நகரவாசியானேனே நாகரிகம் மறந்தேனே

 அன்று பெங்களூரில்

2008இல் பெங்களூருவிற்கு குடிபெயர்ந்த போது பொதுவாக அரசுப் பேருந்துகளில் அலுவலகம் செல்வதுதான் அதிகம். என்னதான் மெட்ரோவில் இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு தஞ்சாவூர்காரன் இருந்துகொண்டேதான் இருந்தான். ஒரு முழு நகரவாசியாக மாற நினைக்கும்போதெல்லாம், அந்த தஞ்சாவூர்க்காரன் என்னை காப்பாற்றி வந்தான். தினமும் நான்கு பேருந்துகள் மாற வேண்டும். புகை, கூட்ட நெரிசல், போக்குவரத்து பிரச்சினை இதனையெல்லாம் தாண்டி அந்த பெரும் சத்தத்திலும் ஒரு நிதானம் சிலரிடம் இருக்கும். எப்போவாவது சீட் கிடைக்கும். அவசரம் இல்லாமல் மெதுவாக நகர்ந்து உட்காருவதற்கு சென்றால், எனக்கு முன் யாராவது முண்டிக்கொண்டு வந்தால் விட்டுவிடுவேன். சீட் தானே.

ஜன்னல் ஓரம் ஒரு சீட் கிடைத்து உட்காரும்போது வாழ்க்கையில் ஒரு பெரும் விஷயத்தை சாதித்து கிடைக்கும் நிம்மதி கிடைத்தாற்போல் இருக்கும். அப்படி சீட் கிடைத்து ஆர அமர்ந்து கவனித்த விஷயங்கள் ஏராளம். உள்ளிருந்தபடியே மோட்டாரிஸ்ட்டுகளை மிகவும் ரசித்துப் பார்ப்பேன்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களில் இரண்டு ரகம் என நினைக்கிறேன். ஒரு ரகம் அவசரமாக பதட்டத்துடன் செல்வது, இன்னொரு ரகம் நிதானத்துடன் பொறுமையாக செல்வது. அவசர ஓட்டிகளும் நிதான ஓட்டிகளும் வந்து சேரும் நேரத்திற்கு பெரிதாக ஒன்றும் வித்தியாசம் இருக்காது. இந்த அவரச ஓட்டிகள் சிக்னலில் அவதிப்படுவதை பார்த்து பல நாட்கள் உள்ளுக்குள் சிரித்ததுண்டு. அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும்ன்னு, எங்கேடா இடுக்கு கிடைக்கும் எப்போடா கார்க்காரன் நகருவான் என்று நினைத்து வண்டியை நகர்த்தும்போது ஒரு ஆட்டோகாரன் நடுவில் புகுந்து அவனது ஆசையை நிராசையாக்கிவிட்டு முன்னேறி நின்றுகொண்டு கரும் புகைச்சலை கொடுப்பான். ஆட்டோகாரனும் ஒரு எகத்தாளமா லுக் விடுவான். அவர்களோட பார்வை யுத்தம் ரசனையாக இருக்கும். இப்படி முண்டி அடித்துக்கொண்டே முன்னேறி ஒரு வழியாக அவர்களுடைய பயணத்தை முடித்துவிடுவார்கள். பேருந்தும் நடையுமாக ஒவ்வொரு நாளும் சென்றுகொண்டிருக்கும் அந்த பெங்களூரு நாட்கள்.

ஒரு முறை இப்படி ஜன்னலோரம் பயணிக்கும்போது ஒரு மோட்டாரிஸ்ட்டை பார்த்தேன். அவர் முண்டி முண்டி பார்த்தார் பிறகு ப்ளாட்பாரத்தில் ஏறிவிட்டார். நான் தான் சரியாக கவனிக்கவில்லை. ப்ளாட்பாரத்தில் பல மோட்டாரிஸ்ட்டுகள்  எப்போதுமே அப்படித்தான் செல்கிறார்கள். நான் பார்த்ததுதான் தாமதம்.  அவ்வளவு கோபம் வந்தது அந்த படித்த முட்டாள்கள் மேல். நடந்துபோவனுக்கு மரியாதையே கிடையாதா இந்த ஊரில். நடைபாதை நடப்பதற்கே என்பதை மறந்து இவர்கள் இப்படி ஏறி வண்டியை ஓட்டுவது அந்த ப்ளாட்பாரத்தின் தளத்தை வலுவிழக்க  செய்துவிடும். மறுபடியும் அரசுக்கு செலவு. நடந்து செல்பவர்கள் பீதியிலேயே தான் செல்லவேண்டியிருக்கும். ஏனென்றால் மோட்டாரிஸ்ட்டுகள் சாலையிலும் செல்வார்கள் ப்ளாட்பாரத்திலும் செல்வார்கள். இது என்னுடைய மனதில் தோன்றிய எண்ணம் அன்று.

இன்று சென்னையில்.
இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு அலுவலகம் சென்றுகொண்டிருந்தேன். என்றுமே ப்ளாட்பாரத்தில் ஓட்டுபவர்களையும் ஓட்டுவதையும் வெறுத்த நான், வெறுப்பது மட்டுமல்ல அவர்களை மனதிற்குள் அப்படி வசை பாடுவேன். படித்த முட்டாள்கள் என்று. ஏன் என்னால் அவர்களை மனதார வைய முடிகிறது ? நான் அந்த விஷயத்தில் சரியாக இருக்கிறேன் என்ற நம்பிக்கை. ஆதலால் எனக்கு அவர்களை ஏச உரிமையும் உண்டு. எப்படிப்பட்ட அவசரமாக இருந்தாலும நான் ப்ளாட்பாரத்தில் ஏறியதில்லை. அலுவலக மீட்டிங், சினிமா, நண்பர்கள் சந்திப்பு என்ற எந்த காரியத்திற்கும் அவசரப்பட்டு முந்திக்கொண்டு சென்றதில்லை.

எப்போதும் போல்தான் அலுவலக நேரத்திற்கு இன்றும் சென்றேன். என்ன நினைத்தேன் என்று தெரியவில்லை. உள்ளுக்குள் இருந்த தஞ்சாவூர்க்காரன் உறங்கிவிட்ட நிலையில்… நானும் வண்டியை ப்ளாட்பாரத்தில் ஏற்றி ஓட்டிவிட்டேன். மற்ற வண்டிகள் நிற்கும்போது நாம் மட்டும் சர்ர்ர்ர்..சர்ர்ர்ர்ன்னு வண்டியை பாய்ச்சி செல்லும்போது ஒரு வித மகிழ்ச்சி ஏற்படத்தான் செய்கிறது. ஆனால், உள்மனது நீயும் இப்படி ஆகிவிட்டாயே என்றது. எனக்கு முன்னே ப்ளாட்பாரத்தில் கிட்டத்தட்ட ஆறு பேர் வாகனங்களை ஓட்டிச் சென்றுகொண்டிருந்தார்கள்.

எதிரே ஒரு பெரியவர் 20 அடி தூரத்தில் நான் ப்ளாட்பாரத்தில் இருந்து இறங்குவதற்குள் ஏறிவிட்டார், அவர் என்னை பார்த்துவிட்டதாக எண்ணி சாதாரணமாக ஓட்டி வந்தேன், அவரை கடக்கும்போதுதான் தெரிந்தது நான் வருவதை அவர் கவனிக்கவேயில்லை என்று. எனக்கு முன்பு ஓட்டிச்சென்றவர்கள் அவர் ஏறும்போதே இறங்கிவிட்டார்கள். ப்ளாட்பார பயணத்தை வெறுத்த நான் இன்று அதில் மேல் ஏறி அவரை கடக்கும்போது அவர் திடீரென பயந்து கோபத்துடன்…. டேய் ப்ளடி ராஸ்கல் என்று கத்திவிட்டார், அவர் என்னுடைய தோள்பட்டையை தட்டியிருக்க வேண்டும் என நினைக்கிறேன். உள்ளுக்குள் இருந்த தஞ்சாவூர்க்காரன் விஷயம் தெரிந்ததும் எழுந்தான், இப்படி சூடு சுரணை இல்லாத மனிதனாக மாறிவிட்டாயே ? நீயெல்லாம் படித்தவனா ? ஏன் இந்த அவசரம் ? நிதானமின்மை ? இப்படியா பறத்திக்கொண்டு செல்வார்கள்? என்றான். என்னிடம் பதில் ஏதும் இல்லை அந்த உண்மையான கேள்விகளுக்கு. அவருக்கு அப்பா வயது இருக்கும் என நினைக்கிறேன். நாம்தான் படித்தவர்களாயிற்றே. அவர் விழுந்தாரா, தடுமாறி நின்றாரா என்று எதையும் சேட்டை செய்யாமல் என் பாட்டுக்கு எனது வாகனத்தை ஓட்டிக்கொண்டு ஒரு நன்கு படித்த பட்டம் வாங்கிய ஒரு பட்டதாரியாக நாட்டின் ஒரு பொறுப்புமிக்க குடிமகனாக எனது எனது இலக்கை நோக்கி சென்றுகொண்டே இருந்தேன்.
 

சாலை முனையில் திரும்பும்போது நின்றுகொண்டிருந்த அரசுப்பேருந்து ஜன்னலோரத்தில் அமர்ந்தபடி ஒரு மத்திம வயது ஆண் என்னை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதை கவனித்தேன். பொறை ஏறிய இருமலுடன் அலுவலகம் வந்து சேர்ந்தேன். தாமதமாக. ஒரு முழு நகரவாசியானேன்.  உள்ளிருந்த தஞ்சாவூர்க்காரனை தேடிக்கொண்டிருக்கிறேன்.
ப்ளாட்பாரத்தில் வாகனம் ஓட்டுபவர்கள் அனைவருக்கும் சமர்ப்பணம்
Advertisements