கொற்கை

முற்றிலும் கிழக்குச் சீமை தமிழ் சாயல் கொண்ட ஒரு நாவல். முதல் 20 பக்கங்களை படிக்க நான் எடுத்துக்கொண்டது சுமார் ஒரு மணி நேரம். போகப்போக இதுவும் என் நாட்டுத் தமிழ்தான் என புரிந்துகொண்டேன். சில வார்த்தைகள் ஏற்கனவே நான் பேசும் நடையில் இருப்பதை உணர்ந்தேன். சரி நாவலுக்கு வருவோம்.

கொற்கை முற்றிலும் காலத்தை தழுவிய ஒரு நாவல். 100 ஆண்டு கால இடைவெளியில் நடந்தேறிய மற்றும் தொலைத்த விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறது. கொற்கை என்பது பாண்டிய இளவரசனின் இருப்பிடமாகும். பாண்டியர்களின் மூன்றாம் தலைநகரமான கொற்கை. கடல் கொண்ட தென்னாட்டில் இருந்து மீண்ட பரதவர்கள் உருவாக்கிய நகரமாகும்.

மீனவ சமுதாயத்தினர், லஸ்கர்கள், தண்டல்கள், மேசைக்காரர்கள், தலைமை பாண்டியபதி போன்றோர் இந்நாவலில் முக்கிய கதாபாத்திரங்கள். லஸ்கர்கள் தோணியில் வேலை செய்யும் மாலுமிகள். தண்டல்கள் தோணியின் தலைவன் அல்லது கேப்டன். மேசைக்காரர்கள் பாரம்பரிய பணக்காரர்கள். பாண்டியபதி காலம் காலமாக பெரிய தலைக்கட்டு. காலம் காலமாக செய்துவந்த பதவியேற்பு விழாவை வழக்கத்திற்கு மாறாக கடைசி பாண்டியபதி அரண்மனையினுள்ளே பதவி ஏற்கிறார். தெய்வகுத்தம் என்று நம்பப்பட்டு அவர்கள் முற்றிலுமாக தன்னுடைய ஆளுமையை இழக்கும்போது, பர்னாந்துமார்கள், கர்டோசாக்கள் என்று அவரவர்கள் ஆளுமைக்குள் கொற்கை ஒவ்வொரு காலகட்டத்திலும் வந்து செல்கிறது. நாமும் அதனுடன் பயணிக்கும்போது ஒவ்வொரு தட்டு மக்களைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. அந்த காலத்து பேச்சு வழக்கு முதல் சந்தன மாரியம்மன்  கோயில் திருவிழா, சர்ச் தேர்த் திருவிழா போன்ற அவர்களுடைய வாழ்வில் பின்னிப்பிணைந்த விழாக்கள் உள்ளிட்ட பல விஷயங்களை கூடவே இருந்து பார்ப்பது போல் ஓர் உணர்வு.

ஒரு வியாபாரம் எப்படி எங்கு ஆரம்பித்து எதில் முடிகிறது என்பது தொடங்கி, அதில் இடம்பெறும் ஒவ்வொருவரையும் பற்றி அவர்களுடைய குடும்பப் பின்னணியில் கதை செல்கிறது. ஆங்கிலேயர்கள் மற்றும் ஆங்கிலேயர்களை அனுசரித்து சம்பாதித்து வாழ்ந்த இந்தியர்களை நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது. கிருஸ்தவம் வளர்ந்த கதை, இந்துக்கள் அதை எதிர்கொண்ட விதம் ஆகியவற்றைப் பற்றியும் ஆராய்கிறது இந்நாவல். ஒவ்வொரு விதத்திலும் கொற்கையின் தோணிகளும் நம் கூடவே மிதந்து வருகின்றன. இலங்கை மற்றும் மலையாள நடை போகும் தண்டல்கள் பற்றியும் நிறைய அரிய செய்திகள்.

நாவலை படிக்கும்போது உப்புக் காத்தும்,  சோழக் காத்தும் அடிப்பதை உணரமுடிகின்றது. அப்போதிலிருந்தே நம்மவர்கள் இலங்கையுடன் கொண்ட நட்பு, வியாபாரம் பற்றி நன்றாக விவாதிக்கின்றது. எனக்கு பிடித்த அத்தியாயம் 1965. மிகவும் பிரமாதம். வலம்புரி சங்கினை வாழ்வில் ஒருவர் எடுத்துவிட்டால் அதை பெரும் சாதனையாக கருதுகிறார்கள் முத்து குளிப்பவர்கள். சங்கு எடுத்து ஏலம் விடும் விதத்தை சலாபம் என்கிறார்கள். 100க்கும் மேற்பட்ட வட்டாரச் சொற்கள்.

இக்கதையில் நாயகன் நாயகி என்று யாரும் இருப்பது போல் தெரியவில்லை. காலம் ஒன்றுதான் நாயகன் நாயகி எல்லாமே. உதாரணத்திற்கு, நாம் நம் பெற்றோர்களிடம் கொண்டுள்ள மரியாதை, நம் பெற்றோர் அவர்கள் பெற்றோர்களுடன் கொண்டிருந்த மரியாதை, குடும்பப் பழக்க வழக்கங்கள், அவற்றைத் தொடர்ந்து நாளைடைவில் நம் பிள்ளைகள் என்றாகும்போது ஏற்படும் பாதிப்பினைப்  பற்றியும் கொற்கை மூலம் பார்க்கமுடிகிறது.

தேயிலை தோட்ட வேலைக்காக 1800களில் வந்த, பஞ்சத்தின் காரணமாக தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட அடிமைகள் மற்றும் கங்காணிகளின் கதை, இலங்கைப்போர், கேரளா ஆட்சி மாற்றம், காங்கிரஸ் ஆட்சி, காமராஜர் ஆட்சி என்று அந்தந்தக் கால வரலாற்றை ஓரிரு வரிகளில் சொல்லிவிடுகிறார் ஆசிரியர். எம்.ஜி,ஆர் திரைப்படம், சிவாஜி கணேசனின் முதல் படம் ரீலிஸ், அபூர்வ ராகங்கள் கே.பி. என்ற பல நிலைகளில் நடந்த நிகழ்வுகளைக் கூறி யதார்த்தத்தை உணர வைக்கும் நடை அழகு, வரலாற்றுடன் சேர்ந்து நம்மைப் பயணப்பட வைக்கின்றது.

ஒரே வரியில் சொல்லவேண்டுமானால், “எங்க காலத்துல எப்படி இருந்தோம் தெரியுமா” என்று பெரியவர்கள் கூற நாம் கேட்பது போன்ற கதைதான் கொற்கை. காலத்தின் மாற்றத்தை கொற்கை எப்படி எதிர்கொண்டது என்பதை அறியமுடிகிறது. மக்களும் தான். ஒரு பெரிய கதையை சிறிய விமர்சனம் மூலமாக சாராம்சமாக சொல்லிவிடுவது சுலபமல்ல.

கொற்கையின் தோணி காலத்தின் கட்டாயத்தால் நீரிலிருந்து நிலத்தைத் தொட்ட கதை. இந்தக் காலத்தின் மாற்றத்தினால் மாறியவை தோணிகளின் வியாபாரம் மட்டும் அல்ல. மனிதர்களும், அவர்களுடைய பூர்வீக வியாபாரமும், தலைமுறைகளும், குடும்ப அமைப்புகளும் தான். கொற்கையை விட்டு அவர்கள் எப்போதோ அகலத்தொடங்கிவிட்டனர்.

காலம் என்ற திரும்பி வரமுடியாத அரியய பொக்கிஷத்துடன் நாம் ஒவ்வொருவரும் பயணித்துக்கொண்டிருக்கிறோம். அந்த வகையில் கொற்கை கடந்த காலத்தின் மூலம் நமக்கு கிடைக்கப்பெற்ற கடலோடிகள் சம்பந்தப்பட்ட வரலாற்றுடன் பின்னிப் பிணையப்பட்ட தமிழிலக்கியத்தின் ஒரு படைப்பு.

லோன்ஜி, பவுல் தண்டல், பிலிப் தண்டல், ஆண்டாமணி, சண்முகவேல், ஆறுமுகம், சலோமினா, லிடியா போன்றவர்கள்  மனதில் நிற்கும் கதாபாத்திரங்கள்.

யோசித்துப் பாருங்கள். நமது தாத்தா பாட்டி காலத்தில், நம்மை யாராவது பார்த்து எப்படி பெயர் கேட்பார்கள் ? அட ! நம்ம வியாபாரி திருவண்ணாமலை மகள் சித்ராவோடா நாத்தனார் மகன் அல்லவா ?  என்றல்லவா ? இப்போது நமக்கு இருக்கும் அறிமுகம், நான்காவது தளத்தில் ப்ளாட் நம்பர் 19ல் வசிக்கும் ஒரு நபர். அவ்வளவுதான். நீங்கள் இன்று எங்கு வேலை பார்க்கிறீர்கள் ? உங்கள் சொந்த ஊர் எது? உங்கள் பூர்வீகம் எது ? உங்கள் முப்பாட்டன் தாத்தா போன்றோர்களின் ஊர் எது? அவர்களின் குடும்ப வியாபாரம் என்ன ? உங்கள் சொந்த பந்தங்கள் எங்கே? உங்களின் அடையாளம் என்ன ? நீங்கள் ஏன் எப்படி எதனால் தள்ளப்பட்டு இந்த ஊரில் உள்ளீர்கள் ? அல்லது வேலை பார்க்கிறீர்கள் ?

காலம் யாரிடமும் ஏற்றத்தாழ்வு பார்ப்பதில்லை. அப்படி காலம் என்ற ஒரு மாபெரும் சக்தியால் நாம் இழந்தது நமது அடையாளத்தை மட்டுமல்ல. சுற்றத்தார்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களையும்கூட. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பதை உணர்ந்து, காலத்தை நமது தோழனாக்கிக்கொண்டு கொற்கையைப் பற்றி படிக்க வாருங்கள்.

கொற்கை தங்களை அன்புடன் வரவேற்கின்றது.

கொற்கை – பாண்டிநாட்டுத் துறைமுகம்.
புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினம் – சோழநாட்டுத் துறைமுகம் (பட்டினப்பாலை)
எயிற்பட்டினம் – ஓய்மானாட்டுத் துறைமுகம் (சிறுபாணாற்றுப்படை)
நீர்ப்பெயற்று – தொண்டைநாட்டுத் துறைமுகம் (பெரும்பாணாற்றுப்படை)

.__79048_zoom

நூல்  கொற்கை
பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம், கன்னியாகுமரி
ஆசிரியர் ஜோ டி குருஸ்
ஆண்டு 2013
பக்கங்கள் 1128
விலை ரூ.975