“ஜி புக் ஷோ போய்ட்டு வந்துட்டீங்களா” என்றது அந்த ஜி டாக். டாக்கியவர் சத்தியா. இன்னும் இல்லை ஊர் வந்தவுடன் சொல்லுங்கள் போகலாம் என்று டாக்கி வைத்தேன்.
இன்று மதியம் ஆரம்பித்து இரவு 8 மணி வரை நூல்களை பார்த்துக்கொண்டிருந்தோம். கொஞ்சம் வாங்கினோம். தொடர்ந்து நான்காவது முறையாக பப்பாஸி நடத்தும் புத்தகத் திருவிழா சென்றுகொண்டிருக்கின்றேன்.
முக்கியமான விஷயம். குடிதண்ணீருக்கு அங்கு காசு வாங்குவதில்லை, எல்லா வருடங்களிலும்.
கொஞ்சம் வெயில் வேறேதும் தொந்தரவு இருந்ததாக தெரியவில்லை. 6 மணிநேரம் போனதே தெரியவில்லை.
காலச்சுவடு பதிப்பகம் சென்றோம், க்ளாசிக் நாவல் வரிசையில் ஆ.மாதவன் எழுதிய நாயனம் என்ற புத்தகத்தை வாங்கினேன்.பிறகு, கிழக்கு பதிப்பகத்தில் தங்கர் பச்சான் எழுதிய சொல்லத் தோணது மற்றும் சுஜாதா எழுதிய மெரினா வாங்கினேன். பிறகு நாஞ்சில் இன்பா எழுதிய சாவித்திரி மற்றும் சமஸ் எழுதிய சாப்பாட்டு புராணம் வாங்கினேன். நியூ செஞ்சுரி புக் அவுஸ்இல் பியோதர் தஸ்தயேவ்ஸ்கி எழுதிய கரமசோவ் சகோதரர்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நூலை வாங்கினேன். மொழிபெயர்ப்பாளர் கவிஞர் புவியரசு.
நமது நண்பர் ஜெயகாந்தன் எழுதிய சில நேரங்களில் சில மனிதர்கள், நீலகண்ட சாஸ்திரி எழுதிய சோழர்கள், ராகவன் எழுதிய டாலர் தேசம் போன்று மேலும் சில நூல்கள் வாங்கினார்.
இயக்குனர் தங்கர் பச்சானிடம் அவருடைய புத்தகத்தில் கைகெழுத்தும் வாங்கிவைத்தாகிவிட்டது. இயக்குநர் மிஷ்கினை பார்த்து பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. மிஷ்கினிடம் பேசி சென்ற பின் கொஞ்ச நேரத்திற்கு புத்தகத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசும் என்னை கொஞ்ச நேரத்திற்கு பாடாய்ப்படுத்திவிட்டது. கிளாசிக் படங்களை கலை உலகிற்கு கொடுக்கும் ஒருவரிடமா கை குலுக்கி பேசிவந்தோம் என்ற பெருமிதம். அந்தக் கருப்புக் கண்ணாடிக்குள் ஒளிந்திருக்கும் கண்கள் என்னை பார்த்தன என்பதை அறிவேன். என் கண்களுக்கு என் முகம்தான் அதில் தெரிந்தது.
ஐயா வணக்கம், பாரத் தஞ்சை என்று சொல்லிக்கொண்டே கை குலுக்கிக்கொண்டோம்.
இந்த கரமசோவ் சகோதரர்கள் புத்தகத்தில் கையெப்பமிடவேண்டும் என்றேன்.
நீ என் புத்தகத்தை வாங்கு கையொப்பமிடுகிறேன் என்றார். போ போ உள்ள போ… என் புத்தகத்தை வாங்கிவிட்டு வா எத்தனை கையெழுத்து வேண்டுமானாலும் போடுகிறேன் என்றார்.
அங்கிருந்த புத்தகம் அவர் எழுதிய புத்தகம் தான், அவர் இயக்கிய திரைப்படத்தின் திரைக்கதைகளும் அதன் சாராம்சங்களும்தான். அதான் படங்களையே பார்த்தாகிவிட்டது, அதன் திரைக்கதை புத்தகமும் டெக்கினிக்கல் விஷயங்களும் நமக்கு எதற்கு என்றும், அது நம் அறிவிற்கு எட்டாத ஒரு விஷயம் என்பதை அறிந்தும், அவர் சொன்ன வார்த்தைக்காக ப்யூர் சினிமா ஸ்டாலுக்குள் சென்று புத்தகத்தை பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.
சத்தியாவிடம் நான் அவரிடம் போகும் முன்னே சொன்னேன், இவர் கண்டிப்பாக புத்தகத்தில் கையெழுத்திடமாட்டார் என்று. நான் சொன்னதுபோலவே நடந்தது. இது போன்ற விஷயங்களில்தான் அவர் என்னை மிகவும் ஈர்க்கிறார் என்றும் சொல்லிக்கொண்டே அடுத்த புத்தகக் கடைக்கு சென்றோம்.
புத்தகக் காட்சியும் புத்தகம் வாங்குதலும் இனிதே நிறைவடைந்து வெளியே வந்தோம். அண்ணா சதுக்கத்தில் கொஞ்ச நேரம் காற்றாட பேசிக்கொண்டிருந்தோம். பழைய நண்பர்களை விசாரித்தேன் நலம் கோரினேன். பட்டாபிராம் பேருந்து வந்தது அவர் ஏறி தன் இருக்கையில் அமர்ந்து கை அசைத்தார், நானும் அசைத்துவிட்டு, இருவரும் அங்கிருந்து விடைபெற்றோம்.
குளிர்ந்த காற்று டிராபிக் இல்லாததால் சற்று வேகமாக வண்டியை ஓட்டிக்கொண்டே வந்தேன். அப்போது மணி 8.30 ஐ தாண்டிவிட்டது. உள்ளே ஒரு குரல்.
புத்தகத்திருவிழாவிற்கு போவதும், புத்தகத்தை வாங்கி அடுக்கிவைப்பதும் அதை கட்டுரையாக எழுதி போஸ்ட் போடுவதிலும் உள்ள வேகம், அதை படித்து முடிப்பதிலும் இருக்க வேண்டும் என்றது அந்த குரல்.
அப்போதுதான் தோன்றியது ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் புத்தகம் முதல் 30 பக்கம் வரை மட்டுமே படித்துவிட்டு மேஜையில் அப்படியே ஒருமாதமாக இருப்பதும் நினைவிற்கு வந்தது. நாளை முதல் ஆரம்பிக்க வேண்டும் என்று மனதினுள் சொல்லிக்கொண்டே வண்டியின் வேகத்தை அதிகரித்தபடியே சென்றேன்.
புத்தகங்களின் அட்டைப்படங்கள்….
புத்தகத் திருவிழா சென்றதறிந்து மகிழ்ச்சி. வாங்கிய நூல்களை இல்ல நூலகத்தில் கவனமாகச் சேர்த்துவிட்டு, படிக்க ஆரம்பித்து பகிர்தல் நலம்.
LikeLiked by 1 person