வாசிப்பு. ஒரு தேசியக் குற்றம் !

பாரன்ஹீட் 451 (Fahrenheit 451) ரே பிராட்பரி ஆங்கிலத்தில் 64 வருடங்களுக்கு முன்பு எழுதிய ஒரு புதினம். இப்போது அது நமது கைகளில் தமிழில். இத்தனை வருடங்களுக்கு பிறகு 2013 ஆம் ஆண்டு இது தமிழில் வெளிவந்திருக்கிறது.

Fahrenheit 451 என்பது புத்கத்தாள் தீப்பற்றி எறியும் வெப்ப நிலை.

“கோடு போட்ட தாள் உனக்கு கொடுக்கப்பட்டால் வேறு திசையில் எழுது” என்று ரமோனின் வார்த்தைகள் முத்தாய்ப்பாய் முதல் பக்கத்தில்.

பிராட்பரி ஒரு முறை சொல்கிறார், மக்களை கண்காணித்துச் சுதந்திரத்தைக் குறைக்கும் அரசைவிட மக்களைக் கவர்ச்சியால் கிறங்கடிக்கும் ஜனரஞ்சகக் கேளிக்கைகளிடம் அதிக பயம் எனக்குண்டு என்கிறார் (தற்போது உலவும் வாட்ஸ்அப் அல்லது பேஸ்புக்கை எடுத்துக்கொள்ளலாம் என நினைக்கின்றேன்). நீங்கள் இந்த செய்தியை படிப்பதும் வாட்ஸஅப் மூலமும் என்னுடைய ப்ளாக்கின் மூலமும் என்பது இன்னொரு அவலம். அடுத்த மாடல் மொபைலைப் பற்றி பேச நேரம் இருக்கும் நமக்கு ஒரு புத்தகத்தை பற்றி பேச நேரமில்லை.

புத்தகத்தை படித்தோமா தூக்கி பரண்மேல் போட்டாமா என்று இருக்கவேண்டியதுதானே ? என நீங்கள் கேட்கலாம். ஆனால், படித்துவிட்டு வெட்டி விமர்சனங்களை செய்வதில் எனக்கு எள்ளவும் நம்பிக்கையில்லை… ஆனால் ஆத்மார்த்தமான விவாதங்களையும் படித்தவற்றை பகிர்ந்துகொள்ளுவதும் தான் அறிவு பசிக்கு நாம் போடும் தீனி என்பதில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவன் நான்.

படித்தால் நமது நாட்டில் தூக்கு. படித்தால் நீ ஆயுள் தண்டனைக் கைதி. படித்தால் உன் புத்தகங்ளோடு சேர்ந்து நீயும் எரிக்கப்படுவாய் என்ற தண்டனைகள் உண்மையில் இருந்தால், இறப்பதற்கு முன்பு ஒரு புத்தகத்தை படித்துவிட்டு இறக்கலாமே அதில் என்ன உள்ளது என்று தேடும் மற்றும் தெரிந்துகொள்ளும் ஆவல் நமக்கு பிறப்பது இயற்கைதானே ? படிப்பின் உன்னதத்தைக் கூறும், அதன் முக்கியத்துவத்தைக் கூறும் ஒரு புத்தகத்தை என் வாழ்நாளில் நான் படித்ததே கிடையாது. ஆதலால்தான் இந்த விளம்பரம் மூலம் என் வார்த்தைகளால் உங்களை வந்தடைந்துள்ளேன்.

ரே பிராட்பரியை விளம்பரப்படுத்துவதால் நான் அவருக்கு பேரனும் இல்லை அவர் எனக்கு தாத்தாவும் இல்லை. புத்தகத்தின் மற்றும் படிப்பின் மகத்துவம் புரிந்த நாங்கள் இருவருமே ஒரே மாதிரியான முட்டாள்கள்தான். படித்த முட்டாள்கள் அல்ல. படிக்கும் முட்டாள்கள்.

சரி மேட்டருக்கு வருவோம்…..

இப்புத்தகம் dystopian literature அடிப்படையைக் கொண்டது. அதாவது, எதிர்காலத்தைப்பற்றிய அவநம்பிக்கை தருவதாக, நடந்துவிடவேண்டாம் என்று அச்சத்தைத் தெரிவிப்பதாக இருக்கும் எழுத்துக்கள் அதற்கு பெயர் மருட்சி இலக்கியம் அல்லது எச்சரிக்கை இலக்கியம்.  புதிய சாதனைகளை வியந்து பாரட்டும் விஞ்ஞான உலகத்தில் சமூகத்தின்  மற்றும் அதன் போக்கின் அவலத்தை முன்னிருத்தி எழுதிய ஆசிரியரின் வார்த்தைகள் உண்மைகளால் நிறைந்தவை.  தமிழ் எழுத்தாளர்கள் தாங்கள் படித்ததாக கூறப்படும் உலக நாவல்கள் பட்டியலில் இப்புத்தகம் இடம்பெறவில்லை.

அவருடைய இந்த பயம் புத்தகம் வெளிவந்து  64 வருடங்கள் கழித்தும் பல்கி பெருகியிருக்கிறது. இப்போது நாம் வலைதளங்களிலும், சமூக ஊடகங்களிலும் ஒரு சொடுக்கில் வேண்டிய படத்தை பார்த்தும், பாட்டைக் கேட்டும் தன்னை, தன்னைச் சுற்றியிருப்பவர்களை மறக்கலாம். வலையில் விளையாடலாம். கூத்தடிக்கலாம். பள்ளிக்கும் கல்லூரிகளுக்கும் சென்று, புத்தகமில்லாத வீடுகளை நாம் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். வாசிப்பது பலருக்கு கடப்பாரையை முழுங்குவது போல. சில நிமிடங்களுக்கு மேல் ஒரு கட்டுரையையோ அல்லது செய்தியையோ செய்தித்தாளிலோ ஏன் வலைதளத்திலோ படிக்கவே பொறுமையிழந்து உள்ளோம். ஆற்றல் இல்லை. நாவலாசிரியர் பயந்தபடி, புத்தகமில்லா சமூகத்தை நோக்கி நாம் முன்னேறிக்கொண்டிருக்கிறோம்.  அவர் எச்சரித்தது உண்மையாகி வருகிறது.  இந்த வெகுஜனக் கலாச்சாரமும் எதிர்கால சமூகம் பற்றிய மருட்சிக்கு ஒரு காரணம். சிந்தனைகளை ஒடுக்கும் அதிகாரமும் அடக்குமுறைகளும் இங்கு தாராளமாக அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இது கலாச்சாரம் மற்றும் சமூகத்தின் அழிவுக்கு அடிக்கல் என்பது நாவல் தரும் எச்சரிக்கை.

இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். ஆதலால்தான் எந்த ஊர் எந்த நாடு என்று எதுவுமே குறிப்பிடப்பெறாமல் நிகழ்வுகள் இந்நாவலில் நடக்கின்றன.

புத்தகங்கள் படிப்பதைத் தடை செய்த ஒரு நாட்டில் புத்தகங்களை எரிக்கும் பணியில் ஈடுபட்ட ஒரு தீயணைப்பாளனுக்கு செய்யும் தொழிலில் மகிழ்ச்சி இருந்தது. இந்தத் தொழில் மீது இருந்த பிடிப்பு வெறுப்பாக மாறித் தொழிலை உதறும் அவனுடைய மனதின் பரிமாணமே கதை.

மோன்டாக், கதையின் நாயகன். ஒரு தீயணைப்பாளன். பியாட்டி அவனுடைய பாஸ்.  ஊரில் படிப்பவன் புத்தகங்களோடு பிடிபடும்போது அபாய மணி ஒலிக்கும். தீயணைப்பு வீரர்கள் வண்டியில் மண்ணன்னெய்  நிரப்பிக்கொண்டு விரைந்து சென்று புத்தகங்களை எரித்துவிட்டு அந்த வாசகனையும் எரித்துவிட்டு வருவது  அவர்களது தொழில் அல்லது கடமை.

வீட்டிலோ அவனது மனைவி டி.வி நிகழ்ச்சிகளால் பாதிக்கப்பட்டவள். ஒரு அடக்குமுறை அரசு மக்களை முதலில் டி.வி மூலமாகத்தான் கெடுக்க ஆரம்பிக்கும். நாடகத்திலேயே அவள் வாழ்க்கை நகர்ந்தது.

இப்படி மோன்டாக்கின் வாழ்க்கை சென்றபோது ஒரு முறை புத்தகங்களில் என்ன இருக்கின்றதை அறிய அவன் பிரயத்தனப்பட்டான். விழைவு… அவன் புத்தகத்தை எரிக்க போகும் இடமெல்லாம் தீவைக்கும்  முன் சில புத்தகங்களை திருடி பியாட்டி அவர்களுக்கு தெரியாமல் வீட்டில் ஒரு சிறிய நூலத்தையே வைத்துவிட்டான். மறைத்து மறைத்து வைத்து படிக்க ஆரம்பித்த அவன் பியாட்டி மூலம் ஒரு முறை எச்சரிக்கை செய்யப்படுகிறான். ஒரு கட்டத்தில் பியாட்டி அவனை கைது செய்ய நேரிடும சமயத்தில் புத்தகத்தை எரிக்க சென்ற இடத்தில் இருவருக்கும் தர்க்கம் ஏற்பட்டு அவரையே தன் தீ பிழம்பினால் எறித்துவிட்டு தன்னிடமிருந்த புத்தகங்களை ஒரு தீயணைப்பு வீரனின் வீட்டில் மறைத்துவைத்துவிட்டு அபாய மணியை அழைத்து விட்டு அங்கிருந்து தப்பிக்கின்றான்.

ராணும் தேட ஆரம்பிக்கின்றது. போர் ஆரம்பிக்கும் நேரம். உள்ளுர் பேராசிரியர் ஒருவரின் உதவியுடன் ஆற்றைக் கடந்து காட்டுக்குள் வசிக்கும் விஞ்ஞானிகள், புத்தக ஆசிரியர்களுடன் சேருகிறான். அவர்களும் அப்படித்தான் புத்தகங்களை வைத்துக்கொள்வதில்லை. படித்துவிட்டு அவர்களே எரித்துவிடுவார்கள். மோன்டாக் அவர்களுக்கு தலைவனாகிறான். அவன் பின் கூட்டம் செல்கிறது. மோன்டாக் இதுவரை படித்து மனப்பாடம் செய்த புத்தகங்களை பற்றி பேசுகிறான். ஊர் ஊராக சென்று புத்தகங்களை பிரசங்கம் செய்ய இயலாது. அவனே ஒரு புத்தகமாக மாறுகிறான். எல்லோரும் புத்தகமாக மாறி தனக்கு நினைவு இருக்கும் வரை மற்றவர்களுக்கு போதிக்க ஊர் ஊராக் கிளம்புகின்றனர்.  தெரிந்தவற்றை நினைவுபடுத்தி அதை அச்சில் கோர்க்க அந்த கூட்டம் முடிவு செய்கிறது. எதிர்காலத்தை நோக்கி அவர்கள் அடியெடுத்து வைத்து புத்தகங்களின் மற்றும் வாசிப்பின் மகத்துவத்தை பரப்புரை செய்ய கிளம்புகிறார்கள். அந்த மாலைப்பொழுதில் மோன்டாக்கிற்கு அந்த ஆற்றின் இரு கரைகளிலும் 12 விதமாக பழங்களை கொடுக்கும் மரங்கள் இருப்பதை அறிகிறான்.  நகரத்தை அடையும்போது நண்பகலுக்காக அவன் சேமித்து வைக்கப்போவதும் அவைகளைத்தான்.

கதையின் சுருக்கம் இவ்வளவுதான்.

புத்தகத்தில் ரசித்த வரிகள்…

•ஒவ்வொருவரிடமும் எவ்வளவு பக்கங்கள்….

• நான்தான் ப்ளோட்டாவின் குடியரசு. நீங்கள் மார்கஸ் ஆரெலியஸ் படிக்கவேண்டுமா ? சிம்மன்ஸ் இருக்கிறானே அவன்தான் அது.

• சாலைகளிலும் இருப்புப்பாதைகளிலும் கைவிடப்பட்டவர்கள் வெளியே பரதேசிகளாகவும்  உள்ளே நூலகங்களாகவும் இருக்கிறார்கள்.

• அவர்களுக்கு தெரிந்தவற்றையெல்லாம் ஒப்பிக்கச் சொல்லி அவற்றை பதிவில் ஏற்றலாம்.

•புத்தகங்களுக்கு போடப்படும் அட்டைகளைவிட நாங்கள் ஒன்றும் உயர்ந்தவர்கள் அல்ல.

•தாத்தா இறந்து இத்தனை வருடங்கள் ஆகிவிட்டாலும் என்னுடைய மண்டையோட்டைத் தூக்கிப் பார்த்தீர்களென்றால், ஆண்டவனே, அவருடைய பெருவிரல் ரேகையின் அச்சுகள்பெரிய வரப்புகளைப்போல என்னுடைய மூளையின் மடிப்புகளில் தென்படும்.

• சாகும் போது எல்லாரும் தங்களுக்கு பின்னால் எதையாவது விட்டுச் செல்ல வேண்டும் என்று என் தாத்தா சொல்வார்.  ஒரு குழந்தை அல்லது ஒரு புத்தகம் அல்லது ஒரு ஓவியம் அல்லது ஒரு ஜோடி செருப்பு அல்லது தான் வளர்த்த ஒரு தோட்டம். ஏதோ ஒன்று உங்கள் கைகளால் தொடப்பட்ட ஒன்று இருந்தால், உங்கள் மரணத்திற்கு பிறகு ஆன்மா போவதற்கென்று ஒரு இடம் இருக்கும்.

•வினோதமான எல்லாக் கிழட்டு ஜந்துக்களையும் சில ஆண்டுகளிலேயே ஒழித்துக் கட்டிவிடமுடியாது.  பள்ளிக் கூடத்தில் செய்ய முயல்வதை ஒருவரின் குடும்பச் சூழ்நிலை இல்லாமல் ஆக்கிவிட முடியும். ஆகவேதான், ஒவ்வொரு ஆண்டும் மழலையர் பள்ளிக்குச் செல்லும் வயதை குறைத்துக்கொண்டே வந்திருக்கிறோம்.

படிப்போம். பகிர்வோம். வளைதளங்களில் அல்ல. நண்பர்களுடனான வாதங்களில்….. 

 

Advertisements

தமிழ் நாட்டின் பெர்னாட் ஷா….

 

 

பெர்னாட் ஷாவை நான் வாசித்தது இல்லை. ஆனால், உலக மேடையில் இலக்கியத்தின் முன்னோடி என்று சொல்லக் கேட்டதால் இப்படிக் குறிப்பிட்டேன்.

இயற்பெயர் விருத்தாச்சலம்.  25 ஏப்ரல் 1906 ஆம் ஆண்டு பிறப்பு. சொந்த ஊர் திருநெல்வேலி. 1931 இல் பி.ஏ பட்டம் பெறுகிறார். நெல்லை இந்துக் கல்லூரியில் படிப்பு.  இவர் எழுதிய ஆண்டுகள் 1934 முதல் 1948 வரை மட்டுமே. பல பத்திரிகைகளில் வேலை பார்த்துள்ளார். திரைப்படத்துறையிலும் கால் பதித்துள்ளார். காச நோய்க்கு ஆளாகி சூன் 30 1948 ஆம் வருடம் மறைந்தார். வாழ்ந்தது வெறும் 42 வருடங்கள். எழுதிய ஆண்டுகள்  14 வருடங்கள்.

இந்த புத்தகத்தை காலச்சுவடு பதிப்பகத்தின் கடையில் 2015 ஆம் ஆண்டு புத்தகத்திருவிழாவில் வாங்கினேன். அப்போதே வீட்டு அலமாரிக்கு போனது. இப்போதுதான் படிக்க முடிந்தது. அப்போது இப்புத்தகத்தை வாங்கும்போது நினைத்தேன் ஒரு சிறுகதை தொகுப்பிற்கு ரூ.550 அவசியமா என்று ?  இன்று படித்து முடித்த பின்பு உணர்கிறேன். அந்த அச்சகத்தார்கள் அவருடைய உண்மையான கையெழுத்துப் படியில் இருந்து இந்த புத்தகத்தை உருவாக்கி அவர் எழுத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்கள். இப்புத்தகத்திற்கு ரூ 5000 கூட கொடுக்கலாம்.

ஏதோ சில வருடங்களாக தமிழ் இலக்கியத்தை வாசிப்பதால் இவருக்கு வக்காளத்து வாங்க எனக்கு திராணி உள்ளது என்று நம்புகிறேன்.இவருடைய சிறுகதைகளை அந்தகாலத்தில் படித்தவர்கள் இந்த காலத்தில் நாம் பார்த்த இண்டர்ஸ்டெல்லார் படத்திற்கு சமம். சத்தியமாக சில கதைகள் புரியவேயில்லை. அவருடைய போக்கை புரிந்துகொள்ள நமக்கு சில வருடங்கள் தேவைப்படும். அல்லது இவருடைய சிறுகதையை மையமாகக்கொண்டு எம்பில் பிஎச்டி படிக்கும் தமிழ் ஆராய்ச்சியாளர்களை கண்டு பேசினால் விளங்கும். சில கதைகள் தான் அப்படி.

இவருடைய சில கதைகள் நம் உயிரை வெளியே எடுத்துப்போட்டு கொன்றுபோடும். சில கதைகள் மனதிற்கு திருப்தி தரும். சில கதைகள் அச்சச்சோ என்று உச்சு கொட்ட வைக்கும். சில கதைகள் பிரம்மிக்க வைக்கும். சில கதைகள் ஜவ்வுமாதிரி போகும்.
பொதுவாக மனிதனின்  சிறுவயது ஆசைகளை பூர்த்தி செய்யும்போதும், நினைத்ததை முடித்துக்காட்டும் போதும், கை நிறைய பணம் சம்பாதிக்கும்போதும், சொந்தக்காரர்கள் முன் வாழ்ந்துகாட்டும்போதும், எதிரிகள் முன் வளர்ந்துகாட்டும்போதும் மனதைத் தாண்டி ஆன்மாவும் சந்தோஷப்படும். அதை உணரவும் முடியும். படிப்பதால் ஆன்மாவால் சந்தோஷப்பட முடியுமா ?  ஆனால் சில கதைகளை படித்து முடித்தவுடன் நமது ஆன்மாவே சந்தோஷப்படும். அப்படிப்பட்ட கதைகள் கொண்ட தொகுப்புதான் இப்புத்தகம்.  எனது ஆன்மா சந்தோஷப்பட்டதை முதன் முதலில் இவருடைய கதையில்தான் உணர்ந்தேன். மிகைப்படுத்தி கூறவில்லை. படித்துப்பாருங்களேன். உங்கள் ஆன்மாவையும் சந்தோஷப்படுத்துங்கள்.
புதுமைப்பித்தன் பேசுகிறார்…..
நீங்கள் இவைகளை (கதைகளை படைப்புகளை) கொள்ளாவிட்டாலும் நான் கவலைப்படவில்லை. வாழையடி வாழையாகப் பிறக்கும் வாசகர்களில் எவனோ ஒருவனுக்கு நான் எழுதிக்கொண்டிருப்பதாகவே மதிக்கிறேன்.
நீங்கள் கண்கூடாகக் காணும் உலகத்தில் மனிதன் கல்லுப் பிள்ளையார் மாதிரி உட்கார்ந்திருப்பதைப் பார்க்கவில்லையா ? மனிதன் கல் மாதிரி இருக்கும்போது கல்தான் சற்று மனிதன் மாதிரி இருந்து பார்க்கட்டுமே ? என் கதாபாத்திரங்களுக்கு இருக்கும் உயிரும் வேகமும் என் ஆத்திரத்தின் அறிகுறி.
கருத்தின் வேகத்தையே பிரதானமாகக் கொண்டு வார்த்தைகளை வெறும் தொடர்பு சாதனமாக மட்டும் கொண்டு தாவித் தாவித் செல்லும் தவளை நடை நானகவே அமைத்தேன். அது நானாக எனக்கு அமைத்துக்கொண்ட பாதை. நான் எந்த காலத்தில் இந்த தவளைப் பாய்ச்சலை பின்பற்றினேனோ அதே நேரத்தில் மேலை நாடுகளில் அதுவே சிறந்த சிகரமாக கருதப்பட்டதை ஒரு நண்பரிடம் பேசும்போது அறிந்துகொண்டேன்.இலக்கிய சிங்காசனத்தில் ஏறி அமர்ந்துகொள்ள எனக்குத்தான் உரிமை உண்டு என்று கட்சி பேச நான் இந்த கருத்தை சொல்லவில்லை. இருந்தாலும் எனது போக்கு உலக இலக்கியத்தின் போக்கோடு சேர்ந்து இருந்தது என்பதைக் எடுத்துக்காட்டவே இதைக் குறிப்பிட்டேன். இனிமேல் படித்துப் பாருங்கள்.
gggg
புதுமைப்பித்தனின் கையெழுத்து பிரதி
unnamed
புதுமைப்பித்தனின் கையெழுத்து பிரதி
IMG_20170216_091108 (1)
புத்தகத்தின் அட்டை
நூல் புதுமைப்பித்தன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு
பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம்
ஆசிரியர் புதுமைப்பித்தன்
ஆண்டு 2000 முதற்பதிப்பு 2014 எட்டாம் பதிப்பு.
பக்கங்கள் 827
விலை ரூ.550/

குற்றப் பரம்பரை

நமக்கு ஒன்று பிடிப்பதற்கு எதாவது  காரணம் இருக்கும், அதுபோல இந்த நாவலை படிப்பதற்கான முதல் காரணத் தூண்டுதல்

“பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவன்” 

என்றநூலின் பின் அட்டையில் வாசித்த வாக்கியம் தான்.

ஒரு நூலாசிரியன் தன்னையும் மற்றும் வேயன்னாவையும் பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவர்கள் என்று நிலைநிறுத்தி எழுதுகிறார் என்றால் கண்டிப்பாக அந்த எழுத்தில் உண்மையும் யதார்த்த நிலையும் கண்டிப்பாக இருக்கும் என்ற ஆசையில் தான் இதை படிக்க எடுத்தேன். நான்கு நாட்களில் படித்து முடித்த  முதல் புத்தகம்.

நேர்மை. வீரம். தீண்டாமை எதிர்ப்பு. களவு.  கொலைகள். இதற்குள்தான் கதை.

ஒரு தனி மனிதனின் தூண்டுதலின் பேரில் ஒரு ஊரே களவு செய்து பிழைப்பு நடத்துகிறது. அந்த தனிமனிதன்தான் அந்த களவின் மூலம் பெறும் நேரடி பயன்களை அடைகின்றான், பதிலுக்கு சில தவசம் நெல்மணிகளையும், தானியங்களையும் கொடுக்கின்றான். இப்போது யோசித்தால் தெரியும் யார் திருடன் என்று. அந்த களவு செய்யும் மக்கள் வசதி வாய்ப்புடன் வாழவில்லை. அவர்களுக்கு பொருளின் மதிப்பும் தெரியவில்லை. கஞ்சிக்காக திருடுகிறார்கள். அவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது.

வேயன்னா. கதையில் எனக்கு மிகவும் பிடித்தவர். எல்லோருக்கும்தான். வேயன்னாவை பற்றி ஆசிரியர் விளக்கும்போது நான் சின்ன வயதில் பார்த்த பாட்டையா நினைவுக்கு வந்தார். அவரை மீசை பாட்டையா என்று அழைப்போம். உயரமான ஆள், தேக்கு மரக்கட்டை தோள், பெரிய அடர்த்தியான மீசை, திடமான உடல், மரக்கட்டையில் செய்த செருப்பில் சத்தியமங்கலத்தில் இருந்து யானை போல கம்பீரமாக வருவார். அவருடைய பேச்சும் அப்படித்தான் சிங்கத்தின் கர்ஜனைப்போல் இருக்கும்.  வேயன்னாவை பிடிக்க பல காரணங்கள் இந்த புத்தகத்தினுள் புதைந்திருக்கிறது. உண்மை. நேர்மை. வீரம். தொழிலுக்கும் மனிதர்களுக்கும் என்ன சம்பந்தம் ? இந்த களவு கூட்டம் நல்லவர்கள் நிறைந்த கூட்டம். 

வேயன்னாவிற்கு குழந்தை மனத்துடன் விளையாடவும் தெரியும். வளரி எறிந்து ஒருவரை சாய்க்கவும் முடியும். சிங்கத்தின் கர்ஜனைபோல் பூமி பிளக்க பேசவும் தெரியும் கண்ணீர் விட்டு அழவும் தெரியும்.

ஆங்கிலேயே காலத்தில் நடக்கும் கதை. தீண்டாமை பற்றியும். கிணற்றில் ஓலைப்பட்டை போட்டு கீழ்சாதிப்பெண் தன் குழந்தைக்காக தாகத்திற்காக தண்ணீர் இறைத்ததற்கு ஆரம்பிக்கின்றது பிரச்சினை. அதிலிருந்து பல காலகட்டங்களில் பல ஆங்கிலேயே சர்ஜென்டுகள் அந்த கூட்டத்தை கருவறுக்க திட்டமிடுகிறது. ஆனால், வேயன்னாவின் கூட்டம் மதயானைக்கூட்டம். அவர்கள் ஊரில் பெண்களும் ஆயுதம் சுழற்றுவார்கள். இறுதியில் ஒரு இள இன்ஸ்பெக்டர் வருகிறான். களவு செய்யக்கூடாது என்று சத்தியம் வாங்குகிறான். சத்தியத்தை மீறாமல் இருக்க…. சிலரின் சூதால், அவர்கள் களவை நிறுத்திய பின்னும் கூட களவுசெய்தவர்கள் வேயன்னா கூட்டம் என்று குற்றம்சாட்டப்பட்டு குண்டடி பட்டு வேயன்ன இறக்கிறார். கடைசிவரை வேயன்னா அந்த இள போலீசுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை கடைபிடித்தாரா ? அவர்கள் களவு மூலம் தனம் அடைந்தவன் என்னவானான் …. போன்ற பல திருப்பங்கள் கொண்டதுதான் கதை.

பிடித்த பல வரிகளில் சில வரிகள் ….  

அந்த வேயன்னாவின் நடையை நீ பார்க்க வேண்டும்… சிங்கம் தோற்றுப்போகும். கழுத்தில் விழும் பூ மாலைக்கு கூட, தலைகுனிய மறுக்கும் மாவீரன்.

இவர்கள் வேறு யாரோடும் இசைந்து வாழ மாட்டார்கள். காரணம், இங்குள்ள மற்றவர்கள் பெரும்பாலோர் சமூக குற்றவாளிகள். சுயநலக்காரர்கள். தீண்டாமையைப் போற்றுபவர்கள். முதுகில் குத்துபவர்கள். சுமூகத்தை சந்தை ஆக்குபவர்கள். இந்தக் குணங்கள் எதுவுமாற்றவர்கள் கொம்பூதிக்காரர்கள்.  நம்பியவர்களுக்கு உயிரைக் கொடுக்கிறார்கள். நம்பிக்கைத் துரோகிகளைக் கொலை செய்கிறார்கள். வேட்டைச் சமூகத்தின் மிச்ச சொச்சங்கள் இவர்கள்.

முன்னுரையிலிருந்து…

என் பேரன்பு எவர் பால்  ? பெருங்கோபம் எவர் பால் ? என்பதை என் எழுத்தைத் தொடர்பவர் அறிவர். தாட்சண்யமின்றி சாட்டை சுழற்றியவன் என்பதே என் எழுத்தின் பலம். பிற இனங்களுக்குள் நடந்தால் கைகலப்பு என்றும், இந்த இரு சாதியினர் மோதினால் இனப்பெயரையும் குறித்து, சாதிக் கலவரம் என்றும் அக்னி வளர்க்கும், தர்மம் கெட்ட சில பத்திரிக்கைகளின் சூது, எவன் கண்ணையாவது உறுத்தியது உண்டா ? சாதிப் பயிர்களுக்கு சாணி, உரம் இடுபவன்தானே, பெரியார் பெயர் சொல்லி தொடர்ந்து கொடியேற்றுகிறான் ? சில சலுகைகளுக்காக மண்டியிடும் சான்றோர், ஆன்றோர்களின் திருக்கு மீசைகளில் ஒரு வண்டி மண் ஒட்டி இருக்கிறதே.
_வேல ராமமூர்த்தி.

 

image
பேரன்பும் பெருங்கோபமும் கொண்ட_ வேல ராமமூர்த்தி, குற்றப்பரம்பரை நூலாசிரியர்.

 

 

 

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

அந்த வீட்டுக்குள் மேளதாளத்துடன் ஒரு கிராமமே சஞ்சரித்து வாழ்ந்துகொண்டிருக்கிறது

இந்த வரிதான் இந்த நாவலின் கடைசி வரி. நாவலின் ஒட்டு மொத்த வீரியத்தையும் எப்படி ஒரு வரியில் எப்படி எழுதுகிறார்கள் என்றுதான் தெரியவில்லை. இவருடையது மட்டுமல்ல, கொற்கை, பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், காட் இஸ் எ கேமர், சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற நாவல்களிலும் இப்படித்தான் உணர்ந்தேன்.

ஜெயகாந்தனின் படைப்பில் இரண்டாவதாக படிக்கும் நூல் இது. 2016ஆம் ஆண்டு ராயப்பேட்டையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் இப் புத்தகத்தையும், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் புத்தகத்தையும் வாங்கினேன். வெளியில் வரும்போது சமஸ் ஐயாவை சந்தித்தேன். அப்போது அவர், என்ன என்ன புத்தகங்கள் வாங்கினீர்கள் என்றார் ? சில புத்தகங்களின் தலைப்பை கூறினேன். இந்தப் புத்தகத்தின் தலைப்பை கூறியவுடன் அவர் உடனே கூறியது. “படிக்கவேண்டிய புத்தகம். எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்களில் இதுவும் ஒன்று” என்றார். இந்த நூலை படித்து முடித்த பின்புதான் தோன்றியது ஐயா சமஸ் போன்றோருக்கு இந்த புத்தகம் ஏன் அதிகம் பிடித்திருக்கிறது என்று. பயணம். மக்கள். உறவு. இந்த மூன்று விஷயங்களில் பின்னிப் பிணைந்துபோய் இருக்கிறது இந்த நூலின் கதை. எல்லாவற்றிற்கும் மேல், மனிதர்களின் நேர்மை குணம் மாறாத  நாவல்.

இந்த உலகத்தில் மனிதன் எங்கு அலைந்தாலும், சம்பாதிக்க எந்த நாடு சென்றாலும், எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும, பரதேசியாக இருந்தாலும் அவனுடைய அன்றைய நாள் வந்து முடியும் இடம். வீடு. அதுதான் பிரதானம். ஒரு வீட்டை அதற்கு சம்பந்தப்படாத ஒருவன் ஆனால் சம்பந்தப்படுத்தப்பட்டவன் எப்படி அதைவந்து அடைகிறான். ஹென்றி, தேவராஜன் முதல் மணியக்காரர் வரை. துரைக்கண்ணு முதல் நடராஜன் வரை. சபாபதி முதல் அந்த பைத்தியக்காரி பெண் வரை, பாண்டு முதல் அக்கம்மா வரை எல்லோருமே நல்லவர்கள். இதில் யாரையும் கெட்டவர்கள் என்று யாரையுமே சித்தரிக்கவில்லை.முக்கியமாக ஹென்றியிடம் நாம் அதிகமான பாஸிடிவ் வைப்ரேஷன்களை உணரலாம்.

நாவலில் எனக்கு பிடித்த வரிகள்:


 • நீயெல்லாம் எதுக்குடா இங்கிலீஷ் படிக்கணும் ? அது உத்தியோகப் படிப்புடா. நீ உங்கப்பன்கிட்டேயே தமிழ் படிச்சுக்கோன்னு சொல்லுவார்.
 • கடவுளுக்கும் மதத்திற்கும் என்ன சம்பந்தம் ?  எல்லாக் கடவுள்களும் ஒன்றுதானே ?
 • இங்கேயெல்லாம் அப்படித்தான் பழக்கம். எவனும் இடுப்பிலே வேட்டி கட்டிக்கமாட்டான். தலைக்குத் தண்ணி ஊத்திக்க மாட்டான். இதுக்கு குளிக்கிறதுன்னு பேர் இல்லே… ஒடம்பு கழுவிக்கிறானுவளாம்.
 • ஹென்றி நிலா வெளிச்சத்தில் எதிர் வீட்டைப் பார்த்தான். அவன் செவிகளில் பப்பாவின் குரல் கேட்டது. மகனே….
 • கடவுளே எனக்கு புதிதாக எதுவும் வேண்டாம். இருப்பது இப்படி இருக்கறதெல்லாம் இப்படியே நீடித்தால் போதும்.
 • தோட்டத்திலே போய்ப் பூவரச மரத்திலே ஒரு கழி ஒடிச்சிக்கிட்டு வாடான்னு சொல்லுவார் அப்பா. நான் போய் நல்ல பெரிய தடிக்கொம்பாய் பாத்து ஒடிச்சுக் கொண்டு வந்து மரியாதையாக அவர் கையில் கொடுப்பேன்.  என்னம்மோ தெரியலீங்க நான் அவ்வளவு பெரிய தடிக்கம்பைக் கொண்டு கொடுத்த உடனே எங்கப்பாவுக்கு இன்னும் கோபம் வரும். இவ்வளவு பெரிசாக் கொம்பு கொண்டுவந்தால் இதாலே நான் அடிக்கமாட்டேன்னு நினைச்சியா? ன்னு சொல்லி அந்தத் தடிக் கழி முறிஞ்சி போற வரைக்கும் அதாலேயே அடிப்பார்.
 • விடியறதுக்கு முன்னாடியே எனக்கு எல்லாம் வெளிச்சமாயிடுச்சு மகனே.
 • பப்பா… பாட்டிலில் சாராயத்தை ஊத்திவிட்டு குடித்துக்கொண்டே தன் மகன் ஹென்றியிடம் கேட்கிறார், உனக்கும் வேண்டுமா என்று ? அவன் வேண்டாம் பப்பா… நீங்கள் சாப்பிடுங்கள் என்று கூறி அடுத்த ரவுண்டிற்கு சாராயத்தை ஊற்றிக்கொடுக்கின்றான்.
 • அந்த எதிரொலிச் சத்தம், பப்பா என்று கேட்பதற்குப் பதிலாக, இவன் பப்பா என்றழைத்ததும், மகனே என்று கேட்கக்கூடாதா என்ற ஏக்கத்துடன் மலைமுகட்டைப் பார்த்தான் தேவராஜன்.
 • சோப்பெங்கப்பா.
 • கலப்பை… உழுவாக் கலப்பை.
 • சைக்கிளில் வேகமாகச் சரிவில் இறங்குகையில் இருபுறமும் தெரிந்த மரங்களும் புதர்களும் சரசரவென மேல் நோக்கி உயர்ந்துகொண்டு போவது போலிருந்தது.
 • அப்படின்னா அவரு உசிர் விட்ட நேரம் நாம்ப பாயசம் சாப்பிட்டுக்கிட்டிருந்தோம் என்று மனம் நொந்த சிரிப்புடன் சொன்னான் துரைக்கண்ணு.
 • இந்தக் காலத்துல கோயில புனருத்தாரணம் பண்றேன்னு சினிமா செட்டு போடறாளே… அதையும் பாக்கறோமே…
 • ஹென்றி அந்த அகல் விளக்கை பார்த்த படியே சொல்கிறான், எவ்வளவு அழகாக இருக்கிறது, உங்களுக்கு வேண்டுமானால் நான் பழமைவாதம் பேசுவது போல் தோன்றும்… நீங்கள் சொல்லுங்கள் அதோ அந்த விளக்கு அழகாயில்லை ? வெளிச்சத்துக்கு அது போதாது ? சரி. உங்களுக்கு ஒருவேளை அது அழகாக இல்லாமலும் இருக்கலாம். நீங்கள் செய்கிற வேலைக்கு அந்த வெளிச்சம் போதாமலும் இருக்கலாம். ஆனால் எனக்கு அது போதும். எனக்கு அதுதான் வேண்டும். இந்த உலகம் பூராவும் யந்திரங்களும், மின்சார வெளிச்சமுமாய்க் கோலாகலப்படட்டும். என் வீட்டில் எனக்கு இந்த வெளிச்சமும் இந்த அமைதியும் நிலவட்டும்.
 • அவன் ஊதி முழக்கிய சத்தத்தைக் கேட்கிறபோது ஏதோ அந்த நாதசுர வாத்தியமே அவன் கையிலிருந்து பிடுங்கிக்கொண்டு ஓடுகிற மாதிரியும், அதை அவன் மடக்கி மடக்கி நிறுத்தி மல்லாடுவது மாதிரியும் இருந்தது.
 முன்னுரையில் இருந்து சில வரிகள்:

 1. மகாபாரதம் பெரிய இதிகாசம் என்று தெரியாத பாமரர்களால்தான் அது எனக்குப் பயிற்றுவிக்கப்பட்டது. நமது வாழ்க்கையில் வடித்த முட்டாள்களும் பாமர ஞானவான்களும் நிறைந்திருக்கிறார்கள். நகரம் வேஷம் போட்டுக்கொண்டு திரிகிறது.

 2. “சரத்சந்திரர்கூட தனது நாவல்களுக்கு முன்னுரை எழுதுவதில்லையென்று சமீபத்தில் ஒரு கட்டுரையில் படித்தேன். 400 பக்கம் எழுதிய நாவலில் விளக்க முடியாத எந்த விஷயத்தை இந்த நாலு பக்க முன்னுரையிலா வாசகர்கள் விளங்கிக்கொள்ளப்போகிறார்கள் என்பாராம் அவர். அவர் சொல்லுவது அவருக்கு சரி. 400 பக்கம் விளங்காத ஒரு விஷயத்தை எழுதுகிற நான் இன்னும் ஏன் நாலு பக்கம் எழுதக் கூடாது ? விளங்குகிறவனுக்கு இந்த நாலு பக்கமே போதும் என்று எனக்கு தோன்றுவதால் ‘, நாவலை எழுதிய அதே சிரத்தையுடன் இந்த முன்னுரையையும் நான் எழுதுகிறேன்.
 3. நதியும் கடலும் மட்டும்தான் முழுமையா என்ன ? தண்ணீரின் ஒவ்வொரு துளியும் முழுமையானதே ஆகும். நாடுகளும் கண்டங்களும்தான் உலகம் என்பதில்லை. ஒவ்வொரு மனிதனும் ஒரு உலகம்தான்.
ஹென்றி. எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொதுமனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின் மூலம் இந்த வாழ்க்கையின் போக்கு குறித்த புரிதலை உணர்த்த முயலும் நாவல் இது. எழுதப்பட்டு ஏறத்தாழ முப்பத்தைந்தாண்டுகளாகிவிட்ட பின்னரும் இன்றைய சூழலுக்கும் பொருந்துவதான வாசிப்பனுபவத்தைத் தருவதன் மூலம் இந்த நாவல் ஒரு கலைப்படைப்பாக நிமிர்ந்து நிற்கிறது. (புத்தகத்தின் அட்டைப்பகுதியிலிருந்து)
நாம் அனைவருக்குள்ளும் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் என்று தினமும் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. நமது சுயம் மாறாமல் இயல்பு மாறாமல் வாழ்வதே ஒரு வித சந்தோஷம்தான். நாமெல்லாமே வேஷதாரிகள்தான். நாம் யாருமே ஹென்றி போல் இல்லை. அவன் சுதந்திரமானவன்.
நூல் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம்
ஆசிரியர் ஜெயகாந்தன்
ஆண்டு 1973 முதற்பதிப்பு 2015 ஐந்தாம் பதிப்பு.
பக்கங்கள் 319
விலை ரூ.290/

oru-manithan-oru-veedu

தாய்

 “இதுவரை, புறத்தூண்டுதலின்றி உள்ளுணர்வு உந்தப் புரட்சிப் போராட்டத்தில் தாமாகவே தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளார்கள். ஆனால் இப்பொழுது தமக்குப் பயன்படும்படி “தாய்” படிக்கலாம்’._ விலாடிமிர் லெனின்.

மக்ஸிம் கார்க்கி 1868 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் தேதி ரஷ்யாவிலுள்ள நீழ்னி நோவ்கிராட் என்றும் இடத்தில் பிறந்தார். சிறுவயது முதலே உழைப்பின் மீது பேரார்வம் கொண்டவர். உலகின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒரவரான மக்ஸிம் கார்க்கியின் மகத்தான படைப்பு “தாய்”.  உலக இலக்கியப் படைப்புகளில் சிறந்தவற்றை நாம் வரிசைப் படுத்துவோமானால், அதில் கார்க்கியின் ‘தாய்’ கட்டாயம் இடம் பெறும்.

பெலகேயா நீலவ்னா, பாவல் விலாசவ் எனும் தாய்-மகனுக்கு இடையேயான அன்பின் அற்புதப் பிணைப்பின் உணர்வுபூர்வ உள்ளடக்கமே இந்நாவல்.  ஒரு தாயின் பாச உணர்வு, தன் மகன் மீதான அளப்பரிய அன்பால், கொள்கையின் மேல் ஏற்பட்ட பிடிப்பால், கம்யூனிஸ சித்தாந்தத்தின் மீது ஒரு ஈடுபாடு உருவாகி, தாமே விதையாக வீழ்வதை தேர்ந்த இலக்கிய நடையுடன் விவரிக்கும் படைப்பே “தாய்”.

பேச்சு, நடை என ஒவ்வொன்றிலும் அடக்குமுறையை நொறுக்கும் நடாஷா. மகனுக்காக முதலில் பரிதாபத்தாலும், பயத்தாலும் உறைந்து, பின் புரட்சியை முன்னெடுக்கும் ’தாய்’ நீலவ்யா பெலகேயா, புரட்சியாளர்களுக்கு உதவும் சோபியா என நாவல் நெடுகிலும் பெண்களின் ஆட்சி.

உலகில் எல்லா மதங்களுக்கும் ஒரு புனித நூல் உண்டு. கம்யூனிசம் ஒரு மதம் என்றே நான் கூறுவேன். பிற்காலத்தில் அது அரசியல் கட்சியாக மாறியிருக்கலாம். ஆனால் கம்யூனிச தத்துவங்களை ஆழ்ந்து படிக்கையில் அது ஒரு வாழ்வு முறை என்பதும் அதன் சிந்தனையில் ஆழ்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும் ஒரு விஷயம். அனைத்தும் அனைவருக்கும் என்ற சித்தாந்தம் பொருந்திய ஒரு மாபெரும் கொள்கையை கொண்ட மதம். இந்த மதம் அனைவரையும் அரவணைக்கும்.

ஆனால் இந்த மதத்தை பிடிக்காதவர்களும் சிலர் உண்டு. ஆம். அவர்கள்தான் முதலாளிகள் என்ற முதலைகள். இந்த மதத்தின் எதிராக உள்ள தி.க உறுப்பினர்கள்தான் இந்த முதலாளிகள். உலகில் என்றுமே மாறாத ஒரு விஷயம் ஒருவன் வேலைகொடுப்பவன் ஒருவன் வேலை செய்பவன். ஆனால், வேலை செய்பவன்தான் என்றுமே கூலி, நேரமேலாண்மை, சங்கம், போனஸ், ஊதிய உயர்வு, முதலாளி சுரண்டல், உழைப்பு திருட்டு என்று பலதரப்பட்ட விஷயங்களை பற்றி பேசுபவனாகவும், அவனும் அவனை சேர்ந்தவர்களும்தான் இதைப்பற்றி உணர்வுப்பூர்வமாக புத்தகங்களும் கட்டுரைகளும் எழுதுவார்கள். இந்த உலகில் முதலாளிகளுக்கென்று ஒரு குரல் ஒளித்ததே கிடையாது. முதலாளிகள்  தொழிலாளர்கள் மூலம் சுரண்டப்படுகிறார்கள், வேலையே பார்க்காமல் சம்பளம் கேட்கிறார்கள் போன்ற விஷயங்கள் என்றுமே எழுந்ததில்லை. ஏன் ? ஏனென்றால் அவை எதுமே என்றுமே நடந்ததில்லை.  நடக்கப்போவதுமில்லை.

ஒரு அடிமட்ட தொழிலாளியாக இருந்து படிப்பறிவே இல்லாமல் கார்க்கி எழுதிய இந்த புத்தகத்தில் இலக்கிய நடையையும் தாண்டி கம்யூனிச கொள்கையை வாசகர்களுக்கே தெரியாமல் ரத்தத்தில் ஏற்றியிருக்கிறார்.

இந்தப் புத்தகத்தை படித்து முடித்த பின் எனக்கு எழுந்த ஒரே ஒரு ஆசை.

ஒரு பெரிய பணக்கார தொழில் அதிபர். பணத்தை ஒரு பொருட்டாக மதிக்காத ஒருவன். எதையும் பணத்தால் வாங்கிவிடலாம் என்ற எண்ணம் கொண்டவன் ஒருவனின் கையில் இந்தப் புத்தகத்தை பார்க்கவேண்டும். இந்த ஆசை ஒரு விபரீத ஆசைதான். ஒரு தொழிலாளியின் கைகளுக்கு சாட்டை எப்படி வந்து சேராதோ அதுபோலத்தான் இதுவும்.

தாயை படியுங்கள். உங்கள் வேலைமீது நீங்கள் கொண்டுள்ள பிடிப்பினையை உணருங்கள். அனைத்திற்கும்மேல் உண்மையை கண்டுகொள்ளுங்கள். நீங்கள் எல்லாம் எதனால் எப்படி கட்டப்பட்டு உள்ளீர்கள் என்பதை உணருங்கள்.  உண்மையை உணரும்போது ஒருவித வேகம் வருவதுபோல இருக்கும், ஆனால் எந்த மாற்றமும் இங்கு வரப்போவதில்லை, எந்த புரட்சியும் வெடிக்கப்போவதில்லை, உங்கள் குரல் தாழ்ந்துபோய் யாரும் உங்கள் குரல்வளையத்தில் நிற்கப்போவதில்லை, ஏனென்றால் இது ரஷ்யா அல்ல. நீங்கள் பாவெலும் இல்லை. நான் நீலவ்னாவும் இல்லை.

பணக்காரன் ஆகும் வரை நாமெல்லாமே கம்யூனிசவாதிகள்தானே ?

நாவலில் பிடித்த வசனங்களில் சில…

“ஒரு பெண் சங்கீதத்தைக் கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும். அதுவும் அவள் துக்கமாயிருக்கும்போது……”

“முதலாளியின் ஒவ்வொரு துளி இரத்தமும், மக்களின் கண்ணீர்ச் சமுத்திரத்தால் கழுவப்பட்டிருக்கிறது”

“நல்லவர்கள் என்றுமே அதிக நாட்கள் தனியாக வாழ்வதில்லை; நல்லவர்களோடு மற்றவர்கள் வந்து எப்போதுமே ஒட்டிக் கொள்வார்கள்”.

“மக்களுக்கு எத்தனையோ விஷயங்கள் தேவையாயிருக்கின்றன. ஆனால் ஒரு தாய்க்குத் தேவையான பொருள் எல்லாம் ஒன்றே ஒன்றுதான். பாசம். “

“எந்த மனிதன் சிரித்துச் சிரித்து விளையாட்டாய்ப் பேசுகிறானோ, அவனது இதயத்தில்தான் வேதனை இருந்துகொண்டே இருக்கிறது.”

 

IMG_0033-500x500_0

நூல்  தாய்
பதிப்பகம் நியூ சென்சுரி புக் அவுஸ்
ஆசிரியர் மாக்ஸிம் கார்க்கி
ஆண்டு 2013
பக்கங்கள் 598
விலை ரூ.400

எங்கே பிராமணன் ?

பூணூல் அணிந்தவர்கள் எல்லாமே பிராமணர்கள் என்று  எண்ணிக்கொண்டிருந்த என் எண்ணத்தைத் தெளிவுபடுத்தியது இந்நூல். இக்காலத்தில் தன்னை பிராமணன் என்று நினைக்கும் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல். இதில் பிராமணன் என்ற வார்த்தைக்கு பதிலாக மனிதம் அல்லது மனிதன் என்று வைத்துப் படித்தால் இந்த காலகட்டத்திற்கு மிகவும் பொருந்தும்.  அவ்வளவு வாதங்களையும், பிரதிவாதங்களையும் ஏற்றபடி கொடுத்துள்ளார் நூலாசிரியர் சோ.

ஒரு தொழிலதிபரின் குடும்பம், ஆசிரியர் ஸ்டைலில் ஒரு பிராமண தொழிலதிபரின் குடும்பம்,  அந்த குடும்பப் பின்னணியை வைத்து எழுதப்பட்ட நாவல். சமுதாயத்தில் தன்னை உயர்த்திக் காட்டிக்கொள்ள வேண்டும் என்று அலையும் வசுமதி, அவளுடைய கணவன் நாதன், அவர்களுக்கு தப்பிப் பிறந்த பிள்ளை அசோக் (கைலாயத்தில் எங்கே பிராமணன் என்ற வாதத்தை தொடர்ந்து ஈசன் வஷிஸ்டரை அசோக் என்ற மானிடப் பிறவியாக அனுப்புகிறார், பூணூல் அணிந்து ப்ரம்மோபசேசம் முடிந்து ஒரு உண்மையான பிராமணனை சந்தித்த பின் அசோக் என்பவன் தான் வஷிஸ்டர் என்பதை உணர்ந்து மேலுலகம் செல்வார் அதனை தொடர்ந்து ஈசனின் தாண்டவம் நடக்கும், அசோக் உண்மையான பிராமணனை சந்தித்தானா, வஷிஸ்டராக மேலுலகம் சென்றானா என்பதுதான் கதை)

அசோக்கை சுற்றி, பாகவதர், நீலகண்டன், அவருடைய மனைவி, அவர்களுடைய மகள் உமா, நாதனின் பணத்திற்கு ஏற்ற அடியாட்களின் கூடிய நட்பு, நமக்கு இன்னும் புரியவேண்டும் என்பதற்காக வெளிநாட்டவர் ஒருவரும் நம்முடன் பயணித்து புரிந்ததை நமக்கு கூறுகிறார்.

அசோக் என்ற கதாபத்திரத்தில் வாத விளையாட்டுகளை நடத்தியது சாட்சாத் நூலின் ஆசிரியர் சோ தான். பிறப்பால் மட்டும் ஒருவன் பிராமணனாக முடியாது என்று அவருடைய எண்ணத்தை பசுமரத்தாணி போல் பதியவைத்துள்ளார். குணம், செயல் போன்றவைதான் ஒரு பிராமணனை பிராமணனாகத் தீர்மானிக்கின்றது, ஒரு பிராமணத் தம்பதியர்களுக்கு பிறந்த குழந்தை பிராமணன் ஆகிவிடமுடியாது என்கிறார். ஒரு பிராமணன் எப்படி இருக்க வேண்டும் என்பதை, யாசிக்கமலேயே உணவு பெறுபவன், அல்லது யாசித்து பெற்ற உணவு உண்பவன், தனக்கு வேண்டாம் என்று வயலில் போடப்பட்ட உணவு தானியங்களை உண்பவன், வைராக்கியம், சத்தியம், அசையாத பக்தி, ஆசையின்மை, பொறாமையின்மை, தீர்க்கமான ஞானம் போன்றவைதான் ஒருவனை பிராமணனாக்குகிறது என்றும், பிராமண குலத்தில் பிறந்தவர்கள் யாரும் இந்த காலத்தில் பிராமணர்கள் அல்ல என்றும், காயத்ரி மந்திரத்தை சொல்வதினால் மட்டுமே ஒருவன் பிராமணனாக ஆகிவிட முடியாது என்றும் எடுத்துக் கூறுகிறார்.

அத்துடன் ஜாதிக்கும் வர்ணத்திற்கும் உள்ள வித்தியாசங்களையும்,  கீதையில் சொல்லப்பட்ட நான்கு வகை மனிதர்கள் என்ற விவாதத்தையும் எடுத்து வைக்கின்றார். நூலைப் படிக்க ஆரம்பித்தபோது எங்கே பிராமணன் ? என்ற நூலின் தலைப்பே கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதை உணரமுடிந்தது. ஜாதியின் பெயரைத் தலைப்பில் கொண்ட ஒரு நூலைப் படிக்கவேண்டுமா என்ற எண்ணமும் இருந்தது.

பிராமணன், ஷத்திரியன், வைசியன், சூத்திரன் போன்ற நான்குமே பிறப்பின் அடிப்படையில் வகுக்கப்ட்டவை அல்ல, குணத்தின் அடிப்படையில் வகுக்கப்பட்டவை என்பதை தெளிவாக கூறுகிறார், இதே கருத்தை அர்த்தமுள்ள இந்து மதத்தில் கவிஞர் கண்ணதாசனும் கூறுவது குறிப்பிடத்தக்கது.  ஒரு வைசியன் பிராணனாக முடியும். ஒரு பிராமணான இருப்பவன் வைசிய குணத்தில் இருந்தாலும் அவனை இவ்வுலகம் பிராமணனாக ஏற்காது. நாம் எல்லோருமே வர்த்தகம் செய்கிறோம், சிலர் பொருட்களை விற்கிறோம், சிலர் திறமையை விற்கிறோம், சிலர் உழைப்பை விற்கிறோம், நாம் எல்லாருமே பணம், அல்லது ஒரு ஆதாயத்திற்காகவே வாழ்க்கை நடத்துபவர்கள் ஆதலால் நாம் எல்லோருமே வைசியர்கள் தான் என்று கூறுகிறார்.

இந்து மதத்தின் ஆரம்பத்தை பற்றி பேசும் விதம் மிக அருமை. இந்து மதத்திற்கு பெயரே கிடையாது, பின்னால் வந்தவர்கள் இந்து சமவெளி மூலமாக உள்ளே வந்ததால் அந்த பெயர் வந்தது என்ற கருத்து உட்பட பல இந்து கோட்பாடுகள் கொண்ட உண்மைகளை ஆசிரியர் மற்ற மதத்தினரோடு ஒப்பிடாமல் கூறுகிறார். வேறு மதமே இல்லாததால் இந்து மதத்திற்க பெயரே இல்லாமல் இருந்தது என்கிறார். அதுதான் நிதர்சன உண்மையும் கூட.

என்னுடைய ஆழ்மனது இன்னமும் எங்கே பிராமணன்? என்ற தலைப்பை ஏற்கவில்லை, அது என்றுமே ஏற்காது. எங்கே மனிதன் ?என்று மனதில் வைத்துதான் இந்நூலைப் படித்தேன். வாருங்கள் முதலில் மனிதர்களாவோம். மனிதர்களை தேடுவோம். மனிதம் நேசிப்போம்.கீதையில் சொன்னபடி எல்லா உயிரும் ஆண்டவனுக்கு ஒன்றுதான். பிறக்கும்போதே சிலருக்கு பிரம்மன் பூணூல் போட்டும், சிலருக்கு போடாமலும் அனுப்புவதில்லை (என்னுடைய இந்த கருத்தையும் ஆசிரியர் கூறியிருக்கிறார் என்பதில் எனக்கு மிக்க ஆனந்தமே)

நல்ல குணமும் நல்ல செயலும்தான் ஒரு மனிதனை மிருகங்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. காயத்ரி மந்திரமோ, வேதமோ, பிரம்மஉபதேசமோ அல்ல. ஆனால், நல்ல குணமும் நல்ல செயலும் அப்படிபட்ட வேதங்கள், புராணங்கள் மூலம் நமக்கு கிடைக்குமானால் அவற்றை படிப்பதில் தவறில்லை, அதற்கு ஒருவன் பிராமண குடும்பத்தில் தான் பிறந்திருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. ஏனென்றால், ஆசிரியரின் கூற்றுப்படி, இங்கு பிராமணர்கள் என்று யாருமே இல்லை. வைசியர்கள் போல நமது ஆசிரியரும் ஒரு பத்திரிகை தொழில் நடத்தி பொழப்பு நடத்துபவர்தானே ? அதை அவரும் ஏற்றுக்கொண்டு இங்கு யாருமே பிராமணர்கள் இல்லை அது ஒரு உன்னத நிலை என்று ஒப்புக்கொண்டு இறுதியில் அவர் ஒரு மனிதராக காட்சியளிக்கிறார்.

மனிதானால் முடியாதது எதுவும் இல்லை. மனிதனால் முடியாதது மனிதனாக இருப்பதுதான். கிடைக்காத பிராமணனை தேடுவதை நிறுத்திவிட்டு மனிதர்களை தேடுவோம் வாருங்கள் !

நாம் எல்லோருமே வர்த்தகம் செய்கிறோம், சிலர் பொருட்களை விற்கிறோம், சிலர் திறமையை விற்கிறோம், சிலர் உழைப்பை விற்கிறோம், இதில் நான் பிராமணன் என்று சொல்லிக்கொள்ள எவனுக்கு உரிமை இருக்கிறது ? 

நூல்  எங்கே பிராமணன்?
பதிப்பகம் அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை
ஆசிரியர் சோ
ஆண்டு 2014
பக்கங்கள் 440
விலை ரூ.200

bram

கொற்கை

முற்றிலும் கிழக்குச் சீமை தமிழ் சாயல் கொண்ட ஒரு நாவல். முதல் 20 பக்கங்களை படிக்க நான் எடுத்துக்கொண்டது சுமார் ஒரு மணி நேரம். போகப்போக இதுவும் என் நாட்டுத் தமிழ்தான் என புரிந்துகொண்டேன். சில வார்த்தைகள் ஏற்கனவே நான் பேசும் நடையில் இருப்பதை உணர்ந்தேன். சரி நாவலுக்கு வருவோம்.

கொற்கை முற்றிலும் காலத்தை தழுவிய ஒரு நாவல். 100 ஆண்டு கால இடைவெளியில் நடந்தேறிய மற்றும் தொலைத்த விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறது. கொற்கை என்பது பாண்டிய இளவரசனின் இருப்பிடமாகும். பாண்டியர்களின் மூன்றாம் தலைநகரமான கொற்கை. கடல் கொண்ட தென்னாட்டில் இருந்து மீண்ட பரதவர்கள் உருவாக்கிய நகரமாகும்.

மீனவ சமுதாயத்தினர், லஸ்கர்கள், தண்டல்கள், மேசைக்காரர்கள், தலைமை பாண்டியபதி போன்றோர் இந்நாவலில் முக்கிய கதாபாத்திரங்கள். லஸ்கர்கள் தோணியில் வேலை செய்யும் மாலுமிகள். தண்டல்கள் தோணியின் தலைவன் அல்லது கேப்டன். மேசைக்காரர்கள் பாரம்பரிய பணக்காரர்கள். பாண்டியபதி காலம் காலமாக பெரிய தலைக்கட்டு. காலம் காலமாக செய்துவந்த பதவியேற்பு விழாவை வழக்கத்திற்கு மாறாக கடைசி பாண்டியபதி அரண்மனையினுள்ளே பதவி ஏற்கிறார். தெய்வகுத்தம் என்று நம்பப்பட்டு அவர்கள் முற்றிலுமாக தன்னுடைய ஆளுமையை இழக்கும்போது, பர்னாந்துமார்கள், கர்டோசாக்கள் என்று அவரவர்கள் ஆளுமைக்குள் கொற்கை ஒவ்வொரு காலகட்டத்திலும் வந்து செல்கிறது. நாமும் அதனுடன் பயணிக்கும்போது ஒவ்வொரு தட்டு மக்களைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. அந்த காலத்து பேச்சு வழக்கு முதல் சந்தன மாரியம்மன்  கோயில் திருவிழா, சர்ச் தேர்த் திருவிழா போன்ற அவர்களுடைய வாழ்வில் பின்னிப்பிணைந்த விழாக்கள் உள்ளிட்ட பல விஷயங்களை கூடவே இருந்து பார்ப்பது போல் ஓர் உணர்வு.

ஒரு வியாபாரம் எப்படி எங்கு ஆரம்பித்து எதில் முடிகிறது என்பது தொடங்கி, அதில் இடம்பெறும் ஒவ்வொருவரையும் பற்றி அவர்களுடைய குடும்பப் பின்னணியில் கதை செல்கிறது. ஆங்கிலேயர்கள் மற்றும் ஆங்கிலேயர்களை அனுசரித்து சம்பாதித்து வாழ்ந்த இந்தியர்களை நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது. கிருஸ்தவம் வளர்ந்த கதை, இந்துக்கள் அதை எதிர்கொண்ட விதம் ஆகியவற்றைப் பற்றியும் ஆராய்கிறது இந்நாவல். ஒவ்வொரு விதத்திலும் கொற்கையின் தோணிகளும் நம் கூடவே மிதந்து வருகின்றன. இலங்கை மற்றும் மலையாள நடை போகும் தண்டல்கள் பற்றியும் நிறைய அரிய செய்திகள்.

நாவலை படிக்கும்போது உப்புக் காத்தும்,  சோழக் காத்தும் அடிப்பதை உணரமுடிகின்றது. அப்போதிலிருந்தே நம்மவர்கள் இலங்கையுடன் கொண்ட நட்பு, வியாபாரம் பற்றி நன்றாக விவாதிக்கின்றது. எனக்கு பிடித்த அத்தியாயம் 1965. மிகவும் பிரமாதம். வலம்புரி சங்கினை வாழ்வில் ஒருவர் எடுத்துவிட்டால் அதை பெரும் சாதனையாக கருதுகிறார்கள் முத்து குளிப்பவர்கள். சங்கு எடுத்து ஏலம் விடும் விதத்தை சலாபம் என்கிறார்கள். 100க்கும் மேற்பட்ட வட்டாரச் சொற்கள்.

இக்கதையில் நாயகன் நாயகி என்று யாரும் இருப்பது போல் தெரியவில்லை. காலம் ஒன்றுதான் நாயகன் நாயகி எல்லாமே. உதாரணத்திற்கு, நாம் நம் பெற்றோர்களிடம் கொண்டுள்ள மரியாதை, நம் பெற்றோர் அவர்கள் பெற்றோர்களுடன் கொண்டிருந்த மரியாதை, குடும்பப் பழக்க வழக்கங்கள், அவற்றைத் தொடர்ந்து நாளைடைவில் நம் பிள்ளைகள் என்றாகும்போது ஏற்படும் பாதிப்பினைப்  பற்றியும் கொற்கை மூலம் பார்க்கமுடிகிறது.

தேயிலை தோட்ட வேலைக்காக 1800களில் வந்த, பஞ்சத்தின் காரணமாக தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட அடிமைகள் மற்றும் கங்காணிகளின் கதை, இலங்கைப்போர், கேரளா ஆட்சி மாற்றம், காங்கிரஸ் ஆட்சி, காமராஜர் ஆட்சி என்று அந்தந்தக் கால வரலாற்றை ஓரிரு வரிகளில் சொல்லிவிடுகிறார் ஆசிரியர். எம்.ஜி,ஆர் திரைப்படம், சிவாஜி கணேசனின் முதல் படம் ரீலிஸ், அபூர்வ ராகங்கள் கே.பி. என்ற பல நிலைகளில் நடந்த நிகழ்வுகளைக் கூறி யதார்த்தத்தை உணர வைக்கும் நடை அழகு, வரலாற்றுடன் சேர்ந்து நம்மைப் பயணப்பட வைக்கின்றது.

ஒரே வரியில் சொல்லவேண்டுமானால், “எங்க காலத்துல எப்படி இருந்தோம் தெரியுமா” என்று பெரியவர்கள் கூற நாம் கேட்பது போன்ற கதைதான் கொற்கை. காலத்தின் மாற்றத்தை கொற்கை எப்படி எதிர்கொண்டது என்பதை அறியமுடிகிறது. மக்களும் தான். ஒரு பெரிய கதையை சிறிய விமர்சனம் மூலமாக சாராம்சமாக சொல்லிவிடுவது சுலபமல்ல.

கொற்கையின் தோணி காலத்தின் கட்டாயத்தால் நீரிலிருந்து நிலத்தைத் தொட்ட கதை. இந்தக் காலத்தின் மாற்றத்தினால் மாறியவை தோணிகளின் வியாபாரம் மட்டும் அல்ல. மனிதர்களும், அவர்களுடைய பூர்வீக வியாபாரமும், தலைமுறைகளும், குடும்ப அமைப்புகளும் தான். கொற்கையை விட்டு அவர்கள் எப்போதோ அகலத்தொடங்கிவிட்டனர்.

காலம் என்ற திரும்பி வரமுடியாத அரியய பொக்கிஷத்துடன் நாம் ஒவ்வொருவரும் பயணித்துக்கொண்டிருக்கிறோம். அந்த வகையில் கொற்கை கடந்த காலத்தின் மூலம் நமக்கு கிடைக்கப்பெற்ற கடலோடிகள் சம்பந்தப்பட்ட வரலாற்றுடன் பின்னிப் பிணையப்பட்ட தமிழிலக்கியத்தின் ஒரு படைப்பு.

லோன்ஜி, பவுல் தண்டல், பிலிப் தண்டல், ஆண்டாமணி, சண்முகவேல், ஆறுமுகம், சலோமினா, லிடியா போன்றவர்கள்  மனதில் நிற்கும் கதாபாத்திரங்கள்.

யோசித்துப் பாருங்கள். நமது தாத்தா பாட்டி காலத்தில், நம்மை யாராவது பார்த்து எப்படி பெயர் கேட்பார்கள் ? அட ! நம்ம வியாபாரி திருவண்ணாமலை மகள் சித்ராவோடா நாத்தனார் மகன் அல்லவா ?  என்றல்லவா ? இப்போது நமக்கு இருக்கும் அறிமுகம், நான்காவது தளத்தில் ப்ளாட் நம்பர் 19ல் வசிக்கும் ஒரு நபர். அவ்வளவுதான். நீங்கள் இன்று எங்கு வேலை பார்க்கிறீர்கள் ? உங்கள் சொந்த ஊர் எது? உங்கள் பூர்வீகம் எது ? உங்கள் முப்பாட்டன் தாத்தா போன்றோர்களின் ஊர் எது? அவர்களின் குடும்ப வியாபாரம் என்ன ? உங்கள் சொந்த பந்தங்கள் எங்கே? உங்களின் அடையாளம் என்ன ? நீங்கள் ஏன் எப்படி எதனால் தள்ளப்பட்டு இந்த ஊரில் உள்ளீர்கள் ? அல்லது வேலை பார்க்கிறீர்கள் ?

காலம் யாரிடமும் ஏற்றத்தாழ்வு பார்ப்பதில்லை. அப்படி காலம் என்ற ஒரு மாபெரும் சக்தியால் நாம் இழந்தது நமது அடையாளத்தை மட்டுமல்ல. சுற்றத்தார்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களையும்கூட. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பதை உணர்ந்து, காலத்தை நமது தோழனாக்கிக்கொண்டு கொற்கையைப் பற்றி படிக்க வாருங்கள்.

கொற்கை தங்களை அன்புடன் வரவேற்கின்றது.

கொற்கை – பாண்டிநாட்டுத் துறைமுகம்.
புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினம் – சோழநாட்டுத் துறைமுகம் (பட்டினப்பாலை)
எயிற்பட்டினம் – ஓய்மானாட்டுத் துறைமுகம் (சிறுபாணாற்றுப்படை)
நீர்ப்பெயற்று – தொண்டைநாட்டுத் துறைமுகம் (பெரும்பாணாற்றுப்படை)

.__79048_zoom

நூல்  கொற்கை
பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம், கன்னியாகுமரி
ஆசிரியர் ஜோ டி குருஸ்
ஆண்டு 2013
பக்கங்கள் 1128
விலை ரூ.975

யாருடைய எலிகள் நாம் ?

நீங்கள் வங்கித் துறையில் வேலை செய்பவர் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் துறையில் நடக்கும் ஊழல், நிஜம் இவற்றை திரையிட்டு காட்ட முடியுமா ? இந்த நூலாசிரியர் தன் கட்டுரைகள்மூலம் தான் இருக்கும் ஊடகத் துறை உள்ளிட்ட பெரும்பாலான துறைகளைப் பற்றி அலசி ஆராய்கிறார். இது ஒன்றே போதும் இந்த புத்தகத்தின் மொத்தத்தையும் பற்றி புரிந்து கொள்ள. உண்மை. இதுதான் இந்த புத்தகத்தின் அஸ்திவாரம். வாசகர்கள் இந்த நிலைப்பாட்டை இந்நூலின் கடைசி கட்டுரை வரை உணரலாம்.

சமஸ் எழுதிய தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக யாருடைய எலிகள் நாம் ? என்ற புத்தகம் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்தது.

உள்ளுர் அரசியல், உலக அரசியல், மொழி, கல்வி, கடல், நிலம், காடு, சுதந்திரம், ஜனநாயகம், பொருளாதாரம், வாழ்க்கைமுறை, சர்வதேசம், ஊடகம் போன்ற தலைப்பின் கீழ் பல கட்டுரைகளை மிக யதார்த்தமான நடையில் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர். கட்டுரைகள், கட்டுரைகள் என்ற நிலையில் இல்லாமல் வாசகர்களை அழைத்துச்சென்று அறுதியிட்டு கூறி வாசகர்களிடமே கேள்வியைக் கேட்டு முடிவை அவர்களிடமே விட்டு விடும் முறை மிகவும் பிரமாதம். சில கட்டுரைகளை படித்து முடித்த பின் நாமும்தான் அதற்கும் உடந்தை என்ற குற்ற உணர்விற்கே தள்ளிவிடுகிறது. சில இடங்களில் உள்ளூற மனதில் இனம் புரியா உணர்வினை ஏற்படுகிறது.

ஈழம் பற்றிய விவாதங்கள், அண்ணா நூலகம் பற்றிய கட்டுரை, சமச்சீர் கல்வியைப் பற்றிய கட்டுரைகள், மீடியாவின் உண்மை முகம்,  காடு வளம் அழித்து முன்னேற்றம் என்ற மாயை பற்றிய செய்திகள், மன்னார்குடி குளங்கள் அழிந்த கதை, கல்விமுறை, மாணவ மாணவியர்களின் உளவியல் ரீதியாக வந்த செய்திகளின் விவாதம் மிகவும் அருமை. மாஸ்கோவின் மல்லிகை ? , யாருடைய எலிகள் நாம் ? சர்வாதிகாரம் X ஏகாதிபத்தியம் போன்ற கட்டுரைகள் உலக அரசியலை வாரி விளாசுகிறது.

சில கட்டுரைகளில் நாம் அதிக உணர்ச்சிவசப்படுகிறோம் என்று அவரே எழுதிவிட்டு, உணர்ச்சிவசப்படக்கூடிய கட்டுரைகளையே தந்திருக்கிறார். நேர்எதிர்மறை எண்ணங்களுடன் சில கட்டுரைகளை எழுதியிருக்கலாம். எதிர் மறை அதிகமாக இருப்பதைப்போல் ஓர் உணர்வு. ஆனாலும் அவை உண்மை, அதை மறுப்பதிற்கில்லை. உண்மை உடனுக்குடன் என்று ஊடக சேனல்கள் வந்தாலும் உண்மையை அலசி ஆராய்ந்து வரலாற்றுடன் ஒப்பிட்டு தற்போதைய நிலையையும் சொல்லும் உத்தி பாராட்டத்தக்கது.

தன் ஒட்டு மொத்த கட்டுரைகளுக்கும் பலம் சேர்க்கும் வகையில் மீடியா பற்றிய கட்டுரையை கடைசி கட்டுரையாக வைத்து புத்தகத்தை வடிவமைத்தது மிக நேர்த்தி. நாம் வாழும் சம காலத்தில் இப்படி ஒரு பத்திரிகையாளன் முடிந்தவரை உண்மையை சூளுரைத்து சொன்னதே நாம் ஜனநாயகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதற்கான ஓர் உதாரணம்.

வங்கியியல், மென்பொருள் ஏற்றுமதி, முதலீடு வங்கியியல் போன்ற தலைப்பிலான கட்டுரைகளை ஆசிரியரின் அடுத்த நூலில் நாம் காண்போம் என நம்புகிறேன்.

கட்டுரை தொகுப்பில் பிடித்தவைகள் பல அவற்றுள் சில,

அரைகுறைகளும் அபத்தக் களஞ்சியங்களும்தான் தமிழ்ச் சமூகத்தில் இன்றைய ஆய்வாளர்கள்.

உண்மைகளைவிடவும் கனவுகள், கற்பனைகள், புனைவுகளுக்கே மரியாதை கொடுத்து பழகிவிட்டோம்.

நூறு ரூபாய் செலவில்லாமல், ஒரு மணிநேரம் காத்திருக்க வைக்காமல் பிள்ளைகளைச் சேர்த்துக்கொள்கின்றன அரசுப் பள்ளிகள். கூடவே, பாடப் புத்தகங்கள், மடிக்கணினி, மிதிவண்டி என நீள்கிறது திட்டம்.  ஆனால் படாத பாடுபட்டு தனியார் பள்ளிகளில் பல லட்சம் கொடுத்து பிள்ளைகளை சேர்த்து துடியாய் துடிக்கிறோம்.

சோவியத் இந்தியர்களால் இந்தியாவைத் தாண்டி அதிகம் நேசிக்கப்பட்ட ஒரு தேசம். அந்த நாட்களில், தமிழகத்தில், ‘மோகமுள்ளும்’, ‘பொன்னியின் செல்வனும்’ இல்லாத வீடுகளில் கூட மக்ஸிம் கார்க்கியின் ”தாய்” இருந்திருக்கும்.

Yaarudaiya_eligal_naam__33380_zoomநூல்  யாருடைய எலிகள் நாம்?
பதிப்பகம் துளி வெளியீடு, சென்னை
ஆசிரியர் சமஸ்
ஆண்டு 2014
பக்கங்கள் 384
விலை ரூ.300

மால்கம் எக்ஸ் – ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் விடிவெள்ளி !

உனக்கென்று ஒரு தனித்தன்மையை உருவாக்கிக்கொள். மற்றவர்களிடம் இருந்து சிறிய அளவிலாவது மாறுபடு. நீ செய்யும் ஒவ்வொரு காரியமும் மற்றவர்களை ஆச்சரியப்பட வைக்கவேண்டும். அதிர்ச்சியில் அவர்களை வாயடைக்கப்படவேண்டும். மற்றவர்கள் செய்யாமல் விட்டது எது என்பதை கண்டறிந்து முதலில் செய்துவிடவேண்டும். மால்கம் இதனை அடிக்கடி தனக்குள் சொல்லிக்கொண்டான். நீ விசேஷமானவன்.

மால்கம் லிட்டில், மால்கம் எக்ஸ் ஆக மாறியபோது, ஒரு புரட்சியாளன் பிறப்பதை வாசகர்கள் உணரலாம். ஏன் எக்ஸ் என்று தேர்ந்தெடுத்தார்கள் என்ற விளக்கமும் நன்றாக சூளுரைக்கப்பட்டுள்ளது. நூலாசிரியர் மருதனின் தமிழுக்கு நன்றிகள்.

யார் இந்த மால்கம் ? அமெரிக்கா வெள்ளையர்களின் இனவெறி ஆதிக்கத்தில் இருந்தபோது கறுப்பின மக்கள் சக்கையாக நசுக்கப்பட்ட காலம் அது. மால்கம் தன்னுடைய தந்தையை கறுப்பின மக்களின் உரிமைக்காக போராடும் போராட்டத்தில் இழக்கிறார். போலீஸ், அரசியல்வாதிகள், மக்கள் என எல்லோரும் கறுப்பின மக்களுக்கு எதிரானவர்களே. மால்கம்மின் தந்தை கொலை செய்யப்படுகிறார். ஆனால், கோப்புகளில் அது தற்கொலை என்று பதிவேறுகிறது. ஆதலால், மால்கம்மின் தாய் அதற்கான காப்புரிமை பணத்தை முழுவதுமாக பெறமுடியாமற் போகிறது. கறுப்பின மக்கள் என்றால் ஆப்பிரிக்கா செல்லவேண்டும் அவர்களுக்கு இங்கு இடமில்லை என்ற எண்ணம் இருந்த கால கட்டம். மார்ட்டின் லூதர் கிங் கறுப்பர்களுக்காக போரிட்ட காலத்தில்தான் மால்கமும் தன்னுடைய போராட்டத்தை தன் இன மக்களுக்காக மேற்கொள்கிறார். அவருடைய அம்மாவிற்கு பைத்தியக்காரி பட்டம் கட்டுகிறது அரசு. அரசே அவளை மனநோயாளி காப்பகத்தில் வைத்து வைத்தியம் செய்கிறது. இல்லாத பைத்தியத்திற்கு வைத்தியம். மால்கம் அப்போது எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான்.

ஒரு குடும்பத்தில் இணைசேராமல் இருக்கவேண்டிய இரண்டு விஷயங்கள் மால்கம் குடும்பத்தில் இணைசேர்ந்து இருந்தன. வறுமையும் குழந்தைகளும். மால்கம் வேலைக்குச் செல்கிறான். ஒரு முறை சூதுவிளையாடுபவர்களால் ஏமாற்றப்படுகிறான். மால்கம் திருட ஆரம்பிக்கிறான். தனது சுயலாபத்திற்காக திருட்டு தவறில்லை என்ற எண்ணத்திற்கு வருகிறான்.

யெல்லா என்பவரின் அறிமுகம் கிடைக்கிறது. பாஸ்டன் செல்கிறான். அங்கு கறுப்பின மக்கள் சுதந்திரமாக இருப்பதை பார்க்கிறான். பிறகு அவனுடைய எண்ணத்தில் மாற்றங்கள் வருகின்றன. உண்மையில் அந்த சுதந்திரம் ஒரு மாயை. லேன்சிங் போன்ற இடங்களில் கறுப்பர்களை வெள்ளையர்களை நடத்தும் விதம் பற்றி கோபப்படுகிறான். தான் ஒரு தனி மனிதன் அல்ல, தனக்கென்று ஒரு இனம் இருப்பதை நினைத்து பெருமிதம் கொள்கிறான்.

மால்கம் ரெட் என்ற பெயருடன் வாழ்கிறான். காலணிகளுக்கு பாலிஷ் போடுகிறான். கழிப்பறையை சுத்தம் செய்கிறான். சிகரெட், கஞ்சா, அபின், க்ளப் என்ற அனைத்துப் பழக்கங்களையும் கற்றுக்கொள்கிறான். வெள்ளைக்கார பெண்களை சிலரை சேர்த்து ஒரு குழு அமைத்து கொள்ளையடிக்கிறான். பிடிபடுகிறான். 10 ஆண்டுகள் சிறைச்சாலை தண்டனை. அங்கு நூலகத்தைக் கண்டவுடன் மறுபடியும் படிக்க வேண்டும் என்ற ஆசை வருகிறது. அப்போது மால்கமிற்கு வயது 21.

ரெஜினால்ட் என்பவர் சிறையிலிருந்து அவன் தப்பிக்க வழி சொல்கிறார். அல்லாவை அடைந்தால் தப்பிக்கலாம் என்கிறார். எலிஜா என்பவர் நேஷன் ஆப் இஸ்லாம் என்ற ஓர் அமைப்பை ஆரம்பிக்கிறார். கறுப்பினத்தவர்களுக்கு கடவுள் அல்லா என்கிறார். கடவுளையும், பாதிரியார்களையும் தகாத வார்த்தைகளால் திட்டிய சைத்தான் வேதம் ஓத ஆரம்பித்தது. ஆம், மால்கம் ஒரு ஆத்திகவாதியானார். அல்லாவே அவர் கடவுளானார். கடந்த கால வாழ்க்கையை பற்றி யோசிக்காமல், நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பற்றி சிந்திக்கிறார். தேடி தேடி சென்று புத்தகங்களையும் வரலாறுகளையும் படிக்கிறார்.

எலிஜாவை சந்திக்கிறார். நேஷன் ஆப் இஸ்லாமில் தன்னை இணைத்துக்கொள்கிறார். எலிஜாவை தன் ஆதர்ச குருவாக ஏற்கிறார். மிகக் குறைந்த நாட்களிலேயே மதகுருவாக ஆகிறார். அவரே கூட்டங்கள் நடத்தவும் சுதந்திரமாக அனுமதிக்கப்படுகிறார். உட்கட்சி பூசல் ஆரம்பிக்கிறது. எலிஜாவை ஏமாற்றி தலைவன் பதவிக்கு வர ஆசைப்படுவதாக மால்கம் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதைப்பற்றி கவலையில்லை அவருக்கு.

பெட்டி எக்ஸ்ஐ திருமணம் செய்தார். எலிஜா வாழ்த்துக்களுடன். இயக்கம் கூட்டம் கறுப்பினர்களின் விடுதலை. குடும்பத்தை அவர் அவ்வளவாக கவனிக்கவில்லை. பாஸ்டனுக்கு வந்தபோது இருந்த மால்கமுக்கும் இப்போது உள்ள மால்கமுக்கும் அதிக வித்தியாசங்கள். ஜெர்மனி, ஆப்பிரிக்கா, எகிப்து போன்ற எல்லா நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்கிறார். பீடல் காஸ்ட்ரோவை சந்திக்கிறார். அமெரிக்கா உள்ளேயே ஒரு கலகக்காரன் இருப்பதை அறிந்து பீடலுக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஆப்பிரிக்கா செல்கிறார். அவர்கள் எல்லாம் தன் இன மக்கள் என்று சொல்கிறார். மூதாதையர்களின் வீடு இது என்கிறார்.

எலிஜா மீது வெறுப்பு. அவர் வெள்ளையர்களை வெறுக்க மட்டுமே மால்கமுக்கு கற்றுகொடுத்திருந்தார். கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டதற்கு மால்கம் அளித்த பேட்டியில் எலிஜா மால்கமை 90 நாட்கள் கூட்டம் எதுவும் நடத்த வேண்டாம் என்றும் அவரால் இயக்கத்திற்கு கெட்ட பெயர் என்றும் கூறினார். அந்த இடைப்பட்ட நாட்களில் இயக்கத்திற்கும் மால்கமிற்கும் எலிஜாவிற்குமான தொடர்பு எவ்வாறு துண்டிக்கப்பட்டது என்பதை இந்நூல் விவரிக்கிறது.

நேஷன் ஆப் இஸ்லாம் இல் இருந்து வெளியேறுகிறார் மால்கம். நான்கு நாட்களில் Muslim Mosque Inc என்ற அமைப்பை நிறுவுகிறார்.

பிப்ரவர் 21, 1965ஆம் ஆண்டு ஆதுபோன் நடன அரங்கத்தில் உரையாற்ற சென்றார். அவரை பதினாறு தோட்டாக்கள் விழுங்கின்றன. அவருடைய கொலையின் பின்னணியில் இன்னும் மர்மம் நீடிக்கிறது.

புத்தகத்தில் மிகவும் கவர்ந்த வாக்கியங்கள்

ஒரு பெருச்சாளியைப்போல் கட்டிலுக்கு அடியில் நூறு       ஆண்டுகள் பதுங்கிக் கிடப்பதற்குப் பதிலாக, சிறுத்தையைப்போல் ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம் பாய்ந்து வாழ்ந்து உயிரைக் கொடுப்பேன்

கறுப்பர்களுக்கு கனவு காணும் உரிமை கூட இங்கு மறுக்கப்பட்டுள்ளது.

நீ ஏன் தொடர்ந்து படிக்கக்கூடாது என்று லாரா கேட்டபோது, மால்கமால் சிரிக்க மட்டுமே முடிந்தது.

வெள்ளையர்களுக்கு வெள்ளை மாளிகை. கறுப்பர்களுக்கு ?

ஒரு மனிதனின் நடத்தையைத் தீர்மானிப்பது அவன் சூழல்தான். அசிங்கமான சூழலில் அசிங்கமாகத்தான் நடந்துகொள்ள முடியும்.

அல்லவாவை நோக்கி நீ ஓரடி எடுத்து வைத்தால் அவர் உன்னை நோக்கி இரண்டடி எடுத்து வைப்பார்.

புதிய நிலத்தையும் மக்களையும் ஆக்கிரமிக்க வெள்ளையர்கள் கொண்டு சென்ற ஆயுதம், கிறிஸ்தவம்.  இந்தியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அதற்கு சாட்சி. முதலில் சிலுவை நுழையும், பிறகு பாதிரிமார்கள், பிறகு, அரசாங்க அதிகாரிகள், பிறகு, வணிகர்கள், பிறகு, மக்கள், அவர்களுக்கு பின்னால் ராணுவம், ஆக்கிரமிப்பு, அடக்குமுறை, அடிமைத்தனம். தீர்ந்தது கதை.

1960ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐ.நாவில் உரையாற்ற கேஸ்ட்ரோவிற்கு அழைப்பு வந்தது. அப்போதே கேஸ்ட்ரோ முடிவு செய்துவிட்டார், மால்கமை சந்தித்தே ஆக வேண்டும் என்று.

பீடல் கேஸ்ட்ரோவிடம் சில வார்த்தைகள் பேசினாலே போதும் போராடும் உத்வேகம் வந்துவிடும்

mal x

நூல்  மால்கம் எக்ஸ்
பதிப்பகம் கிழக்கு பதிப்பகம், சென்னை.
ஆசிரியர் மருதன்
ஆண்டு 2008
பக்கங்கள் 152
விலை ரூ.185

ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்

ஜான் பெர்க்கின்ஸ் எழுதிய The Confessions of an Economic Hitman என்ற ஆங்கில நூலை தமிழில் போப்பு ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார்.

இந்நூலாசிரியர் பெர்க்கின்ஸ் ஒரு அமெரிக்கர். ஒரு அமெரிக்கர் ராணுவத்தில் கட்டாயமாக சேர்க்கப்படவேண்டும் என்ற விதியும் இருந்தது அந்த காலத்தில். பெர்க்கின்ஸ் குடும்பம் அரசியல்வாதிகளுக்கும் ராணுவத்திற்கும் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்ட குடும்பம். கல்லூரியில் புரட்சிகர அமைப்புகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு தன் வாழ்க்கைப் பாதையை மக்களுக்காகவே மாற்றவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்த பெர்க்கின்ஸ், பொருளாதார மேதையாகிறார். தான் எப்போதும் இராணுவத்தாலும், அரசியல்வாதிகளாலும் உளவு பார்க்கப்படுவதை உணர்கிறார். ஆதலால் அவரால் ஆசைப்பட்ட எந்த ஒரு காரியத்தையும் செய்ய இயலாமல் போகிறது. தான் எப்படி ஒரு பெரிய பொருளாதார மேதையானார் என்பதையும் தான் எப்படி ஒரு பொருளாதார அடியாள் ஆனார் என்பதையும் தன்னால் ஏன் தான் செய்ய நினைத்ததை செய்ய இயலவில்லை என்பதையும் இந்த நூலில் மிகவும் விரிவாக எழுதியுள்ளார்.

ஒரு நிறுவனத்தில் சேரும் முன் ரகசிய காப்புரிமை உறுதிமொழி எடுத்துத்தான் எந்த ஒரு பணியாளனும் வேலைக்கு சேருவான். இவரும் அப்படித்தான். ஆனால் தன்னுடைய மனசாட்சிக்கு எதிராக தன் வேலைகள் அமைந்தாலும் இந்த ஒரு புத்தகத்தின் மூலம் அவர் பாவமன்னிப்பு கேட்டுவிட்டார் போலும்.

பெர்க்கின்ஸ், ஒரு தலை சிறந்த நிர்வாகவியலாளர் மற்றும் பொருளாதார மேதை. தன்னுடைய தாய் நாடான அமெரிக்க ஒரு நாட்டினுள் வளர்ச்சி என்ற ஒற்றை சொல்லை வைத்துக்கொண்டு என்ன அட்டகாசமெல்லாம் செய்கிறது என்பதை படம் பிடித்துகாட்டுகிறார். அந்த நாச வேலையை அவரே செய்வதற்கு துணை நின்றார் என்பதையும் அழகாகச் சொல்கிறார். இந்த வேலைகளுக்கு ஐ.நா. உலக வங்கி, பென்டகன், எப்பிஐ போன்ற நிறுவனங்கள் எவ்வாறு துணை நின்று செவ்வனே வேலையை செய்து முடிக்கிறது என்பதையும் இந்நூல் நமக்கு காட்டுகிறது.

அவர் இந்த நூலை எழுதுவதற்கு முன் தன் மகளுடன் பேசுகிறார். மிகவும் பெரிய உண்மைகள் வெளிப்படும் இந்த நூல் மூலம் தனக்கு ஏதாவது நேரிடலாம் என்ற அச்சத்தை தெரிவிக்கிறார். அதற்கு அவர் மகள் ஜெஸ்ஸிகா, ஒரு வேளை அப்படி நடந்தால் தான் அந்தப் பணியை தொடரப்போவதாக அவருடைய மகள் கூறுகிறாள்.  அவளுடைய இந்த வாக்கியத்துடன் அணிந்துரையாக  ஆரம்பிக்கிறது இப்புத்தகம்.

பெர்க்கின்ஸின் கதைதான் நம் கதையும். நாம் ஒவ்வொருவரும் ஒவ்வாரு பொருளாதார அடிமைகளாக நம்மை அறியாமலேயே இருக்கின்றோம் என்பதை இந்நூல் நமக்கு உணர்த்திக்காட்டுகிறது. உலக ஆற்றலை விழுங்கும் தீராத நுகர்வு பெரும்பசிக்கு நாம் எல்லோரும் மிக வேகமாகவே இரையாகிக்கொண்டிருக்கிறோம். கீழ்க்கண்ட அவருடைய வாதங்கள் நம்மை அதிகம் சிந்திக்க வைக்கும்.

நாங்கள் தோற்றால் எங்களிலும் மோசமான ஆட்கள் உள்ளே இறங்குவார்கள். நாங்கள் அந்த வேலையை ஓநாய்களிடம் ஒப்படைத்துவிட்டால் போதும். அவர்கள் இறங்கினால் போதும் எப்பேர்பட்டவர்களும் தூக்கியெறிப்படுவார்கள் அல்லது ஒரு மோசமான விபத்தில் கொல்லப்படுவார்கள். எப்படி, என எனக்குள் கேட்டுக்கொண்டேன். ஒரு கிராமப்புற பையன் நீ இந்த கேடுகெட்ட வேலையில் எப்படி இறங்கினாய்? என்று.

இப்போது ஒரு மனிதர் வாஷிங்டன் பாதைக்குக் குறுக்கே நிற்பதாகத் தோன்றியது. உண்மையில் அவருக்கு முன்னர் காஸ்ட்ரோ, அலெண்டே போன்ற தலைவர்களும் இருந்ததை நான் அறிவேன்.

ஒரு உன்னதமான நாகரீகத்தை நாம் பெற்றுவிட்டோம் என்று நாம் நம்பவைக்கப்பட்டிருக்கின்றோம்.  ஒவ்வொரு மனிதனையும் தன் பிடிக்குள் கொண்டுவரும் நிறுவனவியத்தின் முயற்சி வெற்றி பெற்றதற்கான அடையாளம் இது.

ஒரு வளம் மிகுந்த நாட்டைச் சூறையாடி, பேரிழப்பை ஏற்படுத்துதல். பின் அதன் மீது கட்டுமானங்களை எழுப்பி சில புள்ளி விவரங்களை நிறுவினால் போதும். அந்நகரம் பொருளாதாரத்தில் உச்சநிலையை அடைந்ததாக நியாயப்படுத்தப்படும்.

என்னுடைய அமைப்பானது எனக்கு ஒரு வீட்டையும், காரையும் வழங்கிவிட்ட பின்னர் அதை எதிர்ப்பதற்கு என்ன இருக்கிறது ? ஆனால் இதே அமைப்புதான் அன்றாடம் 23,000 மக்களைப் பட்டினியால் சாகடிக்கிறது. அவர்களுக்கு இந்த அமைப்பின் மீது எப்படி வெறுப்புத் தோன்றாமல் இருக்கமுடியும் ?

முடிந்த அளவு உங்களுடைய வீட்டு, அலுவலகத் தேவைகளைப் பாதியாக குறைத்துக்கொள்ளப் பாருங்கள். உங்களைச் சுற்றிப் பொருட்களை வாங்கி குவிக்காதீர்கள். தேவையானவற்றை மட்டுமே வாங்குங்கள். தம் அரை வயிற்றுக்காக நாளெல்லாம் உழைக்கும் மக்களை நினைத்துப்பாருங்கள்.

நைக், மெக்டொனல்டு, கொக்கொக்கோலா நிறுவனங்கள் பசித்த ஏழைகளுக்கு உணவு அளிப்பது, உடுத்த உடை அளிப்பது போன்ற செயல்களில் இறங்கினால் எத்தனையோ கோடி மக்கள் பயன் பெற முடியும்.

நிலவில் கால் வைப்பதை விட, சோவியத் யூனியனை சிதைப்பதைவிட, பிரமாண்டமான நிறுவனங்களை நிறுவுவதைவிட இந்த உலகில் வறுமையை ஒழிப்பது எளிதான செயல்.

இந்த நூல் பரிந்துரைச்சீட்டு அல்ல என்றும், நிறுவனவியத்திற்கு பகடைக் காயாகச் செயல்பட்ட, தன்னை ஒரு அடியாளாக மாற்றிக்கொள்ள அனுமதி கொடுத்தவனின் ஒப்புதல் வாக்குமூலம் என்றும் அவர் கூறுகிறார். தான் மனதளவில் சுதந்திரமானவனாக இருப்பதற்கு இந்தப் புத்தகம் போதும் என்றும் இதில் சொல்லப்பட்ட பல அம்சங்கள் வாசகர்களின் சொந்த அனுபவங்களுக்கு நெருக்கமாக இருக்குமானால் அவருக்கும் வாசகருக்கும் இடையே இடையே பொதுவான அம்சங்கள் இருப்பதாக அவர் கருதுகிறார்.

நூல்  ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்
பதிப்பகம் விடியல் பதிப்பகம், கோயம்புத்தூர்.
ஆசிரியர் ஜான் பெர்க்கின்ஸ்
மொழிபெயர்ப்பாளர் போப்பு
ஆண்டு 2013
பக்கங்கள் 296
விலை ரூ.200