வாசிப்பு. ஒரு தேசியக் குற்றம் !

பாரன்ஹீட் 451 (Fahrenheit 451) ரே பிராட்பரி ஆங்கிலத்தில் 64 வருடங்களுக்கு முன்பு எழுதிய ஒரு புதினம். இப்போது அது நமது கைகளில் தமிழில். இத்தனை வருடங்களுக்கு பிறகு 2013 ஆம் ஆண்டு இது தமிழில் வெளிவந்திருக்கிறது.

Fahrenheit 451 என்பது புத்கத்தாள் தீப்பற்றி எறியும் வெப்ப நிலை.

“கோடு போட்ட தாள் உனக்கு கொடுக்கப்பட்டால் வேறு திசையில் எழுது” என்று ரமோனின் வார்த்தைகள் முத்தாய்ப்பாய் முதல் பக்கத்தில்.

பிராட்பரி ஒரு முறை சொல்கிறார், மக்களை கண்காணித்துச் சுதந்திரத்தைக் குறைக்கும் அரசைவிட மக்களைக் கவர்ச்சியால் கிறங்கடிக்கும் ஜனரஞ்சகக் கேளிக்கைகளிடம் அதிக பயம் எனக்குண்டு என்கிறார் (தற்போது உலவும் வாட்ஸ்அப் அல்லது பேஸ்புக்கை எடுத்துக்கொள்ளலாம் என நினைக்கின்றேன்). நீங்கள் இந்த செய்தியை படிப்பதும் வாட்ஸஅப் மூலமும் என்னுடைய ப்ளாக்கின் மூலமும் என்பது இன்னொரு அவலம். அடுத்த மாடல் மொபைலைப் பற்றி பேச நேரம் இருக்கும் நமக்கு ஒரு புத்தகத்தை பற்றி பேச நேரமில்லை.

புத்தகத்தை படித்தோமா தூக்கி பரண்மேல் போட்டாமா என்று இருக்கவேண்டியதுதானே ? என நீங்கள் கேட்கலாம். ஆனால், படித்துவிட்டு வெட்டி விமர்சனங்களை செய்வதில் எனக்கு எள்ளவும் நம்பிக்கையில்லை… ஆனால் ஆத்மார்த்தமான விவாதங்களையும் படித்தவற்றை பகிர்ந்துகொள்ளுவதும் தான் அறிவு பசிக்கு நாம் போடும் தீனி என்பதில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவன் நான்.

படித்தால் நமது நாட்டில் தூக்கு. படித்தால் நீ ஆயுள் தண்டனைக் கைதி. படித்தால் உன் புத்தகங்ளோடு சேர்ந்து நீயும் எரிக்கப்படுவாய் என்ற தண்டனைகள் உண்மையில் இருந்தால், இறப்பதற்கு முன்பு ஒரு புத்தகத்தை படித்துவிட்டு இறக்கலாமே அதில் என்ன உள்ளது என்று தேடும் மற்றும் தெரிந்துகொள்ளும் ஆவல் நமக்கு பிறப்பது இயற்கைதானே ? படிப்பின் உன்னதத்தைக் கூறும், அதன் முக்கியத்துவத்தைக் கூறும் ஒரு புத்தகத்தை என் வாழ்நாளில் நான் படித்ததே கிடையாது. ஆதலால்தான் இந்த விளம்பரம் மூலம் என் வார்த்தைகளால் உங்களை வந்தடைந்துள்ளேன்.

ரே பிராட்பரியை விளம்பரப்படுத்துவதால் நான் அவருக்கு பேரனும் இல்லை அவர் எனக்கு தாத்தாவும் இல்லை. புத்தகத்தின் மற்றும் படிப்பின் மகத்துவம் புரிந்த நாங்கள் இருவருமே ஒரே மாதிரியான முட்டாள்கள்தான். படித்த முட்டாள்கள் அல்ல. படிக்கும் முட்டாள்கள்.

சரி மேட்டருக்கு வருவோம்…..

இப்புத்தகம் dystopian literature அடிப்படையைக் கொண்டது. அதாவது, எதிர்காலத்தைப்பற்றிய அவநம்பிக்கை தருவதாக, நடந்துவிடவேண்டாம் என்று அச்சத்தைத் தெரிவிப்பதாக இருக்கும் எழுத்துக்கள் அதற்கு பெயர் மருட்சி இலக்கியம் அல்லது எச்சரிக்கை இலக்கியம்.  புதிய சாதனைகளை வியந்து பாரட்டும் விஞ்ஞான உலகத்தில் சமூகத்தின்  மற்றும் அதன் போக்கின் அவலத்தை முன்னிருத்தி எழுதிய ஆசிரியரின் வார்த்தைகள் உண்மைகளால் நிறைந்தவை.  தமிழ் எழுத்தாளர்கள் தாங்கள் படித்ததாக கூறப்படும் உலக நாவல்கள் பட்டியலில் இப்புத்தகம் இடம்பெறவில்லை.

அவருடைய இந்த பயம் புத்தகம் வெளிவந்து  64 வருடங்கள் கழித்தும் பல்கி பெருகியிருக்கிறது. இப்போது நாம் வலைதளங்களிலும், சமூக ஊடகங்களிலும் ஒரு சொடுக்கில் வேண்டிய படத்தை பார்த்தும், பாட்டைக் கேட்டும் தன்னை, தன்னைச் சுற்றியிருப்பவர்களை மறக்கலாம். வலையில் விளையாடலாம். கூத்தடிக்கலாம். பள்ளிக்கும் கல்லூரிகளுக்கும் சென்று, புத்தகமில்லாத வீடுகளை நாம் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். வாசிப்பது பலருக்கு கடப்பாரையை முழுங்குவது போல. சில நிமிடங்களுக்கு மேல் ஒரு கட்டுரையையோ அல்லது செய்தியையோ செய்தித்தாளிலோ ஏன் வலைதளத்திலோ படிக்கவே பொறுமையிழந்து உள்ளோம். ஆற்றல் இல்லை. நாவலாசிரியர் பயந்தபடி, புத்தகமில்லா சமூகத்தை நோக்கி நாம் முன்னேறிக்கொண்டிருக்கிறோம்.  அவர் எச்சரித்தது உண்மையாகி வருகிறது.  இந்த வெகுஜனக் கலாச்சாரமும் எதிர்கால சமூகம் பற்றிய மருட்சிக்கு ஒரு காரணம். சிந்தனைகளை ஒடுக்கும் அதிகாரமும் அடக்குமுறைகளும் இங்கு தாராளமாக அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இது கலாச்சாரம் மற்றும் சமூகத்தின் அழிவுக்கு அடிக்கல் என்பது நாவல் தரும் எச்சரிக்கை.

இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். ஆதலால்தான் எந்த ஊர் எந்த நாடு என்று எதுவுமே குறிப்பிடப்பெறாமல் நிகழ்வுகள் இந்நாவலில் நடக்கின்றன.

புத்தகங்கள் படிப்பதைத் தடை செய்த ஒரு நாட்டில் புத்தகங்களை எரிக்கும் பணியில் ஈடுபட்ட ஒரு தீயணைப்பாளனுக்கு செய்யும் தொழிலில் மகிழ்ச்சி இருந்தது. இந்தத் தொழில் மீது இருந்த பிடிப்பு வெறுப்பாக மாறித் தொழிலை உதறும் அவனுடைய மனதின் பரிமாணமே கதை.

மோன்டாக், கதையின் நாயகன். ஒரு தீயணைப்பாளன். பியாட்டி அவனுடைய பாஸ்.  ஊரில் படிப்பவன் புத்தகங்களோடு பிடிபடும்போது அபாய மணி ஒலிக்கும். தீயணைப்பு வீரர்கள் வண்டியில் மண்ணன்னெய்  நிரப்பிக்கொண்டு விரைந்து சென்று புத்தகங்களை எரித்துவிட்டு அந்த வாசகனையும் எரித்துவிட்டு வருவது  அவர்களது தொழில் அல்லது கடமை.

வீட்டிலோ அவனது மனைவி டி.வி நிகழ்ச்சிகளால் பாதிக்கப்பட்டவள். ஒரு அடக்குமுறை அரசு மக்களை முதலில் டி.வி மூலமாகத்தான் கெடுக்க ஆரம்பிக்கும். நாடகத்திலேயே அவள் வாழ்க்கை நகர்ந்தது.

இப்படி மோன்டாக்கின் வாழ்க்கை சென்றபோது ஒரு முறை புத்தகங்களில் என்ன இருக்கின்றதை அறிய அவன் பிரயத்தனப்பட்டான். விழைவு… அவன் புத்தகத்தை எரிக்க போகும் இடமெல்லாம் தீவைக்கும்  முன் சில புத்தகங்களை திருடி பியாட்டி அவர்களுக்கு தெரியாமல் வீட்டில் ஒரு சிறிய நூலத்தையே வைத்துவிட்டான். மறைத்து மறைத்து வைத்து படிக்க ஆரம்பித்த அவன் பியாட்டி மூலம் ஒரு முறை எச்சரிக்கை செய்யப்படுகிறான். ஒரு கட்டத்தில் பியாட்டி அவனை கைது செய்ய நேரிடும சமயத்தில் புத்தகத்தை எரிக்க சென்ற இடத்தில் இருவருக்கும் தர்க்கம் ஏற்பட்டு அவரையே தன் தீ பிழம்பினால் எறித்துவிட்டு தன்னிடமிருந்த புத்தகங்களை ஒரு தீயணைப்பு வீரனின் வீட்டில் மறைத்துவைத்துவிட்டு அபாய மணியை அழைத்து விட்டு அங்கிருந்து தப்பிக்கின்றான்.

ராணும் தேட ஆரம்பிக்கின்றது. போர் ஆரம்பிக்கும் நேரம். உள்ளுர் பேராசிரியர் ஒருவரின் உதவியுடன் ஆற்றைக் கடந்து காட்டுக்குள் வசிக்கும் விஞ்ஞானிகள், புத்தக ஆசிரியர்களுடன் சேருகிறான். அவர்களும் அப்படித்தான் புத்தகங்களை வைத்துக்கொள்வதில்லை. படித்துவிட்டு அவர்களே எரித்துவிடுவார்கள். மோன்டாக் அவர்களுக்கு தலைவனாகிறான். அவன் பின் கூட்டம் செல்கிறது. மோன்டாக் இதுவரை படித்து மனப்பாடம் செய்த புத்தகங்களை பற்றி பேசுகிறான். ஊர் ஊராக சென்று புத்தகங்களை பிரசங்கம் செய்ய இயலாது. அவனே ஒரு புத்தகமாக மாறுகிறான். எல்லோரும் புத்தகமாக மாறி தனக்கு நினைவு இருக்கும் வரை மற்றவர்களுக்கு போதிக்க ஊர் ஊராக் கிளம்புகின்றனர்.  தெரிந்தவற்றை நினைவுபடுத்தி அதை அச்சில் கோர்க்க அந்த கூட்டம் முடிவு செய்கிறது. எதிர்காலத்தை நோக்கி அவர்கள் அடியெடுத்து வைத்து புத்தகங்களின் மற்றும் வாசிப்பின் மகத்துவத்தை பரப்புரை செய்ய கிளம்புகிறார்கள். அந்த மாலைப்பொழுதில் மோன்டாக்கிற்கு அந்த ஆற்றின் இரு கரைகளிலும் 12 விதமாக பழங்களை கொடுக்கும் மரங்கள் இருப்பதை அறிகிறான்.  நகரத்தை அடையும்போது நண்பகலுக்காக அவன் சேமித்து வைக்கப்போவதும் அவைகளைத்தான்.

கதையின் சுருக்கம் இவ்வளவுதான்.

புத்தகத்தில் ரசித்த வரிகள்…

•ஒவ்வொருவரிடமும் எவ்வளவு பக்கங்கள்….

• நான்தான் ப்ளோட்டாவின் குடியரசு. நீங்கள் மார்கஸ் ஆரெலியஸ் படிக்கவேண்டுமா ? சிம்மன்ஸ் இருக்கிறானே அவன்தான் அது.

• சாலைகளிலும் இருப்புப்பாதைகளிலும் கைவிடப்பட்டவர்கள் வெளியே பரதேசிகளாகவும்  உள்ளே நூலகங்களாகவும் இருக்கிறார்கள்.

• அவர்களுக்கு தெரிந்தவற்றையெல்லாம் ஒப்பிக்கச் சொல்லி அவற்றை பதிவில் ஏற்றலாம்.

•புத்தகங்களுக்கு போடப்படும் அட்டைகளைவிட நாங்கள் ஒன்றும் உயர்ந்தவர்கள் அல்ல.

•தாத்தா இறந்து இத்தனை வருடங்கள் ஆகிவிட்டாலும் என்னுடைய மண்டையோட்டைத் தூக்கிப் பார்த்தீர்களென்றால், ஆண்டவனே, அவருடைய பெருவிரல் ரேகையின் அச்சுகள்பெரிய வரப்புகளைப்போல என்னுடைய மூளையின் மடிப்புகளில் தென்படும்.

• சாகும் போது எல்லாரும் தங்களுக்கு பின்னால் எதையாவது விட்டுச் செல்ல வேண்டும் என்று என் தாத்தா சொல்வார்.  ஒரு குழந்தை அல்லது ஒரு புத்தகம் அல்லது ஒரு ஓவியம் அல்லது ஒரு ஜோடி செருப்பு அல்லது தான் வளர்த்த ஒரு தோட்டம். ஏதோ ஒன்று உங்கள் கைகளால் தொடப்பட்ட ஒன்று இருந்தால், உங்கள் மரணத்திற்கு பிறகு ஆன்மா போவதற்கென்று ஒரு இடம் இருக்கும்.

•வினோதமான எல்லாக் கிழட்டு ஜந்துக்களையும் சில ஆண்டுகளிலேயே ஒழித்துக் கட்டிவிடமுடியாது.  பள்ளிக் கூடத்தில் செய்ய முயல்வதை ஒருவரின் குடும்பச் சூழ்நிலை இல்லாமல் ஆக்கிவிட முடியும். ஆகவேதான், ஒவ்வொரு ஆண்டும் மழலையர் பள்ளிக்குச் செல்லும் வயதை குறைத்துக்கொண்டே வந்திருக்கிறோம்.

படிப்போம். பகிர்வோம். வளைதளங்களில் அல்ல. நண்பர்களுடனான வாதங்களில்….. 

 

Advertisements