தமிழ் நாட்டின் பெர்னாட் ஷா….

 

 

பெர்னாட் ஷாவை நான் வாசித்தது இல்லை. ஆனால், உலக மேடையில் இலக்கியத்தின் முன்னோடி என்று சொல்லக் கேட்டதால் இப்படிக் குறிப்பிட்டேன்.

இயற்பெயர் விருத்தாச்சலம்.  25 ஏப்ரல் 1906 ஆம் ஆண்டு பிறப்பு. சொந்த ஊர் திருநெல்வேலி. 1931 இல் பி.ஏ பட்டம் பெறுகிறார். நெல்லை இந்துக் கல்லூரியில் படிப்பு.  இவர் எழுதிய ஆண்டுகள் 1934 முதல் 1948 வரை மட்டுமே. பல பத்திரிகைகளில் வேலை பார்த்துள்ளார். திரைப்படத்துறையிலும் கால் பதித்துள்ளார். காச நோய்க்கு ஆளாகி சூன் 30 1948 ஆம் வருடம் மறைந்தார். வாழ்ந்தது வெறும் 42 வருடங்கள். எழுதிய ஆண்டுகள்  14 வருடங்கள்.

இந்த புத்தகத்தை காலச்சுவடு பதிப்பகத்தின் கடையில் 2015 ஆம் ஆண்டு புத்தகத்திருவிழாவில் வாங்கினேன். அப்போதே வீட்டு அலமாரிக்கு போனது. இப்போதுதான் படிக்க முடிந்தது. அப்போது இப்புத்தகத்தை வாங்கும்போது நினைத்தேன் ஒரு சிறுகதை தொகுப்பிற்கு ரூ.550 அவசியமா என்று ?  இன்று படித்து முடித்த பின்பு உணர்கிறேன். அந்த அச்சகத்தார்கள் அவருடைய உண்மையான கையெழுத்துப் படியில் இருந்து இந்த புத்தகத்தை உருவாக்கி அவர் எழுத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்கள். இப்புத்தகத்திற்கு ரூ 5000 கூட கொடுக்கலாம்.

ஏதோ சில வருடங்களாக தமிழ் இலக்கியத்தை வாசிப்பதால் இவருக்கு வக்காளத்து வாங்க எனக்கு திராணி உள்ளது என்று நம்புகிறேன்.இவருடைய சிறுகதைகளை அந்தகாலத்தில் படித்தவர்கள் இந்த காலத்தில் நாம் பார்த்த இண்டர்ஸ்டெல்லார் படத்திற்கு சமம். சத்தியமாக சில கதைகள் புரியவேயில்லை. அவருடைய போக்கை புரிந்துகொள்ள நமக்கு சில வருடங்கள் தேவைப்படும். அல்லது இவருடைய சிறுகதையை மையமாகக்கொண்டு எம்பில் பிஎச்டி படிக்கும் தமிழ் ஆராய்ச்சியாளர்களை கண்டு பேசினால் விளங்கும். சில கதைகள் தான் அப்படி.

இவருடைய சில கதைகள் நம் உயிரை வெளியே எடுத்துப்போட்டு கொன்றுபோடும். சில கதைகள் மனதிற்கு திருப்தி தரும். சில கதைகள் அச்சச்சோ என்று உச்சு கொட்ட வைக்கும். சில கதைகள் பிரம்மிக்க வைக்கும். சில கதைகள் ஜவ்வுமாதிரி போகும்.
பொதுவாக மனிதனின்  சிறுவயது ஆசைகளை பூர்த்தி செய்யும்போதும், நினைத்ததை முடித்துக்காட்டும் போதும், கை நிறைய பணம் சம்பாதிக்கும்போதும், சொந்தக்காரர்கள் முன் வாழ்ந்துகாட்டும்போதும், எதிரிகள் முன் வளர்ந்துகாட்டும்போதும் மனதைத் தாண்டி ஆன்மாவும் சந்தோஷப்படும். அதை உணரவும் முடியும். படிப்பதால் ஆன்மாவால் சந்தோஷப்பட முடியுமா ?  ஆனால் சில கதைகளை படித்து முடித்தவுடன் நமது ஆன்மாவே சந்தோஷப்படும். அப்படிப்பட்ட கதைகள் கொண்ட தொகுப்புதான் இப்புத்தகம்.  எனது ஆன்மா சந்தோஷப்பட்டதை முதன் முதலில் இவருடைய கதையில்தான் உணர்ந்தேன். மிகைப்படுத்தி கூறவில்லை. படித்துப்பாருங்களேன். உங்கள் ஆன்மாவையும் சந்தோஷப்படுத்துங்கள்.
புதுமைப்பித்தன் பேசுகிறார்…..
நீங்கள் இவைகளை (கதைகளை படைப்புகளை) கொள்ளாவிட்டாலும் நான் கவலைப்படவில்லை. வாழையடி வாழையாகப் பிறக்கும் வாசகர்களில் எவனோ ஒருவனுக்கு நான் எழுதிக்கொண்டிருப்பதாகவே மதிக்கிறேன்.
நீங்கள் கண்கூடாகக் காணும் உலகத்தில் மனிதன் கல்லுப் பிள்ளையார் மாதிரி உட்கார்ந்திருப்பதைப் பார்க்கவில்லையா ? மனிதன் கல் மாதிரி இருக்கும்போது கல்தான் சற்று மனிதன் மாதிரி இருந்து பார்க்கட்டுமே ? என் கதாபாத்திரங்களுக்கு இருக்கும் உயிரும் வேகமும் என் ஆத்திரத்தின் அறிகுறி.
கருத்தின் வேகத்தையே பிரதானமாகக் கொண்டு வார்த்தைகளை வெறும் தொடர்பு சாதனமாக மட்டும் கொண்டு தாவித் தாவித் செல்லும் தவளை நடை நானகவே அமைத்தேன். அது நானாக எனக்கு அமைத்துக்கொண்ட பாதை. நான் எந்த காலத்தில் இந்த தவளைப் பாய்ச்சலை பின்பற்றினேனோ அதே நேரத்தில் மேலை நாடுகளில் அதுவே சிறந்த சிகரமாக கருதப்பட்டதை ஒரு நண்பரிடம் பேசும்போது அறிந்துகொண்டேன்.இலக்கிய சிங்காசனத்தில் ஏறி அமர்ந்துகொள்ள எனக்குத்தான் உரிமை உண்டு என்று கட்சி பேச நான் இந்த கருத்தை சொல்லவில்லை. இருந்தாலும் எனது போக்கு உலக இலக்கியத்தின் போக்கோடு சேர்ந்து இருந்தது என்பதைக் எடுத்துக்காட்டவே இதைக் குறிப்பிட்டேன். இனிமேல் படித்துப் பாருங்கள்.
gggg
புதுமைப்பித்தனின் கையெழுத்து பிரதி
unnamed
புதுமைப்பித்தனின் கையெழுத்து பிரதி
IMG_20170216_091108 (1)
புத்தகத்தின் அட்டை
நூல் புதுமைப்பித்தன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு
பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம்
ஆசிரியர் புதுமைப்பித்தன்
ஆண்டு 2000 முதற்பதிப்பு 2014 எட்டாம் பதிப்பு.
பக்கங்கள் 827
விலை ரூ.550/
Advertisements