கற்றது இங்கிலீஷ்

31556a7c378a33ac9257f029395c01af_large

தமிழ் ஒருவனுக்கு பேரன்பையும்  வீரத்தையும் சொல்லிக்கொடுக்கும் என்று சொல்வார் எங்கள் தமிழ் ஐயா.  சிலம்பாட்டம், குஸ்தி, குத்துச்சண்டை இவற்றையெல்லாம் கற்றுக்கொண்டுதான் வீரத்தை வளர்க்கவேண்டும் என்று இல்லை. ஆனால், தமிழால் இவையெல்லாமே சாத்தியம்.

எத்தனையோ பாடங்களை படித்துவிட்டு மார்க்கும் வாங்கிவிட்டு ஒரு வழியாக வேலைக்கும் வந்துவிடுகின்றோம். ஆங்கிலத்தில் படித்த டெபடைல்ஸ், தி சோல்ஜர் போன்ற செய்யுள்கள் நினைவிற்கு வந்துவிடும் ஆனால் தமிழில் படித்த தாயுமானவர் செய்யுளோ, பாரதியின் பாடலோ, திருவருட்பாவின் வரிகளோ, சிலப்பதிகாரத்தின் காண்டங்களோ ஏன் திருக்குறளில் ஒரு 5 குறள்களோ நமக்கு என்றுமே நினைவிற்கு வருவதில்லை. நாம் பேசும் மொழியையே பாடமாக படிக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தம் அந்த மொழியின் மீதான வெறுப்பை மறைமுகமாக காட்டச்செய்தது. காலனியாதிக்கத்தின் தாக்கமாகக் கூட இருக்கலாம். தினமும் ஒரு திருக்குறள் அதற்கான விளக்கஉரை என்று வீட்டு வாசலில் கரும்பலகைகளில் எழுதி பொதுமக்கள் பார்வைபடும் படி தினமும் வைக்கும் தமிழ் ஐயாக்கள் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

படிக்கவேண்டும். பாஸ் ஆக வேண்டும். அவ்வளவுதான் தமிழ் மீது இருக்கும் தேவை என நான் கருதுகிறேன்.நம்மில் எத்தனைபேர் தமிழ் செய்யுட்பகுதிகளை அர்த்தம் புரிந்து படித்தோம் என்று தெரியவில்லை. புரிந்து படித்தவர்கள் இருப்பார்கள் ஆனால் முதல் மார்க் வாங்கியவன் நம்ம க்ளாஸ் லீடராத்தான் இருப்பான். கோனார் தமிழ் உரை மார்க் வாங்க உதவியதே தவிர பொருள் புரிந்து தமிழை கற்க பயன்படவேயில்லை. மாணவன் என்ற அந்த ஸ்டேடஸை இழக்கப்போகும் தருவாயில் தமிழ் மீது எனக்கு ஆர்வம் வந்தது கல்லூரியின் இரண்டாம் ஆண்டு நான்காவது பருவம். இறுதியாண்டில் தமிழ் இல்லை. எங்கள் வகுப்பிற்கு தமிழ் ஐயாக்கள் வருவதேயில்லை.ஒன்றாம் வகுப்பு முதல் கலைப்படிப்பின் இரண்டாம் ஆண்டு வரை தமிழை நீ படித்தே ஆக வேண்டும் என்று சொல்லும் இந்த கல்வி கட்டமைப்பு, இறுதியாண்டிற்கு பிறகும் முதுகலைபட்டத்திற்கும் தமிழை நீ இனி படிக்கவேண்டாம் என்கிறது. ஒன்று இல்லை என்றதும் அதன் அருமை புரிந்தது. தேட ஆரம்பித்தேன். தமிழ் ஐயாக்களை தேட ஆரம்பித்தேன். அவர்கள் எங்கேயும் கிடைக்கவில்லை. அடர்ந்த காட்டுப்பகுதியில் கட்டப்பட்ட சில கல்லூரிகளிலும், ஆற்று ஓரமாய் இருக்கும் சில கலைக் கல்லூரிகளிலும்தான் தமிழ் வாழ்ந்துகொண்டிருக்கிறது, அதே ஐயாக்கள் நினைத்தால் காலத்தை வீணடிக்காமல் தமிழ் புலவர்களை பி.காம்., பி.ஏ., பொருளாதாரம் போன்ற துறைகளில் இருந்து கூட அவர்கள் உருவாக்கலாம். ஆனால் நமது தொழில்நுட்ப அசுர வளர்ச்சி அதை ஏற்றுக்கொள்ளாது. நாமும் தேதி முடிந்த சரக்குகளாகத்தெரிவோம் என்ற நினைப்பில் தமிழை தள்ளினோம்.

பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் தமிழ் வகுப்பிற்கு மணி அடித்தவுடன் வருகைப் பதிவேட்டில் நம் பெயரை தமிழ் ஆசிரியர் வாசிக்கும்போது உள்ளேன் ஐயா, உள்ளேன் அம்மா என்று சொல்ல வேண்டும் என்ற விதியை மனது தயார்ப்படுத்திக்கொள்ளும்.  ஒரு வேளை மாற்றி யெஸ் சார் அல்லது பிரசண்ட் சார் என்று சொல்லிவிட்டால் அவ்வளவுதான் தமிழ் ஐயாவின் கோபத்திற்கு எல்லையே இருக்காது. டஸ்டரோ சாக் பீஸோ வந்து முகத்தில் விழும்.  அல்லது…. யாரு தொற லண்டன்லேந்து வந்தெறங்கியிருக்கு போல என்ற கேளிக்கையான பதிலும் வரும்.

கல்லூரி தமிழ் ஐயாக்களுக்கும் பள்ளி தமிழ் ஐயாக்களுக்கும்  இடையே நிறைய வித்தியாசம் இருக்கும். பள்ளி அளவில் தமிழ் ஐயாக்களும் அம்மாக்களும் பாசத்தையும் தமிழையும் ஊட்டுவார்கள். கல்லூரி தமிழ் ஐயாக்கள் …  தமிழ் இலக்கியம் பற்றி பாடம் எடுக்கும் நேரம் மிகவும் குறைவே, ஆனால் ரௌத்திரம் பற்றியும், வீரம் பற்றியும், அரசியல் பற்றியும், அக்கால அரசியல் தற்போதைய அரசியல் பற்றியும், தமிழ் இனத்தின் வரலாறு பற்றியும், செய்யுளின் அழகு மற்றும் அழகியல் பற்றியும் பாடம் எடுப்பார்கள். முக்கியமாக அதில் நகைச்சுவை உணர்வு அதிகம் இருக்கும்.  இது வேறு எந்த துறை ஆசிரியர்களிடமும் காண முடியாத ஒன்று. தமிழையும் அழகியலையும் பிரிக்கமுடியாது.ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் நாடகத்தின் மூலம் அழகியலை நிரூபிக்க முடியும், ஆனாலும் அழகியல் என்பது தமிழுக்கே உரியது. அது மற்ற மொழிகளின் அழகியல் வெளிப்பாட்டை தமிழ் மொழியின் மூலம் அளவு காட்டப்படுவது இல்லை. ஏனென்றால் அழகியல் பிறந்ததே தமிழ்மூலமாகத்தான். ஏஸ்தடிக்ஸ் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இந்த வார்த்தைக்கெல்லாம் முன்னோடி நமது அழகியல். அழகியலை ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால், உலகில் எல்லாமே அழகு. அழகின்மை என்று எதுவுமே இல்லை என்பதுதான் அழகியல்.

அகல உழுவதைவிட, ஆழ உழு என்பார் தமிழ் ஐயா. எவ்வளவு அர்த்தம் பொதிந்த அழகான சொலவடை.   வையும் போதும் கூட, அங்கும் இருப்பான் இங்கும் இருப்பான், ஆக்கிய சோத்துக்குப் பங்கும் இருப்பான்- வெங்கப்பயல் என்பார் அழகாக. புத்திமதி கூறுகையில், தவளை தான் வாயல கெடும் என்பார், சொல்பேச்சுக் கேட்காதபோது, வைக்கப்போர் நாய் கதையை சொல்வார்,  நக்கல் நையாண்டிக்கு, நாளைக்கு சாகப்போற கிழவி கூறைமேல ஏறி உட்காந்தாளாம் என்பார் மிக அழகாக. மாணவர்கள் இன்னொருவருடன் சண்டைக்கு போகும்போது, சாரை விறுவிறுத்தா மாட்டுக்காரன்ட்ட போகுமாம் என்பார்.

எங்கள் கல்லூரியில் ஒரு மாணவன் தினமும் தாமதமாகத்தான் வருவான். கேட்டால் வீட்டில் அவ்வளவு வேலை அவ்வளவு கஷ்டம் என்று தன் துயரத்தை சொல்வான். அப்படி ஒருநாள் அவன் தாமதமாக வந்தபோது, தமிழய்யா ஒரு கதை சொன்னார்.வாழ்க்கையில் எப்போதுமே கஷ்டங்களை அனுபவித்தவன் கடவுளிடம் எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டம் என்னால் தாங்க முடியவில்லை என்று கேட்கிறான். அவனைப்போலவே கஷ்டங்களை அனுபவித்தவர்களை, கடவுள், அவர்கள் அவர்கள் கஷ்டங்களை ஒரு மூட்டையில் போட்டு எடுத்துவரச்சொல்கிறார். எல்லாம்  ஓர் இடத்தில் கூடுகின்றனர். எல்லோரும் கடவுளின் சொல்படி தத்தம் கஷ்டங்களை மூட்டையில் போட்டு தோளில் சுமந்துகொண்டு நின்றனர். கடவுள் அனைவரிடமும் சொல்கிறார், இன்னும் சிறிது நேரத்தில் இந்த இடம் இருண்டுவிடும். அவரவர்கள் எடுத்து வந்த கஷ்ட மூட்டைகளை அதோ தெரியும் அறையினுள் வைத்துவிட்டு வரவேண்டும் என்கிறார். எல்லாம் அதன் படி செய்கின்றனர். கடவுள் மறுபடியும் அவர்களிடம் அதே அறையினுள் சென்று அவரவர்கள் மூட்டையை எடுக்கச்சொல்கிறார். அவர்களால் எது தன்னுடைய மூட்டை என்று தெரியாமல் மாற்றி எடுத்து வந்துவிடுகின்றனர். ஆனால், இம்முறை அவர்கள் மாற்றி எடுத்துவந்த மூட்டை தங்கள் சொந்த மூட்டையைவிட பளு அதிகமாக இருந்தது, யாரலும் தூக்க முடியவில்லை. எல்லோரும் கடவுளிடம் மன்றாடி தங்கள் பழைய மூட்டைகளை தருமாறு வேண்டுகின்றனர். கடவுளும் அவ்வாறு செய்கிறார். இப்படி ஒரு கதையை கேட்கும்போது வகுப்பில் இருக்கும் மாணவர்களின் மன நிலை எப்படி இருக்கும். அந்த அளவு ஒரு உத்வேகத்தை இக்கதை தருகிறது.

தமிழ்ப்பாடம் என்ற ஒரு வகுப்பே நீதியை சொல்லித்தரத்தான் நமது கல்வியாளர்கள் அமைத்துள்ளார்கள் என்பது எனது நம்பிக்கை. இவையெல்லாம் வெர்ட்ஸ்வொர்த், ஷேக்ஸ்பியர்களால் சாத்தியமாகாது.

பள்ளியில் தமிழ் அம்மா எப்போதும் கூறுவார், நீ படி அல்லது படிக்காமல் போ. பாஸ் ஆகு இல்ல பெயில் ஆகு. ஆனா, பொய் சொல்லாத. என்னைக்குமே உண்மைய சொல்லிப்பாரு. உண்மைய காப்பாத்த தேவயில்ல, பொய் சொன்னா நாம சாகுற வரைக்கும் அத காப்பாத்திக்கிட்டே வரணும், நீ காப்பாத்த மறந்துட்டேன்னா அது உன்னைய கொன்னுடும். இது போன்ற சில அறிவுரைகள் சிலருக்கு மனதில் பாடம் ஏறியதோ இல்லையோ கடைசி பெஞ்சில் இருக்கும் மாணவன் வரை காதில் ஏறியிருக்கும். என்றாவது ஒருநாள் இந்த வார்த்தைகளே உங்களை காப்பாற்றும். மற்றபடி தேர்வு எழுதி நீங்கள் மதிப்பெண்கள் வாங்குவது எல்லாம் அடுத்த வகுப்பிற்கு செல்ல வேண்டிய பயணச்சீட்டுதானே ஒழிய வெறும் மதிப்பெண்களால் ஒருவனின் ஒழுக்கத்தையும் நேர்மையையும் தீர்மானிக்க முடியாது என்பார். தமிழ் ஐயாக்களுடன் கொண்ட நமது உரையாடல்கள் பெரும்பாலும் நாம் நமது தாய் தந்தையிடம் கொண்டிருக்கும் உரையாடல்களுக்கு ஒத்து இருக்கும். ஆதலால்தான் என்னவோ அவர்களையும் நாம் ஐயா என்றே அழைக்கின்றோம் பெண்களாயின் அம்மா என்று அழைக்கின்றோம்.

சில மாதங்களுக்கு முன்பு தமிழ் பி.ஏ தொலைநிலைக்கல்வியில் படித்தால் என்ன என்று தோன்றியது. கல்லுரியை விட்டு வந்து இத்தனைவருடத்திற்கு பிறகு தமிழ் மீண்டும் படிக்கவேண்டும் என்ற ஆசை வந்ததே அபூர்வம். அதனைத் தொடர்ந்து, பாடத்திட்டங்களை தமிழ்ப் பல்கலைக்கழகம், சுந்தரனார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், மெட்ராஸ் பல்கலைக்கழகம் போன்ற வெப்சைட்டுகளில் பார்த்தேன்.

ஆனால் உள்ளே இருக்கும் நியாயம்தான் எப்போதும் கூடவே இருந்து குழிபறிப்பது. உள்ளிருந்து ஒரு சப்தம் கேட்டது…. “இட்ஸ் பெட்டர் டு லீவ் இட் நவ், டமிழ் பி.ஏ வோண்ட் மேக் எனி சென்ஸ் அண்ட் இட் வில் நாட் சப்போர்ட் யுவர் கரீர் எனிமோர் அண்ட் டஸ் நாட் இயர்ன் எனி இன்கம் அவுட் ஆப் இட், இட்ஸ் அப்சொலிட், ஜஸ்ட் ஸ்பெண்ட் தி மனி அண்ட் டைம் அட்லீஸ்ட் இன்ய புரோடக்ட்டிவ் மேனர்” என்றது.

நினைவில் உள்ள சில சொலவடைகள்….
மகள் வாழ்ற வாழ்வுக்கு மாசம் ஆயிரத்தெட்டு வௌக்கமாராம்.
கழுத கோபம் கத்துனா தீரும்.
மேயுற மாட்ட நக்குற மாடு கெடுக்குற மாதிரி.
வட்டிக்கு வாங்கி அட்டிகை வாங்கினாளாம் அட்டிகையை வித்து வட்டி கட்டினாளாம்.
நக்குற நாய்க்கு செக்குன்னு தெரியுமா சிவலிங்கம்னு தெரியுமா?
வெளஞ்சா வள்ளி திருமணம் வெளையாட்டா அரிச்சந்திரன் நாடகம்.
சீமான் வீட்டு நாய் சிம்மாசனம் ஏறுதுன்னு வண்ணான் வீட்டு நாய்  வெள்ளாவியில ஏறிச்சாம்.

Advertisements