அசரிரி

பேபி பாட்டி பீதியுடன் உட்கார்ந்திருந்தாள்.  இருக்கத்தானே செய்யும். வீட்டின் தலைச்சன் பிள்ளை போயும் போயும் இப்படி ஒரு சத்தியத்தையா செய்துவிட்டு போவது? விடிந்தால்தான் எதுவும் நிச்சயம் என்று குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மனை வேண்டிக்கொண்டு திண்ணையில் உட்கார்ந்திருந்தாள். அவளைச் சுற்றி அவளுடைய மருமகன் தங்கராசும், அத்தை விஜயலெஷ்மியும், அம்மா சரளாவும் தம்பி ராஜிவும் அமர்ந்திருந்தனர். மணி நள்ளிரவு 12ஐ கடந்திருந்தது.  ஏற்கனவே கடித்து கடித்து துப்பி மொட்டையாக்கிய விரல் நகத்தை இன்னும் கடித்து வராத நகத்தை துப்பிக்கொண்டிருந்தாள்.

அந்த வீட்டின் தலைச்சன் பிள்ளையின் பெயர் பிரபாகர். அவன் செய்துவிட்டு போன சத்தியத்தை யாராலும் ஊகிக்க முடியாது.

பி.யூ.சி முடித்த கையுடன் அடுத்த பட்டப்படிப்பிற்காக அட்மிஷன் நடைபெற்றுக்கொண்டிருந்தது. 52 சதவீதம் இந்த மார்க்கிற்கு பி.ஏ பொருளாதாரம் கிடைக்குமா கிடைக்காதா என்ற பயத்தில் பிரபாகரும் அவன் தந்தை சீனிவாசனும் சென்றிருக்கின்றனர். போகும்போது, வீட்டாரிடம் பிரபாகர் செய்த சத்தியம், “வந்தால் சீட்டோடு இல்லையேல் காவேரியில் விழுந்துவிடுவேன்” என்பதுதான். அந்த சமயம் காவேரியில் நீர் வரத்து அதிமானதால் வெள்ள அபாயம் வேறு விடுக்கப்பட்டிருந்தது.  அந்தக் கல்லூரியின் அமைப்பு அப்படித்தான். ஆற்றுப் பாலத்தை தாண்டித்தான் கல்லூரியினுள் செல்லவேண்டும்.

அந்த குடும்பம் இப்படி நடுவாசலில் நடுநிசியில் உட்காந்திருப்பதில் இப்போது ஆச்சர்யம் ஏதும் இல்லையல்லவா ?

தெருநாய்களுக்கும், நடுஇரவு ஆந்தைகளுக்கும், கீரிப்பிள்ளைகளுக்கும் துணையாக அனைவரும் உட்காந்திருந்தனர். மூன்று மணி வாக்கில் தெருமுக்கில் டைனமோ விளக்கின் வெளிச்சம் தெரிந்து ராஜிவ் முதலில் எழுந்தான். பிறகு அனைவரும் அங்கேயே நோக்கினார்கள். அது இரவு ரோந்துக்கு சைக்கிளில் செல்லும் போலீசு. மீண்டும் அமர்ந்தனர்.

உட்கார்ந்தவாறே எல்லாம் கண்ணயர்ந்த நேரம், தீடீரென பிரபாகர் அவர்கள் முன்னாள் தோன்றினான். எழுந்து நின்ற பேபி பாட்டி அவனையே உற்றுப்பார்த்தாள். “யப்பாடா பெரியவன் வந்திட்டான்” என்று சிரித்துக்கொண்டே நின்றாள்.

பிரபாகர் அவளை ஒரே தூக்காக தூக்கி மூன்று முறை சுற்றினான். ஆம், அவனுக்கு மேற்படிப்பிற்கு இடம் கிடைத்துவிட்டது.  அன்று குடும்பமே தன் பரம்பரையில் வரவிருக்கும் முதல் பட்டப்படிப்பு மேதையை ஆரத்தழுவி உச்சிமுகர்ந்தனர்.

வருடங்கள் சென்றன. பட்டப்படிப்பு முடிந்தது. பிரபாகருக்கு வேலை கிடைத்தது. கல்யாணம் ஆனது. பேபி பாட்டி இறந்துபோனாள். தங்கராசு மாமாவும் இறந்துபோனார். அத்தையானவள் மகள்களோடு போய் செட்டில் ஆனாள். வாழ்க்கையில் எல்லோருக்கும் நடக்கவேண்டியது நடந்தது. வாழ்க்கையின் மாற்றம் சில நேரங்களில் சகித்துதான் ஆக வேண்டும், மாற்றங்களை புரிந்துகொண்டுதான் ஆக வேண்டும். சீட் கிடைத்த அந்த இரவு கூட இவ்வளவு பரபரப்பாக முன்னேறவில்லை.. ஆனால் படிப்பிற்குப் பின் வாழ்க்கை சக்கரம் படு வேகமாக சுழன்றது.

வாழ்க்கை, கல்யாணம், முன்னேற்றம், குழந்தைகள் என்று திட்டங்கள் விரிந்துகொண்டே போனாலும், பிரபாகருக்கு ஏதோ ஒரு குறை.  தன் அப்பாவிடமும் அம்மாவிடமும் மனம் விட்டு பேசினான். அவர்கள் என்றுமே அவன் படிப்பு விஷயத்தில் தடையாய் இருந்ததில்லை.

அது இன்னும் படிக்கவேண்டும் என்ற ஆசைதான்.

“குடும்பத்தைப் பார். குழந்தைக்காக ஏதாவது சேத்து வை. பொண்டாட்டிக்கு நகை வாங்கி போடு. இடம் வாங்கலியா ? வீட கட்டலியா ? உனக்குன்னு கொஞ்சம் சேத்துவை”. இப்படி பல பீரி அட்வைஸ் வந்தும் அவனது எண்ணம் படிப்பிலேயே இருந்தது.

இப்போது வாங்கும் சம்பளம் குடும்பத்திற்கும் குழந்தைகளுக்கும் பத்தாது என்று எண்ணி, தெருவில் தன் சொந்தக்கார மச்சானிடமே சீட்டுக்கு சேருகிறான் பிரபாகர். அவனுடைய அடுத்த இலக்கு எம்.ஏ வரலாறு.

மாதமாதம் 25 ரூபாய் என்று ஒரு வருடம் பணத்தை கட்டுகிறான். அந்த காலத்தில் 25ரூபாய் இப்போதைய 500 ரூபாய்க்கு சமம்.

மாத வாடகை, வீட்டுச்செலவு, குழந்தைகளுக்கு, வீட்டு சாமான்கள் இத்தியாதி செலவுகள் என்று எல்லாம் போக ஒவ்வொரு மாதமும் 100 ரூபாய் ஒதுக்க படாத பாடு பட்டான். சைக்கிள் வாங்க நேரம் அமையவில்லை, கால்நடையாகவே சென்றான். சைக்கிள் கனவு அவனைப்பொறுத்தவரை ஒரு பென்சு காருக்கு சமம். இப்படியே சென்றது… தெரு முக்கிலுள்ள மச்சான் 13ஆம் மாதத்தில் பணம் திரும்ப தருகிறேன் என்றார்.

ஒரு சராசரி சம்பளதாசனின் வாழ்க்கை எப்படி ஓடுமோ அதோ போல் ஓடியது. ஒரு வருடம் முடியும் தருவாயில், எம்.ஏ வரலாறுக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அப்பிளிகேஷன் வாங்குகிறான். தபால் மூலம் பகுதிநேர படிப்பு மற்றும் முழு நேர தன்னுடைய வேலை என்று திட்டமிடுகிறான். பேபி பாட்டியின் நினைவு அவனை சற்று நேரம் ஆட்கொண்டுவிட்டு சென்றது. தான் படிப்பதற்கு முழு காரணமானவர்களை நினைத்து நிம்மதி பெருமூச்செறிந்தான். இப்போது அந்த பட்டியலில் அவனுடைய தெருமுக்கு மச்சானும் இணையப்போகிறார்.

மதுரைக்கு செல்லும் முன் மச்சானை பார்த்து பணத்தை வாங்கிவிடலாம் என்று தன் மனைவியிடம் சொல்லிவிட்டு வெள்ளைப்பிள்ளையார் கோவிலுக்கு சென்று காலணா சூடத்தை ஏற்றிவிட்டு செல்கிறான். வீட்டையடைகிறான். மச்சான் வருகிறார். முகம் முழுக்க சிரிப்பு பிரபாகரனுக்கு. மச்சான் முகத்தில் அதைவிட சிரிப்பு.

பணம் வந்தால் அந்த குடும்பமே  அப்படித்தான் சிரிக்கும்.

லாட்டரி, தட்டுவியாபாரம் என்று மிகவும் அடிபட்டு முன்னுக்கு வந்தவர் தெருமுக்கு மச்சான். அவர் பெயர் என்னவோ தெரியாது, அவர் வீடுதான் தெருமுக்கிலேயே பெரிய ஒட்டு வீடு ஆதலால் எல்லாரும் தெருமுக்கு வீடு அல்லது தெருமுக்கு அண்ணன் வீடு என்றால் உடனே தெரிந்துவிடும்.

தான் இன்னும் மூன்று நாளில் திருநெல்வேலிக்கு செல்லவிருப்பதையும் பணம் கட்டிவிட்டால் புத்தகம் போஸ்டலில் வந்துவிடும் என்றும் சொல்கிறான். தெருமுக்கு மச்சான் பேந்த பேந்த முழித்தார். பணத்திற்கு இன்னும் இரண்டு நாள் அவசாகம் கேட்டார். பிரபாகரன், தான் பணத்தை கொடுத்தது வட்டிக்கு விட்டு சம்பாதிக்க இல்லை, வட்டி கூட வேண்டாம் அசல் மட்டும் போதும் உடனே கட்ட வேண்டும், இல்லையேல் இந்த வருடம் வீணாகிவிடும் என்கிறான்.

தெருமுக்கு மச்சான் இரண்டே நாளில் தருகிறேன் என்று உறுதியாக சொன்னார்.

ஆறு மாதங்கள் ஆகிவிட்டன.  தெருமுக்கு மச்சானைப் பார்க்க சென்று சென்று தெருமுக்கில் பிரபாகரன் நிற்க ஆரம்பித்தான். அடுத்த ஆறு மாதமும் சென்றது. இந்த வருடமும் அவனால் படிக்க முடியவில்லை. தெருமுக்கு மச்சான் சொந்தக்காரர் வேறு. சட்டையை பிடித்து சண்டையிட்டால் இவன் படிப்பிற்கும் தராதரத்திற்கும் பங்கம் ஏற்பட்டுவிடும் என்ற பயத்தினாலேயே எதுவும் செய்யாமல் அவர் சொன்னதை கேட்டுக்கொண்டிருந்தான்.

மதுரை காமராசர் பல்கலைக்கழத்தில் அடுத்த கல்வியாண்டு அட்மிஷன் நோட்டீசை பழைய பேருந்து நிலையம் டீக்கடையில் படித்துவிட்டு, நேராக தெருமுக்கு மச்சானை பார்க்க சென்றான் பிரபாகர்.

மறுபடியும் அதே பல்லவி. பிரபாகருக்கு இந்த முறை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவர் வீட்டிலேயே போய் சண்டையிட்டு வாங்கியிருக்கலாம். அல்லது போலீசில் சொல்லியிருக்கலாம். தெருமுக்கு மச்சான் பணத்தை உள்ளே வைத்துக்கொண்டே இவனை அலைக்கழித்தது இவனுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. முகத்திற்கு நேராக உண்மையை சொல்லி கேட்டுவிடலாம். ஆதாரம் ?

படிப்பதற்காக சீட்டுக்கு ஒரு தெரிந்த முகத்திடம் பணத்தை கொடுத்து அலையும் அபலம் நம் நாட்டில் மட்டும்தான் நடக்கும்போல.

அந்த வருடம் தெருமுக்கு மச்சானின் வியாபாரம் பன்மடங்கு உயர்ந்தது. ஒரு மனிதனின் பொருளாதார வசதி ஏறுவதை பணத்தை வைத்து சொல்லத் தேவையில்லை. அவனுடைய சிரிப்பை வைத்தே சொல்லிவிடலாம். பணக்காரர்கள் சிரிக்கமாட்டார்கள். தெருமுக்கு மச்சான் தன்னுடைய இயல்பான சிரிப்பை இழந்து பல மாதங்கள் ஆகின்றன.

பிரபாகருக்கு பல்கலைக்கழக தேதி நெருக்கடி வேறு. என்ன செய்வது என்று தெரியாமல் நடுவீட்டில் உட்காந்திருந்தான் .

“சார் போஸ்ட்” என்று தபால்காரன் சொல்லும் சத்தம் கேட்டது. பக்கத்து வீட்டிற்கு தபால் காரன் வந்துவிட்டு போகிறான். சட்டென்று இவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.

மறுநாள் காலை.

தெருமுக்கு மச்சான் தங்கள் வீட்டிற்கு புதிதாக வாங்கப்பட்ட டிஷ் ஆண்டனாவை சரிபார்த்தபடி இருந்தார். மாடியில் ஒரே கூட்டம். அந்த தெருவிலேயே பெரிய டிஷ் வைத்து டி.வி பார்ப்பவர்கள் அவர்கள் வீட்டில்தான். பணக்கஷ்டம் அவருக்கு. இல்லையெனில் தெருவிற்கே டிஷ் போட்டு பீரியாக டி.வியும் வாங்கி கொடுத்திருப்பார் தெருமுக்கு மச்சான்.

தபால்காரன் .. சத்தம். “சார் போஸ்ட்”. மச்சான் வெளியே சென்று போஸ்ட் கார்டை வாங்கினார். அனுப்புநர் பகுதியில் பிரபாகரன் என்ற பெயர் இருந்தது.

மரியாதைக்குரிய பெரியவருக்கு,
நான் உண்மையாக உழைத்து என் படிப்பிற்காக எதிர்காலத்தில் தேவைப்படும் என்று எண்ணி உங்களிடம் கொடுத்த பணத்தை உரிய நேரத்தில் வாங்க துப்பில்லாதவனாக இருக்கிறேன். எனது படிப்பு செலவை நான் பார்த்துக்கொள்கிறேன். நான் உங்களிடம் கொடுத்த பணம் எனக்கு வேண்டாம். அதை நீங்கள் இறந்த பிறகு உங்கள் ஈமச்சடங்கிற்கு வைத்துக்கொள்ளவும். உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு அந்த பணம் அந்தநேரம் மிகவும் உதவியாக இருக்கும்.

இப்படிக்கு, பிரபாகரன்.

தன்னுடைய பூஜை அறையில் இருக்கும் லெஷ்மிதேவி கொஞ்ச நேரம் தங்கக்காசுகளை கீழே வைத்துவிட்டு சம்மட்டியை எடுத்து முகத்திலேயே அடிப்பது போன்ற ஓர் உணர்வு தெருமுக்கு மச்சானுக்கு. பிரபாகரனைஏமாற்றவேண்டும் என்ற எண்ணம் இருந்ததா இல்லையா என்று தெரியாது. ஆனால், அவரிடம் பணம் இல்லாமல் இல்லை.

மறுநாள் காலை.

அவர்கள் வீட்டிலிருந்து யாரோ சிங்காரம் என்பவரிடம் சீட்டுப் பணத்தை அன்றைய தேதிவரையான வட்டியைக் கூட கணக்குபோட்டு கொடுத்துவிட்டிருந்தார் உயர்திரு தெருமுக்கு மச்சான். கல்யாணம் முடிந்த பின் மேளம் கொட்டி என்ன ஆகப்போகிறது ?

தேதி முடிந்தது இந்த வருடமும் வீணாகியது. அவனுடைய எம்.ஏ வரலாறு கனவு வரலாறாகவே மாறிப்போனது.  நினைத்ததும் சபதம் செய்ய அவன் இப்போது ரெத்தினசாமிப் பிள்ளையின் லட்சாதிபதி பேரனும் அல்ல சத்தியம் செய்துவிட்டு குதிக்க அருகில் காவேரி ஆறும் இல்லை.  தன் வரவை எதிர்ப்பார்த்து உட்காந்திருக்க அவனுடைய குடும்பமும் இல்லை, தன் மனைவியைத் தவிர.

பி.ஏ விற்கு சீட் கிடைத்த அன்று தன் வீட்டில் நடந்த விஷயங்கள் எல்லாம் நினைவுக்கு வர, பேபி பாட்டியின் நினைவும் அவனுக்கு வந்தது. “நடப்பதுதானே நடக்கும், நடப்பது தானே நடக்கும்” என்று பேபி பாட்டியின் குரல் அசரிரியாக அவனுக்கு கேட்டது.

காமராசர் பல்கலைக்கழகத்தின் அப்ளிகேஷனை நான்காக மடித்து அந்த மாதத்திற்கு வீட்டிற்குத் தேவையான  மளிகை ஜாமான்களை எழுத ஆரம்பித்தான் பிரபாகர்.

galactic-core-galactic_core_by_uribaani

Advertisements

தஞ்சாவூர் சந்திப்பு

‘நகர வாழ்க்கை’ யாரைத்தான் விட்டது ? நமது தேசத்தின் மிகப்பெரிய சாபக்கேடு எதுவென்றால், நம்முடைய படிப்பை சொந்த ஊரிலேயே படிக்கலாம், ஆனால் வேலையானால் ஏதோ ஒரு மெட்ரோ சிட்டிக்குத்தான் வரவேண்டும். அப்படித்தான் படிப்பிற்காக 19 வருடம் எனதூரிலேயே சென்றது.  இது இந்த நாட்டின் டிசைன் என்று கூட வைத்துக்கொள்ளலாம். எனது சொந்த ஊரை விட்டு  மாநகர் பெங்களூருவிற்கு வந்து பல நாட்களாகிவிட்டன.

வேகம், போட்டி, பரபரப்பு இவைதாம் இந்த ‘நாகரிக’ வாழ்க்கையின் அங்கங்கள். திங்கட்கிழமை என்றால் இதனுடைய வீரியம் இன்னும் அதிகமாகவே காணப்படும். நிதானம், பொறுமை, போதும் என்றெல்லாம் கொண்டிருப்பவர்களுக்கு அங்கு இடமில்லை. அவ்வாறு இருந்தால் திறமையில்லாதவன் என்ற பெயருடன் இருக்க நேரிடும். நம்மாலும் ஓட முடியும், ஓடியாகவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை நாளுக்கு நாள் இந்த போட்டியும், வேகமும் உயிரின் உள்ளே நம்மையறியாமலேயே இறங்கிக்கொண்டே இருக்கும். தன் சுயத்தை இழக்கும் தருணங்களில் எதிர் கேள்வி கேட்பவன் அழிக்கப்படுவான் அல்லது ஓட்டப்பந்தயத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவான். ஒவ்வொருவரின் ஆழ் மனதிலும், நீங்களும் ஒரு மாபெரும் போட்டியாளர்தான், உங்களாலும் ஓட முடியும் என்ற எண்ணத்தை அடி மனதில் வளர்த்துக்கொண்டே இருப்பார்கள். சக்கையாக பிழிக்கப்பட்டு ஓட்டத்தில் வேகம் குறையும் நேரத்தில் தூக்கியெறிந்துவிடுவார்கள்.

போட்டி, பொறாமை, வேகம் இவையெல்லாம் சுற்றி நடந்துகொண்டிருக்கும் பொழுது வண்டி நிறைய சரக்குகளை வைத்து மூன்று சக்கர மிதிவண்டியில் நிதானமாக சிக்னல் போட்ட பிறகும் படபடப்பு இல்லாமல் பெடலை மிதித்துக்கொண்டு சாலையை கடக்கும் பெரியவர்களை நீங்கள் என்றாவது பார்த்ததுண்டா ?  அவர் தொழிலில் போட்டியில்லையா? வேகம் இல்லையா? பொறாமைதான் இல்லையா ? போட்டி உலகத்தில் இருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு அங்கிருந்து விலகும் ஒரு தற்காலிக பயணம் நமக்கு நாமே விடுதலை சாசனம் எழுதிக்கொள்வதுபோலத்தான். அது ஒரு பரோல். திரும்பி வரும் நாள் தெரிந்து நாம் நமக்கே  கொடுத்துக்கொள்ளும் விடுதலை.

சொந்த ஊருக்கு போவது என்பதே ஒரு அலாதியான விஷயம்தான். முடிவெடுத்துவிட்ட அந்த நேரத்திலிருந்தே எதிர்வரும் எந்த விஷயமும் பெரிதாக தெரியாது. வேகமாக கொண்ட கருமத்தைப் பார்ப்போம், எதிலுமே ஒரு வேகம் இருந்துகொண்டே இருக்கும், இந்த வேகம் தினசரி மெக்கானிக்கல் வேகத்தைவிட அழகானது. விவேகமானதும்கூட. இது ஆசை என்பதைவிட ஒரு தற்காலிக குறிக்கோளாகவே ஆகிவிடும். புரோமோஷன், சம்பள உயர்வு போன்ற செய்திகளெல்லாவற்றையும்விட பெரிய மன திருப்தி சொந்த ஊருக்கு போவதில்தான் உள்ளது.

இன்றைக்கு ஊருக்கு போகிறேன் என்று உங்கள் சகாக்களிடம் கூறும்போது உங்களின் மன நிலையை நினைத்துப்பாருங்கள். அதனுடைய வெளிப்பாடு மௌனத்தின் மோன நிலையில் ஒருவித திருப்தியடைந்த நிலையாகத்தான் இருக்கும்.

அன்றைய தினம் எனது தினமாக இருந்தது. ரயிலில் ஏறி உட்கார்ந்தேன். ஒரே பரபரப்பு … ஜில்லென காற்று… பெங்களூரு சிட்டியில் இருந்து ஏழு மணியளவில் வண்டி. ரயில் கூவும் சத்தம் காது ஜவ்வை உள்ளேயிருந்து கிழித்து வெளியில் போடுவது மாதிரி இருந்தது. என்ஜினுக்கு அடுத்த பெட்டியாதலால் இந்த பீடையும் சேர்ந்துகொண்டது எனது ‘நகர’ வாழ்க்கைப்போல. ரயில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வேகத்தை ஆரம்பித்தது. ஊர் எல்லை கொஞ்சம் கொஞ்சமாக மறைய மறைய அந்த ‘நாகரிக நகர’ இரைச்சலில் இருந்து லேசாக விடுபடுவதுபோன்ற ஓர் உணர்வு.

அந்த விடுதலை. கொஞ்ச நாளைக்கு மட்டும் தானே ? இருந்தாலும் அந்த கொஞ்ச நாள் எனது கையில் கிடைத்த பொக்கிஷம். மறுபடியும் அந்த பொக்கிஷம் கிடைக்க இந்த ‘நாகரிக’ இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்கி காலத்தை ஓட்ட வேண்டும்.  ரயிலின் இரைச்சல் கூட இனிமையாகத்தான் இருந்தது அன்று. நான் ஊருக்கு வருகிறேன் என்ற செய்தியை காற்றில் கலக்கிவிட்டுகொண்டு கரும்புகையை கக்கிக்கொண்டே என்னையும் சுமந்து கொண்டுவந்தது அந்த ரயில்.  இப்போது முழுமையாக நகரத்தின் வாசமே இல்லாத ஊர் எல்லைகளுக்குள் வந்து ஒளிந்துகொண்ட உணர்வு, முற்றிலும் நகரத்தை விட்டு வந்த பின்னும் கூட, நகர வாழ்க்கையின் எச்சங்களாக என்னைப்போன்றோர்கள் அங்கு சஞ்சரித்திருப்பதால் அந்த இடத்தில் நகர வாழ்க்கையின் வாடை லேசாக அடிக்கத்தான் செய்தது. ‘நகர நாகரிகத்தின்’ அங்கங்கள்தானே நாமெல்லாம்? இருந்தாலும் என்னுடன் பயணிப்பவர்களும் என்னைப்போன்ற உணர்வோடு வருவதால் அந்த வாடையை அது வெகு சுலபமாக தூக்கிச்சென்றுவிட்டது.  வேகமான ‘நாகரிக’ வாழ்க்கையின் காழ்ப்புணர்ச்சியை மனிதர்கள்வேறு எப்படி காட்டிக்கொள்ள முடியும் ?

சொந்த ஊரை அடையும் போது நம் மனதில் ‘நகர’ வாழ்க்கையின் நினைவும் எண்ணமும் இருக்கவே இருக்காது.  அதன் பாதிப்பு வேண்டுமானால் நம்முடைய நடை உடை பாவனைகளில் இருக்கலாம். மனதளவில் தொலைத்த குழந்தைப்பருவ நினைவுகள் இல்லாமல் இருக்காது. இன்னும் சொல்லப்போனால் இப்படியே இங்கேயே இருந்துவிடக்கூடாதா என்ற ஏக்கம் வரும். சம்பாத்தியத்திற்கு நமக்கேற்ப ஒரு வேலையை நம்மால் ஏன் இங்கு தேடிக்கொள்ள முடியவில்லை என்ற கேள்வி வரும்.  குறிப்பிட்ட தூரம் வரை இந்த எண்ணம் வரும், இந்த எண்ணமானது நாம் அடுத்து டாக்ஸி ஸ்டாண்டில் ஒரு காரை வாடகைக்கு எடுக்கும் கணம் வரை நீடிக்கும், பிறகு காற்றோடு கலந்துவிடும்.

அந்த ‘நாகரிக கிறுக்கன்’ வெளிப்படாமல் இருப்பானோ ? டாக்ஸிக்கு வாடகை கொடுக்கும்போது அவன் வந்து செல்வான். எப்போதெல்லாம் தோலில் செய்த மணி பர்ஸை எடுக்கிறோமோ அப்போதெல்லாம் அந்த ‘நாகரிக கிறுக்கன்’ வந்து செல்வான். அது நாம் நிற்கும் இடம் கொட்டாம்பட்டி கிராமமாக இருந்தாலும் சரி. நமக்குள் ஒரு நாகரிக கிறுக்கன் இருப்பதை பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நாம் ஈடுபடும்போது உணரலாம்.

தஞ்சாவூரில் அதிகாலை சூரியனின் வருகைக்கு முன்னமே அந்த சோழனுடைய பெயர் சொல்லும் தஞ்சை பெரிய கோயிலை எனது நண்பர்களோடு பார்த்த நாட்கள் மிகவும் மறக்கமுடியாதது. கூழ் ஊற்றுவது, நெருப்பு மிதிப்பது போன்ற எந்த ஒரு மாரியாத்தாள் கோவிலின் கொண்டாட்டங்கள் இல்லையென்றாலும், தினசரி வருகை தரும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளே அக்கோயிலை ஒரு பெரும் திருவிழாக் களமாக ஆக்கிவிடுவார்கள். வராகி அம்மன் சன்னதிக்கு அருகே உள்ள புல்வெளித் தரையில் எத்தனை நாட்கள் படுத்து உருண்டுகொண்டே அந்த விமானத்தை ரசித்திருக்கிறோம் தெரியுமா? எத்தனை மணிநேரம் வரை வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.  சதய விழா, பிரதோஷ தினங்களில் அந்த பரத நாட்டிய மேடையையும் தேவார ஓதுவார்களையும் வெளிநாட்டவர்கள் அப்படி ஒரு ஆச்சரியத்துடன் பார்த்து புகைப்படம் எடுப்பார்கள்.

கோயிலுக்கெல்லாம் பெரிய கோயில் இந்த ராஜராஜன் அமைத்த ராஜராஜேச்சரம் அல்லவா. அது மட்டுமா கல்லணையில் தண்ணீர் வந்தால் பெரியகோயிலின் அகழியை வர்ணிப்பதற்கு வார்த்தைகளே இல்லை. மேம்பாலத்தின் வளைவில் திரும்புகையில் ஆற்று நீர், இந்த புறம் அகழி முழுவதும் நீர், தமிழன் என்றுமே தலைநிமிர்ந்து இருக்கவேண்டும், தமிழனின் படைப்பையும் மற்றவர்கள் தலை நிமிர்ந்து பார்க்க வேண்டுமென்றுதான் அந்த விமானம் கம்பீரமாக நிமிர்ந்து வானை நோக்கி நிற்கும்படி கட்டியிருக்கிறான் எம்நாட்டு மன்னன். அந்த அழகை பார்க்கவேண்டுமே… அடடா… பரவசம்தான்.

“ரீ ஸ்வல்ப ஜாக பிடிரி…… ஜோராகே நித்ரே மாடிஸ்தீரா, கிட்க்கியத்ர இரோது நம்து சீட் ரீ…”

(ஏங்க… கொஞ்சம் தள்ளி உட்காருங்க… நல்லா தூங்குறீங்களா… ஜன்னலோரம் சீட்ட விடுங்க என்று ஒரு சக பயணி உள்ளூர் பாஷையில் கூறினார்)

அவர் சொன்னதை சற்று கூர்ந்து இன்னொரு முறை கவனித்தேன்  ஆனால்….இப்போது எனக்கு அலாரம் க்ளாக்கின் சத்தம் மட்டுமே கேட்டது. இன்று திங்கட்கிழமை அலுவலகம் போயாகவேண்டும். அதோ மனிதர்களை சக்கையாக பிழிந்து தினம் தினம் பசியாறிக்கொண்டிருக்கும் அந்த ‘நாகரிக நகர’ வாழ்க்கை…. கார், ஆட்டோ, பேருந்து, லாரி போன்ற வாகனங்களின் ஆரன் சத்தம் மூலமாக என்னை படபடப்புடன் ஓர் நிதானமின்மையுடன் என்னை வா வா என்று அழைக்கிறது. ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்த மாயையில் இருந்து விடுபடாத வந்தேறிகள் இந்த ஊரில் இல்லவே இல்லை. இப்படிப்பட்ட மாயைகள் மூலம் வாழும் எண்ணற்ற ஆத்மாக்கள் இந்த மாநகரத்தில் தினந்தோறும் உலாவிக்கொண்டுதான் இருக்கிறது.

நேரம் ஆகிவிட்டது…. இதோ ஜகஜோதியாக ஐக்கியமாக புறப்பட்டுவிட்டேன்.

tj
Enter a caption

உறவுகள்

அது ஒரு அழகிய வீடு. லெஷ்மி கடாட்சம் என்பார்களே அதற்கு எள்ளளவும் குறையில்லாத வீடு. துளசிமாடம், கிணறு, முற்றம் என்றெல்லாம் பழைய அக்ரகாரத்து வீடு அல்ல. ஒரு சாதாரண ஓட்டு வீடுதான் ஆனால் அதற்கென்று உள்ள தெய்வீகத்தன்மையுடனும் ஒரு தனித்தன்மை வாய்ந்த அழகுடனும் உள்ள வீடு. வெயில் காலங்களில் காற்றோட்டம், மழைக்காலங்களில் நீர் வெளியேற நேர்த்தியாக கட்டப்பட்ட தண்ணீர் குழாய்கள், நீர் சேமித்து வைக்க தண்ணீர் தொட்டி, வாசலில் வருபவர்களை வரவேற்க நிற்கும் உயர்ந்த தேக்கு மரத்திலான தூண்கள், உயர்ந்த உத்திரத்திலான மேற்கூரை என்று ஒரு கூட்டு குடும்பவே வாழும் அளவிற்கு இருக்கும். ஆனால் பாழடைந்துதான் இருக்கும். காலையில் வெள்ளன எழுந்து கோலம்போட்டு மகாலெஷ்மியை அழைக்க அந்த வீட்டில் மகாலெஷ்மியில்லை.

ஆனால் ஒரு ஆச்சி மட்டும் இருக்கிறாள். தஞ்சை மெயின் ரோட்டில் இருந்து கும்பகோணம் நோக்கிய சாலையில் வலது பக்கம் உள்ள ரயில்வே கேட்டை தாண்டினால் சுந்தரபெருமாள் கோவில். அந்த ஊரில் இந்த ஆச்சியை தெரியாதவர்களே இல்லை. ஆனால் அவளுக்குத்தான் யாரையும் அண்ட விடவும் பிடிக்கவில்லை. அவளுடைய சொந்த கதையை கேட்டு குளிர் காய்பவர்கள் தான் அதிகம்.

தன்னந்தனியே இருப்பவளுக்கு வீட்டை நன்றாக வைத்துக்கொள்ளும் எண்ணம் இல்லாமல் போனதில் ஆச்சர்யம் இல்லை. கிழவன் இருந்தவரையிலாவது ஓரளவு ஒரு பிடிப்புடன் இருந்தாள். ஏதோ தினமும் காலையில் எழுவது, தெரிந்த கோலத்தை தரையில் போட்டுவைப்பது, சாமி அலமாரியில் சாமிக்கும், அதற்கு மேலே சட்டத்தில் மாட்டப்பட்டிருக்கும் கிழவனின் படத்திற்கும் இரண்டு ஜவ்வந்திப் பூ ! பிறகு சூடாக காபியை குடிப்பது… எண்ணம் இருந்தால் சமைப்பது இல்லையென்றால் ஏதாவது பட்சணத்தை சாப்பிட்டுவிட்டு காலை சாப்பாட்டிற்கு லீவு விட்டுவிடுவது. காபியே அவளுக்கு சாப்பாடு மாதிரிதான் என்று ஊரில் எல்லாம் சொல்வார்கள்.

மகன்கள், மகள், பேரன்கள், பேத்தி என எல்லாருமே உண்டு. அவர்களுடைய அவ்வப்போவது வருகைதான் ஆச்சியை தான் ஒரு அனாதையில்லை என்ற எண்ணத்தை கொடுத்தது. மற்றபடி அவள் இப்போது அனாதைதான். ஒரு தற்காலிக சொந்தம். கொண்டாட்டம். ஆச்சியின் பிள்ளைகள் வேலை, வியாபாரம் என்று இருந்துவிட காலம் காலமாக பண்டிகைக்கு மட்டுமே வந்து போகும் புண்ணிய ஸ்தலமாக மாறிப்போயிருந்தது அந்த வீடு. காலங்கள் செல்ல செல்ல மகன்கள் மகள் வருவது குறைந்து பேரன்களும், பேத்தியும் வர ஆரம்பித்தனர். ஒவ்வொரு வருடம் ஒரு காரணத்துடனே வருவார்கள். இந்த தீபாவளிக்கு அப்பா வரமுடியாதாம் ஆச்சி. இந்த பொங்கலுக்கு அம்மாவுக்கு காலேஜ்ல பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாம், ஏதாவது ஒரு நொண்டி சாக்கு. ஆனால் பேரன்கள் பேத்திகளின் தொடர் வருகை ஆச்சிக்கு ஒருவித தெம்பை கொடுத்தது. அவளிடம் வளர்ந்தவர்கள்தானே… விவரம் தெரிய ஆரம்பித்ததும அவர்களே அவளைத்தேடி வர ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு வருட தீவாளியும், பொங்கலும் ஆச்சிக்கு மிக விமர்சியாக சென்றது. யாருக்காகவாவது இருந்து ஒருவித பிடிப்புடன் இருந்தால்தானே வாழ்க்கை சுவாரஸ்யம் இருக்கும். அந்த சுவாரஸ்யத்தில் லயிக்க ஆரம்பித்தாள் ஆச்சி. அந்த வருட தீபாவளியும் வந்தது… அவர்களும் வந்து சேர்ந்தனர்.

தலைக்கு எண்ணெய் வச்சிக்கிட்டு போங்களேன்டி… என்று கத்திக்கொண்டே கையில் நல்லெண்ணெய் கிண்ணத்துடன் அன்றைய விடியற்காலை ஆச்சியின் சத்தம் பக்கத்து வீடு வரை கேட்டது.

சாகபோறகிழவி கூரைமேல ஏறுச்சாம்ன்னு அக்கம் பக்கம் உள்ளவர்கள் பேசும்படி அன்று அவ்வளவு குழந்தைத்தனத்துடனும் விளையாட்டாகவும் நடந்துகொண்டாள்.

குளிப்பதற்கு முன்னால் வெடியை எடுக்காதீங்கடா… குளிச்சிட்டு சாமி கும்பிட்டு பெறகு எடுத்து வெடிங்களேன்டா என்றும் சொல்லிக்கொண்டிருந்தாள். அவள் சொல்லும்போது,. அந்த சமயம் அவள் பேரன்களில் ஒருவன் வைத்த வேட்டு சத்தம் காதில் ஒரு ரீங்காரத்தை ஏற்படுத்தியது. இதெல்லாம் அவளுக்கு அழகிய இம்சையாக தோன்றியது. நன்றாக அனுபவித்தாள். குழந்தையானாள்.

பேத்தி கொஞ்சம் அப்பாவி. அவள் மகளைப்போலவே இவளும்அமைதி. மொத்தம் நான்கு பேரன்கள் ஒரு பேத்தி அந்த 25ஆம் நம்பர் வீட்டில் வசித்து வந்த ஆச்சிக்கு. மகன்கள் மகளை அடுத்து அந்த ஐவரையும் கூட சிறுவயதில் வளர்த்தது இந்த ஆச்சிதான். நீதிக்கதைகள் சொல்வதாகட்டும், மகாபாரதம், பகவத்கீதையை பற்றி சொல்வதாகட்டும் எல்லாவற்றையுமே கண் முன் நிறுத்தி கதையை சொல்லுவாள். பேரன்களை விட பேத்திக்குதான் ஆச்சிமேல் அலாதிப் பிரியம். ஒவ்வொரு விடுமுறைக்கும் வரும்போது, வரவேற்கும்போது பேத்தியைத்தான் முதலில் செல்லம்மா… என்று கத்திக்கொண்டே வரவேற்பாள். பேரன்களுக்கும் உண்டு ஆனால் தொண்டையின் அந்த ஆனந்த கூப்பாடு பேத்தியை அழைத்த அளவு இருக்காது.. பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு, தீபாவளி மற்ற அரசு தொடர் விடுமுறைகளில் அந்த வீடு குதூகலத்திற்கு குறைச்சல் இல்லாமல் இருக்கும். அந்த வருட தீபாவளி நன்றாக சென்றது. இரண்டொரு தினத்தில் பேரன் பேத்திகள் சென்றதும் வீடு விருச்சோடிப்போனது. அடுத்தது பொங்கலுக்குத்தான். மறுபடியும் தனிமையான வாழ்க்கைக்குள் வந்துவிட்டாள் ஆச்சி.

இப்படியே வருடங்கள் ஓடின. தீபாவளிகளும் பொங்கல்களும் மாறி மாறிப் போயின.

கடந்த சில வருடங்களுக்கு மேலாக பேரன்கள், பேத்தி, மகன்கள், மகள்கள் என்று யாருமே எந்த பண்டிகைக்குமே வரவில்லை. கடைசியாக ஒரு கடிதம் வந்த நினைவு தன் பேத்தியிடமிருந்து. எங்கோ பாரின் போறார்களாம் வருவதற்கு சில வருடங்களாகுமாம், அங்கேயே படிப்பை தொடரப்போகிறார்களாம் என்று செய்தி. அனாதை வாழ்க்கை ஆச்சிக்கு கைவந்த கலை. எல்லோருமே இருந்தும் வைராக்கியத்துடன் இருந்தாள். அந்த கடிதத்தில் முகவரி இருந்தும் அவள் பதில் கடிதம் எதுவும் எழுதியதாக தெரியவில்லை. முன்பு போல இல்லை அவள் உடலுக்கு. முகச் சுருக்கம் அதிகமாக இருந்தது, இதில் மூட்டு வலி வேறு போன மகாமகத்திலிருந்து பரிசாக வந்து சேர்ந்தது. எதிலும் ஒரு சோர்வு களைப்பு என்று வாட்டியது அவளை.

பெற்றவள் பிள்ளைகளை எப்போதும் கூடவே வைத்துக்கொள்ள முடியுமா என்ன ? அந்த பாசப் பிணைப்பை வெளியே காட்டிக்கொண்டால் பலகீனம் தெரிந்துவிடும் என்றுதான் பெரும்பாலான ஆச்சிப்போன்ற அம்மாக்கள் ஒரு வித மிடுக்குடனே இருப்பார்கள். முதன் முதலில் ஆச்சியின் பெரிய பையன் வெளி மாநிலத்திற்கு வேலைக்கு போனபோது… மகன் முன்னால் சந்தோஷப்பட்டவள் அடுக்களையில் நின்றுகொண்டு அழுதவள்தானே இவள். ஆனால், மகன் முன்னால்…. வேலா வேளைக்கு சாப்புடுடா, கண்டத திங்காத, நல்லபடியா இரு, லெட்டர் போடு என்றாளே… எப்படி அழகாக சமாளித்திருக்கிறாள். இருந்தாலும் ராணி போல் இருந்தாள் அந்த வீட்டில். அந்த மிடுக்கு எப்போதும் அவளிடம் ஒட்டிக்கொண்டுதான் இருக்கும். ஆனால் தனியாக அழுதும்கொள்வாள். அவளும் பெண்தானே.

அன்று பொங்கல்தினம். விடிந்தது.

செல்லம்மா வீட்டின் வாசலை ஏறியபடி வந்துகொண்டிருந்தாள். என்றைக்கோ பார்த்த நினைவு இந்த செல்லம்மாவை… இந்த வருடம் வருவதாக செய்தியே இல்லையே என்ற நினைவோடு ஒரு ஆச்சரிய அதிர்ச்சியோடு உட்காந்திருந்தாள். என்ன ஆச்சரியம், பேரன்களும் பின்னாடியே பெட்டிப்படுக்கையை தூக்கிக்கொண்டு வருகிறார்களே. அவளுக்கு பூரிப்பு தாங்க முடியவில்லை. முன்னமே தெரிந்திருந்தால் செங்கரும்பு, பச்சரிசி எல்லாம் ஏற்பாடு பண்ணியிருப்பாளே. இப்படி திடுக்கென்று வந்து நிற்கின்றனரே. அவளுக்கு அன்று ஆச்சர்யத்துக்கு மேல் ஆச்சர்யம். எப்போதோ பார்த்த பெரியவன் வருகிறான். சில வருடங்களுக்கு முன்பு பார்த்த மகளும் வருகிறாள். ஆகா இந்த பொங்கல் இவளுக்கு உண்மையிலேயே மறக்க முடியாத பொங்கல்தான். ஒருவேளை வெளிநாட்டு பயணம் முடிந்து இனிமே என்னுடன் இருக்கப்போகிறேன் என்று சொல்லப்போகிறார்களோ என்ற ஆதங்கத்துடன் இருந்தாள். எல்லாரையும் வரவேற்று முகத்தல் கோபத்தின் சாயலை காட்டிக்கொள்ளாமல் .,.அவர்கள் வந்ததே போதும்.. என்ற திருப்தியில் இருந்தாள். அவளுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. ஊரில் பொங்கல் இங்கு விருந்தினர்கள் போல் வீற்றிருக்கும் சொந்த மகன்கள், மகள், பேரன்கள் மற்றும் பேத்தி. தனியாளாக என்ன செய்வாள் இவள் ?

வாசலுக்கு ஓடுகிறாள் கொல்லைப்புறம் ஓடுகிறாள். ஒரே ஆனந்த கூப்பாடுதான். அவளுக்கு கூப்பிடும்தூரத்திற்கு யாருமே அகப்படவில்லை. வாசலுக்கு சென்று தேக்கு மரத் தூணைப் பிடித்துக்கொண்டே தெருவின் கடைகோடி வரை பார்க்கிறாள். யாருமே தென்படவில்லை. அங்கிருந்தபடியே செல்லம்மாவை அழைக்கிறாள்.

அடியேய் செல்லம்மா என்கூட வாடி ஒரு களி செங்கரும்பு வாங்கியாந்துருவோம். உங்கப்பனுக்கு ரொம்ப பிடிக்கும்டி.

செல்லம்மா காதில் எதுவுமே விழவில்லை. ஏன் யார் காதிலுமே எதுவும் விழவில்லை.

என்னதான் பண்றீங்க இந்த கிழவி கத்துறேன்ல என்று சொல்லிக்கொண்டே உள்ளே வந்தவள்  திடுக்கிட்டு நின்றாள்.

உள்ளே கூடத்தில் கிழவனின் படத்திற்கு கீழே ஒரு நாற்காலியில் அவளைச் சுற்றி தன் குடும்பத்தின் விழுதுகள் அழது புரண்டு கொண்டிருந்தனர்.

அழாதீங்கடா….. அழாதடி செல்லம்மா……. நா இங்கயேத்தான் இருக்கேன் என்கிறாள். யாரும் காதில் போட்டுக்கொண்டமாதிரித் தெரியவில்லை.

பெத்த பாசத்திற்காக பிள்ளைகளும், வளர்த்த பாசத்திற்கான பேரன் பேத்தியும் அவரவர்கள் வந்த கடமையை செய்துகொண்டிருந்தனர். இருக்கும்போதே கூப்பிட்ட கூப்பிடுக்கு திரும்பாதவர்கள் இவள் இல்லாமல் இருந்து அழைத்தபோதும்கூட யாரும் திரும்பவேயில்லை.

அந்த ஊரே பொங்கலன்று ஆச்சியை வழியனுப்பிவைக்க அவள் வீட்டில் காத்துக் கிடந்தது.

absolute_india_img_001
Photo Courtesy: Dominic

மாயகிருஷ்ணன்

தார் ரோட்டில் மாட்டு வண்டியின் இரும்புப் பட்டைகள் உரசி வரும் சத்தத்துடனும், காளை மாடுகளின் கழுத்தில் இருக்கும் மணிகளின் சத்தத்துடனும், சிகப்பு குஞ்சத்துடன் இருந்த தன் சாட்டையை அடித்துக்கொண்டே வண்டியை விரட்டிக்கொண்டுவந்தான் வெங்கி. அவன் பின்னால் குந்தியிருந்த பசுபதியும் அவனை விரட்டு விரட்டு என்று உற்சாகப்படுத்தினான். அவனது கையில் இருந்த சண்டைச் சேவல்கள் குரு குருவென பார்த்தபடியே பயணித்து வந்தன. பக்கத்து எந்த ஊரில் சேவல் சண்டை நடந்தாலும் வெங்கியின் சேவல் இல்லாமல் நடந்ததில்லை. அவனுடைய மொபட் பைக் பஞ்சர் ஆகிப்போனதால் தொழுவத்தில் தூங்கிக்கொண்டிருந்த மாடுகளை தார் குச்சியில் குத்தி எழுப்பிவிட்டு வண்டிக்கட்டி கொண்டு போய்க்கொண்டிருந்தான்.

அவன் அப்பா மாயகிருஷ்ணன் எவ்வளவு சொல்லியும் கல்லூரிக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு சென்றுகொண்டிருந்தவனிடம் தன் தந்தையின் எண்ணம் அவனுக்கு புரிந்ததாக தெரியவில்லை. அவனுக்கு அது புரியவும் தேவையில்லை. அவனுடைய எண்ணம், செயல், நினைவு எல்லாமே சேவல் சண்டையும், மாட்டு விற்பனையும்தான். கல்லூரி தொகை கட்டவோ, மாட்டு மற்றும் சேவல் விற்பனையில் சேதமானாலோ பணத்திற்கு மட்டும் தந்தையை நாடுவான். ஒரே பிள்ளையென்பதால் சலித்துக்கொண்டே அவனுக்கு பணத்தையும் தந்துவிடுவார். மாநில அரசு நிதி உதவியுடன் இயங்கும் பஞ்சுமில்லில் தான் மாயகிருஷ்ணன் வேலை பார்க்கிறார்.

வெங்கியின் வண்டி வந்து சேரவும் ஆட்டம் ஆரம்பிக்கப்போவதாக எழுந்த விசில் சத்தம் வந்ததும் சரியாக இருந்தது. லுங்கியை மடித்துக்கட்டிக்கொண்டு ஒரே குதியில் இறங்கிய வெங்கி பசுபதியிடம், “என்ன பராக்கு பாக்குற…? செல்லம்மாவ கொடு” என தன்னுடைய செல்ல சேவலை வாங்கிக்கொண்டு மைதானத்திற்கு விரைந்தான். வழக்கம்போல் வெற்றியுடன் வீடு திரும்பியவன் தன் தந்தை மில்லுக்கு ஷிப்ட் சென்றிருக்கிறார் என்பதை தெரிந்துகொண்டு ஆரவாரத்துடன் வண்டியைக்கட்டி வந்திருந்தான். கோதைக்கு அவன் செய்வது எதுவும் பிடிக்காது. எதாவது சொல்லிக்கொண்டுதான் இருப்பாள். இதுவரை வாங்கிய கோப்பைகளின் வரிசையில் இன்று வென்றதையும் அடுக்கி வைத்துவிட்டு, கோழி சண்டையில என்னைய அடிச்சிக்கிறதுக்கு இன்னொருத்தன் பொறந்து வரணும்டா என்று நடு வீட்டில் நின்று கத்தினான்…. .

“வேளா வேலைக்கு சோறு போட்டு, காலேஜ்க்கு பீசு கட்டி, உடம்புக்கு நோவு வரமா பாத்துக்கிட்டு வக்கனையா வாழ்ந்தா இப்படித்தான்”.வாசலில் அவன் கிழவியின் ஏசுதல் சத்தம் கேட்டதை கண்டுக்கொள்ளாமல், அடுப்பாங்கறைக்கு சென்று, அவனே சோறு போட்டு, மூலையில் காலியாக நிறுத்திவைக்கப்பட்ட காஸ் சிலிண்டரில் குத்துகாலிட்டு சாப்பிட ஆரம்பித்தான். பசுபதி வாசலில் இருந்து வரும் சத்தம் கேட்டு, “என்னடா ப்ரைஸ் மணிக்கு இன்னொரு கூண்டு வாங்கச்சொன்னே என்னாச்சு”.

“கூண்டு வாங்கியாச்சு… இன்னும் மிச்சம் பணம் இருக்கு என்ன பண்ணலாம்” ? என்றான் பசுபதி.

“அப்படியே வச்சிரு… மீதிக் காசுக்கு புறா வாங்கிடாலாம். ரேசுக்கு இல்லடா… வளர்த்து விட்டு வேணும்போது சாப்பிடத்தான், பஞ்சு மாதிரி இருக்கும்டா கறி” என்றான்.

பசுபதி விடைபெற்று சென்றவுடன் நன்றாக ஒரு தூக்கத்தை போட்டான் வெங்கி. மறுநாள் கல்லூரிக்கு சென்றவன் வகுப்பினுள் அனுமதிக்கப்படவில்லை. கேட்டதற்கு எங்கப்பா, பஞ்சுமில்ல பெரிய ஆபிசராக இருக்கார்..உடனே அவரால் வர முடியாது. அவர் வந்ததும் கூட்டிவருகிறேன் என்று சொல்லி உள்ளே வர அனுமதிவாங்கிவிட்டான். இது அவன் கேட்கும் எத்தனாவது அனுமதி என்பதில் கணக்கில்லை. மாயகிருஷ்ணன் வருவதும் இவனுக்கு தெரியாது வகுப்பாசிரியரிடம் என்ன பேசினார் என்பதும் தெரியாது.

ஆசிரியர் உள்ளே நுழைந்ததும் தான் எதற்கும் சளைக்காதவன் என்பது போன்ற பாணியில் ஓர் அலட்சியத்துடன் உட்காந்திருந்தான். இது புதிதல்ல என்பது ஆசிரியருக்கும் தெரியும். எப்போதும் போல வகுப்புகள் முடிந்தன. ஆசிரியரின் எண்ணமோ, சில ஜன்மங்களை திருத்தவே முடியாது தொண்டைத்தண்ணி வற்ற எதற்கு அறிவுரை சொல்லவேண்டும் என்று விட்டுவிட்டார். கல்லூரி முடிந்ததும் அவன் வகுப்பறை வாசலில் வந்து நின்றான் அவன் கூட்டாளி பசுபதி. வழக்கம்போல் இருவரும் வாய்க்கல் பக்கம் சென்றுவிட்டு ஒரு குளியலை போட்டுவிட்டு வீடு திரும்பினர்.

“பாத்தியாடா பசு… நாம என்னத்ததான் ஆட்டம் போட்டாலும் எங்க அப்பா பஞ்சுமில்ல பெரிய வேலைல இருக்கறதால என்னால சுதந்திரமா இருக்க முடியுது”.

“சரிதாண்டா.. ஆனா. பரீட்சை நேரத்துல பெரிய வேதனையா இருக்குடா. எல்லாரும் நல்லா படிக்கிறாணுங்க. நமக்கு மட்டும் புத்தியெல்லாம் ரெஸ்லயும், கோழி சண்டையிலுமாதான் இருக்கு”

“என்னத்த படிச்சி வேலைக்கு போயி. இதுல நல்ல வருமானம்ல… சண்ட கோழி வளர்க்குறதே ஒரு கலைடா. சண்டைக்கு பழக விட்டு எப்பவும் அதோட வீரியம் குறையாம பாத்துக்க நம்ம வாத்திக்கு தெரியுமா ? சும்மா எடுத்த பாடத்தையே 20 வருசமா எடுத்துக்கிட்டு திரியிறாறு” என்றான் வெங்கி.

“டிகிரி வாங்கணும்ன்னா அந்த பாடத்தை படிச்சாதானேடா முடியும். எப்படியாவது டியூசன் வச்சி நாம படிச்சிடலாம். அந்த நம்பிக்கை இருக்குடா எனக்கு” என்றான் பசுபதி.

“அத விட்டுத்தள்ளு. நேத்து திருமானூர் பஸ் பின்னாடி சேவ சண்டைன்னு போஸ்டர் ஒட்டியிருந்தான் பாத்தியா? அதுக்கு முதல்ல சேவல தேத்தனும், சும்மா வெட்டியா பேசிக்கிட்டு”

“பாத்தேன்டா.. ஆனா டெபாசிட்டு ஆயிரம் ரூவா கட்டணுமாமே…”

“அத என்கிட்ட விடுடா நா பாத்துக்கறேன். என்னோட மொபட் பைக் சரியாயிடுச்சு நாளைக்கே காசு ரெடி பண்ணிடுறேன். நீ வந்து சேறு” என்றான் வெங்கி.

மறுநாள் காளை கல்லூரி கிளம்பும்போது ஷிப்ட் முடிந்த அசதியில் மாயகிருஷ்ணன் தூங்கிக்கொண்டிருந்தார். அப்பாவை எழுப்பினால்தான் டெபாசிட் பணம் கிடைக்கும் சத்தம் போட்டு எழுப்பினான்.

“அப்பா, அரியர்ஸ் பரீட்சைக்கும் டியூஷன் பீசுக்கும் ஆயிரம் ரூபா வேணும்பா இன்னிக்கே கட்டணுமாம்” என்றான் வெங்கி.

தலைமாட்டில்  லோட்டாவில் இருந்த தண்ணீரை கொப்பளித்துவிட்டு தூக்கத்தில் வீங்கிய கண்களுடன் அவனைப் பார்த்தார் மாயகிருஷ்ணன். அவன் எதற்கு இப்படி அரியர்ஸ் என்று பீடிகை போடுகின்றான் என்பது அவருக்கு புரியாமலில்லை. கொடுக்கவில்லையென்றால் அவருக்கு மனது கேட்காது. வெங்கியின் சந்தோஷம்தான் தன் சந்தோஷம் என்றிருப்பவருக்கு பொய் சொல்கிறான் என்று தெரிந்துமே அவனுக்கு பணத்தைக் கொடுக்க முடிவெடுத்தார், எப்போதும்போல.

“போ.. உள்ள ஜன்னல்ல பெல்ட்டு இருக்கு எடுத்துட்டுவா” என்றார்.

போட்ட திட்டத்தில் சுலபமான வெற்றியடைந்தான் வெங்கி. ஓடிப்போய் பெல்ட்டை எடுத்து வந்தான். உள்ளிருந்த இருபது நூறுரூபாய் நோட்டில் பத்தை எண்ணி கொடுத்தார். அவன் அப்பா பணத்தை எண்ணும்போது அவன்மனதில் அப்படி ஒரு பெருமை. அப்ப எப்படிப்பட்ட வேலையில் உள்ளார், கேட்டவுடன் கத்தையாக அள்ளிக்கொடுக்கிறாரே. ஆனால், நாம் இவரிடம் இப்படி பொய் சொல்லி பணத்தை வாங்குகிறோமே என்ற ஒரு லேசான தயக்கம் வந்தாலும், அந்த சமயம் கூண்டில் இருந்த சண்டைச் சேவல் கொக்கரக்கோ…. என்று அலறியதில் அந்த எண்ணமும் காற்றோடு போனது.

திருமானுர் சேவல் சண்டையிலும் முத்திரையைப் பதித்தது வெங்கி பசுபதியின் கூட்டணி.

அந்த ஆண்டு இறுதிப் பரீட்சையில் வெங்கி அனைத்து பாடங்களிலும் தோல்வியைத் தழுவினான். பசுபதி பார்டர் மார்க் வாங்கி தப்பித்துக்கொண்டான்.  வெங்கியால் தன் அப்பாவின் முகம் பார்க்க முடியவில்லை. கோதையம்மாள் எப்போதும் போல் கரித்துக்கொண்டிருந்தாள்.  முதன் முதலில் வெங்கிக்கு உருத்தியது ஆனாலும் அது கானல் நீர் போலத்தான் என்பது வீட்டில் உள்ளோருக்கு தெரியும். மேஜையில் அடுக்கி வைத்திருந்த கோப்பைகள் அவனைப் பார்த்து பல்லிளித்தன.  விரல்களைப் பிசைந்துக்கொண்டு உட்காந்திருந்தான். நாள் முழுவதையும் கடத்திவிட்டு அப்படியே தூங்கிப்போனான்.

மறுநாள் காலை, ஷிப்ட் முடிந்து நன்றாக தூங்கிக்கொண்டிருந்த மாயகிருஷ்ணனைப் பார்க்க போனான் வெங்கி. எப்போதும் போல் லோட்டாவை எடுத்து வாய் கொப்பளித்துவிட்டு சர்வ சாதாரணமாக அவன்  கதையை கேட்டார் மாயகிருஷ்ணன். அவரைப்பெறுத்தவரை அவன் சொல்வது கதைதானே. “அப்பா எல்லா பேப்பர்லையும் போயிடுச்சு. ஒரு வருஷமும் போச்சுப்பா” என்றான்.

“பரவாயில்லைப்பா போய் காலேஜ்ல பீஸ் எவ்வளோ கட்டணும் கேட்டுவா. கட்டிடலாம்” என்றார் அவன் அப்பா. தன் அப்பா கோபப்படாமல் இருப்பதையறிந்து கொஞ்சம் நிம்மதி மூச்சு விட்டான். ஆனாலும் அவர் அப்படி இருப்பதே அவனுக்கு மேலும் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது. யோசித்துக்கொண்டே நகரப்போனவனை மாயகிருஷ்ணன் “சற்று நில்” என்றார்.

“என்னப்பா” என்றான்.

“ஒன்னு மட்டும் நெனப்பு வச்சிக்கோ, நானும் உன்னோட வயசை கடந்துதான் வந்திருக்கேன்” என்றார்.  இப்படி சொல்வது எச்சரிக்கையா அல்லது அப்பாவின் பெருந்தன்மையா என்று குழம்பிப்போனான் வெங்கி. ஆனாலும் முதல் முறையாக அந்த அரைவேக்காடு வெங்கிக்கு குற்ற உணர்ச்சி மேலோங்கி இருந்தது.

மறுநாள் தனது மொபட் பைக்கை எடுததுக்கொண்டு பசுபதியுடன் கல்லூரிக்கு சென்றான். பசுபதி மார்க் சீட்டுகளை வாங்கிக்கொண்டிருந்தான். இவனோ, அடுத்த அரியர் பரீட்சைக்கு விண்ணப்பம் எழுதிக்கொண்டிருந்தான். இருவரும் கோழிகளையோ, மாடுகளையோ, புறாக்களையோப் பற்றி முதன் முதலில் பேசாமல் இருந்தனர்.

பசுபதி சொன்னான், வெங்கி எப்படி பாஸ் பண்ணேன்னு தெரியலடா. ஏதோ எழுதினேன் பாசாயிட்டேன் என்றான்.

“இல்லடா நீ அப்பவே சொன்ன அந்த பரீட்சை மேல உள்ள பயம்தான் உன்ன பாஸ் பண்ண வச்சிருக்கு. வந்துடுவேன்டா அடுத்த வருஷம் வந்துடுவேன்” என்றான்.

பசுபதி மேற்கொண்டு படிக்கப்போகிற திட்டத்தை சொன்னான். வெங்கியோ பழைய புத்தகங்களை எடுத்து வைக்கவேண்டும் என்ற திட்டத்தை பற்றி சொன்னான். இப்படியே இருவரும் பைக்கில் பேசிக்கொண்டு வருகையில் வாய்க்கால் பக்கம் சென்றனர்.  அரியர் பரீட்சை விண்ணப்பத்தை சுருட்டி பைக்கின் முன் பகுதியில் வைத்துக்கொண்டு வந்தான் வெங்கி.

இன்னிக்கு மனசே சரியில்லடா… நாம நாளைக்கு பார்ப்போம் என்று சொல்லி அவனை மெயின் ரோடு பக்கம் இறக்கிவிட்டு கல்லூரி மைதானத்திற்கு சென்றான். வெங்கிக்கு தனிமை கொடுத்த சந்தர்ப்பம் கொஞ்சம் அவனை புரிந்துகொள்ள உதவியாகயிருந்தது. கையில் இருந்த விண்ணப்பத்தை விரித்து பார்த்தான், மொத்தக் கட்டணம் என்ற இடத்தில் நான்காயிரத்து ஐநூறு என்று எழுதியிருந்தது. உடனே அப்பாவின் நினைவு வந்தது.

எப்போவாவது காலை ஷிப்ட் இருக்கும்போது தன் அப்பாவை பஞ்சு மில் பக்கம் இறக்கிவிட்டு செல்வதுண்டு. இந்த வாரம் காலை ஷிப்ட் அவருக்கு. தற்போது ஷிப்ட் முடியும் நேரம் என்பதால், பஞ்சுமில்லுக்கே சென்று அப்பாவிடம் பணத்தை பற்றி சொல்லி வீட்டுக்கும் அவரை தனது பைக்கிலேயே கூட்டி வந்திடலாம் என்ற திட்டத்துடன் ஏதோ ஒரு முடிவு எடுத்த சிரத்தையுடன் வண்டியின் கிக்கரை வேகமாக உதைத்தான்.

பஞ்சுமில் வாசலருகே வந்தான். இன்னும் இரண்டு மணிநேரம் இருந்தது சங்கு ஊதுவதற்கு. ஆயிரக்கணக்கானோர் வேலை செய்வதால் உள்ளே யாருக்கும் அவ்வளவு சீக்கிரம் அனுமதி கிடைக்காது. மாயகிருஷ்ணனின் நண்பர்கள் வந்தால் அவர்களிடம் ரிசல்ட்டை பற்றி பேசவேண்டிவருமே என்ற எண்ணத்தடன் நின்றுகொண்டிருந்தான். அப்பா வேறு பெரிய வேலையில் இருக்கிறார் அவருக்கு அவமானமாகிவிடுமோ என்ற எண்ணமும் இருந்தது. உண்மையச் சொல்ல என்ன என்று சமாதானப்படுத்திக்கொண்டான்.  சரக்கு எற்றும் லாரி அந்த சமயம் வெளிய வந்தது, பஞ்சுமில் கேட்டை வாட்ச்மேன் திறந்துவிட்டு லாரி சென்றதும் மூட ஆயத்தமானபோது, அவர் அவனைப் பார்த்துவிட்டு “உள்ளே வாப்பா என்றார். வரும்போதெல்லாம் வாசலோடு போய்டுவே.. இன்னிக்கு வெரசா வந்திருக்கே.. உள்ளே போ. மாயகிருஷ்ணன் மவன்ல நீ … வெயில்ல நிக்கலாமா இப்படி” என்றார் வாட்ச்மேன். தன் அப்பாவின் செல்வாக்கை நினைத்து பூரித்துப்போய் ஒரு தற்பெருமையுடன் காலரைத் தூக்கிக்கொண்டு இதோ வருகிறேன் என்ற அதிகார தோரணையுடன் தனது மொபட் பைக்கை உள்ளே கொண்டுவந்து சர்ர்ர்…… என்று பிரேக் போட்டு நிறுத்தினான்.

“இன்னும் நேரம் இருக்கு தம்பி, அப்பாவ பாக்கணும்னா சீவீங் செக்சனுக்கு போ. இங்க வெயிட் பண்றதுக்கு உள்ள இருக்கலாம்ல” என்றார் அந்த வாட்ச்மேன். அவர் சொல்வதும் சரி என்று அவர் சொன்ன பகுதியை தேடிக்கொண்டு உள்ளே வந்தான். அவனுக்கு விவரம் தெரிந்து அவன் இங்கு அதிகம் வந்ததேயில்லை. வந்தாலும் பார்க்கிங் வரை வந்துவிட்டு அப்பாவை அழைத்துச் சென்றுவிடுவான். இன்றுதான் உள்ளே வரை வர சந்தர்ப்பம் கிடைத்தது அவனுக்கு.

“சீவீங் செக்சன்” என்று கொட்டை எழுத்தில் போர்ட்டு இருந்தது. பஞ்சு பஞ்சாக தூசி பறந்து கொண்டிருந்தது. அதனுள் நுழைந்தவன், அங்கிருந்த ஒருவரிடம் கேட்டான், மாயகிருஷ்ணன் சார் இருக்காரா என்றான். “என்னது மாயகிருஷ்ணன் சாரா” ? என்று கேட்டான் அந்த அதிகாரி.

“ஐயோ பெயர் சொல்லக்கூடாதோ” என்று பல்லைக் கடித்துக்கொண்டான் வெங்கி. “இங்கேயே இரு உங்க சாரை வரச்சொல்றேன்” என்று சொல்லிவிட்டு அவர் உள்ளே சென்றார். தன் அப்பாவை பெயர் சொல்லி கூப்பிட்டதற்கே அவர் இப்படி கோபப்படுகிறாரே அப்பாவிற்கு கீழ் வேலை பார்ப்பவர் போல என்று நினைத்துக்கொண்டான். அவன் அங்கு காத்திருந்த சமயம்,  அந்த பஞ்சு தூசுகளின் உள்ளே இருந்து லொட லொட காக்கி டவுசர் போட்டுக்கொண்டு உடம்பெல்லாம் பஞ்சு அப்பிக்கொண்டு இரண்டு கண்கள் மட்டும் தெரிய வெங்கியை நோக்கி ஒருவர் வந்தார். வந்தவர் அவனிடம் சென்று, “என்னப்பா… அப்பாமேல திடீர் பாசம் இன்னிக்கு மில் உள்ள வரைக்கும் வந்திருக்க” என்றார் அந்த காக்கி டவுசர் மனிதர்.

“அப்பா” என்று அழைத்தவாறே… வெங்கி உறைந்துபோனான்.  தன் அப்பா என்ன வேலை பார்க்கிறார் என்ற அக்கறை கூட இல்லாமல் இத்தனை வருடம் இருந்ததை எண்ணி நினைத்து மனதிற்குள்ளேயே பொருமினான். தான் கேட்கும்போதெல்லாம் மனம் சுளிக்காமல் பணம் தந்ததையெண்ணி மிகவும் நொந்துகொண்டான். அவன் சொல்லி வாங்கிய பணத்திற்கான காரணம் பாதி பொய் தானே !

“சூப்பர்வைசர் வந்து இப்போதான் திட்டிட்டு போறார், வேலை நேரத்துல எதுக்கு வீட்லேந்து ஆளு வந்துருக்குன்னு” என்றார் மாயகிருஷ்ணன்.

“என்ன வேணும். பீசு ஏதாச்சும் கட்டணுமா” என்றார்.

அந்த கேள்வி வெங்கியை மேலும் கஷ்டமடையச்செய்தது. எதையும் அந்த அளவு வெளிக்காட்டிக்கொள்ளாமல், தன் அப்ளிகேசனை நீட்டினான்.

“வீட்டுக்கு வந்து பேசிக்குவோம். இப்போ நீ கிளம்பு நா வர நாழியாகும்” என்றார். உள்ளிருந்து சூப்பர்வைசர் கூப்பிடும் சத்தம் கேட்டது. அந்த பஞ்சு தூசுகளினுள் மாயகிருஷ்ணன் மறுபடியும் ஒன்றுகலந்தார்.

அப்பாவிடம் விடைபெற்ற வெங்கி வெளியே வந்தான்.   இத்தனை வருடங்களாக தான் தன் அப்பாவை ஏமாற்றவில்லை, தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டு இருந்திருக்கின்றோம் என்ற உண்மை அவனை நிலைகொள்ளாமல் செய்தது. அவன் வெளிய வந்து தன் மொபட் பைக்கை ஸ்டார்ட் செய்தான்.

பஞ்சுமில்லின் சங்கு சத்தம் ஊர் எல்லை வரைக் காற்றைக் கிழித்துக்கொண்டு கேட்டது.

4daec036750801-56064f7d58e7d

கடினமான உழைப்பும், போதிய ஊதியம் இல்லாமல் இருந்தும் தனது குழந்தைகளுக்கு   எப்படியாவது நல்ல படிப்பினை கொடுத்தே ஆக வேண்டும் என்று வாழும், அனைத்து தந்தைகளுக்கும் சமர்ப்பணம்.

Men, God and Jute bags*

A man with lot of difficulties in his life met the God. He thought that he was the only one having lot of difficulties in his own life and rest of the people living a smooth and swift life. The conversation between the God and “that man” has started. 

God, “what is your problem” ?

Men, “I have lot of issues, difficulties in my life. I can’t bear any more”.

God, “How much ?”

Men, “lot … lot of issues and difficulties which are always creating hurdles making me to live a unsatisfied life, only for me, why?”

God, “so you mean that only you are suffering with issues and difficulties” ?

Men, “yesssss, no one except me…….”, he replied sarcastically. 

God, “I will plan a session tomorrow. Please bring all your issues or difficulties in a jute bag and meet me after two days in the same place and I order rest of the human beings who thinks the same way like you in this Universe to do the same”

Men, “How can I touch and feel those things. It’s Intangible huh”?

God, “No son. From today you can see your problems through your bare eyes. You can touch them and feel and store them anywhere”.

Men, “Thank God, so that I can throw it away ?

God, “Nay. You can’t. Those are all your Karma effected things. You cant throw it or erase it as well.

Men. “Fine God. I will do”

That men put all his issues and difficulties in a jute bag and carried aback of him. He witnessed a large number of gatherings in the same way carrying their respective bags.

Suddenly God appeared in front of them. He incarnated Himself as a XXXL size in the sky to reach the world audience and started to speak. 

“Good evening folks. Hope you are doing good”

“Idiot” some one told in the gathering but God tolerated that. Forgiven. 

“I made a big wall over there in which there are a number of nails were put up. Go there and hang all your jute bags over there and come and assemble in the same place”.

“Useless super power being” some one told in the gathering but God again tolerated. 

Everyone rushed to the place and placed their jute bags assuming that their Karma or issues of life would end on that day itself. It took few hours for them to assemble. God appeared. 

“Great. Lot of jute bags. I have an announcement for all of you”

Everyone was curious. 

“I am going to switch off this place into dark for some time and in the mean time everyone should take their own jute bag where they kept”.

All thought that this was totally an insane. 

God switched off the area into dark. Everyone rushed and took their jute bags. On the way to the assemble area our hero “that man” was felt the weight of the jute bag was so heavy before. Everyone assembled with their own jute bags.

God appeared and told, “the bag you are holding now is not yours, but of your fellow citizens. You all interchanged your jute bags without your knowledge” ! 

Everyone shouted. They can’t bear the weight of the jute bag and they requested to God to give back their own jute bag which is bearable to carry. 

“That man” appeared before the God as the representative for the whole mass and told, “Our issues and difficulties or Karmas should be dealt by us only not anyone else, I have finally understood. Kindly bless us with our old jute bags and remove the tangibility of our problems and we are ready to face the ground reality in our day to day life .Bless us with lots of confidence and will power”. 

God, “Stay blessed, lets follow your heart and don’t go with the flow; only dead fishes will go with the flow; Warriors in life should not hesitate to face the challenges what life gives you”.

God disappeared. 

*Story inspired from my class teacher Mr.T.Uthirapathy (TU).

man.jpg

கொலு கொலு சுண்டல்…..

நவராத்திரி கொலு கொலு சுண்டல்… நவராத்திரி கொலு கொலு சுண்டல்….
நவராத்திரி கொலு கொலு சுண்டல்… நவராத்திரி கொலு கொலு சுண்டல்….

கொலு கொலு சுண்டல்…கொலு கொலு சுண்டல்….

அப்போதெல்லாம் கொலு வைக்கும் வீட்டில் இப்படி பாடிக்கொடே சுண்டல் சாப்பிட வருவார்கள் சிறுவர்கள். அதுமட்டுமின்றி உறவினர்கள் நண்பர்களை கொலுவிற்கு அழைப்பது பழக்கம். வீட்டில் நல்ல காரியம் நடப்பதற்கு சமமாக இதை பாவித்து செய்வார்கள். 9 மரப் படிக்கட்டுகள் வைத்து ஐந்து பெரிய பெட்டிகள் அடங்கிய பொம்மைகள் வைத்து எங்களது கும்பகோணத்து இல்லத்தில் நவராத்திரியை கொண்டாடுவோம். தற்போது அந்த கொலு பொம்மைகளை கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலுக்கு கொடையாக கொடுத்துவிட்டோம். எங்கள் தெருவிலேயே ஓரளவிற்கு பெரிய மற்றும் அதிக படிக்கட்டுக்கள் கொண்ட கொலு வீடு எங்களுடையதுதான். பொம்மையை பராமரிப்பதற்கே பொறுமை வேண்டும்.
 
இன்று …. கொலுபொம்மைகளை பார்த்து காலை ஸ்பென்சர் பிளாசாவின் உள் அரங்கினுள் கொஞ்ச நேரம் நின்றுவிட்டேன். எல்லாம் நினைவிற்கு வந்தன. மெழுகுவர்த்தி வச்சி படகு விட்டதை, சுண்டல் சாப்பிட்டதை, அட்டப்பெட்டியில பொம்மைய பேப்பர் சுத்தி மேல ஏத்தி வச்சதை, கொலுப் படிக்கு முன்னாடி பூங்கா அமைச்சதை, லைட்டு போட்டதை, பலகை மேல் ஏறி வேஷ்டியை விரிச்சி விரிச்சி மேல உத்தரம் வரைக்கும் ஏறியதை என்று ஆசை தீர ரிவைண்ட் பண்ணி ரிவைண்ட் பண்ணி பார்த்தேன். அது ஒன்றுமட்டுந்தானே இப்போதைக்கு சாத்தியம். கொலு கொலு சுண்டல்… கொலு கொலு சுண்டல்…. என்று மனதினுள் பாடிக்கொண்டே வந்தேன், ஆனால் சுண்டல் கொடுக்கத்தான் யாருமேயில்லை.

பஞ்சுமிட்டாய் வாங்கித்தான்னு கேட்டு அது கெடைக்காத கொழந்த அந்த பஞ்சுமிட்டாயையே அப்படியே ஏமாற்றத்தோட பார்க்கும் ஒரு பார்வை. அதே போல் கொலுவை யாராலும் இனி எனக்கு வாங்கித்தந்துவிட முடியாது.

ஏனென்றால் இது ஆண்டவன் கணக்கு அல்ல. ஆண்டவன் கட்டளை.

img_20160928_094015756_hdrimg_20160928_093856140

 

யார்தான் இந்த சாமர்த்தியசாலிகள் ?

ignore
சாமர்த்தியம் என்பதன் வார்த்தையில் இவ்வளவு வன்மம், அகங்காரம், சுயநலம், பொய், உண்மையின்மை, அகந்தை இருக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. “சாமர்த்தியமா அவன் அந்த வேலையை முடித்துவிட்டான்” என்பதின் பின்னணியில் ஏமாற்றியோ, பொய் சொல்லியோ அல்லது உண்மையை சொல்லாமலோ ஏதோ ஒன்று சாதிக்கப்பட்டிருக்கும். அங்கு ஏமாற்றப்பட்டவன் என்று ஒருவன் கண்டிப்பாக இருப்பான். சாமர்த்தியம் என்ற சொல்லே ஒரு நம்பிக்கைத் துரோகத்திற்கான சொல் என்பது என்னுடைய முழு நம்பிக்கை. இதில் என்னுடைய பெர்செப்ஷனை மாற்றிக்கொள்வது முடியாத விஷயம். இதில் ஏமாற்றப்பட்டவன் இடத்திலிருந்து இதை நான் ஏழுதுகிறேன், ஒரு குற்றவாளியாக.

உதாரணத்திற்கு,

சில மனிதர்கள் இருக்கிறார்கள். தங்களுக்கு இடம், பொருள், சுற்றுச்சூழல் இதையெல்லாம் பழகும் வரை பழகிவிட்டு, தங்களுக்கென்று ஒரு வட்டம் அமைந்ததும் ‘சே டு மை பொட்டக்ஸ்’ என்று சென்று விடுவார்கள். இப்படிப்பட்டவர்களை எப்படியும் வாழ்க்கையில் நாம் சந்தித்து இருப்போம். இப்படி ஒருவனை சமீபத்தில் சந்தித்தேன். கடைசியாக இவனைப்போல் 2011ல் சந்தித்தேன். இவன் 2016. 2011ஆனவன் இப்போது எங்கிருக்கிறான் என்றே எனக்கு தெரியாது. தொலைபேசி எண்ணை அழைத்தால் நம்பர் உபயோகத்தில் இல்லை என்கிறது. ஆனால் இந்த புதியவன் கொஞ்சம் நல்லவன் கொஞ்சம் சீக்கிரமே நகர்ந்துவிட்டான்.

இவர்களைப்போன்றவர்களை பார்க்கும்போது கோபம் தலைக்கு ஏறுகிறது. சில மாதங்களுக்கு முன்பு ஒருவர் கூறினார் அவ்வளவு ஆட்டிடியூட் இருக்கக்கூடாது உங்களுக்கு என்றார். அதை தலையில் ஏற்றி வைத்திருப்பவனுக்குத்தான் இந்த ஆட்டிடியூட் பற்றி சிந்தனைகளும் வரும் இல்லையெனில் தம்மை ஏதாவது சொல்லி புறந்தள்ள இம்மாதிரியான டெர்மினாலஜியை அவர்கள் உபயோகிப்பது வழக்கம். ஒருவனுடைய பாங்கு மாறுகிறது என்றால் அது அவர்களுடைய ஆட்டிடியூட் மாற்றத்தினால்தான் என்பது அவர்களுக்கு புரிந்தும் அந்த கேள்வியை நம்மிடம் கேட்பார்கள். முதலில் கேட்பவன் நல்லவன் அல்லது தவறிழைக்காதவன் ஆகிவிடுகின்றான்.

ஊர் பெயர், வேலை என்ன செய்தேன், எங்கிருந்து வருகிறேன், கல்யாணம் ஆனவனா, குழந்தைகள் உள்ளனவா, முகம் சுளிக்கிறவனா, தலைமேல் உட்கார்ந்தால் அனுமதிப்பவனா….மொத்தத்தில் அவர்களுடைய ஞாயத் தெராசில் நம்மை எடைபொட்ட பின் அவர்களுக்கு இந்த ஆட்டிடியூட் பற்றிய பேச்சு எழுகிறது. அதுவரை பேச்சுத் துணைக்கு மட்டுமே நாம் அவர்களுக்கு பயன்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதே தெரியாமல் இருப்பதுதான் இதில் வேடிக்கை.

எதிரே வரும்போது கூட இக்னோர் செய்துவிட்டு செல்லும் பிராணிகளும் இருகின்றன. நாமும் அவ்வாறுசெய்யும் போது அவர்களுக்கு இந்த ஆட்டிடியூட் பிரச்சினை. வடிவேலு பாணியில், உனக்கு வந்தா ரத்தம எனக்கு வந்தா தக்காளி சட்னியா என்பதுபோலத்தான்.

ஆக. நேர்பட பேசு என்று பள்ளியில் சொல்லிக்கொடுத்ததையும். மனதில் உள்ளவற்றை பேசு என்று கல்லூரியில் சொல்லிக்கொடுத்ததையும் செய்தால் அவர்கள் நம்மிடம் ஆட்டிடியூட் என்ற சாமர்த்தியத்தை காண்பிப்பார்கள்.

இதுவே, அதற்கு நேர்மாறான வேலையில் இறங்கி், வேண்டியவற்றை சாதித்துக்கொண்டு, வேண்டியவர்களை மட்டும் சுற்றி வைத்துக்கொண்டு, தேவை என்கிறபோது இம் மாதிரியான ஆட்களிடம் பேச்சை வைத்துக்கொண்டு வாழ்க்கையை நடத்துபவர்களுக்கு பெயர் சாமர்த்தியசாலிகள். நான் சொல்லவில்லை உலகம் அப்படிச் சொல்கிறது. என்னைக் கடந்து சென்ற அனைத்து சாமர்த்தியசாலிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் தேவைக்காகவும் உதவிக்காகவும் என்றும் எப்போதும் காத்திருக்கும் உங்கள் “நண்பன்”.

வாழ்வில் ஒருமுறையாவது உங்களைபோலவே நீங்கள் சிலரை சந்திப்பீர்கள்.
என் உண்மையான நட்பிற்கு நீங்கள் கொடுக்கும் விலைதான் அது. அந்த விலையை நீங்கள் கொடுத்தே தீரவேண்டும். அதில் இருந்து நீங்கள் தப்பிப்பதற்கான வாய்ப்பே இல்லை.

சூப்பர்வைசரும்…மத்தியான சாப்பாடும்….

இது நான்…
அண்ணே… சாப்பாடு ஆச்சாண்ணே…
 
அவர்
ஆச்சு ஆச்சு அதுதான் வேளாவேலைக்கு ஆகுதுள்ள….
 
இது நான்..
என்ன சாப்பாடு ?
 
அவர்
சம்பா கோதுமை கஞ்சி…
 
இது நான்..
ஓஓ…
 
அவர்
எங்க சாப்புட்டீக…
 
இது நான்…
இங்க தான்.. சரவணபவன்ல…
 
அவர்..
சசீ… அந்தஸ்து சாப்பாட்டுக்காரன் சாப்புடுற இடமா ?
 
இது நான்
என்னன்ன இப்படி சொல்லிப்புட்ட ? தமிழ்நாட்டுக்கே சோறுபோடுற ஊர்லேந்து வாறேன்… சோறு எங்க கிடைச்ச என்ன ?
 
அவர்..
வக்கனையா 40 ரூவா சாப்பாட்ட 130 ரூவாய்க்கு சாப்ட்டீயே… சோறு ஒன்னு ஒன்னும் ஒட்டிக்கிடவே ஒட்டிக்கிடாது அவன் கடையில. உடம்புக்கு அத்தனையும் ஆகாது.
 
இது நான்..
ஆமாம்.. ஒட்டிக்கிடல. பொன்னியா இருக்கும்.
 
அவர்
எல்லா பயலுக்கும் சோத்து ருசி இல்லாம போச்சு. நா திருவண்ணாமலைக்காரன். காரை அரிசி கேள்விப் பட்டிருக்கியா ? சோத்த திண்ணுதுக்கு அப்பறம்… கைய மோந்து பாத்தா ஆப்பிள் வாசனை அடிக்கும். 40 வருசத்துக்கு முன்னாடி இங்க சென்னையில கெடச்சிது. இப்போ திருவண்ணாமலையில தேரடி வீதியில கெடைக்கிது. ஒரு கிலோ வாங்கி பொங்கி திண்ணு பாரு. சோறா போடுறானுவ இங்க … கேட்டா மெட்ரோவாம்.. சிட்டியாம்…. எல்லா கெடைக்கிது வயித்துக்கு நல்ல சோறு இல்ல….
 
இது நான்…
அண்ணே இப்புடி கோவப்பட்டுப்புட்ட ?
 
அவர்..
உங்க ஊரு கைகுத்தல் அரிசி சாப்பிட்டுருக்கியா ? உங்க ஊரு சம்பா அரிசி சாப்பிட்ருக்கியா ? சாப்பிட்டுருக்க மாட்ட… நீ சாப்புடுறது எல்லாமே மைசூர் பொன்னி…. சின்ன வயசுல ஐஆர் இருவது சாப்பிட்டுருப்ப.. அப்போ விலை வாசியும் சம்பாத்தியமும் அவ்வளவுதான்… இப்ப அப்படி இல்ல. சம்பாவையே பிரியாணி அரிசி அளவுக்கு சமச்சி சாப்புட நினைக்கிறானுவ.
 
இது நான்…
சரிதான். நீங்க சொல்றது எல்லாமே சரிதான். என்னச்செய்ய… சம்பாத்தியம் இருக்கற அளவு அரிசி விலை வாங்கணும்ன்னு முடிவு பண்ணிடறான்…
 
அவர்..
நீங்க வாங்குறதுனாலத்தான்டா அவன் விக்கிறான். கேப்ப, கேழ்வரகு இதையெல்லாம் மளிகை கடையில வாங்குன காலம் போய் டயட் சென்டர்ல வச்சி ஆயிரக்கணக்குல விக்கிறான். நீங்களும் அந்தஸ்துக்காக அதையெல்லாம் வாங்கி திண்ணு எல்லா திருட்டுப்பயலுகளையும் பணக்காரன ஆக்கிடறீங்க.
 
இது நான்…
இவ்வளவு பேசிறீயேண்ணே.. யாருனே நீ… எங்க இருக்க…
 
அவர்..
திருவண்ணாமலை வெவசாயி. இப்போ… ஷாப்பிங் மால் சூப்பர்வைசர். போ… போய் அந்த லட்சிய வாழ்க்கைய வாழ்ந்திடு…
இது நான்…
இப்போதாண்ணே நீ நல்ல வார்த்தை பேசியிருக்க… ஆனா.. நீ சொன்னது எல்லாமே உண்மைதான்.
 
அவர்..
போ… அரியலூர் வந்திடுச்சு… போய் ஊர் சேரு. இனிமே பெரிய கடையில.. போய் சாதாரண அரிசிய தங்க விலை கொடுத்து சாப்புடாதீங்க…. வெதச்சவன் பிச்சையெடுக்குறான்… விக்கிறவன் பங்களா கட்டுறான்… இந்த மாச சம்பளம் கூட இன்னும் வரல…. இந்த நாட்டோட நிலை இன்னும் மோசமா போகும். நம்ம எதிர்கால சந்ததிக்கு நாம ஏதுமே பண்ணப்போறதில்ல. நாம நல்லா வாழ்ந்தோம் … சாப்பிட்டோம். அதுங்களுக்கு அது கிடைக்கவே கிடைக்காது. ஆனா… ஊர் முழுக்க பணக்காரனுங்க கூட்டம் மட்டும் இருக்கும்.
 

…….

வெவசாயத்த விட்டு நகரவாழ்க்கையில பொழப்பு நடத்துற ஒவ்வொரு வெவசாயியோட மனசும் இப்படித்தான் தீயா எறிஞ்சிக்கிட்டு இருக்கும் போல.
 

 
 
 
 
 
 
 

கற்றது இங்கிலீஷ்

31556a7c378a33ac9257f029395c01af_large

தமிழ் ஒருவனுக்கு பேரன்பையும்  வீரத்தையும் சொல்லிக்கொடுக்கும் என்று சொல்வார் எங்கள் தமிழ் ஐயா.  சிலம்பாட்டம், குஸ்தி, குத்துச்சண்டை இவற்றையெல்லாம் கற்றுக்கொண்டுதான் வீரத்தை வளர்க்கவேண்டும் என்று இல்லை. ஆனால், தமிழால் இவையெல்லாமே சாத்தியம்.

எத்தனையோ பாடங்களை படித்துவிட்டு மார்க்கும் வாங்கிவிட்டு ஒரு வழியாக வேலைக்கும் வந்துவிடுகின்றோம். ஆங்கிலத்தில் படித்த டெபடைல்ஸ், தி சோல்ஜர் போன்ற செய்யுள்கள் நினைவிற்கு வந்துவிடும் ஆனால் தமிழில் படித்த தாயுமானவர் செய்யுளோ, பாரதியின் பாடலோ, திருவருட்பாவின் வரிகளோ, சிலப்பதிகாரத்தின் காண்டங்களோ ஏன் திருக்குறளில் ஒரு 5 குறள்களோ நமக்கு என்றுமே நினைவிற்கு வருவதில்லை. நாம் பேசும் மொழியையே பாடமாக படிக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தம் அந்த மொழியின் மீதான வெறுப்பை மறைமுகமாக காட்டச்செய்தது. காலனியாதிக்கத்தின் தாக்கமாகக் கூட இருக்கலாம். தினமும் ஒரு திருக்குறள் அதற்கான விளக்கஉரை என்று வீட்டு வாசலில் கரும்பலகைகளில் எழுதி பொதுமக்கள் பார்வைபடும் படி தினமும் வைக்கும் தமிழ் ஐயாக்கள் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

படிக்கவேண்டும். பாஸ் ஆக வேண்டும். அவ்வளவுதான் தமிழ் மீது இருக்கும் தேவை என நான் கருதுகிறேன்.நம்மில் எத்தனைபேர் தமிழ் செய்யுட்பகுதிகளை அர்த்தம் புரிந்து படித்தோம் என்று தெரியவில்லை. புரிந்து படித்தவர்கள் இருப்பார்கள் ஆனால் முதல் மார்க் வாங்கியவன் நம்ம க்ளாஸ் லீடராத்தான் இருப்பான். கோனார் தமிழ் உரை மார்க் வாங்க உதவியதே தவிர பொருள் புரிந்து தமிழை கற்க பயன்படவேயில்லை. மாணவன் என்ற அந்த ஸ்டேடஸை இழக்கப்போகும் தருவாயில் தமிழ் மீது எனக்கு ஆர்வம் வந்தது கல்லூரியின் இரண்டாம் ஆண்டு நான்காவது பருவம். இறுதியாண்டில் தமிழ் இல்லை. எங்கள் வகுப்பிற்கு தமிழ் ஐயாக்கள் வருவதேயில்லை.ஒன்றாம் வகுப்பு முதல் கலைப்படிப்பின் இரண்டாம் ஆண்டு வரை தமிழை நீ படித்தே ஆக வேண்டும் என்று சொல்லும் இந்த கல்வி கட்டமைப்பு, இறுதியாண்டிற்கு பிறகும் முதுகலைபட்டத்திற்கும் தமிழை நீ இனி படிக்கவேண்டாம் என்கிறது. ஒன்று இல்லை என்றதும் அதன் அருமை புரிந்தது. தேட ஆரம்பித்தேன். தமிழ் ஐயாக்களை தேட ஆரம்பித்தேன். அவர்கள் எங்கேயும் கிடைக்கவில்லை. அடர்ந்த காட்டுப்பகுதியில் கட்டப்பட்ட சில கல்லூரிகளிலும், ஆற்று ஓரமாய் இருக்கும் சில கலைக் கல்லூரிகளிலும்தான் தமிழ் வாழ்ந்துகொண்டிருக்கிறது, அதே ஐயாக்கள் நினைத்தால் காலத்தை வீணடிக்காமல் தமிழ் புலவர்களை பி.காம்., பி.ஏ., பொருளாதாரம் போன்ற துறைகளில் இருந்து கூட அவர்கள் உருவாக்கலாம். ஆனால் நமது தொழில்நுட்ப அசுர வளர்ச்சி அதை ஏற்றுக்கொள்ளாது. நாமும் தேதி முடிந்த சரக்குகளாகத்தெரிவோம் என்ற நினைப்பில் தமிழை தள்ளினோம்.

பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் தமிழ் வகுப்பிற்கு மணி அடித்தவுடன் வருகைப் பதிவேட்டில் நம் பெயரை தமிழ் ஆசிரியர் வாசிக்கும்போது உள்ளேன் ஐயா, உள்ளேன் அம்மா என்று சொல்ல வேண்டும் என்ற விதியை மனது தயார்ப்படுத்திக்கொள்ளும்.  ஒரு வேளை மாற்றி யெஸ் சார் அல்லது பிரசண்ட் சார் என்று சொல்லிவிட்டால் அவ்வளவுதான் தமிழ் ஐயாவின் கோபத்திற்கு எல்லையே இருக்காது. டஸ்டரோ சாக் பீஸோ வந்து முகத்தில் விழும்.  அல்லது…. யாரு தொற லண்டன்லேந்து வந்தெறங்கியிருக்கு போல என்ற கேளிக்கையான பதிலும் வரும்.

கல்லூரி தமிழ் ஐயாக்களுக்கும் பள்ளி தமிழ் ஐயாக்களுக்கும்  இடையே நிறைய வித்தியாசம் இருக்கும். பள்ளி அளவில் தமிழ் ஐயாக்களும் அம்மாக்களும் பாசத்தையும் தமிழையும் ஊட்டுவார்கள். கல்லூரி தமிழ் ஐயாக்கள் …  தமிழ் இலக்கியம் பற்றி பாடம் எடுக்கும் நேரம் மிகவும் குறைவே, ஆனால் ரௌத்திரம் பற்றியும், வீரம் பற்றியும், அரசியல் பற்றியும், அக்கால அரசியல் தற்போதைய அரசியல் பற்றியும், தமிழ் இனத்தின் வரலாறு பற்றியும், செய்யுளின் அழகு மற்றும் அழகியல் பற்றியும் பாடம் எடுப்பார்கள். முக்கியமாக அதில் நகைச்சுவை உணர்வு அதிகம் இருக்கும்.  இது வேறு எந்த துறை ஆசிரியர்களிடமும் காண முடியாத ஒன்று. தமிழையும் அழகியலையும் பிரிக்கமுடியாது.ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் நாடகத்தின் மூலம் அழகியலை நிரூபிக்க முடியும், ஆனாலும் அழகியல் என்பது தமிழுக்கே உரியது. அது மற்ற மொழிகளின் அழகியல் வெளிப்பாட்டை தமிழ் மொழியின் மூலம் அளவு காட்டப்படுவது இல்லை. ஏனென்றால் அழகியல் பிறந்ததே தமிழ்மூலமாகத்தான். ஏஸ்தடிக்ஸ் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இந்த வார்த்தைக்கெல்லாம் முன்னோடி நமது அழகியல். அழகியலை ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால், உலகில் எல்லாமே அழகு. அழகின்மை என்று எதுவுமே இல்லை என்பதுதான் அழகியல்.

அகல உழுவதைவிட, ஆழ உழு என்பார் தமிழ் ஐயா. எவ்வளவு அர்த்தம் பொதிந்த அழகான சொலவடை.   வையும் போதும் கூட, அங்கும் இருப்பான் இங்கும் இருப்பான், ஆக்கிய சோத்துக்குப் பங்கும் இருப்பான்- வெங்கப்பயல் என்பார் அழகாக. புத்திமதி கூறுகையில், தவளை தான் வாயல கெடும் என்பார், சொல்பேச்சுக் கேட்காதபோது, வைக்கப்போர் நாய் கதையை சொல்வார்,  நக்கல் நையாண்டிக்கு, நாளைக்கு சாகப்போற கிழவி கூறைமேல ஏறி உட்காந்தாளாம் என்பார் மிக அழகாக. மாணவர்கள் இன்னொருவருடன் சண்டைக்கு போகும்போது, சாரை விறுவிறுத்தா மாட்டுக்காரன்ட்ட போகுமாம் என்பார்.

எங்கள் கல்லூரியில் ஒரு மாணவன் தினமும் தாமதமாகத்தான் வருவான். கேட்டால் வீட்டில் அவ்வளவு வேலை அவ்வளவு கஷ்டம் என்று தன் துயரத்தை சொல்வான். அப்படி ஒருநாள் அவன் தாமதமாக வந்தபோது, தமிழய்யா ஒரு கதை சொன்னார்.வாழ்க்கையில் எப்போதுமே கஷ்டங்களை அனுபவித்தவன் கடவுளிடம் எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டம் என்னால் தாங்க முடியவில்லை என்று கேட்கிறான். அவனைப்போலவே கஷ்டங்களை அனுபவித்தவர்களை, கடவுள், அவர்கள் அவர்கள் கஷ்டங்களை ஒரு மூட்டையில் போட்டு எடுத்துவரச்சொல்கிறார். எல்லாம்  ஓர் இடத்தில் கூடுகின்றனர். எல்லோரும் கடவுளின் சொல்படி தத்தம் கஷ்டங்களை மூட்டையில் போட்டு தோளில் சுமந்துகொண்டு நின்றனர். கடவுள் அனைவரிடமும் சொல்கிறார், இன்னும் சிறிது நேரத்தில் இந்த இடம் இருண்டுவிடும். அவரவர்கள் எடுத்து வந்த கஷ்ட மூட்டைகளை அதோ தெரியும் அறையினுள் வைத்துவிட்டு வரவேண்டும் என்கிறார். எல்லாம் அதன் படி செய்கின்றனர். கடவுள் மறுபடியும் அவர்களிடம் அதே அறையினுள் சென்று அவரவர்கள் மூட்டையை எடுக்கச்சொல்கிறார். அவர்களால் எது தன்னுடைய மூட்டை என்று தெரியாமல் மாற்றி எடுத்து வந்துவிடுகின்றனர். ஆனால், இம்முறை அவர்கள் மாற்றி எடுத்துவந்த மூட்டை தங்கள் சொந்த மூட்டையைவிட பளு அதிகமாக இருந்தது, யாரலும் தூக்க முடியவில்லை. எல்லோரும் கடவுளிடம் மன்றாடி தங்கள் பழைய மூட்டைகளை தருமாறு வேண்டுகின்றனர். கடவுளும் அவ்வாறு செய்கிறார். இப்படி ஒரு கதையை கேட்கும்போது வகுப்பில் இருக்கும் மாணவர்களின் மன நிலை எப்படி இருக்கும். அந்த அளவு ஒரு உத்வேகத்தை இக்கதை தருகிறது.

தமிழ்ப்பாடம் என்ற ஒரு வகுப்பே நீதியை சொல்லித்தரத்தான் நமது கல்வியாளர்கள் அமைத்துள்ளார்கள் என்பது எனது நம்பிக்கை. இவையெல்லாம் வெர்ட்ஸ்வொர்த், ஷேக்ஸ்பியர்களால் சாத்தியமாகாது.

பள்ளியில் தமிழ் அம்மா எப்போதும் கூறுவார், நீ படி அல்லது படிக்காமல் போ. பாஸ் ஆகு இல்ல பெயில் ஆகு. ஆனா, பொய் சொல்லாத. என்னைக்குமே உண்மைய சொல்லிப்பாரு. உண்மைய காப்பாத்த தேவயில்ல, பொய் சொன்னா நாம சாகுற வரைக்கும் அத காப்பாத்திக்கிட்டே வரணும், நீ காப்பாத்த மறந்துட்டேன்னா அது உன்னைய கொன்னுடும். இது போன்ற சில அறிவுரைகள் சிலருக்கு மனதில் பாடம் ஏறியதோ இல்லையோ கடைசி பெஞ்சில் இருக்கும் மாணவன் வரை காதில் ஏறியிருக்கும். என்றாவது ஒருநாள் இந்த வார்த்தைகளே உங்களை காப்பாற்றும். மற்றபடி தேர்வு எழுதி நீங்கள் மதிப்பெண்கள் வாங்குவது எல்லாம் அடுத்த வகுப்பிற்கு செல்ல வேண்டிய பயணச்சீட்டுதானே ஒழிய வெறும் மதிப்பெண்களால் ஒருவனின் ஒழுக்கத்தையும் நேர்மையையும் தீர்மானிக்க முடியாது என்பார். தமிழ் ஐயாக்களுடன் கொண்ட நமது உரையாடல்கள் பெரும்பாலும் நாம் நமது தாய் தந்தையிடம் கொண்டிருக்கும் உரையாடல்களுக்கு ஒத்து இருக்கும். ஆதலால்தான் என்னவோ அவர்களையும் நாம் ஐயா என்றே அழைக்கின்றோம் பெண்களாயின் அம்மா என்று அழைக்கின்றோம்.

சில மாதங்களுக்கு முன்பு தமிழ் பி.ஏ தொலைநிலைக்கல்வியில் படித்தால் என்ன என்று தோன்றியது. கல்லுரியை விட்டு வந்து இத்தனைவருடத்திற்கு பிறகு தமிழ் மீண்டும் படிக்கவேண்டும் என்ற ஆசை வந்ததே அபூர்வம். அதனைத் தொடர்ந்து, பாடத்திட்டங்களை தமிழ்ப் பல்கலைக்கழகம், சுந்தரனார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், மெட்ராஸ் பல்கலைக்கழகம் போன்ற வெப்சைட்டுகளில் பார்த்தேன்.

ஆனால் உள்ளே இருக்கும் நியாயம்தான் எப்போதும் கூடவே இருந்து குழிபறிப்பது. உள்ளிருந்து ஒரு சப்தம் கேட்டது…. “இட்ஸ் பெட்டர் டு லீவ் இட் நவ், டமிழ் பி.ஏ வோண்ட் மேக் எனி சென்ஸ் அண்ட் இட் வில் நாட் சப்போர்ட் யுவர் கரீர் எனிமோர் அண்ட் டஸ் நாட் இயர்ன் எனி இன்கம் அவுட் ஆப் இட், இட்ஸ் அப்சொலிட், ஜஸ்ட் ஸ்பெண்ட் தி மனி அண்ட் டைம் அட்லீஸ்ட் இன்ய புரோடக்ட்டிவ் மேனர்” என்றது.

நினைவில் உள்ள சில சொலவடைகள்….
மகள் வாழ்ற வாழ்வுக்கு மாசம் ஆயிரத்தெட்டு வௌக்கமாராம்.
கழுத கோபம் கத்துனா தீரும்.
மேயுற மாட்ட நக்குற மாடு கெடுக்குற மாதிரி.
வட்டிக்கு வாங்கி அட்டிகை வாங்கினாளாம் அட்டிகையை வித்து வட்டி கட்டினாளாம்.
நக்குற நாய்க்கு செக்குன்னு தெரியுமா சிவலிங்கம்னு தெரியுமா?
வெளஞ்சா வள்ளி திருமணம் வெளையாட்டா அரிச்சந்திரன் நாடகம்.
சீமான் வீட்டு நாய் சிம்மாசனம் ஏறுதுன்னு வண்ணான் வீட்டு நாய்  வெள்ளாவியில ஏறிச்சாம்.

நகரவாசியானேனே நாகரிகம் மறந்தேனே

 அன்று பெங்களூரில்

2008இல் பெங்களூருவிற்கு குடிபெயர்ந்த போது பொதுவாக அரசுப் பேருந்துகளில் அலுவலகம் செல்வதுதான் அதிகம். என்னதான் மெட்ரோவில் இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு தஞ்சாவூர்காரன் இருந்துகொண்டேதான் இருந்தான். ஒரு முழு நகரவாசியாக மாற நினைக்கும்போதெல்லாம், அந்த தஞ்சாவூர்க்காரன் என்னை காப்பாற்றி வந்தான். தினமும் நான்கு பேருந்துகள் மாற வேண்டும். புகை, கூட்ட நெரிசல், போக்குவரத்து பிரச்சினை இதனையெல்லாம் தாண்டி அந்த பெரும் சத்தத்திலும் ஒரு நிதானம் சிலரிடம் இருக்கும். எப்போவாவது சீட் கிடைக்கும். அவசரம் இல்லாமல் மெதுவாக நகர்ந்து உட்காருவதற்கு சென்றால், எனக்கு முன் யாராவது முண்டிக்கொண்டு வந்தால் விட்டுவிடுவேன். சீட் தானே.

ஜன்னல் ஓரம் ஒரு சீட் கிடைத்து உட்காரும்போது வாழ்க்கையில் ஒரு பெரும் விஷயத்தை சாதித்து கிடைக்கும் நிம்மதி கிடைத்தாற்போல் இருக்கும். அப்படி சீட் கிடைத்து ஆர அமர்ந்து கவனித்த விஷயங்கள் ஏராளம். உள்ளிருந்தபடியே மோட்டாரிஸ்ட்டுகளை மிகவும் ரசித்துப் பார்ப்பேன்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களில் இரண்டு ரகம் என நினைக்கிறேன். ஒரு ரகம் அவசரமாக பதட்டத்துடன் செல்வது, இன்னொரு ரகம் நிதானத்துடன் பொறுமையாக செல்வது. அவசர ஓட்டிகளும் நிதான ஓட்டிகளும் வந்து சேரும் நேரத்திற்கு பெரிதாக ஒன்றும் வித்தியாசம் இருக்காது. இந்த அவரச ஓட்டிகள் சிக்னலில் அவதிப்படுவதை பார்த்து பல நாட்கள் உள்ளுக்குள் சிரித்ததுண்டு. அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும்ன்னு, எங்கேடா இடுக்கு கிடைக்கும் எப்போடா கார்க்காரன் நகருவான் என்று நினைத்து வண்டியை நகர்த்தும்போது ஒரு ஆட்டோகாரன் நடுவில் புகுந்து அவனது ஆசையை நிராசையாக்கிவிட்டு முன்னேறி நின்றுகொண்டு கரும் புகைச்சலை கொடுப்பான். ஆட்டோகாரனும் ஒரு எகத்தாளமா லுக் விடுவான். அவர்களோட பார்வை யுத்தம் ரசனையாக இருக்கும். இப்படி முண்டி அடித்துக்கொண்டே முன்னேறி ஒரு வழியாக அவர்களுடைய பயணத்தை முடித்துவிடுவார்கள். பேருந்தும் நடையுமாக ஒவ்வொரு நாளும் சென்றுகொண்டிருக்கும் அந்த பெங்களூரு நாட்கள்.

ஒரு முறை இப்படி ஜன்னலோரம் பயணிக்கும்போது ஒரு மோட்டாரிஸ்ட்டை பார்த்தேன். அவர் முண்டி முண்டி பார்த்தார் பிறகு ப்ளாட்பாரத்தில் ஏறிவிட்டார். நான் தான் சரியாக கவனிக்கவில்லை. ப்ளாட்பாரத்தில் பல மோட்டாரிஸ்ட்டுகள்  எப்போதுமே அப்படித்தான் செல்கிறார்கள். நான் பார்த்ததுதான் தாமதம்.  அவ்வளவு கோபம் வந்தது அந்த படித்த முட்டாள்கள் மேல். நடந்துபோவனுக்கு மரியாதையே கிடையாதா இந்த ஊரில். நடைபாதை நடப்பதற்கே என்பதை மறந்து இவர்கள் இப்படி ஏறி வண்டியை ஓட்டுவது அந்த ப்ளாட்பாரத்தின் தளத்தை வலுவிழக்க  செய்துவிடும். மறுபடியும் அரசுக்கு செலவு. நடந்து செல்பவர்கள் பீதியிலேயே தான் செல்லவேண்டியிருக்கும். ஏனென்றால் மோட்டாரிஸ்ட்டுகள் சாலையிலும் செல்வார்கள் ப்ளாட்பாரத்திலும் செல்வார்கள். இது என்னுடைய மனதில் தோன்றிய எண்ணம் அன்று.

இன்று சென்னையில்.
இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு அலுவலகம் சென்றுகொண்டிருந்தேன். என்றுமே ப்ளாட்பாரத்தில் ஓட்டுபவர்களையும் ஓட்டுவதையும் வெறுத்த நான், வெறுப்பது மட்டுமல்ல அவர்களை மனதிற்குள் அப்படி வசை பாடுவேன். படித்த முட்டாள்கள் என்று. ஏன் என்னால் அவர்களை மனதார வைய முடிகிறது ? நான் அந்த விஷயத்தில் சரியாக இருக்கிறேன் என்ற நம்பிக்கை. ஆதலால் எனக்கு அவர்களை ஏச உரிமையும் உண்டு. எப்படிப்பட்ட அவசரமாக இருந்தாலும நான் ப்ளாட்பாரத்தில் ஏறியதில்லை. அலுவலக மீட்டிங், சினிமா, நண்பர்கள் சந்திப்பு என்ற எந்த காரியத்திற்கும் அவசரப்பட்டு முந்திக்கொண்டு சென்றதில்லை.

எப்போதும் போல்தான் அலுவலக நேரத்திற்கு இன்றும் சென்றேன். என்ன நினைத்தேன் என்று தெரியவில்லை. உள்ளுக்குள் இருந்த தஞ்சாவூர்க்காரன் உறங்கிவிட்ட நிலையில்… நானும் வண்டியை ப்ளாட்பாரத்தில் ஏற்றி ஓட்டிவிட்டேன். மற்ற வண்டிகள் நிற்கும்போது நாம் மட்டும் சர்ர்ர்ர்..சர்ர்ர்ர்ன்னு வண்டியை பாய்ச்சி செல்லும்போது ஒரு வித மகிழ்ச்சி ஏற்படத்தான் செய்கிறது. ஆனால், உள்மனது நீயும் இப்படி ஆகிவிட்டாயே என்றது. எனக்கு முன்னே ப்ளாட்பாரத்தில் கிட்டத்தட்ட ஆறு பேர் வாகனங்களை ஓட்டிச் சென்றுகொண்டிருந்தார்கள்.

எதிரே ஒரு பெரியவர் 20 அடி தூரத்தில் நான் ப்ளாட்பாரத்தில் இருந்து இறங்குவதற்குள் ஏறிவிட்டார், அவர் என்னை பார்த்துவிட்டதாக எண்ணி சாதாரணமாக ஓட்டி வந்தேன், அவரை கடக்கும்போதுதான் தெரிந்தது நான் வருவதை அவர் கவனிக்கவேயில்லை என்று. எனக்கு முன்பு ஓட்டிச்சென்றவர்கள் அவர் ஏறும்போதே இறங்கிவிட்டார்கள். ப்ளாட்பார பயணத்தை வெறுத்த நான் இன்று அதில் மேல் ஏறி அவரை கடக்கும்போது அவர் திடீரென பயந்து கோபத்துடன்…. டேய் ப்ளடி ராஸ்கல் என்று கத்திவிட்டார், அவர் என்னுடைய தோள்பட்டையை தட்டியிருக்க வேண்டும் என நினைக்கிறேன். உள்ளுக்குள் இருந்த தஞ்சாவூர்க்காரன் விஷயம் தெரிந்ததும் எழுந்தான், இப்படி சூடு சுரணை இல்லாத மனிதனாக மாறிவிட்டாயே ? நீயெல்லாம் படித்தவனா ? ஏன் இந்த அவசரம் ? நிதானமின்மை ? இப்படியா பறத்திக்கொண்டு செல்வார்கள்? என்றான். என்னிடம் பதில் ஏதும் இல்லை அந்த உண்மையான கேள்விகளுக்கு. அவருக்கு அப்பா வயது இருக்கும் என நினைக்கிறேன். நாம்தான் படித்தவர்களாயிற்றே. அவர் விழுந்தாரா, தடுமாறி நின்றாரா என்று எதையும் சேட்டை செய்யாமல் என் பாட்டுக்கு எனது வாகனத்தை ஓட்டிக்கொண்டு ஒரு நன்கு படித்த பட்டம் வாங்கிய ஒரு பட்டதாரியாக நாட்டின் ஒரு பொறுப்புமிக்க குடிமகனாக எனது எனது இலக்கை நோக்கி சென்றுகொண்டே இருந்தேன்.
 

சாலை முனையில் திரும்பும்போது நின்றுகொண்டிருந்த அரசுப்பேருந்து ஜன்னலோரத்தில் அமர்ந்தபடி ஒரு மத்திம வயது ஆண் என்னை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதை கவனித்தேன். பொறை ஏறிய இருமலுடன் அலுவலகம் வந்து சேர்ந்தேன். தாமதமாக. ஒரு முழு நகரவாசியானேன்.  உள்ளிருந்த தஞ்சாவூர்க்காரனை தேடிக்கொண்டிருக்கிறேன்.
ப்ளாட்பாரத்தில் வாகனம் ஓட்டுபவர்கள் அனைவருக்கும் சமர்ப்பணம்