சொர்க்கவாசல்

புளியோதரையும் உளுந்து துவையலையும் சாப்பிட்டுவிட்டு மதியான வேளையில் ராஜகோபால சாமி கோயிலின் பிரகாரத்தில் படுத்திருந்தான் குமார். அவன் மகன் எழிலனும் அவனுக்கு பின்னால் அவர்களது இருதலையும் ஒன்றொன்று தொட்டுக்கொண்டவாறு நேருக்கு நேர் படித்திருந்தான். அன்றைய தினமணி செய்தித்தாளை படித்துவிட்டு விரிப்பிற்கு போட்டுக்கொண்டு படித்திருந்தனர் இருவரும். முகத்தில் முழு நிழல் விழவில்லை அரைமுகத்திற்கு வெயிலின் இளகுவான சூடும் இருந்தது, இருப்பினும் இருவருக்கும் மாயவரத்திலிருந்து லெஷ்மி சமைத்துக்கொண்டுவந்திருந்த புளியோதரையும் தயிர்சாதமும் தூக்கத்தை வரவழைத்தன. கபிலனும் சற்று நேரத்தில் வந்து குமாரின் மேல் படுத்துக்கொண்டான். கடைக்குட்டி என்பதால் அண்ணனுக்கு மேல் ஒரு படி செய்வது கபிலனின் பழக்கம்.சாப்பிட்ட வாழை இலைகளை குப்பைத்தொட்டியில் போட ஒவ்வொரு இலையையும் எடுக்கொண்டிருந்தாள் லெஷ்மி. குடிக்கத் தண்ணீர் எடுத்துவரச் சொல்லி சத்தமிட்டாள். எழிலன் அதை காதில் வாங்கியும் மத்தியான சாப்பாட்டின் கிரக்கத்தில் அப்படியே கிடந்தான். குமார் இடது கையின் முனங்கையை நெற்றியின் மேல் வைத்துக்கொண்டது கொஞ்சம் சூரிய வெளிச்சத்தின் தாக்கம் குறைந்த மாதிரி இருந்தது. இரண்டு கால்களையும் நீட்டி, இடது கால் மீது வலது காலை போட்டு பாதத்தால் இன்னொரு பாதத்தை சொறிய ஆரம்பித்தான். மனதின் நினைவுகளில் மூழ்கும்போது அவனுடைய உடலசைவுகள் இப்படித்தான் இருக்கும்.

எல்லாம் இப்போது நடந்த மாதிரி இருந்தாலும்  மன்னார்குடியில் இருந்து மாயாவரத்துக்கு போக்குவரத்து துறையில போஸ்ட்டிங் வாங்கி வந்து 15 வருடங்கள் முடிந்திருந்தன. சிறிது நேரம் கண் அயர்ந்தான் குமார்….

“மவ வாழ்ற வாழ்வுக்கு மாசம் ஆயிரத்தெட்டு வௌக்கமாராம்”, கிழவியின் அலறல் சத்தம் மன்னார்குடியின் மதில்களையெல்லாம் எட்டிக்கேட்டது. கோமதி அவள் கணவனுடன் சிறுவரதட்சணைக் கேட்டு வந்திருந்தாள். கல்யாணம் ஆகி 8 வருடங்கள் ஆகியும் மாமியார் வீட்டை எதிலேயும் எதிர்பார்தது வாழ்வது மாப்பிள்ளைக்கு இன்னாரு பிழைப்பு. பணமாகவோ அல்லது தங்கமாகவோ மறுபடியும் வேண்டும் என்று கேட்டு வந்திருந்தான் வீட்டின் மாப்பிள்ளை முத்துப்பாண்டியன். குமார் தலைச்சன் பிள்ளையென்றாலும் தங்கைக்கு முதலில் கல்யாணத்தை முடித்தி வைத்திருந்தனர் அவனது அம்மாவும் தம்பி செல்வமும். ஆற்றங்கரைக்கு சென்று விறால் மீன் இரண்டு கிலோ வாங்கி விருந்து தயாராகிக்கொண்டிருந்தது. நல்ல பசும்பால் நெய்யில் விரால் மீனை வறுத்து முத்துப்பாண்டியனுக்கு விருந்து உபசரிப்பு நடந்தது. “வேலபோன நாயிக்கு உபச்சாரத்த பாருன்னு” மனதினுள்ளேயே சொல்லிக்கொண்டிருந்தான் செல்வம், அதை காதில் வாங்கிய குமார் செல்வத்தை அதட்டினான் யாருக்கும் தெரியாமல். சாப்பிட்டு முடித்தவுடன் அறுப்புக்கு வைத்திருந்த பணத்தில் ஒரு பகுதியை எடுத்து குமார் வீட்டின் மாப்பிள்ளைக்கு கொடுத்தான். “மந்திரப் புன்னகை” மாப்பிள்ளை முகத்தில் வந்து குடியேறியது. அடுத்த சிறுவரதட்சணை வாங்கும் வரை இந்த சிரிப்பு அங்கேயே இருக்கும். வாடி கிளம்பலாம் என்று கோமதியைக் கூப்பிட்டவன், போற வழியில் நின்று தனது குஞ்சுகளுடன் தானியத்தை கொறித்துக்கொண்டிருந்த நாட்டுக்கோழியை ஒரு உதை விட்டுச் சென்றான் அது கோகோ.. கோகோ…கோ என்று இறக்கையை அடித்துக்கொண்டு முற்றத்தின் வாசலில் புழுதியை கிளப்பியது.

குமாரின் தூக்கம் சற்று கலைந்தது. சொர்க்க வாசல் திறப்பிற்கு ஆயத்த பணிகள் நடந்துகொண்டிருந்தது. மணி நான்கைத் தொட்டிருந்தது. தூங்கிப்போன கபிலனின் வாயில் வழிந்த வாணியை கைக்குட்டையால் துடைத்தபடியே குமார் எழுந்து உட்கார்ந்தான். எழிலன் தூங்கவில்லை, அகண்ட வானத்தைப் பார்த்தபடியே யோசனையில் இருந்தான். கபிலனை தன் மனைவியிடம் கொடுத்துவிட்டு, குமார் எழிலனை அழைத்துக்கொண்டு குஞ்சான் கடைக்கு தீனி வாங்கச்சென்றான். இனிப்புச் சேவு, பூந்தி இரண்டையும் வாங்கிக்கொண்டான். மாயவரத்திற்கு வேலைக்காக மாற்றம் பெற்று சென்ற நாளிலிருந்து ஊருக்கு வரும்போதெல்லாம் இந்தக்கடையின் தீனி இல்லாமல் அவன் வண்டி ஏறியதேயில்லை. தீனி வீட்டில் இருக்கும் வரை மன்னார்குடியின் வாசமும் வீட்டில் இருந்துகொண்டே இருக்கும் என்ற நினைப்புதான். பக்கடாவை பால் சாதத்திற்கும், சீடை, முறுக்கு வத்த குழம்பிற்கும் தொட்டுச் சாப்பிடுவது வழக்கம். கோயில் போக திரும்பியபோது கற்கண்டு பால் வேண்டும் என்றான் எழிலன்.  இரண்டு கற்கண்டு பாலை சொல்லிவிட்டு மூங்கிலில் சாய்ந்தவாரு உட்கார்ந்தான். பால் வரும் நேரத்தை நிரப்ப எழிலன் ஒரு உப்பு பிஸ்கட்டை எடுத்து திண்ண ஆரம்பித்தான்.

அன்று சிறுவரதட்சணை வாங்கிச்சென்ற பாண்டி மூன்றே மாதத்தில் திரும்பி வந்திருந்தான். தாத்தா சம்பாதித்த சொத்து. தாத்தா, அப்பா, இப்போது பேரன்கள் வரை வைத்து வாழ உதவியாக இருந்தது. ஆனால் சாகுபடி, அறுவடை, பால் காசு, தோட்டத்து வரவு இவையெல்லாம் கைவைத்து கைவைத்து பாண்டிக்கு கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம். சொத்தை விற்கவோ பெயர் மாற்றம் செய்யவோ முடியாது. பேரன்களின் பேரன்களுக்குதான் அந்த உரிமை என்று தாத்தா எழுதிவைத்துவிட்டு சென்றுவிட்டார். அனுபவிக்கின்ற நிலையில்தான் இவர்கள் இருந்தனர். முக்கால் வாசி அனுபவிப்பு பாண்டிதான். ஆனால், பாண்டியின் சூழ்ச்சி பிற்காலத்தில் குமாரை இப்படி மன்னார்குடி கோயில் பிரகாரத்தில் வந்து கிடத்தும் என்பது அவன் எதிர்பார்க்காத ஒன்று.

 அன்றொரு நாள் தென்னந்தோப்பில் கள் இறக்கி வீட்டிற்கு தெரியாமல் குடித்துக்கொண்டிருந்த செல்வத்திடம் பாண்டியும் சேர்ந்துகொண்டான். கள், சுருட்டு குடிக்கும் பழக்கம் செல்வத்தை பிடித்திருந்தது. வீட்டிற்கு தெரியாமல் இந்த வேலைகளை செய்வது எப்படியோ பாண்டிக்கும் தெரிந்திருந்தது. சீட்டுக்கட்டில் ஆரம்பித்த பேச்சு வீட்டின் பத்திரத்தில் வந்து விடிந்திருந்தது. செல்வம் தனியாக தொழில் தொடங்க முதலீடு தருவதாக சொல்லி பாண்டி வீட்டின் பத்திரத்தையும் தோப்பின் பத்திரத்தையும் சகுனித்தனத்துடன் வாங்கிச்சென்றுவிட்டான். இந்த விஷயம் குமாருக்கோ அல்லது குமாரின் அம்மாவிற்கோ தெரியாமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் சொல்லியிருந்தான் பாண்டி.

பாண்டியின் எண்ணம் தீயால் ஆனது. அதை அணைக்க பணத்தினால் மட்டுமே முடியும். பேரன்களின் மகன்களுக்கு என்று எழுதியிருந்தது, அவர்களுக்கு திருமணம் ஆகவில்லை ஆகையால் பவர் பத்திரம் போட்டால் சொத்தை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற உயிலில் இருந்த ஓட்டையை பயன்படுத்த முடிவெடுத்திருந்தது அந்த காட்டுத் தீ. அந்தத் தீ பிற்காலத்தில் ஒரு அழகிய கூட்டை எரிக்கப்போகின்ற உண்மை யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

 “நம்ம பெரிய தெரு ரெத்தினத்தோட பேரனாட்டம்ல இருக்கு” என்று சொல்லிக்கொண்டே ஓவியர் சிங்கம்பெருமாள் தேநீர் கடையினுள் நுழைந்தார். சிங்கம்பெருமாள் அந்த காலத்தில் இருந்தே குமார் குடும்பத்தின் உறவினர் போன்ற ஒரு நெருங்கிய நண்பர். குமார் தன்னிலை உணர்ந்து சாய்ந்த நிலையில் இருந்து நிமிர்ந்து உட்கார்ந்தான். “அட மாமா வாங்க எப்படி இருக்கீங்க” என்றான். சிங்கம்பெருமாள் சிறந்த ஆசிரியர். குமாரின் தந்தையின் நண்பர் அவர். சிறுவயதிலிருந்தே அவரை மாமா என்று தான் அழைப்பான் குமார். “தினத் தந்திக்கு எழுதி வந்த கதைய புத்தகமா போடலாம்ன்னு இருக்கேன்டா” என்றார். இருவரும் பேசிக்கொண்டே இருக்கையில் எழிலனையும் அறிமுகம் செய்தான் குமார். எழிலனைபார்த்த சிங்கம்பெருமாள் “அப்படியே என் நண்பனோட முகக்கட்டுடா குமாரு உம்புள்ளைக்கு. மீசை மொளச்சோன அந்த மீசைய சவரம் செஞ்சான்னா அப்படியே உங்கப்பன்தான் இவன்” என்றார். எழிலனுக்கு எதுவும் புரியவில்லை. கற்கண்டு பால் சூடாக இருந்ததால் உஷ் உஷ் என்று குடிப்பதற்கு ஆசையுடன் ஊதிக்கொண்டிருந்தான்.

“எங்க சொர்க்கவாச தொறக்க வந்தியா” என்றார் சிங்கம்பெருமாள்.

“காலையிலயே வந்திட்டேன் மாமா…”

“எத்தன வருஷம் ஆச்சு உன்ன பாத்து ?  வீட்டுக்கு வரலாம்ல” என்றார்.

குமார், “மாமிகிட்ட இன்னமும் பேச்சு வாங்க முடியாது மாமா. இருந்த சொத்து எல்லாம் பாண்டி மச்சான்கிட்ட சூழ்ச்சியிலே தொலைச்சி நிற்கதியா நின்னப்போ மாமி தான் எங்களுக்கு சோறு போட்டு படிக்க நோட்டு புஸ்தகம் வாங்கி கொடுத்து ஆறு வருஷம் பாத்துக்கிட்டா. காலேஜ்க்கு அப்பறம் மாமி கொஞ்சம் கோவப்பட ஆரம்பிச்சிட்டா. இருக்காத பின்னே சொந்த பிள்ளையே விட்டுபுட்டு ஊரார் பிள்ளைய தூக்கி வளர்த்தா பெத்த புள்ளைய ரோட்லயா தள்ளுறது ? இனிமே இங்க வரக்கூடாது வேலை பாத்து சம்பாதிச்சா வரலாம்ன்னு கோவப்பட்டு வஞ்சி அனுப்பிட்டா. அதோடு நின்னதுதான்… மறுபடியும் மாமி முகத்த பார்க்கவேயில்லை” என்றான்.

“இல்லடா குமாரு அப்படியில்ல. அப்படி செஞ்சதான் செல்வம் ஒரு வேலைக்கு போவன் உனக்கும் படிக்க ஒரு விருப்பம் வரும். கூட உங்கள் வெஞ்சி அனுப்பதியே நெனச்சி தன்னையே திட்டிக்குவாடா. அப்போ எங்க தங்கியிருக்கு தங்கச்சி கோமதி வீட்லயா ? லெட்டர் கிட்டரு போட்டாள அவ ? செல்வம் என்ன ஆனான் ?

“இல்ல மாமா. மச்சான் சொத்து சொத்துன்னு போயிட்டாரு. கூட பொறந்த பொறப்பு ஒன்னுதான்னு வருஷா வருஷம் அந்த ஆளு வீட்டுக்குபோனேன் மரியாதை செஞ்சேன். ஆனா நான் இப்படி மானங்கெட்டு வந்துட்டு போறது கோமதிக்கு பிடிக்கவேயில்ல. நாலு தீபாவளிக்கு முன்னாடி சீருக்கு போனப்ப தாம்பாளத்த தட்டி விட்டு பொய்யா ஒர சண்டைய போட்டா. நா அப்பவே புரிஞ்சிகிட்டேன். அப்படியே நின்னுபோனதுதான் மாமா. செல்வம் மூலமாத்தான் வீட்டு பத்திரம் பாண்டிக்கிட்ட போனது உங்களுக்கே தெரியும், அதுக்கு தன்னையே வருத்திக்கிட்டு தன்னால எல்லாரு வாழ்க்கையும் கெட்டுபோச்சுன்னு கல்யாணமே பண்ணிக்காம கெடக்கான். இங்க வர்றதே ராஜகோபாலன பாக்றதுக்கும், குஞ்சான் கடை தீனி திங்றதுக்கும்தான்” என்றான்.

“அம்மா எங்க டா” என்றார்  சிங்கம்பெருமாள்??

குமார், “அது செத்து போயிடுச்சு மாமா. என்னால காலனா பைசா புரோயஜனம் இல்லன்னு சொல்லிட்டா. தென்னந்தோப்ப விக்றதுக்கு முன்னாடி கொஞ்சம் சுதாரிச்சி, நான் இத்தனை வருஷம் சேத்து வச்ச பணத்தையும் உழைப்பையும் வச்சி பத்திரத்த மீட்டேன். அத பிடுங்கி மாப்ளகிட்ட கொடுத்துட்டு எனக்கு உயிரோட இருக்கும்போதே கொள்ளி வச்சிட்டா என்ன பெத்தவ. வீட்டோட மாமியார் இப்போ. ராஜபோக வாழ்க்கைதான்”.

“இப்போ எங்கதாண்டா தங்கியிருக்க ? வீட்டுக்கு வா. மாமிய பாரு சந்தோஷப்படுவா”, இது சிங்கம்பெருமாள்.

குமார், “சந்தோஷப்படுறமாதிரியா மாமா வாழ்க்கையிருக்கு. என் பொண்டாட்டி பிள்ளைகளுக்காக வாழ்றேன். வாழ்க்கை ஆதாரத்திற்கு போக்குவரத்து துறை வேலை. மற்றபடி எல்லாம் போச்சு மாமா. நம்பி கட்டிக்கொடுத்த மச்சான் முதுகில குத்திட்டான், தம்பி தறுதலயாயிட்டான், அம்மா நம்பிக்கை துரோகியாயிட்டா.  உலகத்துல அம்மா பிள்ளைக்கு கெடுதல் நினைக்குமான்னு யாராவது கேட்டா நான் என் கதைய சொல்லுவேன் மாமா. கூட பொறந்த பாசம், தங்கச்சியாவது நல்லது கெட்டதுக்கு வந்து போயிகிட்டு இருக்கும்ன்னு பாத்தா அவளும் ஊமையாயிட்டா. போன தடம் சொர்க்கவாசல் தொறக்க வந்திருந்தோம், தங்கச்சி லெட்டர் போட்டு வான்னு கூப்பிட்டுதான் போனேன். கூடவே இருந்து ஏமாத்தி சொத்த புடுங்குணவன் வீட்டுக்கு போறதா இல்ல தங்கச்சி வீட்டுக்கு போறதான்னு ஒரு எண்ணம் வந்துச்சு.  மறுபடியும் என் கூட பொறக்கவா போறா ? அப்படி சமாதானம் சொல்லிகிட்டு போனேன். சூடு சொரனை தன்மானம் எல்லாத்தையும் போகும்போதே வீட்டு வாசல்லயே கெழட்டி வச்சிட்டுதான் போனேன்.  பாண்டி வாய தொறந்தான். லெஷிமிகிட்ட வம்பு பண்ண பாத்தான். அவ வாய தொறக்கவேயில்ல. எழிலனுக்கிட்ட வந்தான் அவன் உட்கார்ந்து பலாப்பலத்த திண்ணுக்கிட்டு இருந்தான். நம்ம தோட்டத்து பலாதான் மாமாஅது. குத்தி குத்தி பேசுறதுமாவும், என்னமோ அவன் வாழ்க்கைய நாம கெடுத்து அவன முச்சந்தியில நிறுத்திட்ட மாதிரியும் பேசிக்கிட்டே இருந்தான்.இருக்க முடியாம கௌம்பிட்டேன் மாமா. அங்க இப்போ போறதே இல்ல.

“மன்னார்குடி ஒவ்வொரு தடம் வரும்போதும் நம்ம வீட்ல கிணற்றடி குளியல், கொள்ளைப்புற விளையாட்டு, இளநீர் சுவை, விறகடுப்பு வெண்ணீர், முற்றத்து தொட்டி குளியல், வாரியில் கக்கா போவது, டிரங்க் பெட்டி விளையாட்டுசாமான், தூண்மேல் ஏறி விளையாட்டு, உத்தரத்தில் ஊஞ்சல், நவராத்திரி ஒன்பது படிக்கட்டு பொம்மைகள், சூடத்தில் ஓடும் படகு, புரட்டாசி விரதம், திண்னைத் தூக்கம் எல்லாம் நெனப்பு வந்து தொலைக்கும்.

” உங்க வீட்டுக்கெல்லாம் வரக்கூடாதுன்னு இல்ல, எங்க தங்கினாலும் அந்த நெனப்புலேந்து தப்பிக்கவே முடியாது மாமா. அதான் நம்ம கோயில் பிரகாரத்துலயே பேப்பர விரிச்சிபோட்டு படுத்துகெடக்கேன், சின்ன வயசுல பரீட்சைக்கு படிக்க இந்த பிரகாரம்தான். சாயங்காலம் வெயில் தாழ இங்க வந்து உட்காந்து பொன்னியின் செல்வன்படிச்சிருக்கேன்.   ஜெயகாந்தன் படிச்சிருக்கேன். தினமும் சும்மாவாவது வந்து உட்கார்ந்து இருந்துட்டு போயிடுவேன். அம்மா மடிக்கு அப்புறம் இந்த கோயில் பிரகாரம்தான் மாமா எனக்கு. ‘எனது குழந்தைப்பருவம்’ அப்படின்னு ஒரு புத்தகம் போட்டா இந்த கோயில் பிரகாரம்தான் எல்லா பக்கங்களிலும் இருக்கும்” என்று பெருமூச்செறிந்து சொல்லி முடித்தான்.

 சிங்கம்பெருமாள் கண்களில் குளம் போல் கண்ணீர் நின்றது. கண்ணீரை வெளியேர விடாமல் தடுத்தது அவரது வயதாக இருக்கலாம்.

“தோப்பு தொறவு, வயலு, அறுவட, கொள்முதல், பண்ணைவீடு, கறவைப்பால் காபி, எப்போதும் வீட்ல வந்தவனுக்கு இல்லைன்னு சொல்லாம கொடுக்க நெல்லு மூட்ட. இப்படி வாழ்ந்து கெட்ட இந்த ஊர்ல ஒரு ஆனாத பயலாட்டம் வந்து கெடக்குறயடா ராஸ்கல்” என்று கண்ணத்தில் ஒன்று விட்டார் சிங்கம்பெருமாள். யாருபண்ண பாவமோடா என்று சொல்லிக்கொண்டே குமாரை வாரி அணைத்துக்கொண்டார்.  ஊரில் இருந்து வந்து சிங்கம்பெருமாள் வீட்டிற்கு கூட போகமால் இருந்த குற்ற உணர்ச்சியால் குமார் பூமியையே பார்த்துக்கொண்டிருந்தான். அனேக நேரங்களில் அவன் மௌனத்தின் மன்னன். மௌனத்தை ஆட்சி செய்யும் மாமன்னன். அந்த மௌனமே அவனிடம் மண்டியிட்டுக் கிடக்கிறது. அதில் அவ்வளவு அர்த்தமும் முன் ஜாக்கிரதைகளும் பொதிந்துகிடக்கிறது.

குமார், “மாமா… இதுக்குப்போய் என்ன மாமா. விடுங்க. அழாதீங்க. அப்பாவுடன் சின்ன வயசுலேந்து நீங்க இருக்கீங்க அந்த உரிமையிலத்தான் உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்ச கதையினாலும் மறுபடியும் உங்ககிட்ட பகிர்ந்துகிட்டேன்” என்றான்.

சிங்கம்பெருமாள்,  “அதே உரிமையிலத்தான் உன்னைய இப்ப அடிச்சிட்டேன். துக்கம் சந்தோஷம் ரண்டையும் ஒண்ணா நினைக்கிற மனுஷங்க இந்த உலகத்துல ரொம்ப கம்மி. அதுல ஒருத்தன் தான் நீயும். நீ ரொம்ப நல்லவன்டா. கொஞ்சம் கெட்டவனாவும் இருடா. இந்த உலகம் நல்லவனத் தூக்கித் தாங்காதுடா. எங்களுக்கு நீ புள்ளையா பொறந்திருக்கலாம்” என்று சொல்லிக்கொண்டே அவர் கிளம்ப தயாரானார். அதற்குமேல் அங்கிருக்க அவரது மனம் இடம் கொடுக்கவில்லை. அவர் கிளம்புவதை புரிந்துகொண்டவன், பக்கத்து கடையில் சிங்கம் மார்க் கடலை மிட்டாய் இரண்டு பாக்கெட் வாங்கி மாமிக்கு கொடுக்கச்சொல்லி கொடுத்தான். அந்த காலத்திலிருந்தே மாமிக்கு பிடித்த மிட்டாய்களில் ஒன்று சிங்கம் மார்க் கடலை மிட்டாய்தான்.

“மாமிக்கு … கடல மிட்டாய் ம்ம்ம்…. யாரு எப்படி உன்னைய வெறுத்தாலும் உன்னோட நிலை மாறாம இருக்க பாருடா. யூ ஆர் கிரேட்…. புத்தக வெளியீட்டுக்கு அழைப்பிதழ் அனுப்புறேன்டா பொண்டாட்டி புள்ளைங்களோட வந்து சேரு” என்று அவர் சொல்லி முடிக்கும்போது தஞ்சை பேருந்து ஒன்று புழுதியை கிளப்பிக்கொண்டு சென்றது.

இந்த சம்பாஷணைகள் நடந்ததை கேட்டுக்கொண்டே இருந்தான் எழிலன். அவன் கையில் இருந்த கற்கண்டு பால் ஆறிப்போய் இருந்தது. அவன் அதை குடிக்கவேயில்லை.

கோயில் பிரகாரத்திற்கு மீண்டும் நடக்கையில் மணி ஆறறையைத் தொட்டிருந்தது. லெஷ்மியும் கபிலனும் செங்கமலத்தாயார் சன்னதியில் இருந்தனர். ஏன் இவ்வளவு நேரம் என்று கேட்டுக்கொண்டே அவள் வந்தாள். எழிலன் ஓடிப்போய் அம்மாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டே ஏதோ சொன்னான். குமார் வாங்கி வந்த திண்பன்டங்களை கொடுத்தான். குமாரின் முகத்தை மட்டும் பார்த்து எதுவும் யாராலும் அறிந்துகொள்ள முடியாது. தோல்வி வெற்றி இவையெல்லாம் அவனுக்கு எப்போதும் ஒன்றுதான். அவைகளை ஒன்றாக பார்க்க தெரிந்தவன் முகத்தில் கவலையின் சாயல் எப்படி தெரியும் ?  தன்னுடைய கவலைகளை இதுவரை அவன் மனைவி தவிர்த்து அவன் யாரிடமும் சொன்னதாக தெரியவில்லை. இன்று மாமாவிடம் மீண்டும் அதை கூறியது கூட தன் தந்தையின் இடத்தில் அவரைப் பார்ப்பதால்தான் என்னவோ. எழிலன் முன்னால் அத்தனையும் அவன் சொன்னதன் காரணம் கூட தனக்குப் பிறகு தன் நினைவுகளையும், பூர்வீகத்தின் வரலாற்றையும் அடுத்த அடுத்த தலைமுறைக்கு சுமந்து செல்லத்தான்.

சொர்க்கவாசல் திறக்கும் நேரம் வந்தது. குமார் உள்ளே வர விரும்பவில்லை என்றான். லெஷ்மி இரு பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு நகர்ந்தாள்.

குமார் மறுபடியும் மதியம் படுத்திருந்த இடத்திற்கே சென்று படுத்தான். மறுபடியும் மன்னார்குடி தன் ரத்தத்திலும் நரம்புகளிலும் பின்னிப் பிணைய ஆரம்பித்தது. அவன் இடது கைகள் நெற்றியை சுற்றியபடி இருந்தது. அவனது கால்கள் இன்னொரு காலை சொறிந்துகொண்டே இருந்தது. எப்போதும் போல் அவனது மனதின் நினைவுகளில் லயிக்க ஆரம்பித்தான். அவன் படுத்திருக்கும் இடம் மன்னார்குடி. நன்றாக வாழ்ந்த ஒரு ஊரில்  உறவுகள் இருந்தும் இல்லாமல் அதே ஊரில் ஒரு தேவைக்காக வந்து…. படுக்க இடம் கூட இல்லாமல் கோயில் பிரகாரத்தில் உள்ள பென்ஞ்சில் படுத்து …. இரவு நடக்கவிருக்கும் சொர்க்க வாசல் திறப்பிற்கு …. யரோ ஒரு வெளியூர் ஆள் போல் படித்திருந்தான்.

 அந்தப்பக்கமாக சென்ற எழிலன் குமார் படுத்திருப்பதை திரும்பிப் பார்த்தான். அவனுடைய மாமாவிடம் அவன் கூறிய செய்திகள் எல்லாம் எழிலன் மனதில் ஒரு கனம் வந்து சென்றது. முன்னே இரண்டடி சென்ற அவன் அம்மா அவன் தாமதித்தற்காக அழைத்திருக்கவேண்டும. அவன் அவள் சென்ற திசையை பார்த்து அம்மாவை கூப்பிட்டான் நேராக மூவரும் குமார் படுத்திருந்த இடத்தை நோக்கி நடந்தனர்.

எழிலன் மனதில் தான் சிறுவயதில் வந்தது.. ஆட்டம் ஆடிவிட்டு முட்டியில் மண் ஒட்ட  வீட்டில் போய் கழுவிவிட்டு பாட்டி கொடுத்த இட்லியை சாப்பிட்டு மறுபடியும் சொர்க்கவாசல் திறக்கும் நேரம் சைக்கிளில் கோயிலுக்கு வந்தது என எல்லாம் நினைவிற்கு வந்தது. சொந்த ஊரிலேயே தன் அப்பா யாரும் இல்லாத அனாதைப்போல் இப்படி குடும்பத்துடன் வந்து படுத்துக்கிடப்பதை எழிலனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஆனால், மாயாவரத்தில் இருந்து கிளம்பும்போது மன்னை போகிறோம் என்ற சந்தோஷத்துடன்தான் கிளம்பினான். குஞ்சான் கடை தீனியும், கற்கண்டு பாலும், சிங்கம் மார்க் கடலை மிட்டாயும் அவனை அப்போது ஆட்கொண்டிருந்தது. இப்போது அவற்றை நினைத்தால் கூட கசக்கிறது அவனுக்கு. வயதுக்கு முதிர்ந்து வந்த எண்ண அலைகளை அவனால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. விரும்பி ஏற்றுக்கொள்ளும் கஷ்டத்தில் இன்பத்தை அனுபவிக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்த குமாரை  முற்றிலும் புரிந்துகொள்ள ஆரம்பித்தான் எழிலன். நினைவுகளில் உள்ள இனிமையான தருணங்களை அசைப்போட்டுக்கொண்டு காலத்தை கடத்தும் யுக்தியையும் குமார் எழிலனுக்கு உபதேசம் செய்துவிட்டான்போல.

 பெஞ்சில் படுத்திருந்த குமாரை போய் எழுப்பினான் எழிலன். நாம் போகலாம் தனக்கு அங்கிருக்க விருப்பமில்லை என்றான். குமாருக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான். கொஞ்ச நாழியாவது இருந்துவிட்டுபோகலாமே வாசல் திறக்க இன்னும் கொஞ்ச நேரம்தானே இருக்கிறது என்று பாவமாக கேட்டான் குமார். எழிலன் வேண்டவே வேண்டாம் நாம் கிளம்பலாம் அப்பா என்றான்.  குமாருக்கு புரிந்திருந்தது.மாமாவுடன் நடந்த சம்பாஷணைகள் எழிலனை இப்படி பேச வைத்திருக்கிறது என்பதை புரிந்துகொண்டான்.

லெஷ்மியும் புரிந்துகொண்டாள். எதுவும் பேசாமல் அவளும் கிளம்புவதற்கு ஆயத்தமானாள். நால்வரும் பஸ் ஸ்டான்டை நோக்கி நடந்தனர் . கபிலன் யானையைப் பார்த்தே ஆக வேண்டும் என்று அடம் பிடிக்க ஆரம்பித்தான்.எழிலன் அவனைத் தூக்கிக்கொண்டே நடந்தான். எழிலன், “தம்பி இந்த ஊரு யானைக்கு உடம்பு சரியில்ல. நாம நாளைக்கு மாயூரநாதர் கோயிலுக்கு நம்ம ஊர் கோயில் யானைய பார்ப்போம். அங்க தினமும் யானை பார்க்கலாம். இந்த கோயில் யானைய தினமும் பார்க்க முடியாதுல்ல.. அண்ணன் உனக்கு தினமும் காட்டுறேன்” என்று சொல்லிக்கொண்டே நடந்தான்.
கபிலன், “அப்போ எப்போ நாம இங்க வருவோம்” என்றான்.
எழிலனின் மனதில் ஓடிய எண்ண அலைகள் ஆயிரம். அதை அவன் சொல்லும் அளவிற்கு வயதும் இல்லை புரிந்துகொள்ளும் அளவிற்கு கபிலனுக்கு விவரமும் இல்லை. நால்வரும் பேருந்து நிலையத்தை அடைந்திருந்தனர்.

இரவு நேரம் என்பதால் குஞ்சான் கடை பூட்டிக் கிடந்தது, அந்தக் கடையின் பூட்டும் நடு ரோட்டில் அலைந்த தெரு நாய்களும்  குமாரை வழியனுப்பி வைப்பதுபோல் இருந்தது. ஜன்னல் ஓரத்தில் அமர்ந்த குமார் ஒரு பக்கமாக சாய்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தான். மன்னார்குடி உட்கோட்ட எல்லை முடிவு நன்றி மீண்டும் வருக என்று பேரூராட்சியின் பலகை அரைகுறை வாகன வெளிச்சத்தில் மங்கலாக தெரிந்தது.

“மீண்டும் வருக மீண்டும் வருக” என்ற வாசகத்தை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே தனக்குள் சிரித்துக்கொண்டான் குமார்.

மாயாவரத்திற்கு வந்ததும் லெஷ்மி வீட்டுக் கதவை திறந்து விளக்கைப் போட்டாள். முன் அறையின் காலண்டரில் மன்னை ராஜகோபாலசுவாமி புன்சிரிப்புடன் அருள்பாலித்துக்கொண்டிருந்தார்.

சொர்க்க வாசல் கதவு திறந்தது.

2574-idol-inside-rajagopala-swamy-perumal-temple.jpg
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s