​மனிதக் கடவுள்களும் ரத்தக் காட்டேரிகளும்

1997-1998 ஆம் ஆண்டு முழு ஆண்டுத் தேர்வு விடுமுறைக்காக திருச்சியிலிருந்த சித்தியின் வீட்டிற்கு சென்றிருந்தேன். கண்ணதாசனின் “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே” என்ற பாடலில்தான் தினப்போழுது எனக்கு விடியும். ஓரளவு சீக்கிரம் எழுந்துவிடுவது வழக்கம். விடுமுறைக்கே உரித்தான எல்லா வேலைகளையும் செய்வேன் நேரத்தைக் கடத்த பல வழிகள் இருந்தது அப்போது.

மைக்கேல் ஐஸ் கிரீம் கடைக்கு செல்லாத திருச்சி வாசிகளே இல்லை என்று சொல்லலாம். நானும் அங்கு அழைத்து செல்லப்பட்டேன். ஜிகர்தண்டாவில் மிதக்கும் அந்த ஐஸ் க்கூப்பின் சுவையை அடுத்து எனக்கு மிகவும் பிடித்துப்போன ஒன்று இந்த மைக்கேல் ஐஸ்.

ஒரு முறை அந்த கடைக்கு செல்லும்போது ஐஸ் கொஞ்சம் அதிகமாகிவிட்டது. இரவு வந்தவுடன் கட்டிலில் படுத்துக்கொண்டே வீரப்பனின் நேர்காணலை பார்த்தேன். அப்போதுதான் அந்த நக்கீரன் நடத்திய வீரப்பன் நேர்காணல் தொலைக்காட்சியில் வந்த பரபரப்பு சமயம். வீட்டு வாசல் கதவில் ரஜினியின் முத்துப் பட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். அதைப் பார்த்துக்கொண்டே கண் அயர்ந்தேன். ஒரு இரண்டு மணி நேரத் கழித்து சரியான காய்ச்சல். நான் முதன் முதலில் காய்ச்சல் என்ற வார்த்தையை பிரயோகப்படுத்தியதும் திருச்சியில்தான். அங்கு அப்படித்தான் சொல்வார்கள்.  தஞ்சை பக்கம் ஜுரம் என்றுதான் சொல்வார்கள்.

வீட்டிற்கு பக்கத்திலுள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சித்தி கூட்டிச் சென்றார்கள். உடன் தம்பிகளும் வந்த நினைவு. சாதாரண காய்ச்சல்தான் இரண்டு நாள் மாத்திரை சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று சொல்லி மருந்து எழுதிக்கொடுத்தார் டாக்டர். ஊரில் இருந்து வரும்போதே கையில் கொஞ்சம் பணம் இருந்த நினைவு. பெரிய மனுஷன் போல அதையும் மேல் பாக்கெட்டில் வைத்து எடுத்துச்சென்றிருந்தேன். வெளியே வந்ததும் பாக்கெட்டில் கைவிட்டு ஐம்பது ரூபாய் நோட்டை நீட்டினேன். சித்தி வாங்க மறுத்துவிட்டார். “அடி விழும் உள்ளே வை” என்று சொன்னவர் கம்பௌண்டரிடம் ஐந்து ரூபாய் நோட்டைக் கொடுத்தார். எனக்கு ஒரே ஆச்சர்யம், அவருக்கு டிப்ஸ் வேறு கொடுக்கவேண்டுமோ என்று. பிறகுதான் தெரிந்தது டாக்டர் கட்டணமே ஐந்து ரூபாய்தான். மருந்து மாத்திரையும் அதைவிடக் குறைவு. ஒரு பத்து ரூபாயில் அன்று சிகிச்சை முடிந்து மீதமிருந்த நாட்களை நன்றாக கழித்துவிட்டு, கடைசி நாள் மலைக்கோட்டை வாசலில் ஒரு லெதர் பெல்ட்டு வாங்கிக்கொண்டு மீண்டும் மைக்கேல் கடையில் ஒரு முறை ஐஸ்ஸை முடித்துவிட்டு தஞ்சாவூர் திரும்பினேன். அப்போது தஞ்சையில் சராசரி மருத்துவக் கட்டணம் 15 முதல் 30 வரை இருந்தது.

Affordable என்ற வார்த்தைக்கிணங்க கட்டணம் வசூலிக்கும் டாக்டர்கள் திருச்சியில் மட்டுமல்ல தஞ்சையிலும் உண்டு என்பதை மனோகரன், சிவக்குமார், மோகன், சேகர் போன்ற டாக்டர்களை கண்டுதான் தெரிந்துகொண்டேன். அப்பாவின் நண்பர் மற்றும் சரஸ்வதி மகால் நூலக தமிழ் பண்டிட் திரு.மணிமாறன் என்னிடம் ஒருமுறை கூறினார், அந்தக் காலத்தில் டாக்டர்களை பார்க்க வரும் நோயாளிகளுக்கு மருந்து மாத்திரை இலவசமாக கொடுத்து போகும் வழிச் செலவிற்கு ஒன்று அல்லது இரண்டு ரூபாய் கொடுத்து அனுப்புவார்களாம் என்று.

மேற்கண்ட டாக்டர் வகையாறாக்கள் பொதுவாக மிடில் க்ளாஸ் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் அல்லது சேவை நோக்கம் உள்ளவர்கள். இவர்களுக்கு மக்களின் நாடி நன்றாகவே தெரியும். ஆனால், தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நீட் போன்ற தேர்வுகளால் இனி இம்மாதிரியான டாக்டர்களை நமது எதிர்கால சந்ததியினர் புராணங்களில் மட்டுமே பார்க்க முடியும் என்ற நிலை வந்துவிட்டது. அல்லது விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை படம் பார்த்து அவர்கள் மனசை தேற்றிக்கொள்ளவேண்டியதுதான்.

இனி நாம் எல்லோருமே எலைட் நோயாளிகள்தான்.  ஆனால் சிகிச்சைகொடுப்பது மட்டும் ரத்தக்காட்டேரிகள்.  கண்டிப்பாக டாக்டர்கள் அல்ல.​

v_for_vendetta_by_movabletype-d4ni2vb

Advertisements