மனிதப்போர்

வருடம் 2030, வடவாறு.

யானை கட்டி போர் அடித்த தென்னகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சையின் கழனியில் வெறும் சறுகுகளின் குப்பையும் புழுதியும் சூழ்ந்து காணப்பட்டது. ஊரே ரத்த வாடையின் காட்டத்தில் இருந்தது. ஆற்றுப்படுகை எங்கேயும் வெட்டு குத்து. பாரபட்சமின்றி இளைஞர்களும், பெரியவர்களும் செத்துக் கிடந்தனர். ஆங்காங்கே சில நீர் ஊத்துக்களும் பாழடைந்த கிணறுகளும் காணப்பட்டன.

அன்று நீலமேகப் பெருமாள் கோயிலின் குடமுழுக்கிற்கு வட்டமிட்ட கருட பகவான் இன்று பிணங்களின் கண்களை கொத்தி திண்றுகொண்டு இருந்தார். பிண வாடையும், ரத்த வாடையும் காற்றில் கலந்து அந்த ஊரே ஒரு சூனியமாக காட்சியளித்தது. தமிழகம் மட்டுமல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக இதே போல் மக்களால் ஆரம்பிக்கப்பட்டு மக்களாலேயே முடிக்கப்படும் மனிதப்போர்கள் மற்ற மாநிலங்களிலும் அரங்கேறத்தொடங்கியது.

ஆம், ஏதோ ஒரு பொருளுக்காக அந்த மாபெரும் மனிதப்போர் நடந்துகொண்டிருந்தது. முடிவு இல்லாத போராக இது இருக்கலாம்.

2016இன் பொருளாதாரப் புள்ளி விவரப்படி இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதியை விட அதிகமாக இருந்தது. நாட்டின் பல மூலைகளில் இருந்து இந்தியாவிற்கு பன்னாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடைய முதலீட்டை போட்டுத் தள்ளின. 2016இல் இருந்த வேலை இல்லாத் திண்டாட்டம் ஒரு முடிவுக்கு வந்தது. வெளிநாட்டு முதலீடு மற்றும் உள்நாட்டு கட்டமைப்பு வசதிகள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தங்களுடைய வேலையை செய்ய மிகவும் உதவிகரமாக இருந்தது. அரசியல் கட்சிகளும் அதனுடைய தேர்தல் அறிக்கைகளும் எப்டிஐ எனப்படும் பன்னாட்டு நேரடி முதலீட்டை குறிவைத்தே இருந்தன.

மனிதனின் தேவைகளுக்கு அளவே கிடையாது. சம்பளம் உயர்ந்தது எதையெல்லாம் வாங்க கஷ்டப்பட்டார்களோ அதையெல்லாம் சர்வ சாதாரணமாக வாங்கி குவித்தார்கள். வீட்டினுள் அத்தியாவசியம் என்ற நிலை மாறி பார்க்கும் இடங்களிலெல்லாம் பொருட்களை சேர்த்து வைத்தனர். சமூக அந்தஸ்து ஏறியது. கார், பைக் என்ற பேதம் இல்லாமல் போனது. அனைவரிடமும் கார்கள் இருந்தன. வாழ்க்கை தரம். மக்களின் வாங்கும் திறன் என்று யாவுமே பெருகத்தொடங்கிய காலகட்டம் அந்த 2016ஆம் வருடம். பொருளாதார விதியின் படி ஒரு பொருளின் விலை அதிகரித்து அதனுடைய கொள்முதல் குறைந்தால் அதற்கு ஈடான இன்னொரு பொருளின் கொள்முதல் அதிகமாகும். உதாரணத்திற்கு, பெட்ரோல் விலை ஏறினால் மக்கள் மாற்றுப் பொருளான மண்ணெண்ணையை நாடிச் செல்வார்கள். பாதாம் பருப்பு விலை ஏறினால் நிலக்கடலையை நோக்கிச் செல்வார்கள். குறிப்பிட்ட பொருளின் விலையேற்றத்தினால் வரும் அதிர்வுகளுக்கு தனி கணக்கு, எடுத்துக்காட்டிற்கு, பெட்ரோல் விலை ஏறினால், போக்குவரத்து டிக்கட்டுகள் விலை, காய்கறிகள் விலை என்று பெட்ரோல் மறைமுகமாக சம்பந்தப்பட்ட எல்லா பொருள்களின் விலையும் ஏறும். ஆனால் நமக்கு தேவையானது இங்கு, ஒரு பொருளின் கொள்முதல் அல்லது சப்ளை குறைகிறது. ஆனால் மாற்று பொருளோ அல்லது அதற்கான நேரடி அதிர்வுகளுக்கோ இடமில்லை. ஆகையால், பற்றாக்குறை ஏற்படுகிறது. பற்றாக்குறை பஞ்சத்தில் விடிகிறது. பஞ்சம் அந்த பொருளுக்கான தேவையை ஒரு அரக்க குணத்துடன் ஏற்றிவிடுகிறது. மாற்றுப்பொருளே இல்லாத ஒரு பொருளுக்கு பஞ்சம் ஏற்பட்டால் என்ன நடக்கும் ? அந்த பொருள் கிடைக்காவிட்டால் உங்களிடமிருந்து அது பறிக்கப்படும் அல்லது நீங்கள் அடி உதைக்கு உள்ளாக்கப்படுவீர்கள் அல்லது அழிக்கப்டுவீர்கள் பிறகு அந்த பொருள் உங்களிடத்திடமிருந்து லகுவாக அவர்கள் கைகளுக்கு சென்றடையும்.

அவர்கள் என்பவர்கள் ஏதாதிபத்திய கட்சியை சேர்ந்தவர்களோ பணம் படைத்தவர்களோ அல்ல. ஏனென்றால் நமது சமூகத்தில் இப்போது ஏற்றத் தாழ்வு இல்லை. ஆதலால், பணம் ஒரு பொருட்டே அல்ல. அவர்கள் அடித்து உதைத்து அல்லது கொலை செய்து பிடுங்கும் அந்த பொருள் பணத்தைவிட பெரியது, அதன் மதிப்பிலும் சரி அதன் குணத்திலும் சரி. பரம்பரை பரம்பரையாக ஸ்லோகங்கள் கூறி வாழ்க்கை நடத்திய புரோகிதர்களாகட்டும், திருட்டே தொழில் என்றிருந்த திருடர்கள் கூட்டமாகட்டும் எல்லோருடைய குறியும் அந்த மதிப்புமிக்க பொருளின் மீதுதான் இருந்தது.அதை அடைய அவர்கள் தர்மமான முறையில் முயற்சி செய்யவில்லை. தயவு தாட்சண்யம் காட்டப்பட்டு வருவது பெண்களிடம் மட்டும்தான். பெண்களிடமும் குழந்தைகளிடமும். சில நேரங்களில் பெண்களும் குழந்தைகளும் கூட மிக மோசமான முறையில் தாக்கப்படுவார்கள். திருச்சி, திருநெல்வேலி, மன்னார்குடி, கன்னியாகுமரி, தர்மபுரி, கரூர், கோயம்புத்தூர் என மனிதப்போர்களின் வீரியம் அதிகரித்துக்கொண்டே இருந்தது.

அரசிடமும் இதனை ஒரு கட்டுக்குள் கொண்டுவர எந்த ஒரு திட்டமும் இல்லை. இந்த நிலைக்கு மக்களை தள்ளிவிட்டதே அவர்கள் முன்பு ஒரு காலத்தில் வித்திட்ட திட்டங்கள்தானே.

வெளியூருக்கு பலசரக்குகள் ஏற்றிச்செல்லும் லாரிகள் முதல், ஊர் மாறிப்போகும் ஜனங்களின் உடைமைகள் வரை ஆங்காங்கே முளைத்த மனிதப் படைகள் மூலம் பரிசோதிக்கப்பட்டன. அவர்கள் விட்டால், உயிர் தப்பும் பொருள் கைமாறும், வீம்பு பிடித்தால் உயிரும் போகும், அந்தப் பொருளும் போகும். தடுக்க முயல்பவன் சண்டையிட்டு குடும்பத்தையும் பொருளையும் காப்பாற்றுவான். சண்டையிட திராணியில்லாதவன் பொருளை விட்டுவிட்டு திரும்புவான். பொருள் ஈட்டுவது என்றாகிவிட்டது. ஆதலால் வீட்டிற்கு ஒருவன் மனிதப் படையில் சேர்ந்து தனது குடும்பத்திற்கு அந்தப் பொருளை சம்பாதித்து கொடுக்க ஆரம்பித்தார்கள். மனிதப் படை உள்ளேயே சில நேரங்களில் கொலைகள் விழுவதுண்டு. ஏனென்றால் இங்கு யாவரும் எதிரிகளே. யாரும் யாருக்கும் நண்பர்களாக இருக்க முடியாது. உறவினர்களாகவும் இருக்க முடியாது. யாரும் வெளிப்படையாக அந்த பொருளை பயன்படுத்தவும் முடியாது. பொருளின் பற்றாக்குறையினால் நாளாக நாளாக இறப்பு விகிதம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. தஞ்சை மட்டுமல்லாமல் இந்தியாவின் பிறபகுதிகளிலும் அதே பிரச்சினை தலைதூக்க ஆரம்பித்தது.

சுமார் 24 லட்சம் பேர் குடிபெயர்ந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஊர்களில் இருந்து தஞ்சை நோக்கி மக்கள் கூட்டம் திரளாக வந்தனர். இந்த சூழ்நிலையில், ஊருக்கு வெளிநாட்டு இளைஞர் கையில் தண்ணீர் பாட்டிலுடன் முதுகில் பேக்குகளுடன் மூக்கில் ஒரு கூளிங் க்ளாசுடன் க்ளாசாக வந்து பெரிய கோயில் வளாகத்தின் முன்பு இறங்கினார். கையில் தன்னுடைய காமிராவை வைத்துக்கொண்டு கோயிலின் விமானத்தை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்.  கண் சிமிட்டும் நேரத்தில் ஒரு கும்பல் அவரை சூழ்ந்தது. எதையோ அவர் இழந்தது போன்ற உணர்ச்சி. அவருடைய உடைமைகள் சூறையாடப்பட்டுவிட்டது என்று நினைத்தார்.  ஆனால் உடைமைகள் அப்படியே இருந்தன. அவரிடம் இருந்த குடிதண்ணீர் பாட்டில் சூறையாடப்பட்டது. அவர் யாரையும் எதிர்க்கவில்லை ஆதலால் அவர் யாரிடமும் அடியோ உதையோ வாங்கவில்லை, உயிர் தப்பினார்.

குடிநீருக்காக நடத்தப்படப்போகும் மனிதப்போர் காலம் மிக தொலைவில் இல்லை. தண்ணீர் நமது அடுத்த நூற்றாண்டின் பெட்ரோல்.


If there is a political will for peace, water will not be a hindrance. If you want reasons to fight, water will give you ample opportunities_Hydrology Professor, Uri Shamir.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s