட்ட திருப்தி துர்காவிற்கு. பேச்சு முற்றிக்கொண்டே போனது. எல்லாவற்றைக்கும் ஒரு முடிவு வேண்டுமே. துர்கா கடைசியாக பேச ஆரம்பித்தாள்.

கூடத்திற்கு வேகமாக சென்றவள்,  தன் குழந்தையை கலைப்பதற்கு ஒத்துக்கொள்வதாகவும் அதற்கு  அனைவரின் முழு சம்மதத்தையும் எதிர்பார்ப்பதாகவும் கூறினாள். எங்கள் சம்மதம் எதற்கு, நீதானே முடிவு எடுக்கவேண்டும் என்றார் துர்காவின் மாமனார். இதோ இப்போதே செய்துவிடுகிறேன் எனக் கூறி வேகமாக சமையலறைக்கு சென்று ஏதோ கையில் எடுத்து வந்தாள். கூடத்திலிருந்தபடியே வேகமாக பவித்ரா என்று அலறினாள். தான் விளையாடிக்கொண்டிருந்த மரப்பாச்சி பொம்மையை அப்படியே போட்டுவிட்டு அம்மா சாப்பிட ஏதோ கொடுக்க அழைக்கிறாள் என்று நினைத்து வேகமாக வந்து நின்றாள்.

வந்தவளை துர்கா வேகமாக ஒரு அறை விட்டு சடையை பிடித்து தர தர வென்று இழுந்து கூடத்தில்  அனைவரும் முன் கெடாசினாள். சிவாவின் பெற்றோர்கள் அமர்ந்திருந்த ஊஞ்சலின் பக்கமாக வந்து பவித்ரா விழுந்தாள்.

அயப்பா.. என்று அலறிக்கொண்டு அவரது காலடியில் பவித்ரா விழ துர்காவின் மாமனார் அவளை தூக்கி அணைத்தார். அவர் கோபத்தில் கத்தினார், சிவாவும் அவனது அம்மாவும் கூட ஏன் இப்படி இவள் ராட்சஷி போல் நடந்து கொள்கிறாள் என்று நினைத்தனர். தாத்தாவின் அரவணைப்பில் நின்ற பவித்ராவை மறுபடியும் துர்கா தன் பக்கமாக இழுத்தாள்.

சிவா அப்போது குறுக்கிட்டு ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்டான், அவன் அவளை அவ்வாறு பார்த்ததில்லை. துர்கா எதையும் காதில் வாங்கிக்கொண்டதாக தெரியவில்லை. பெண் பிள்ளையை பெற்றுவிட்டு தான் படும் அவஸ்தையை சொல்லி மாளாது. தினமும் மாமனார் மாமியாரிடம் வசை. அடுத்த குழந்தையும் பெண் குழந்தை என்பதை அறிந்த அந்த குடும்பம் துர்காவை சும்மாவா விட்டுவிடும். தன்னுடைய மொத்த கோபத்தையும் பவித்ரா மீதே காட்டினாள்.

அந்த ஐந்து வயது குழந்தைக்கு எதுவுமே புரியவில்லை. அழுதுகொண்டே அம்மாவின் பிடியில் நின்றுகொண்டிருந்தாள். துர்கா அனைவரின் முன்பாக பவித்ராவைக் காண்பித்து இவளுக்கு ஒரு முடிவு சொல்லுங்கள். பின்னர் வயிற்றில் வளரும் குழந்தையைப் பற்றி முடிவெடுப்போம் என்றாள். வயிற்றில் இருக்கும் குழந்தையையும், அருகில் அழுதுகொண்டிருக்கும் குழந்தையையும் நினைத்து துர்காவின் மனம் பதைபதைத்தது. ஒரு முடிவுக்கு வந்தவளாக பவித்ராவை அணைத்துக்கொண்டு ஓவென அழுதாள்.

முதன் முதலில் தன்னிச்சையாக முடிவெடுத்ததன் உணர்வு வெளிப்பாடுதான் அந்த அழுகைக்கு காரணமாக இருக்கலாம்.

கூடத்தில் நடந்துகொண்டிருந்த எல்லாவற்றையும் அலமாரியின் மீது வைக்கப்பட்டிருந்த கௌதம புத்தர் சிலை உட்பட அனைவரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

ஆம். துர்கா முடிவெடுத்துவிட்டாள்.

 

4668633

 

Advertisements

4 thoughts on “மனப்பத்தாயம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s