ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

அந்த வீட்டுக்குள் மேளதாளத்துடன் ஒரு கிராமமே சஞ்சரித்து வாழ்ந்துகொண்டிருக்கிறது

இந்த வரிதான் இந்த நாவலின் கடைசி வரி. நாவலின் ஒட்டு மொத்த வீரியத்தையும் எப்படி ஒரு வரியில் எப்படி எழுதுகிறார்கள் என்றுதான் தெரியவில்லை. இவருடையது மட்டுமல்ல, கொற்கை, பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், காட் இஸ் எ கேமர், சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற நாவல்களிலும் இப்படித்தான் உணர்ந்தேன்.

ஜெயகாந்தனின் படைப்பில் இரண்டாவதாக படிக்கும் நூல் இது. 2016ஆம் ஆண்டு ராயப்பேட்டையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் இப் புத்தகத்தையும், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் புத்தகத்தையும் வாங்கினேன். வெளியில் வரும்போது சமஸ் ஐயாவை சந்தித்தேன். அப்போது அவர், என்ன என்ன புத்தகங்கள் வாங்கினீர்கள் என்றார் ? சில புத்தகங்களின் தலைப்பை கூறினேன். இந்தப் புத்தகத்தின் தலைப்பை கூறியவுடன் அவர் உடனே கூறியது. “படிக்கவேண்டிய புத்தகம். எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்களில் இதுவும் ஒன்று” என்றார். இந்த நூலை படித்து முடித்த பின்புதான் தோன்றியது ஐயா சமஸ் போன்றோருக்கு இந்த புத்தகம் ஏன் அதிகம் பிடித்திருக்கிறது என்று. பயணம். மக்கள். உறவு. இந்த மூன்று விஷயங்களில் பின்னிப் பிணைந்துபோய் இருக்கிறது இந்த நூலின் கதை. எல்லாவற்றிற்கும் மேல், மனிதர்களின் நேர்மை குணம் மாறாத  நாவல்.

இந்த உலகத்தில் மனிதன் எங்கு அலைந்தாலும், சம்பாதிக்க எந்த நாடு சென்றாலும், எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும, பரதேசியாக இருந்தாலும் அவனுடைய அன்றைய நாள் வந்து முடியும் இடம். வீடு. அதுதான் பிரதானம். ஒரு வீட்டை அதற்கு சம்பந்தப்படாத ஒருவன் ஆனால் சம்பந்தப்படுத்தப்பட்டவன் எப்படி அதைவந்து அடைகிறான். ஹென்றி, தேவராஜன் முதல் மணியக்காரர் வரை. துரைக்கண்ணு முதல் நடராஜன் வரை. சபாபதி முதல் அந்த பைத்தியக்காரி பெண் வரை, பாண்டு முதல் அக்கம்மா வரை எல்லோருமே நல்லவர்கள். இதில் யாரையும் கெட்டவர்கள் என்று யாரையுமே சித்தரிக்கவில்லை.முக்கியமாக ஹென்றியிடம் நாம் அதிகமான பாஸிடிவ் வைப்ரேஷன்களை உணரலாம்.

நாவலில் எனக்கு பிடித்த வரிகள்:


  • நீயெல்லாம் எதுக்குடா இங்கிலீஷ் படிக்கணும் ? அது உத்தியோகப் படிப்புடா. நீ உங்கப்பன்கிட்டேயே தமிழ் படிச்சுக்கோன்னு சொல்லுவார்.
  • கடவுளுக்கும் மதத்திற்கும் என்ன சம்பந்தம் ?  எல்லாக் கடவுள்களும் ஒன்றுதானே ?
  • இங்கேயெல்லாம் அப்படித்தான் பழக்கம். எவனும் இடுப்பிலே வேட்டி கட்டிக்கமாட்டான். தலைக்குத் தண்ணி ஊத்திக்க மாட்டான். இதுக்கு குளிக்கிறதுன்னு பேர் இல்லே… ஒடம்பு கழுவிக்கிறானுவளாம்.
  • ஹென்றி நிலா வெளிச்சத்தில் எதிர் வீட்டைப் பார்த்தான். அவன் செவிகளில் பப்பாவின் குரல் கேட்டது. மகனே….
  • கடவுளே எனக்கு புதிதாக எதுவும் வேண்டாம். இருப்பது இப்படி இருக்கறதெல்லாம் இப்படியே நீடித்தால் போதும்.
  • தோட்டத்திலே போய்ப் பூவரச மரத்திலே ஒரு கழி ஒடிச்சிக்கிட்டு வாடான்னு சொல்லுவார் அப்பா. நான் போய் நல்ல பெரிய தடிக்கொம்பாய் பாத்து ஒடிச்சுக் கொண்டு வந்து மரியாதையாக அவர் கையில் கொடுப்பேன்.  என்னம்மோ தெரியலீங்க நான் அவ்வளவு பெரிய தடிக்கம்பைக் கொண்டு கொடுத்த உடனே எங்கப்பாவுக்கு இன்னும் கோபம் வரும். இவ்வளவு பெரிசாக் கொம்பு கொண்டுவந்தால் இதாலே நான் அடிக்கமாட்டேன்னு நினைச்சியா? ன்னு சொல்லி அந்தத் தடிக் கழி முறிஞ்சி போற வரைக்கும் அதாலேயே அடிப்பார்.
  • விடியறதுக்கு முன்னாடியே எனக்கு எல்லாம் வெளிச்சமாயிடுச்சு மகனே.
  • பப்பா… பாட்டிலில் சாராயத்தை ஊத்திவிட்டு குடித்துக்கொண்டே தன் மகன் ஹென்றியிடம் கேட்கிறார், உனக்கும் வேண்டுமா என்று ? அவன் வேண்டாம் பப்பா… நீங்கள் சாப்பிடுங்கள் என்று கூறி அடுத்த ரவுண்டிற்கு சாராயத்தை ஊற்றிக்கொடுக்கின்றான்.
  • அந்த எதிரொலிச் சத்தம், பப்பா என்று கேட்பதற்குப் பதிலாக, இவன் பப்பா என்றழைத்ததும், மகனே என்று கேட்கக்கூடாதா என்ற ஏக்கத்துடன் மலைமுகட்டைப் பார்த்தான் தேவராஜன்.
  • சோப்பெங்கப்பா.
  • கலப்பை… உழுவாக் கலப்பை.
  • சைக்கிளில் வேகமாகச் சரிவில் இறங்குகையில் இருபுறமும் தெரிந்த மரங்களும் புதர்களும் சரசரவென மேல் நோக்கி உயர்ந்துகொண்டு போவது போலிருந்தது.
  • அப்படின்னா அவரு உசிர் விட்ட நேரம் நாம்ப பாயசம் சாப்பிட்டுக்கிட்டிருந்தோம் என்று மனம் நொந்த சிரிப்புடன் சொன்னான் துரைக்கண்ணு.
  • இந்தக் காலத்துல கோயில புனருத்தாரணம் பண்றேன்னு சினிமா செட்டு போடறாளே… அதையும் பாக்கறோமே…
  • ஹென்றி அந்த அகல் விளக்கை பார்த்த படியே சொல்கிறான், எவ்வளவு அழகாக இருக்கிறது, உங்களுக்கு வேண்டுமானால் நான் பழமைவாதம் பேசுவது போல் தோன்றும்… நீங்கள் சொல்லுங்கள் அதோ அந்த விளக்கு அழகாயில்லை ? வெளிச்சத்துக்கு அது போதாது ? சரி. உங்களுக்கு ஒருவேளை அது அழகாக இல்லாமலும் இருக்கலாம். நீங்கள் செய்கிற வேலைக்கு அந்த வெளிச்சம் போதாமலும் இருக்கலாம். ஆனால் எனக்கு அது போதும். எனக்கு அதுதான் வேண்டும். இந்த உலகம் பூராவும் யந்திரங்களும், மின்சார வெளிச்சமுமாய்க் கோலாகலப்படட்டும். என் வீட்டில் எனக்கு இந்த வெளிச்சமும் இந்த அமைதியும் நிலவட்டும்.
  • அவன் ஊதி முழக்கிய சத்தத்தைக் கேட்கிறபோது ஏதோ அந்த நாதசுர வாத்தியமே அவன் கையிலிருந்து பிடுங்கிக்கொண்டு ஓடுகிற மாதிரியும், அதை அவன் மடக்கி மடக்கி நிறுத்தி மல்லாடுவது மாதிரியும் இருந்தது.
 முன்னுரையில் இருந்து சில வரிகள்:

  1. மகாபாரதம் பெரிய இதிகாசம் என்று தெரியாத பாமரர்களால்தான் அது எனக்குப் பயிற்றுவிக்கப்பட்டது. நமது வாழ்க்கையில் வடித்த முட்டாள்களும் பாமர ஞானவான்களும் நிறைந்திருக்கிறார்கள். நகரம் வேஷம் போட்டுக்கொண்டு திரிகிறது.

  2. “சரத்சந்திரர்கூட தனது நாவல்களுக்கு முன்னுரை எழுதுவதில்லையென்று சமீபத்தில் ஒரு கட்டுரையில் படித்தேன். 400 பக்கம் எழுதிய நாவலில் விளக்க முடியாத எந்த விஷயத்தை இந்த நாலு பக்க முன்னுரையிலா வாசகர்கள் விளங்கிக்கொள்ளப்போகிறார்கள் என்பாராம் அவர். அவர் சொல்லுவது அவருக்கு சரி. 400 பக்கம் விளங்காத ஒரு விஷயத்தை எழுதுகிற நான் இன்னும் ஏன் நாலு பக்கம் எழுதக் கூடாது ? விளங்குகிறவனுக்கு இந்த நாலு பக்கமே போதும் என்று எனக்கு தோன்றுவதால் ‘, நாவலை எழுதிய அதே சிரத்தையுடன் இந்த முன்னுரையையும் நான் எழுதுகிறேன்.
  3. நதியும் கடலும் மட்டும்தான் முழுமையா என்ன ? தண்ணீரின் ஒவ்வொரு துளியும் முழுமையானதே ஆகும். நாடுகளும் கண்டங்களும்தான் உலகம் என்பதில்லை. ஒவ்வொரு மனிதனும் ஒரு உலகம்தான்.
ஹென்றி. எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொதுமனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின் மூலம் இந்த வாழ்க்கையின் போக்கு குறித்த புரிதலை உணர்த்த முயலும் நாவல் இது. எழுதப்பட்டு ஏறத்தாழ முப்பத்தைந்தாண்டுகளாகிவிட்ட பின்னரும் இன்றைய சூழலுக்கும் பொருந்துவதான வாசிப்பனுபவத்தைத் தருவதன் மூலம் இந்த நாவல் ஒரு கலைப்படைப்பாக நிமிர்ந்து நிற்கிறது. (புத்தகத்தின் அட்டைப்பகுதியிலிருந்து)
நாம் அனைவருக்குள்ளும் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் என்று தினமும் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. நமது சுயம் மாறாமல் இயல்பு மாறாமல் வாழ்வதே ஒரு வித சந்தோஷம்தான். நாமெல்லாமே வேஷதாரிகள்தான். நாம் யாருமே ஹென்றி போல் இல்லை. அவன் சுதந்திரமானவன்.
நூல் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம்
ஆசிரியர் ஜெயகாந்தன்
ஆண்டு 1973 முதற்பதிப்பு 2015 ஐந்தாம் பதிப்பு.
பக்கங்கள் 319
விலை ரூ.290/

oru-manithan-oru-veedu

3 thoughts on “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

  1. எக்காலத்திற்கும் பொருந்தும் வரிகள். அதனால்தான் இவரைப் போன்ற எழுத்தாளர்களின் எழுத்துகள் என்றும் பொருந்துவனவாக உள்ளன, பாராட்டப்படுகின்றன. நல்லதோர் பதிவுக்கு வாழ்த்துகள்.

    Like

Leave a comment