தாகம்…..

நன்றாக நினைவிருக்கிறது, வருடம் 1994. அப்போதெல்லாம் பள்ளிக்கு கிளம்பி வருவதென்பதே ஒரு பெரிய பயம் கலந்த ஒன்று. புத்தகம், நோட்டு, பென்சில், ரப்பர், ஒரு டப்பா, வேறு ஏதாவது சில. மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு ஓடி வந்து சாப்பிட்டுவிட்டு திரும்ப வந்துவிடுவோம். பெரும்பாலும் சாப்பாட்டு கூடையை கொடுத்து அனுப்பிவிடுவார்கள். ஒவ்வொரு பாடவகுப்பும் கடந்து செல்வது யுகங்களாக இருக்கும். 8 வகுப்புகள். 4 வகுப்புகள் முடிந்தவுடன் மதிய உணவு.

ஒரு பெரிய தோசை கல் அளவில் இரும்பில் வட்ட வடிவில் ஒரு தட்டு, நல்ல மொத்தம். மர சுத்தியலில் எங்கள் பள்ளி பியூன் மூன்று முறை அடிப்பார். மதிய உணவு வேளையெனில் 4 முறை அடிப்பார். கடைசி வகுப்பெனில் டங் டங் டங் டங் டங்… என்று தொடர்ந்து அடித்துக்கொண்டே இருப்பார். வேளாங்கண்ணி சர்ச் பெல் போல இருக்கும் அந்த சத்தம். ஆனால் தோசைக் கல்தான். பெல் அல்ல. இன்னமும் அந்த சத்தத்தை என்னால் யோசனை செய்து பார்க்க முடிகின்றது. அவ்வளவு சுதந்திரம் கலந்த சத்தம் அது ஆனால் மாலை வேளையில் மட்டும்.

ஏரியாவில் இரவு நேரம் கரண்ட் போய்ட்டு திரும்ப வரும்போது சிறுவர்கள் ஓ வென கத்துவார்கள் … அதுபோல ஓஓ என்று சத்தம் எழும், எல்லா வகுப்பிலிருந்தும் அடைத்துவைக்கப்பட்ட கிளிகள் கூண்டுக்கு வெளியே பறந்து போவதுபோல அந்த காட்சி இருக்கும். அனைவரும் அப்படி ஓடி வருவோம். ஓடிவரும்போதே திட்டங்களும் ஓடும் மனதினுள்….

நண்பர்களுடன் சாயங்காலம் நேர விளையாட்டுக்கள், தட்டான்தெரு ஓட்டம், மணல் விளையாட்டு, கிட்டிபெல், ஆபியம், தூர்தர்ஷன் டெலிவிஷன், மொட்டைமாடி டிமிக்கி, பக்கத்து வீட்டு அண்ணா அக்காக்களுடன் பேச்சு, அப்பா அலுவலகத்திலிருந்து வருகை, தின்பதற்கு தீனி, அம்மா செய்து கொடுக்கும் சத்துமாவு உருண்டை, இரவு சாப்பாடு என்று மனம் ஒருவழியாக அன்றைய நாள் முடிவின் திட்டங்களை தீட்ட ஆரம்பிக்கும்.

இத்தனை வருடங்களுக்கு பிறகு அந்த தாகத்தை பற்றி இன்று இரவு வேளை டிராப்பிக்கில் வீடு திரும்பும்போது அசைபோட்டுக்கொண்டே வந்தேன். குழந்தையாகவே அந்த தாகத்துடன் இருந்திருக்கலாம் போல.

மாலை நேர பள்ளி மணியோசை எதிர்பார்ப்புடன், பசியுடன், அழுக்கு படிந்த வெள்ளை சட்டை காக்கி டிரவுசருடன், தாகத்துடன் வீடு வந்து ஒரு சொம்பு தண்ணீரை எடுத்து மூச்சு வாங்காமல் குடித்த அந்த திருப்தி இனி கிடைக்குமா ?

 

Thirsty

பதிவு அற்பணிப்பு :
செயின்ட் பீட்டர்ஸ் பள்ளியில் படித்த அனைவர்களுக்கும்

 

Advertisements